ஜெசிந்தா ஆர்டன் சிறந்த தலைவரா?

 






ஜெசிந்தா ஆர்டென்









நியூசிலாந்தின் ஜெசிந்தா ஆர்டென் அந்நாட்டின் பிரதமர், அங்கு செயல்படும் தொழிலாளர் கட்சியில் தலைவராகவும் உள்ளார். 2008ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நுழைந்தார். 

2017ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று, நியூசிலாந்தின் பிரதமராக பதவியேற்றார். அப்போது அவரின் வயது 37. இந்த வயதில் அங்கு பிரதமராவது பெரிய விஷயம். இப்படி ஆனது இவர் ஒருவர்தான். இதற்காக நாம் இவரைப் பற்றி இங்கு எழுதவில்லை. 

சிறுபான்மையினரை கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் காட்சி


2019இல் கொரோனா ஏற்பட்டபோது, நியூசிலாந்தில் ஏற்பட்ட பாதிப்பை எளிதில் சமாளித்தார். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் முக்கி முனகிக்கொண்டு இருந்தன. ஆனால் நாம் வித்தியாசமானவர்கள் அல்லவா?  நம்நாட்டில் விளக்கு பூசை, சாப்பாட்டு தட்டை தட்டுவது போன்ற கோமாளித்தனங்கள் நடந்துகொண்டிருந்தன.  ஜெசிந்தா, தனது நாட்டில் நோயைக் குறைக்கும் செயல்பாடுகளை செய்துகொண்டிருந்தார். விரைவிலேயே பாதிப்பைக் குறைத்து கோவிட் இல்லாத  நாடு என்ற பெயரை சம்பாதித்தார். இதனால்தான் அவரை சிறந்த தலைவர் என்று அனைவருமே பேசிக்கொண்டிருந்தனர். மேலும் அவரது நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலைக் கூட சிறப்பாக சமாளித்து சிறுபான்மையினரையும் அவர் அரவணைத்த போக்கு பக்குவமான தலைவரை உலகிற்கு அடையாளம் காட்டியது. 

1980ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று பிறந்தவர் ஜெசிந்தா. இவரது அப்பா, காவல்துறை அதிகாரி. பெயர் ரோஸ் ஆர்டரன். அம்மா, லாரல் சமையல் உதவியாளர். உலகளாவிய உறவுகள் மற்றும் தகவல் தொடர்பு பற்றி வாய்கோ பல்கலையில் படித்து பட்டம் பெற்றவர். 2001ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர் பிரதமர் ஹெலன் கிளார்க்கின் அலுவலகத்தில் ஆராய்ச்சியாளராக வேலை செய்து வந்தார். பிறகு இங்கிலாந்தின் பிரதமராக இருந்த டோனி பிளேருக்கும் கூட உதவியாளராக வேலை செய்துள்ளார். 

அரசியலுக்கு தனது பதினெட்டு வயதில் வந்தவர் ஜெசிந்தா. இதற்கு அவரது அத்தை மேரி ஆர்டனே காரணம். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர் மேரி. தனது பிரதமர் அலுவலகத்தில் குழந்தை பெற்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஜெசிந்தாதான். இவரது குழந்தையின் பெயர் நெவே டி அரோகா. 2018ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று இந்தக் குழந்தை பிறந்தது. 

2019ஆம் ஆண்டு ஜெசிந்தாவை போர்ப்ஸ் இதழ், நூறு ஆற்றல் வாய்ந்த பெண்களில் ஒருவர் என சுட்டிக்காட்டி கட்டுரை எழுதி பெருமைப்படுத்தியது. டைம் 2019 இதழில் அந்த ஆண்டிற்கான மனிதர் பட்டியலில் கூட இடம்பெற்றார். பிராஸ்பெக்ட் இதழ், கோவிட் -19  காலகட்டத்தில் சிறந்த சிந்தனையாளர் என்ற பெருமையை வழங்கியது. 

மே 2021இல் போர்ப்ஸ் இதழ், உலகின் சிறந்த சிந்தனையாளர் என்ற பட்டியலில் ஜெசிந்தாவுக்கு நம்பர் 1 இடத்தை பெருமையுடன் வழங்கியது. கிறிஸ்ட் சர்ச் தாக்குதல் -மார்ச் 2019, வெள்ளைத்தீவு எரிமலை வெடிப்பு டிசம்பர் 2019 ஆகிய இரு நிகழ்வுகளையும் எதிர்கொண்டு சிறப்பாக சமாளித்தவர் ஜெசிந்தா. 

ஆயுதங்களை விற்பதற்கான கட்டுப்பாடு, பெண்களுக்கான குழந்தை பிறப்பு விடுமுறை ஆகியவற்றையும் அமல்படுத்தி மக்களிடையே அபிமானம் பெற்றவர் ஜெசிந்தா. 


டெல் மீ வொய் இதழ் 



கருத்துகள்