எங்கள் குடும்பம் , பார்ப்பனிய சனாதனத்தை வரம்புமீறிக் காப்பாற்றி வந்த குடும்பம். எங்கள் அப்பா அதில் வெறி பிடித்தவர். ஸ்ரீரங்கத்தில் நான் பிறந்தேன். கோவையில் பத்து ஆண்டுகள் இருந்தோம். ஒரு கட்டத்தில் அகோபில மட ஜீயர் எங்கள் வீட்டுக்கு வந்து என் தந்தையாரிடம் உங்களுக்கிருக்கிற ஞானத்திற்கு கோவில் பணி செய்யலாமே என்றார். உடனே யாருக்கும் சொல்லாமல் அவர் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார். எட்டு பேர் கொண்ட எங்கள் குடும்பம் அதன்பிறகு உருக்குலைந்து சிதைந்துபோய்விட்டது. ஸ்ரீரங்கத்திற்கு திரும்பினோம். எனக்கு வயது பத்து. திடீரென வாழ்வின் கீழ்மட்டத்திற்கு தள்ளப்பட்டோம். ஒரு ஆண்டு அங்குமிங்குமாக அலைந்தேன். பிறகு திருவானைக்காவல் சத்திரத்தில் சேர்ந்தேன். எங்கள் அப்பா ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்தார். வீட்டோடு அவருக்கு உறவில்லை. அம்மாவுக்கு ‘மகோதரம்’ என்ற வியாதி. இப்படி ஐந்து, ஆறு ஆண்டுகள் சத்திரத்தில் கழிந்தன. சத்திரத்தில் எழுபதிலிருந்து எண்பது விழுக்காடு பேர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். அக்கிரகாரச் சூழ்நிலையில் இருந்து விடுபட்டவனாக நான் இவர்களோடு இருந்தேன். இது எனக்க...