ஜென் இசட் இளைஞர்களின் ரகசிய வாழ்க்கை! - விக்கர், டிஸ்கார்ட், ட்விட்ச் - என்னதான் நடக்கிறது?
டிஸ்கார்ட் ஆப் |
பெரும்பாலான ஆட்களுக்கு பேஸ்புக், ட்விட்டர், தடை கலாசாரம், ட்ரோல்கள் என இதற்கே பொழுது பத்தமாட்டேன்கிறது. ஆனால் ஜென் இசட் இளைஞர்கள் தண்ணீரை விட மேலானது என பச்சைத் தண்ணீர் விற்கும் நிறுவனங்களைப் போல பிரத்யேகமான சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவை பலரையும் ஈர்த்தாலும் கூட இவை ரகசியமான பேச்சுகளுக்கு உதவாது. அங்குதான் ரெட்டிட், டிஸ்கார்ட், விக்கர், ட்விட்ச் போன்ற சமூக வலைத்தளங்களும் உள்ளே வருகின்றன.
இதில் வேகமாக நுழைந்து பல்வேறு ரகசிய செக்ஸ் பேச்சுகளிலும் கணினி விளையாட்டுகளிலும் முன்னேறி வருவது ஜென் இசட்டுகளோடு, 95க்குப் பிறகு பிறந்த ஜூமர் தலைமுறையும்தான். நிஜ உலகில் நண்பர்களைப் பெற முடியாத விரக்தியடைந்தவர்கள் அனைவருமே இங்கு ஒன்றாக கூடி பேசுகிறார்கள்... பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். பேச்சு எப்போதும் பேச்சாக முடியுமா என்ன? மேற்சொன்ன தளங்கள் எதிலும் நாம் பேசும் விஷயம் சார்ந்த விளம்பரங்கள் வருவது போன்ற அல்காரித பிரச்னைகள் கிடையாது. 2005ஆம் ஆண்டு தொடங்கிய ரெட்டிட், இன்றுவரை பல்வேறு நபர்களின் கணினி முதல்பக்கமாக இருக்கிறது. இவர்கள் தொடங்கிய ஆப் 2016இல் வெளியானது. இதனை பதிமூன்று முதல் 30 வயது வரையிலான மக்கள் கூட்டம் அதிகம் பயன்படுத்துகிறது.
சப்ரெட்டிட் எனும் இணைய குழுக்களை இணைய உலக பெரு நிறுவனங்கள் கூட கைவைக்க முடியாது. அந்தளவு உக்கிரமாக 2.6 மில்லியன் பேர் உலகம் முழுக்க இணைந்து பல்வேறு ஏ டூ இசட் சமாச்சாரங்களை பேசிக்கொள்கிறார்கள். இங்கு யாருக்குமே நிஜ பெயர் கிடையாது. மிர ர் ஆன் தி வால், அறுந்த வாலு, ஐயம் டி லா, அபைடிங் சிட்டிசன் என பெயர்களை வைத்துக்கொண்டு அடையாளத்தையும் எளிதாக மறைத்து ரகளை செய்யலாம். அன்பு என்றால் உதவிகளைச் செய்யலாம். வம்பு என்றால் வகுந்துவிடலாம் என புகுந்து விளையாடுகிறார்கள்.
எனக்கு உடலுறவில் ஆசை குறைவாக இருக்கிறது என வெளிப்படையாக கருத்துகளை வெளியிட இப்படி வேறு பெயர்களை வைத்துக்கொள்வது உதவியாக இருக்கிறது. இன்று ஒருவரின் பெண்தோழி அவரை கைவிட்டு சென்றுவிட்டார் என்றால் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பெண் தோழிகளுக்கு பிடிக்காத விஷயங்கள் கட்டுரையைப் படித்து தெரிந்துகொள்ள ஞாயிறு வரை யாரும் காத்திருக்க முடியாது. இளைஞர்கள் அதற்கு தயாராக இல்லை. அவர்களுக்கு ரெட்டிட் போன்ற தளங்கள் ஏராளமான குழுக்களை உருவாக்கி வைத்திருப்பதால், அவர்கள் பதில் சொல்லுகிறார்கள். இதில் கேலி, கலாய், சோகம், ஊக்கம் என கலவையாக பதில்களை போட்டு உதவுகிறார்கள்.
ட்விட்ச் என்பது பெருந்தொற்று காலத்தில் இளைஞர்களை மன அழுத்தத்திலிருந்து காக்க வந்த சமூக வலைதளம் எனலாம். இதில் அனைத்தும் நேரலைதான். ஆப்பை ஓப்பன் செய்து சாப்பிடுவது முதல் உச்சா போவது வரை அனைத்தையும் பதிவு செய்து அலப்பறையை அன்லிமிட்டெட் ஆக்கலாம். விக்கரைப் பொறுத்தவரை ரகசியம் உனக்கு மட்டும்தான் என்பது போலத்தான். அனுப்பும் செய்தியை எளிதில் அழித்துவிடலாம். செய்தியாக அல்லது ஸ்க்ரீன் ஷாட் செய்தியாகவும் அனுப்பலாம். நீங்கள் அதனை பார்த்தவுடன் அதன் ஆயுள் முடிந்துவிடும். ராணுவம் பயன்படுத்திய தொழில்நுட்பம் இன்று மக்களுக்கும் கிடைத்துவிட்டது.
ஷாருக்கான் மகன் ஆர்யன் வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தியை ஊடகங்கள் எளிதாக பெற்று வெளியிட்டன. ஆனால் வாட்ஸ் அப் நமக்கு என்ன சொல்கிறது. அனைத்தும் என்கோட் செய்யப்பட்ட செய்தி என்று. இதனால்தான் ரகசியமான செக்ஸ் சமாச்சாரம், சீக்ரெட் பார்ட்டி, போதைப்பொருட்களை வாங்குவது என அனைத்தையும் விக்கர். டிஸ்கார்ட், ட்விட்ச் ஆகியவற்றின் மூலம் இளைஞர்கள் செய்கிறார்கள். இதனை யாரும் கண்டுபிடிக்கவே முடியாது.
சப்ரெட்டிட் |
டிஸ்கார்ட் சமூக வலைத்தளத்தில் உலகம் முழுக்க 150 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவர்கள் அனைவருமே பெரும்பாலும் டிஸ்கார்ட் சமூக வலைத்தள குழுவில் செயல்படுபவர்களாகவே இருக்கிறார்கள். கணினி விளையாட்டுகளை விளையாடுபவர்கள் தனியாக குழுவாக இணைந்து தங்களுக்குள் கருத்துகளை பகிர்வது, வீடியோவில் பார்த்து பேசுவது என நிறைய செயல்களை செய்கிறார்கள். அதாவது மெட்டாவர்ஸ் என இப்போது மார்க் சொன்னாலும், இளைஞர்கள் ஏற்கனவே அதில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
இதில் பிரச்னை தீவிரமாவது எங்கே தெரியுமா? தற்கொலை செய்துகொள்கிறீர்களா? உடனே செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு அதற்கு உதவி செய்கிறோம் என சில வலைத்தளங்கள் செயல்பட்டு அரசு தலையிட்டு அதனை மூடியது. அதைப்போலவே வீட்டை விட்டு ஓடுங்கள் என இணையக்குழு இப்படி செயல்பட்டு வந்திருக்கிறது. இதில் சொன்னவர்களின் பேச்சை கேட்டு மும்பையில் ஒரு பையன் வயது 13தான். வீட்டை விட்டு ஓடிவிட்டான். காவல்துறை கஷ்டப்பட்டு அவனை மீட்டது. பிறகுதான்,அ வன் இணைய தாக்குதல் காரணமாக இப்படி ஓடியிருப்பது தெரிய வந்தது.
டிஸ்கார்டில் வயது பதினைந்து வயது பையன் போல் பதிவு செய்து உள்ளே நுழைந்தபோது முதலில் பத்து நிமிடங்களுக்கு மன நலம், கணினி விளையாட்டு, உடல்நலம், கவிதை குழு என மெதுவாகத்தான் சென்றுகொண்டிருந்தது. பிறகுதான் நிர்வாண படங்கள் நேரலை, சூதாட்ட பரிந்துரைகள், புகைப்பிடித்தலுக்கான வழிகாட்டுதல், 13 முதல் 17 வயது வரையிலானவர்களின் காதல் மற்றும் டேட்டில் சமாச்சாரங்கள் என குழுக்கள் வெரைட்டியாக கண்ணில் பட்டன. பேசலாம், விளையாடலாம், பாடல்களை கேட்கலாம், இத்தனையும் சாதாரண சமூக வலைத்தளங்களில் கிடைக்குமா? என்ன என்று கேட்கிறார்கள் இளைஞர்கள். உண்மையோ பொய்யோ இணையத்தில் ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள் என அதனை பரிந்துரைத்தும் பேசுகிறார்கள்.
டிஸ்கார்ட்டில் சில விவகாரமான சமாச்சாரங்கள் இருந்தாலும், அதனைப் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்ளும் ஆட்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள். இதில் டிராஷ் டாக் எனும் டெக்ஸ்ட் சேனலை அணுகியபோது அதில் இருந்தவர்கள் பெரும்பாலும் மைனர்கள், கல்லூரி மாணவர்கள். இவர்கள் மும்பை, டெல்லி, கொல்கத்தா, அசாம், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருமே மாணவிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தனர். அதில் கேப்ஷனாக தேவடியா, வல்லுறவு என வார்த்தைகள் இருந்தன.
ட்விட்ச் ஆப்பில் லைவ்.. |
பாய்ஸ் லாக்கர் ரூமில் மாணவர்கள் பேசியதாக மோசமான செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப்போன்றவைதான் டிஸ்கார்டில் தினசரி நடைபெறுகின்றன என்று ஜினா என்ற டிஸ்கார்ட் பயனர் கூறினார். இது பற்றி அவர் டிஸ்கார்ட் நிறுவனத்தில் புகார் கொடுத்தும் கூட பயன் ஏதுமில்லை. இதற்கு பதிலடியாக ஜினாவின் புகைப்படத்தை ஆபாச புகைப்படத்தில் மார்ப்பிங் செய்து அவர் மீது இளைஞர்கள் கூட்டம் ஒன்று பழிவாங்கியது.
இதற்கு டிஸ்கார்ட் நிறுவனத்தை அணுகியபோது, நாங்கள் டிஸ்கார்டில் என்ன செய்யவேண்டும் , எது கூடாது என்பதற்கு தெளிவான வரைமுறைகளை வைத்திருக்கிறோம். என எளிமையாக சொல்லி முடித்துக்கொண்டனர். சைபர் உலக வல்லுநர்கள் பலரும், இளைஞர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் டிஸ்கார்ட், விக்கர் ஆகிய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை ஏற்கின்றனர்.
விக்கர் தானாக அழியும் குறுஞ்செய்தி |
டைம்ஸ் ஆப் இந்தியா
மொகுவா தாஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக