வெளிச்சம் எங்கோ புலப்படுகிறது
வெளிச்சம்
எங்கோ
புலப்படுகிறது
ஆளுமைகளின் கடிதங்கள்
இரா.முருகானந்தத்திற்கு
எழுதியவை
காப்புரிமை: இரா.முருகானந்தம்
All
Rights Reserved.
வலைப்பூவடிவ பதிப்பு உரிமை: ஆரா பிரஸ்
நூல்தொகுப்பு: ஷான் ஜே, ஜோஸஃபின்
ஆசிரியரின் அனுமதி பெற்று பிரசுரிக்கப்படுகிறது. வாசிக்கலாம் ஆனால்
வணிகரீதியில் பயன்படுத்தக்கூடாது.
சுந்தர ராமசாமி
18.09.2001
அன்புள்ள
திரு. இரா.முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் 15.08.2001 கடிதம் கிடைத்தது.
மகிழ்ச்சி. உடல்நலம் சற்றுக்குறைவாக இருந்ததால் பதிலெழுதப் பிந்தி விட்டது. மன்னியுங்கள்.
இன்னும் ஐந்தாறு மாதங்கள் நான் இங்குதான் இருப்பேன்.
வசதி இருக்கும்போது நீங்கள் வரலாம். நீங்கள் வெகுதூரத்தில் இருந்து வருவதால் வருவதற்கு
முன் தொலைபேசித்தொடர்பு கொண்டு என் இருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.(என் தொலைபேசி
எண்: 223159) என்னை சந்திக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் உங்களை அதிகம் அசௌகரியப்படுத்திக்கொள்ளக்கூடாது.
இந்தப்பக்கம் வர நேர்ந்தால் அவசியம் இங்கு வாருங்கள்.
திட்டமிட்டபடி காரியங்கள் செய்ய முடியாமல் போவது
சகஜம்தான். ஒரு நாள் நான் விரும்பும் காரியங்களில் பாதிகூட அன்று முடிவதில்லை. பணி
சார்ந்த பேராசை உடல் நலத்திற்கு நல்லதாகத் தெரியவில்லை.
விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், போன்ற
நாவல்களை ஒருமுறைக்கு இருமுறை படித்துப்பார்ப்பது நல்லது. இடைவெளி விட்டுப் படிக்கவேண்டும்.
முதலில் புரியாதவை பின்னர் புரியத்தொடங்கலாம்.
நீங்கள் மிகத்தரமான புத்தகங்கள் தேர்வு செய்து
படிப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. சம்பத்தின் ‘இடைவெளி’, ‘மௌனியின் கதைகள்’,
புதுமைப்பித்தன் கதைகள், தி.ஜானகிராமன் முதல் இரண்டு சிறுகதைத்தொகுப்புகள்(கொட்டுமேளம்,சிவப்பு
ரிக்சா), லா.சா. ராமாமிருதம், கு. அழகிரிசாமி, பிரபஞ்சன் ஆகியோரின் ஆரம்பகால சிறுகதைகள்,
பிரமிளின் கவிதைத்தொகுப்பு போன்றவற்றை நீங்கள் படித்துப் பார்க்கலாம். இவை உடனடியாக
நினைவுக்கு வந்த பெயர்கள்.
தற்போதைய அரசியல் செயற்பாடுகளில் எனக்கு சிறிதும்
நம்பிக்கை இல்லை. ‘அம்மா’ வின் முதல் நம்பர் எதிரி நான்தான். ஆனால் அவருக்கு எதிராக
சுண்டு விரலைக்கூட அசைக்க முடிவதில்லை.
வெளிச்சம் எங்கோ புலப்படுவதாக எனக்கு நம்பிக்கை
என்று எழுதியிருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை பலிக்கட்டும்.
என்
அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,
சு.ரா
5.11.2001
அன்புள்ள
திரு. முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் 31.10.2001 கடிதம் கிடைத்தது.
மிக்க மகிழ்ச்சி. உங்களுடன் இலக்கியத்தைப்பற்றி விவாதிக்க விருப்பம் கொண்டிருந்த நான்
அரசியல் சார்ந்து நீங்கள் முன் கடிதத்தில் எழுதியிருந்த குறிப்புக்கு பதிலாக இரண்டொரு
வரிகள் எழுத நேர்ந்தது. அவை உங்கள் மறுபரிசீலனைக்கு எழுதப்பட்டவைதான்.
என் கருத்துகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து
நீங்கள் விரிவாகப் பதில் எழுதியிருக்கிறீர்கள். பல விஷயங்களையும் என் கவனத்தில் கொண்டு
வந்திருக்கிறீர்கள். இவை பற்றியெல்லாம் விரிவாக எழுதுவதை விடவும் நேரில் விவாதிப்பதே
அதிகப்பயனுள்ளது.
இருப்பினும் உங்கள் கருத்துகளை என்னால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை. காரணம் இன்றைய புரட்சிதலைவியின் ஆட்சியை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட
எவரும் கடுகளவேனும் ஆதரிக்கக் கூடாது என்பது என் எண்ணம். ஒவ்வொரு நாளும் ஊழலை புதிய
தளத்திற்கு விரித்துக்கொண்டு போகும் ஆற்றல் பெற்றவர் அவர் என்பதற்கு சமீபத்திய தேர்தல்
ஒரு உதாரணம். இதுபோல் இதற்கு முன்னர் நடந்ததில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
புரட்சித்தலைவியின் ஊழல்கள் பற்றி என்னை விட பலமடங்கு
அதிகம் அறிந்தவர்கள் நம் அரசியல் தலைவர்கள். அவர்கள் இந்த அம்மையாருடன் இணைந்து கொள்கிறார்கள்
என்றால் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்து அதிகாரத்தைச் சுரண்டலுக்குப் பயன்படுத்துவதற்காகவே.
மூப்பனார் உயர்ந்த குணங்கள் படைத்தவராகவே இருக்கலாம். எனக்கு அதுபற்றி தெரியாது. காமராஜரின்
சீடர் தமிழ் மக்களை மதிப்பீடுகள் சார்ந்து மேலும் பின்னகர்த்தியிருக்கிறார் என்பதில்
சந்தேகமில்லை.
இவை
பற்றியெல்லாம் நான் எழுதுவது உங்கள் யோசனைக்காக மட்டுமே.
என்
அன்பார்ந்த வாழ்த்துகளுடன்,
சு.ரா
23.10.2001
அன்புள்ள
இரா. முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் 5.10.2001 கடிதம் கிடைத்தது.
நீங்கள் மேலும் தொடர்ந்து படித்து வருவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் குறிப்பிட்டிருப்பது
போல நேரில் சந்தித்து விவாதிப்பது நல்லதுதான். பேச்சு, தோற்றம், பின்னணி ஆகியவற்றை
விட்டு செயல்பாடு சார்ந்தே நான் ஒரு மனிதனைத் தீர்மானிப்பேன். மூப்பனார் ஏன் ஜெயலலிதாவுடன்
சேர்ந்து கொண்டார்? ஜெயலலிதாவை நரசிம்மராவ் சேர்த்துக்கொண்டபோது ஏன் வெளியேறினார்?
அடிக்கடி
கடிதம் எழுதுங்கள்.
என்
அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,
சு.ரா
அன்புள்ள
திரு. இரா. முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் 19.1.2001 கடிதம் கிடைத்தது.
மகிழ்ச்சி.
நான் ஆறுமாதங்கள் வெளியூரில் இருந்தேன். இம்மாதம்தான் ஊர் திரும்பினேன்.
பதில் எழுதவது வெகுவாக பிந்திவிட்டது.
தாராபுரத்தைச் சேர்ந்த ஜெயகரன், தியோடர் பாஸ்கரன்,
விஜய பாஸ்கரன், எஸ்.வி ராஜதுரை எல்லோருமே என் நண்பர்கள்தான். இவர்கள் தவிர எஸ்.வி ராமகிருஷ்ணனும்
சுங்கத்துறையில் உயரதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர், இப்போது புனேவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்;
என் நண்பர்தான்.
நீங்கள் இளம் வயதில் நிறைய படித்திருப்பது எனக்கு
மகிழ்ச்சியைத் தருகிறது. அத்துடன் நுட்பமாகவும் வாசித்திருக்கிறீர்கள்.
நீங்கள் உங்கள் கடிதத்தில் ஒரு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள்.
அவற்றுக்கெல்லாம் நான் நிதானமாக யோசித்து தெளிவாகப் பதில் சொல்லவேண்டும். ஒரு சில வருடங்களுக்கு
முன்னர் வெளிப்படுத்திய கருத்துக்களை நானே மீண்டும் படித்துப் பார்க்கவேண்டும். காலப்போக்கில்
சில முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அடிப்படைப்பார்வையில் முரண்பாடுகள் இருக்கக்
கூடாது என்றே விரும்புகிறேன்.
விரிவாக எழுத நேரம் சற்று குறைவாக இருக்கிறது. ஆறுமாத இடைவெளியில்
பணி சுமந்துவிட்டது.
நான் உங்கள் ஊர் பக்கம் வந்தாலும் அவசியம் தெரிவிக்கிறேன். நீங்கள்
இங்கு வந்தாலும் என்னைப்பார்க்கலாம். இன்னும் ஏழெட்டு மாதங்கள் இங்கேயே இருப்பேன்.
என் தொலைபேசி எண் 223159.
உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
என்
அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,
சு.ரா
2.3.2002
அன்புள்ள
முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் 17.2.2002 கடிதம் கிடைத்தது.
இந்தியா டுடேவுக்கு பதில் கட்டுரை ஒன்று அனுப்பியிருக்கிறேன்.
வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். நான் மௌனம் சாதித்துக்கொண்டிருந்தால் அழத்தெரியாது
என்று நினைத்து கன்னத்திலிருந்து கையெடுக்காமல் அடித்து கொண்டேயிருக்கிறார்கள். என்ன
செய்வது?
இந்தியா டுடே மலர் கைவசம் இருக்கிறது. அதைப்படிக்க
நேரமில்லாமல் அப்படியே வைத்திருக்கிறேன். நிறைய வேலை. படிக்கப் போதிய சாவகாசம் கிடைக்காமல்
ஆகிவிட்டது.
காமராஜர் பற்றி எழுதும் அளவுக்கு எனக்கு அரசியல்
பின்னணி சந்தேகமாக இருக்கிறது. வழக்கமான சொற்களை அள்ளிப்போட்டு எழுதிவைப்பதில் எனக்கு
நம்பிக்கையில்லை. உருப்படியாக ஏதாவது எழுதமுடியுமா என்று பார்க்கிறேன்.
என்
அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,
சு.ரா
14.3.2002
அன்புள்ள
இரா. முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் 6.3.2002 கடிதம் கிடைத்தது. காமராஜர்
பற்றி எனக்குத் துண்டு துணுக்குகளாக சில விஷயங்கள் தெரியும். ஆனால் அவருடைய அரசியல்
வாழ்வு பற்றிய முழுமையான பதிவு என் மனதில் இல்லை. நமக்கு பிடிப்பு இல்லாத துறையைச்
சார்ந்து எழுதுவது நல்லதல்ல என்று எப்போதும் நம்பி வந்திருக்கிறேன்.
இந்தியா டுடேயில் என்னைப் பற்றி எழுதியிருப்பதாகக்
குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்த இதழை நான் பார்க்கவில்லை. அதன் தேதியை எனக்குத் தெரிவித்து
உதவமுடியுமா?
ராஜஸ்தானில் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பில்
நான் கலந்துகொள்ளவில்லை. தவறான செய்தி உங்களை வந்து எட்டியிருக்கிறது.
என்
அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,
சு.ரா
22.10.2002
அன்புள்ள
திரு. முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் கடிதங்கள் கிடைத்தன. ஆறுமாதங்கள்
வரையிலும் வெளிநாட்டிலிருந்த நான் சமீபத்தில்தான் ஊர் திரும்பினேன்.
‘சுந்தர ராமசாமி ஒரு கதைக்காரர்’ என்ற விமர்சன
நூலை நான் இன்னும் படித்துப்பார்க்கவில்லை. விரைவில் படித்துப் பார்க்கவேண்டும்ம என்றிருக்கிறேன்.
என் பிறந்த நாள் என் நினைவுக்கே வருவதில்லை. நீங்கள்
நினைவு வைத்து வாழ்த்து தெரிவித்திருப்பது மகிழ்ச்சியை அளித்தது.
முன்னர் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது
போல் என் பார்வையில் எந்த முரண்பாடும் ஏற்படவில்லை என்றே நம்புகிறேன். சிற்றிதழ்களில்
நாம் கூறிவரும் கருத்துக்களை வெளிப்படுத்த பெரும் பத்திரிகைகள் குறுக்கீடற்ற முழு சுதந்திரத்தை
நமக்கு அளிக்குமென்றால் நான் அதைப் பயன் படுத்திக்கொண்டு நம் கருத்துக்களை அதிக வாசகர்களுக்கு
எடுத்துச்செல்வது அவசியமான பணி என்றே நம்புகிறேன்.
என்
அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,
சு.ரா
5.4.2003
அன்புள்ள
முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் 27.3.2003 கடிதம் கிடைத்தது.
காந்தியை
தயவு தாட்சண்யம் இன்றி மறுபரிசீலனை செய்து பார்க்கலாம். விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆனால் அவரை நிராகரிப்பதோ இழிவுபடுத்துவதோ எனக்கு
சங்கடத்தை தரக்கூடிய காரியங்கள். காந்தியை இழிவுபடுத்தும் ஒரு பாடலை ஆசிரியர்கள் மாணவிகளுக்கு
கற்றுக்கொடுப்பதை மறைவிலிருந்து கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகுந்த சங்கடத்தைத்
தந்த அனுபவம் அது. இவ்வளவு கொடுமையாக மனிதனால் எப்படி சிந்திக்க முடிகிறது என்பது ஆச்சர்யமாகவே
இருக்கிறது.
காந்தியை கைவிடாதவர்கள் இன்று இந்தியாவில் யாருமில்லை.
அவருடைய வாழ்க்கை ஒரு துன்பியல் நாடகம். வெளிநாடுகளில் காந்தியை தீவிரமாக பலரும் படித்துவருகிறார்கள்.
ஆங்கிலத்தில் அவரைப்பற்றிய பல புத்தகங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பல்வேறு பார்வைகளில்
காந்தியை மதிப்பிட்டு வருகிறார்கள். அதுபோன்ற ஆழமான முயற்சி எதுவும் தமிழில் நடைபெற
வில்லை.
இந்தியாவின் எதிர்காலத்தைப்பற்றி கவலை கொள்ளவே காரணங்கள் அதிகம்
இருக்கின்றன. மத்திய அரசும், தமிழக அரசும் சரி சர்வாதிகார பார்வையிலேயே நகர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் இந்த இரண்டு ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டிய ஒரே இனம் தமிழ் இனம்தான்.
விழிப்புநிலையில் நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்.
ஓய்வு
கிடைக்கும்போதெல்லாம் கடிதம் எழுதுங்கள்.
என்
அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,
சு.ரா
25.9.2006
மதிப்பிற்குரிய
முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். அப்பாவின் கடித நகல்களை அனுப்பி வைத்ததற்கு மிக்க நன்றி.
திரு. இராசாமணி அவர்களின் பணி பற்றி அறிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி. நூலக முகவரி
அனுப்பி வைத்தால் காலச்சுவடு இதழ்களை அவருக்கு இலவசமாக அனுப்பி வைக்க முடியும். பழைய
இதழ்களையும் அனுப்பி வைக்கலாம். வேறு எந்த விதத்தில் அவருக்கு உதவவேண்டும் என்று தெரிவியுங்கள்.
அன்புடன்,
கண்ணன்.
24.01.2001
மதிப்பிற்குரிய
முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். நீங்கள் சுந்தர ராமசாமிக்கு எழுதிய கடிதம் கிடைத்தது.
அவர் தற்போது வெளிநாடு சென்றிருக்கிறார். திரும்பி வருவதற்கு இரண்டு அல்லது மூன்று
மாதங்கள் ஆகலாம்.
திரு. தியோடர் பாஸ்கரன் உங்களைப்பற்றி எழுதியிருந்தார்.
சிறுவயதில் நீங்கள் இவ்வளவு விரிவாக படித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத்
தருகிறது.
உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.
அன்புடன்,
கண்ணன்.
5.6.2001
மதிப்பிற்குரிய
முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் கடிதம் கிடைத்தது. மிக்க நன்றி. புதுமைப்பித்தன்
தொடர்பான வழக்கிற்கும் காலச்சுவடிற்கும் நேரடியான சம்பந்தம் எதுவும் இல்லை. புதுமைப்பித்தன்
பதிப்பகம் மீது வழக்கு தொடர்ந்திருப்பது புதுமைப்பித்தனின் மகள் தினகரி. அவருக்கு எங்களுடைய
முழு தார்மீக ஆதரவு உண்டு. புதுமைப்பித்தனின் பெயரை நாங்கள் இதுவரை எங்கும் பயன்படுத்தியதில்லை.
எனவே அவருடைய பெயரை பிராண்ட் நேம் ஆக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
தன்னை ஏமாற்றுவோர் நூல் விற்பனைக்கு தன்னுடைய தந்தையாரின் பெயரைப்
பயன்படுத்துவதை யார்தான் பார்த்துக்கொண்டிருப்பார்கள்? மேற்கு நாடுகளில் காப்புரிமையோடு
படைப்பாளியின் பெயருக்கான உரிமையும் காப்புரிமையாளருக்குத்தான் என்று சட்டம் தெளிவாக
உள்ளது. இங்குள்ள சட்ட நுணுக்கம் இந்த வழக்கின் முடிவில்தான் தெரியவரும். இளையபாரதி
என்ற மோசடி பேர்வழியின் கையில் புதுமைப்பித்தனின் பெயர் சீரழியும் வரை புதுமைப்பித்தன்
குடும்பத்தினர் அவர் பெயரைப் பயன்படுத்துவதற்கு எந்த மறுப்பும் தெரிவித்ததில்லை என்பதை
நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும இந்த உரிமை 2008 ஆம் ஆண்டு வரைக்குமே அவர்களுக்கு
இருக்கும். மற்றபடி புதுமைப்பித்தன் வாசகர் பேரவையினர் புதுமைப்பித்தன் வாசகர்கள் அல்ல
என்பதை நான் வலியுறுத்த வேண்டியதில்லை.
புதுமைப்பித்தன் படைப்புகளின் இரண்டாவது தொகுதி கட்டுரைகள், கடிதங்கள்,
விவாதங்கள், மதிப்புரைகள் இந்த ஆண்டு வெளிவரும். இந்தப்பிரச்சனை தொடர்பாக எங்களுடைய
எதிர்வினை இதுதான்.
உங்கள் ஆர்வத்திற்கும் , ஆலோசனைக்கும் மீண்டும் என் மனமார்ந்த
நன்றி.
அன்புடன்,
கண்ணன்.
10.09.2002
மதிப்பிற்குரிய
முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் கடிதம் கிடைத்தது. காலச்சுவடிற்கு அனுப்பும் வாசகர்
கடிதங்களை இதழ் வெளிவந்து ஒரு மாதத்திற்குள் அனுப்பிவைத்து உதவுங்கள்.
காலச்சுவடு கதைகள் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருந்த கதைகளுக்கு
காப்புரிமை தொகையாக நூல் விலையில் 12.5 சதவீதம் கணக்கிடப்பட்டு பிரித்து வழங்கப்படும்
என்ற கடிதத்துடன் முன்பணமாக ரூ.350 க்கான காசோலையும், நூல் பிரதிகளையும் அனுப்பி வைத்திருந்தோம்.
இது பற்றிய விளக்கம் அடுத்த காலச்சுவடு இதழில் இடம்பெறும்.
அப்பா அக்டோபர் மாதம் திரும்புகிறார்.
அன்புடன்,
கண்ணன்.
சுகுமாரன்
திருவனந்தபுரம்
10.7.2006
அன்புள்ள நண்பர் முருகானந்தம்,
தங்கள் கடிதம் கிடைத்தது. அதன் உள்ளடக்கத்திலிருந்த இயல்பானதாகவும்,
நெருக்கமும் என்னை மிகவும் சலனப்படுத்தின. மிகவும் நன்றி.
வாழ்க்கையும், வாசிப்பும் எழுத்தும்
சக மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ள அநேக காரியங்களை
தருகின்றன. அவற்றை எனக்கு இசைவான மொழியில் முன்வைக்க விரும்புகிறேன். அவை உங்களைப்போன்ற
நண்பர்களைப் பெற்றுத்தருவது பெருமிதமாக உணரச்செய்கிறது. எழுத்து குறைந்தபட்சமாக செய்யக்கூடியது
இதுதான் என்று நம்புகிறேன்.
தங்கள் கடிதம் மிகுந்த நிறைவைத் தருகிறது.
நன்றி!
அன்புடன்,
சுகுமாரன்.
அனிருத்தன் வாசுதேவன்
சென்னை
1.3.2007
அன்புள்ள
முருகானந்தம்,
வணக்கம். பம்பாயிலிருந்து சென்னை திரும்பி இரு நாட்களாகின்றன.
புனேயில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றச் சென்றிருந்தேன். இதைக்காரணமாக் கொண்டு பம்பாயில்
நான் செய்யவேண்டிய, என் ஆய்வு முன்னிட்ட சில பணிகளையும் செய்து முடிக்க முடிந்தது.
திரும்பியதும் பலநிலைப்பணிகளின் அழுத்தம் தொடங்கிவிட்டது.
பலமுறை நீங்கள் தொலைபேசியில் அழைத்தும், உரையாட
முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பல நிகழ்வுகள், உள் மற்றும் வெளி
முரண்பாடுகள், அழுத்தங்கள் இவை காரணமாகவும், சற்று அமைதி வேண்டியும் சிறிது காலம் தொலைபேசியை
புறக்கணித்திருந்தேன். இது முதல்முறையுமல்ல. மன்னிக்கவும்.
தேவதேவன் அவர்களையும், ஜெயமோகன் அவர்களையும் நீங்கள்
நேரில் சந்தித்து உரையாட முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. இவ்வுரையாடல்கள் பற்றி
நீங்கள் பேசி நேரில் கேட்க விருப்பம்.
பாவண்ணனின் கட்டுரைத் தொகுதியின் விமர்சனக் கட்டுரை
எழுதியிருப்பதற்காக என் பாராட்டுக்கள். அது பிரசுரமானதும் நகலெடுத்து எனக்கு அனுப்பவும்.
இவை பயணக்கட்டுரைகளா?
நான் இப்போது ஒரு அற்புதமான ஆங்கில பயண எழுத்து
நூலைப்படித்து முடித்தேன். பீகோ ஐயர் என்ற இந்திய-ஆங்கில எழுத்தாளர் ஜப்பானில் ஓராண்டுகாலம்
வசித்தபோது கண்டவை, நிகழ்ந்தவை, உணர்ந்தவை பற்றியது நூல். மிக அற்புதமாக எழுதப்பட்டுள்ளது.
மற்றொரு கலாச்சார, மொழி வட்டாரத்தில் நுழையும் ஒருவர் அம்மக்கள் பண்பாடு பற்றிய எந்தவித
முடிவுக்கும் வருவதை எப்படி கடைசிவரை ஒத்திப்போட வேண்டியுள்ளது என்பதையும், புரிதல்
என்பது திட்டவட்டமாக முடித்து மூடப்படும் விஷயமல்ல என்பதையும் எல்லாநிலைகளிலும் தேவையான
அறியாமை என்பதைக் கொண்டிருப்பது நல்லது என்பதையும் அழகாக பிரதிபலிக்கிறது இந்நூல்.
உண்மையில் அது முடிந்துவிட்டதுக்கம் என்னை இன்னும் விடவில்லை.
உங்கள்
அடுத்த கடிதம் விரைவில் வரும் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
வா.அனிருத்தன்.
சென்னை
14.3.2007
அன்புள்ள
முருகானந்தம்,
கடிதம் கிடைத்தது. மிக்க நன்றி. சூழலின் இறுக்கங்களையும்,
நுண்ணுணர்வுகளின் படுத்தல்களையும் கடந்துவிடும் மனப்பக்குவத்தை இலக்கியம் உங்களுக்கு
அளித்திருப்பதாக கூறியுள்ளீர்கள்.
எனக்கோ இலக்கியம் என் நுண்ணுணர்வுகளை இன்னும்
சீண்டிவிடும் காரியத்தைத்தான் செய்துவருகிறது. இதைவிடவும் வேடிக்கையான விஷயம் எதுவெனில்
இந்த தாக்கங்களையும் அவை தரும் வலிகளையும் என் மனம் உணவு போல் விரும்பிப் பெறுகிறதோ
என்ற சந்தேகம்தான். Masocist என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். முனைந்து வலியை ஏற்றுக்கொள்வதில்
இன்பமடையும் மனநிலை உள்ளவரை.
விரைவில் காலச்சுவடு அலுவலகம் சென்று ‘அறியப்படாத
தீவின் கதை’ நாவலை வாங்கிப்படிக்கின்றேன். பகிர்ந்துகொண்டமைக்கு
நன்றி.
பீகோ ஐயரின் நூலை மொழிபெயர்க்க எனக்கு மிகவும்
விருப்பம் உண்டு. முயற்சி செய்கிறேன்.
ஆங்கிலத்தில்
சிறு, சிறு கவிதைகள் எழுதியுள்ளேன். ஆனால் ஏனோ மொழிபெயர்க்கும் முனைப்பு ஏற்படவில்லை.
கடலூர் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்துவரும்
சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய அறிக்கைகளையும், செய்தி வெளியீடுகளையும் மொழிபெயர்க்கும்
பணியில் ஈடுபட்டிருக்கிறேன். மனசாட்சியின் குரல் உரக்க கேட்கும்போது ஒருவரது அரசியல்
பலவற்றை எதிர்த்து நிற்கும் ஒன்றாக இருந்துவிடுகிறது. Politics of resistance என்று
சொல்வார்கள். வசதிகள் பெற்றிருப்பதற்காக ஆழ்ந்த குற்றவுணர்வும், மேற்கு வங்காளத்தில்
நந்திகிராமில் தங்கள் நிலங்களை தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்திற்காக பறிகொடுக்க மறுத்து
போராடி வரும் மக்கள் மீது காவல்துறையினர் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். என்ன
அக்கிரமம்! எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்?
அன்புடன்,
அனிருத்தன்
வாசுதேவன்.
30 ஜூலை 2011
லெக்சிங்க்டன்
கென்டல்
மாநிலம்
அமெரிக்கா.
அன்புள்ள
முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் நலமறிய ஆவல். என் சென்னை முகவரிக்கு
உங்கள் கடிதம் கிடைத்ததாக என் அப்பா கூறியதுதும் உடனடியாக அதனை ஸ்கேன் செய்து அனுப்பும்படி
அவரைக்கேட்டுக்கொண்டேன். அவரும் சிரத்தையுடன் அதைச் செய்தார். மிக்க நன்றி, முருகானந்தம்.
நீங்கள் பலமுறை கைபேசியில் அழைத்தும் உங்களுடன் பேசமுடியாமல் போய்விட்டது. மன்னித்துவிடுங்கள்.
அவ்வளவு அருகில் இருந்தபோது பேச சமயமில்லாத எனக்கு இப்போது பல்லாயிரம் மைல்களுக்கு
அப்பாலிருந்து ஒரு அமைதியான மதியப்பொழுதில்( உங்களுக்கு நல்வரவு) என் மேசையில் அமர்ந்துகொண்டு
இந்தக்கடிதத்தை எழுதிக்கொண்டிருப்பதில் உள்ள வேடிக்கை பிடிபடாமல் இல்லை.
கன்னியாகுமரியில் உங்களை எப்படியும் சந்திக்க
கிடைத்துவிடும் என்று நினைத்திருந்தேன். பலவித நெருக்கடிகளுக்கு மத்தியில் நம்மால்
சிலவற்றை செய்யமுடியவில்லை, அவை நம் மனதிற்கு எவ்வளவு பிரியமான செயல்பாடுகளாயினும்
சரி. சுந்தர ராமசாமி உங்களிடம் கூறினாரல்லவா ‘’ பணிசார்ந்த பேராசை உடல்நலத்திற்கு நல்லதல்ல’’
என்று?’’ கன்னியாகுமரியில் கவிதாவும், ஜோதியும் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தார்.
அங்கிருந்த இரண்டு நாட்கள் எனக்கு உடல்நிலை சரியாக
இல்லை. மைக்ரைன் தலைவலியும் அது விட்டுச்செல்லும் மயக்கநிலையும் மிகுந்த தொல்லையைத்
தந்தன. கவிதாவும், ஜோதியும் இங்கு இல்லையெனில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்பேன்.
நான் அங்கு ஆற்றிய உரையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. மைக்ரைன் தலைவலியும் அதனுடன் வரும்
வெளிச்சம் சார்ந்து ஒரு கண் சிரமமும் என் புத்தகத்தில் இருந்த குறிப்புகளைக் கூட என்னால்
பார்க்கமுடியாமல் செய்துவிட்டன. முழுவதுமாக நினைவிலிருந்து பேசும்படி ஆகிவிட்டது.
மற்றபடி உங்கள் பணிகள் பற்றிக்கூறுங்கள். நீங்கள்
உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துகிறீர்களா? உங்களால் அதைச்செய்யமுடியுமெனில் எனக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும். அது சிரமம் எனில்
ஒன்று செய்யலாம். சென்னையிலுள்ள என் தோழி ஒருத்தியின் முகவரியை உங்களுக்கு தருகிறேன்.
என்னுடைய மின்னஞ்சலைப் படித்துவிட்டு நீங்கள் அந்த முகவரிக்கு கடிதம் எழுதினால் அவர்
அதனை ஸ்கேன் செய்து அனுப்பி வைப்பார். ஏதாவது ஒன்று செய்தாகவேண்டும். இல்லையென்றால்
பல மாதங்கள் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விடும். நான் திசம்பர் 9 ஆம் தேதிதான் சென்னை
திரும்புகிறேன்.
அன்புடன்
அனிருத்தன்
வாசுதேவன்.
அறச்சலூர் சிவராஜ்
2006
திரு முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களுடைய விமர்சனக்கட்டுரை வந்து சேர்ந்தது. அம்ருதாவின் நன்றியும், அன்பும்… தொடர்ந்து
எழுதுங்கள்.
ச.பாலமுருகன்
நேர்காணல் மிக நேர்த்தியாக வந்துள்ளது. வாழ்த்துக்கள். அம்ருதாவை நண்பர்களுக்கு அறிமுகம்
செய்யுங்கள்.
சிவராஜ்
ஆசிரியர்,
அம்ருதா
(மேலே குறிப்பிடும் ச.பாலமுருகன் நேர்காணல் தயாரித்தது
இரா. முருகானந்தம் என்றாலும் அவருக்கு தன்னகங்காரம் ஏற்பட்டுவிடக்கூடாது எனும் அறநெறியின்
படி செயல்பட்ட சிவராஜ் அதனை எந்த பெயரும் இல்லாமலேயே பிரசுரித்து நற்பேறினை இலக்கியச்சூழலில்
ஏற்படுத்த முயன்றார். இதனைத் தொடர்ந்தும் தன்செயல்பாட்டில் மேற்கொண்டுவருகிறார்)
நஞ்சுண்டன்
26
பிப்ரவரி 2007
அன்புள்ள
முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் விண்ணப்பமும் கடிதமும் கிடைத்தன.
நன்றி. பயிலரங்கம் நன்றாகவே நடந்தது. 100% வெற்றி கிடைக்கவில்லை. 75% வெற்றி எனச்சொல்லலாம்.
சில நண்பர்கள் முன்தயாரிப்பில்லாமல் வந்து சொதப்பிவிட்டார்கள். பெருமாள்முருகன், சலபதி,
அதியமான் ஆகியோர் சிறப்பாக செய்தார்கள். உணவு, தங்குமிட வசதிகள் சிறப்பாக இருந்ததாக
பேராளர்கள் சொன்னார்கள். நீங்களும் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். உங்கள்
உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது?
உங்கள்
பகுதியில் இதுபோல பயிலரங்கம் ஒன்று நடத்த முடியுமா என்று பாருங்கள். நான் அவசியம் வருகிறேன்.
அமராவதி வாசகர் வட்டம் எப்படி நடக்கிறது? முடிந்தபோதெல்லாம் எழுதுங்கள்.
தோழமையுடன்
நஞ்சுண்டன்
தியோடர் பாஸ்கரன்
26.12.2000
அன்புள்ள முருகானந்தம்,
உங்கள் மன்றத்திற்கு இரண்டு நூல்கள் அனுப்பியுள்ளேன்.
1.கிரியாவின் தற்காலத்தமிழ்
அகராதி.
2. மூதாதையரைத்தேடி(ஜெயகரன்)
என்னுடைய அன்பளிப்பாக.
கடிதத்திற்கு நன்றி. ஒரு
முக்கியமான உதவி தேவை. உப்பாறு அணை எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று. அங்கு அணையின்
மறுகரையில் சில பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வதாக அறிந்தேன். இதில் கூழைக்கடா
எனப்படும் பெலிகன் பறவையும் வருவதாக கேள்விப்பட்டேன். இதற்கு இப்போதுதான் சீசன் இவை
அங்கு வந்துள்ளனவா என்று தெரிவித்தால் நான் அங்கு வர விருப்பம். பதில் நோக்கி.
அன்புடன்,
பாஸ்கரன்.
16.7.2001
அன்புள்ள முருகானந்தம்,
நான் அந்தமான் தீவுகளுக்கு ஒரு வாரம் ஒரு கருத்தரங்கில்
கலந்துகொள்ள சென்றிருந்தேன். நேற்றுத்தான் திரும்பினேன்.
அன்புடன்,
பாஸ்கரன்.
24.6.2001
அன்புள்ள முருகானந்தம்,
உங்களுடைய இரண்டு கடிதங்களும் கிடைத்தன. நான் வெளிநாடு சென்றிருந்ததால் உடன் பதில்
எழுத முடியவில்லை. முகமது அலியின் நூலைப் படித்தேன். அவர் எனது நண்பர். பல ஆண்டுகளாக.
இந்த வருடம் உப்பாறு அணையில் பறவைகள் வந்தால்
அங்கு வர உத்தேசம். எனக்கு எழுதுங்கள்.
எனது தம்பி லெமூரியா பற்றிய நூல் ஒன்று எழுதி
முடித்துள்ளார். உங்களிடம் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
பாஸ்கரன்.
23.10.2001
அன்புள்ள முருகானந்தம்,
நான் இந்தியாவை விட்டுப்புறப்படும் முன் உன்
கடிதம் கிடைத்தது. உடனே பதில் எழுத முடியவில்லை. நான் இங்கு ஒரு பல்கலைக்கழகத்தில் இரண்டு மாதம் வருகைதரு பேராசிரியராக வந்துள்ளேன்.
டிசம்பர் மாதம் 10 வாக்கில் ஊர் திரும்புவேன்.
ஊரில் யாவரும் நலமா? தினமும் இந்து நாளிதழை இன்டர்நெட்டில் படிக்கிறேன். நல்ல மழை பெய்துள்ளதாக
செய்தி. உப்பாறு அணையில் நீர் நிரம்பிவிட்டதா? கூழைக்கடா எனும் பெலிகன் பறவைகள் வந்தால்
எழுதவும். நான் அங்கு வருகிறேன். இங்கு என் மகன் நியூயார்க்கில் இருக்கிறார். நேற்று
என்னை வந்து பார்த்தார்.
அன்புடன்,
பாஸ்கரன்.
24.7.2002
அன்புள்ள முருகானந்தம்,
நலமா? கடிதத்திற்கு நன்றி. நானும் ஜெயகரனும்
20 ஆம் தேதி தாராபுரத்திருந்தோம். இருமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.
மணி அடித்தது. யாரும் எடுக்கவில்லை. உங்களூருக்கு வர எண்ணினோம். தொலைபேசி எண் சரியானதாக
என்று தெரியவில்லை. மறுபடியும் தயவு செய்து எழுதவும்.
உல்லாஸ் கரந்த் எழுதிய Tiger என்ற நூலை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன்.
‘சித்திரம் பேசுதடி’ பதிப்பாளர் கைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது.
அன்புடன்,
பாஸ்கரன்.
20.6.2003
அன்புள்ள முருகானந்தம்,
கடிதத்திற்கு நன்றி? மறுபடியும் எப்போது சென்னை
வருகிறீர்கள்? வௌவால்களில் ஆயிரக்கணக்கான இனங்கள் உண்டு. நீங்கள் பார்த்தது பழந்தின்னி
வௌவால். எல்லா வௌவால்களிலும் உருவில் பெரியது இதுதான். வீராசிமங்கலத்தில் நானும் பார்த்திருக்கிறேன்.
மருத மரங்களில் அடைந்திருக்கும்(வீர இயக்கி மங்கலம் – சமணப்பெயர்) பல வௌவால்கள் ஊனுண்ணிகள்.
ஜெயகரன் இப்போது சாம்பியா
நாட்டில் இருக்கிறார். அவரது நூலைப்படித்துவிட்டீர்களா?
நானும், என் மனைவியும் சிட்னி
நகருக்கு சென்றிருந்தோம். எங்கள் மகன் அருளுக்கு அங்கு திருமணம் நடந்தது. தன்னுடன்
படித்த பெண்ணை மணந்தார்(அர்ஜென்டீனியப் பெண்). திருமணம் சிறப்பாக நடந்தது. அதன்பின்
நான் இலங்கைக்கு சென்றிருந்தேன். ஒரு கருத்தரங்கிற்கு.
சித்திரம் பேசுதடி இன்னும்
அச்சில்தானிருக்கிறது. இந்திய நதிகள் பற்றிய ஒரு ஆங்கில நூலிற்கு அமராவதி பற்றி எழுதியிருக்கிறேன்.
அதுவும் அச்சில்.
அன்புடன்,
பாஸ்கரன்.
16.5.2004
அன்புள்ள முருகானந்தம்,
கடிதம் கண்டு மகிழ்ச்சி. ஜெயகரன் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியதும் தாராபுரம் வர
எண்ணம். அப்போது கடிதம் எழுதி தெரியப்படுத்துகிறேன். ‘சித்திரம் பேசுதடி’ என்ற தமிழ்
நூலை எழுதி முடித்துவிட்டேன். காலச்சுவடில் நீங்கள் எழுதிய கடிதத்தை படித்தேன். நன்றாக
இருந்தது.
25.5.2004
அன்புள்ள முருகானந்தம்,
தண்ணீர் பிரச்சனை குறித்து காலச்சுவடு சிறப்பிதழ் ஒன்று கொண்டுவர இருக்கிறது என்றறிகிறேன்.
நீங்கள் உப்பாறு பிரச்சனை குறித்து கேஸ் ஸ்டடி மாதிரி ஒரு கட்டுரையாக்கி கண்ணனுக்கு
அனுப்புங்கள். எளிமையாக எழுதுங்கள். விவசாயிகளின் நோக்காக இருப்பது நல்லது. கண்ணனைத்
தொடர்புகொள்ளுங்கள். 04652-278525.
அன்புடன்,
பாஸ்கரன்.
22.12.04
அன்புள்ள முருகானந்தம் நீங்கள்
அரசியலில் ஈடுபட்டுள்ளது குறித்து வாழ்த்துக்கள். நாட்டுக்கு நல்லது. உப்பாறு அருகே
பறவைகள் கூடுகட்டினால் எழுதுங்கள். எனது அடுத்த நூல் ‘எம் தமிழர் செய்த படம்’ உயிர்மை
வெளியீடாக வெளிவருகின்றது.
அன்புடன்,
பாஸ்கரன்.
26.11.04
அன்புள்ள முருகானந்தம்,
ஐந்தாம் தேதி டிசம்பர் கோவை ஆர்.எஸ் புரத்தில் பாரதீய வித்யா பவனில் காலை 9.45 மணிக்கு
எனது நூல் சித்திரம் பேசுதடி வெளியிடப்படும். மேலும் மூன்று நூல்களும் அன்று வெளியிடப்படும்.
தம்பியும் வருவார். முடிந்தால் வரவும். எனக்கு தமிழில் உயிர்மைக்கு எழுதவே சிரமமாக
இருக்கின்றது. வேறு இதழ்களுக்கு எழுத முடியவில்லை. காலச்சுவட்டில் உங்கள் கடிதம் சிறப்பாக
இருந்தது. உங்களது சரியான விலாசம் தேவை.
அன்புடன்,
பாஸ்கரன்.
8.12.04
அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு,
நலமா?
நான் நேற்று ஊர் திரும்பினேன். உப்பாறு அணை அருகே
பெலிகன் பறவைகள் வந்துள்ளனவா? அறிய ஆவல். காலச்சுவடில் உங்கள் கடிதம் படித்து மகிழ்ந்தேன்.
அன்புடன்,
பாஸ்கரன்.
அன்புள்ள முருகானந்தம், நலமா? பெலிகன் பறவைகள்
பற்றி செய்தி உண்டா? அவை அங்கு கூடு கட்டியிருக்கின்றனவா?
அன்புடன்,
பாஸ்கரன்.
25.11.06
அன்புள்ள முருகானந்தம்,
வணக்கம். எஸ்விஆர் அமராவதி பற்றி தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றார்.
அன்புடன்,
பாஸ்கரன்.
சிற்பி பாலசுப்பிரமணியம்
பொள்ளாச்சி
3.1.2003
அன்புள்ள முருகானந்தம்,
தங்களுக்கு என் அன்பான பொங்கல் வாழ்த்துகள்.
நான் எழுதிய ‘ஒரு கிராமத்து நதி’ என்னும் கவிதை நூலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு பெற்றதைப்
பாராட்டித் தாங்கள் அனுப்பிய நல்வாழ்த்து செய்தியைப்பெற்று மகிழ்ந்தேன்.
தங்கள் அன்புக்கு நன்றி. எல்லாவிருதுகளையும்
விட சிறந்தது தங்கள் நட்பும் அன்பும்தான். அதனைப்பெற்றமைக்காக என்றும் பெருமிதமும்,
நன்றியும் உடையவனாவேன்.
மிக்க
அன்புடன்
சிற்பி
பாலசுப்பிரமணியம்
க.சீ சிவக்குமார்
2.5.2001
திரு. முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். தங்கள் கடிதம் கன்னிவாடிக்கு வந்து
அங்கிருந்து ரீடைரக்ட் ஆகி சென்னை வந்தது போனவாரம். விகடனில் பணிபுரிகிறேன் தற்சமயம்.
எனது கதைகளை படிக்கிறவராக நம் வட்டாரத்தில் நீங்கள் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நேரில் சீக்கிரமோ என்றேனுமோ சந்திப்போம் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
க.சீ
சிவக்குமார்.
ஜெயமோகன்
அன்புள்ள நண்பருக்கு,
உங்கள் கடிதம் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டது.
தமிழில் எழுத்தாளனுக்கு வாசகத்தரப்பு அபிப்பிராயம் அரிதாகவே கிடைக்கிறது. உங்கள் கடிதம்
சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது.
இலக்கியப்
படைப்புகளுடன் நமது உறவு பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அப்படைப்புக்குரிய
நேர்த்தி ஆழம் என்பனவற்றுக்கு அப்பால் வாசகத்தரப்பிலும் பலவிதமான காரணங்கள் உள்ளன.
நமது அனுபவங்களின் இயல்பு, அவற்றை உள்வாங்கிக் கொண்டு நான் உருவாக்கிக்கொண்டுள்ள வாழ்க்கைப்
பார்வை, நாம் அதுவரை படித்துள்ள நூல்கள் நம்மை வடிவமைத்துள்ள விதம் என்று இப்படி பல
விஷயங்கள் நமக்கும் படைப்புக்கும் இடையேயான உறவினைத் தீர்மானிப்பவையாக உள்ளன. முக்கியமான
படைப்புகள் நம்முடன் உறவு கொள்ளாது போவதில் வியப்பதற்கேதுமில்லை. ஒரு படைப்பை ஒரு குறிப்பிட்ட
காலகட்டத்தில் குறிப்பிட்ட கோணத்தில் அணுக முடியாமல் போன பிறகு அது எளிதில் சாத்தியமான
அனுபவமும் கணிசமான வாசகர்களுக்கு இருக்கும். என் நாவல்களில் விஷ்ணுபுரம் முதன்மையானது
என்று கருதும் படைப்பாளிகள் வாசகர்கள் அதிகம். அடுத்தபடியாக பின்தொடரும் நிழலின் குரல்,
பிறகு ரப்பர். சிலர் பனிமனிதன் (குழந்தைகள் நாவல்) ரப்பரைவிட மேலானது என்று கூறுவது
உண்டு. வாசக ஏற்பு குறித்து எழுத்தாளன் அதிகமாக ஏதும் கூறிவிட இயலாது. ஒரு படைப்பை
எழுத்தாளன் தன் முக்கியப் படைப்பாக கருதுவது அதை எழுதும்போது அவனுக்கு சுயவெளிப்பாடு
சார்ந்து ஏற்படும் திருப்தி மூலம்தான். எழுதும்போது அவன் தனக்குள் செல்லும் தூரத்தின்
அளவை வைத்துத்தான். நூல் வகையில் பின்தொடரும் நிழலின் குரலே என் மிகச்சிறந்த படைப்பு
என்று கூறுகிறேன்.
ரப்பர்
வந்த காலத்தில் கணிசமான வாசகர்கள் அது சீராக நகரவில்லை என்று கூறினார்கள். அதேபோல விஷ்ணுபுரத்திற்கும்
பின்தொடரும் நிழலின் குரலிற்கும் வாசகத்தடைகள் பல உண்டு. அக்காலம் வரை வந்த நாவல்களுடன்
ஒப்பிடும்போது ரப்பர் முக்கியமான இடங்களை மட்டும் கூறி பிறவற்றை விட்டுவிட்டு தாவிச்செல்லும்
பாணியிலிருந்தது பெரிய தடையாக இருந்தது. பிறகு அத்தடை கடக்கப்பட்டது.
விஷ்ணுபுரத்தின்
மீது வரும் மனத்தடை அது வெறும் கற்பனை என்ற பிம்பம்தான். அது உண்மையல்ல என்பது என்
தரப்பு. அது ஒருவித கூறுமுறை மட்டுமே. நமது பழைய வரலாறு, தத்துவம் அனைத்துமே அப்படித்தான்
கூறப்பட்டுள்ளது. அந்த முறையிலேயே அவற்றை தொகுத்து அறிவதற்கான முயற்சி. கண்ணகி, அகத்தியர்
முதல் எம்.ஜி.ஆர் வரை நமது வரலாற்று நாயகர்கள் எவரையுமே myth லிருந்து பிரித்தறிய முடியாது.
விஷ்ணுபுரத்தில் நடக்கும் ஐதீகப்படுத்தல் அப்படியே இப்போது கிருபானந்த வாரியார் விஷயத்தில்
நடப்பதைக் காணலாம். வரலாறுக்கும், அன்றாட வாழ்வுக்கும், கருத்தியலுக்கும், ஐதீகத்துக்கும்
இடையேயான ஓட்டத்தைக்கூறும் நாவல் விஷ்ணுபுரம். கூறுமுறையைப் புரிந்துகொண்டு பார்த்தால்
ரப்பர் அளவுக்கு மானுட யதார்த்தத்தை காதல் கசப்பை இலட்சியவாதத்தை, அதன் வீழ்ச்சியை
வரலாற்றில் அபத்தங்களை பேசும் நாவல்தான் அதுவும்.
பின்தொடரும்
நிழலின் குரலின் தடை அது மாறுபட்ட சித்தரிப்புகளின் தொகுப்பாக இருப்பது. சீராக வாசித்துப்போதல்
சிதறிப்பரவும் உணர்வு ஏற்படலாம். ஆனால் உண்மையை வரலாற்றை அதில் செயல்படும் தத்துவத்தை
நாம் அப்படித்தான் அறிகிறோம். கதைகள், கவிதைகள், சித்தரிப்புகள், நிகழ்வுகள், மேடைப்பேச்சுகள்,
விவாதங்கள் வழியாக பல்வேறு கோணங்கள் ஒரே சமயம் நமக்கு அறிமுகமாகின்றன. எல்லா வரலாற்று
சந்தர்ப்பங்களிலும் இப்படித்தான் வந்து போகின்றன.
இவற்றை
திரட்டி சீராக அளித்தால் ஒரு பக்கத்தை மட்டும் கூறுவதாக அமையக கூடும். உண்மைக்கு பல
முகங்கள் உண்டு என்பது என் நம்பிக்கை.
பிற்கால
பெரிய நாவல்களில் என்சைக்ளோபீடியா என்று கூறுமளவு தகவல்களும் அறிவார்ந்த விவாதங்களும்
உள்ளன. இது வாசகனுக்கு சவாலை பலசமயம் சோர்வை அளிக்கலாம். ஆனால் இக்காலத்தில் உலகளவில்
வரும் எல்லா நாவல்களும் இப்படித்தான் உள்ளன என்பதே உண்மை. கதை மூலம் அறிவுத்துறைகளுடன்
உரையாட அவற்றைப் பிணைக்க எப்போதுமே நாவல் முயன்று வந்துள்ளது. இப்போது அறிவுத்துறைகள்
அடையும் சிக்கல்கலையும் விரிவையும் நாவல்களும் வேறு வழி இல்லாமல் பிரதிபலிக்கின்றன.
என் நாவல்கள்
எவையுமே தஸ்தயேவ்ஸ்கியின் கரமசாவ் சகோதரர்கள் அளவுக்கோ, யுலிசஸ் அளவுக்கோ கசார்களின்
அகராதி அளவுக்கோ ஃபூக்கோவின் பெண்டுலம் அளவுக்கோ (பாதிகூட) சிக்கலும் அறிவுத்தருக்கமும்
கொண்டவை அல்ல. நமது அறிவுச்சூழல் அத்தனை சிடுக்கானதுமல்ல. அதற்கு முயல்வது படைப்பாளியின்
பணியாகும்.
இன்றைய
இலக்கிய அனுபவம் என்பது ஒரேசமயம் ஒரு அறிவார்ந்த அனுபவமும் தலித்துவ எழுச்சியும், ஆன்மிக
அகநகர்வும் அளிப்பதாக இருக்கும்(ஒரு நாவல் ஓர் விஞ்ஞான தீஸிஸ் அளவுக்கு அறிவார்ந்ததாக
இருக்கும் என்கிறார்கள்) அத்தகைய படைப்பே என் சவாலாக உள்ளது. காரணம் நான் வாழும் அறிவுத்தளம்
என் அந்தரங்கத்தேடல் இம்மூன்று தளங்களிலும் ஒரே சமயம் நிகழ்வது. என் இயல்பை என் படைப்புகள்
பிரதிபலிக்கும் இல்லையா?
உங்கள்
கருத்துக்களை மறுப்பதாக அர்த்தமில்லை. அது உங்கள் வாசிப்பு. அதை மதிக்கிறேன். (சா.கந்தசாமி
உங்கள் கருத்தையே சொல்வார்) என் மனம் வேறு திசைநோக்கி போகிறது.
உங்கள்
கடிதம் மிகவும் உத்வேகம் தந்தது. எனவே கடிதமும் நீண்டுவிட்டது. நன்றி. எழுதுங்கள்.
ஜெயமோகன்.
வல்லிக்கண்ணன்
சென்னை
20.1.2001
அன்புமிக்க முருகானந்தம்,
வணக்கம் உங்கள் 14 ஆம் தேதி கடிதத்திற்கு நன்றி. உங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தி
நீண்ட கடிதம் எழுதியிருப்பது என் உள்ளத்தைத் தொடுகிறது. மகிழ்ச்சி. மிகச்சிறிய வயதிலேயே
நீங்கள் இலக்கிய ஈடுபாடுபாட்டுடன் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து, தொடர்ந்து படித்துவருவது
பாராட்டுதலுக்கு உரிய நல்ல காரியம். வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் ஆழ்ந்த இலக்கியங்களுக்கும்
அவற்றை மட்டுமே படைத்துக்கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வரவேற்பும் பணவருவாயும் கிடைப்பதில்லைதான்.
அங்கீகாரம் கூட மிகத்தாமதமாகவே கிடைக்கும். இலக்கியத்துக்காகவே வாழ்வது என்பது தன்னைத்தானே
துன்புறுத்திக்கொள்கிற வேள்வி மாதிரி. நீங்கள் குறிப்பிடுவது போல, அதில் கிட்டுகிற
ஆன்ம திருப்தியும், நண்பர்களின் அன்பும் பெரும் மதிப்பு உடையவை. வாழ்த்துக்கள்.
அன்பு
வ.க
சென்னை
21.4.2001
அன்பு நண்பர் முருகானந்தம்,
வணக்கம். உங்கள் கடிதம் 18 ஆம்தேதி கிடைத்தது. சரஸ்வதிகாலம் நூலைப் படித்து மகிழ்ந்ததும்,
எனக்கு கடிதம் எழுதிப் பாராட்டியதற்காக நன்றி. சரஸ்வதி விஜயபாஸ்கரன் இப்போது கோவை ஆர். எஸ் புரத்தில் மகன் வீட்டோடு
இருக்கிறார். மார்ச் மாதம் சென்னைக்கு வந்துபோனார். நலமாக இருக்கிறார். சாகித்திய அகாடமி
விருது வழங்கியது பற்றி கண்டனங்களும் குறை கூறல்களும் இன்னும் தொடரத்தான் செய்கின்றன.
ஜெயமோகன், மற்றும் காலச்சுவடு குழுவினர் எதிர்ப்பில் தீவிரம் காட்டுகின்றனர். ஒவ்வொரு
வருடமும் இப்படி யாராவது எதிர்ப்பதும் குறை கூறுவதும் வழக்கமாகி விட்டது. வாழ்த்துகளுக்கு
நன்றி. நலமாக இருக்கிறேன். நலமே நாடுகிறேன்.
அன்பு
வ.க
சென்னை
20.1.2002
அன்புள்ள
திரு.முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் 13.1.2002 கடிதத்துக்கு நன்றி.
‘சிறியன சிந்தியாதான்’ நூலைப்படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை எழுதி தெரிவித்திருப்பது
மகிழ்ச்சி தருகிறது. இப்பவும் நான் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.
அதிக விற்பனை உள்ள இதழ்கள் மற்றுமுள்ள பத்திரிகைகளில் என் எழுத்துக்கள் வருவதில்லை.
சிற்றிதழ்கள் சிலவற்றில் வருகின்றன. எனது சுயசரிதை ‘வாழ்க்கைச்சுவடுகள்’ என்று 268
பக்கங்களில் புத்தகமாக வந்துள்ளது. டிசம்பர் 30 ஆம் தேதி சேலத்தில் அதற்கு வெளியீட்டு
விழா நடைபெற்றது. முன்பு எழுதப்பட்டவை சில சில இப்போதுதான் தொகுக்கப்பட்டு புத்தகங்களாக
வருகின்றன. நான நலமாக இருக்கிறேன். நவம்பர் மாதம் எனக்கு 81 வயது நிறைவுற்று 82 ஆரம்பித்துள்ளது.
ஆரோக்கியமாகவும் மன அமைதியோடு சந்தோஷமாக இருக்கிறேன்.
உங்கள் நலம் அறிய மகிழ்வு. புத்தகங்கள், பத்திரிகைகள்
படித்துக்கொண்டிருப்பதும் மகிழ்ச்சி தருகிறது. வாழ்த்துக்கள்.
அன்பு
வ.க
நா. தர்மராஜன்
சிவகங்கை
16.11.06
அன்புடையீர்,
வணக்கம்.
உங்கள் கடிதம் கிடைத்தது. கலை இலக்கியம் பற்றிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கு அமராவதி
வாசகர் வட்டம் தொடங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நான்
90 புத்தகங்கள் மொழிபெயர்த்திருக்கிறேன். 2007 சனவரியில் 4 புதிய மொழிபெயர்ப்பு நூல்கள்
வெளியிடப்படும். 72 வயதான் நான் பிரயாணம் செய்ய இயலாது. உங்கள் முயற்சிகள் வெற்றி பெற
வாழ்த்துகிறேன்.
நா.
தர்மராஜன்.
28.11.2006
அன்புடையீர்,
வணக்கம்.
உங்கள் கார்டு கிடைத்தது. உங்களை காந்தி கிராமத்தில் சந்தித்ததை மறந்துவிட்டேன். நினைவூட்டியதற்கு
நன்றி.
நான்
கடந்த 11 மாதங்களில் அன்னா கரீனா உள்பட நான்கு புத்தகங்களை மொழி பெயர்த்தேன். அன்னா
கரீனா மட்டுமே 5 புத்தகங்களுக்கு சமம். சுமார் 300 கார்டுகளும் எழுதியிருக்கிறேன்.
எனக்கு யாரும் எழுதினால் உடனே அவர்களுக்கு பதில் எழுதுவேன்.
தங்கள்,
நா.
தர்மராஜன்.
2.12.2006
அன்புடையீர்,
வணக்கம்.
டிசம்பர் 4 ல் என் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறேன். நான் மொழிபெயர்த்த
‘அன்னா கரீனினா’ நாவலை பாரதி புக் ஹவுஸ், டி28, மாநகர ஷாபிங் காம்ப்ளெக்ஸ், பெரியார்
பஸ் ஸ்டாண்டு, மதுரை -625001 வெளியிட்டுள்ளது. விலை ரூ.600. தாங்கள் முன்பதிவு விலை
ரூ.350 க்கு பெறலாம். நன்றி.
தங்கள்,
நா.
தர்மராஜன்.
முகவரி:
பேராசிரியர். நா. தர்மராஜன்,
41, முத்துச்சாமி நகர்,
சிவகங்கை–630561.
கி.ராஜநாராயணன்
30.1.2001
தங்கள் 26.1.2001 கடிதம். மகிழ்ச்சி. என்ன பதில்
எழுத என்று தெரியவில்லை. கடிதம் எழுதும் ரசிகர்களுக்கு எப்படியாவது ஒரு பதிலையாவது
எழுதலை என்றால் அவர்கள் மனசு சங்கடப்படும் என்று தெரியும். பக்கம் பக்கமாக எழுதியது
ஒரு காலம். தங்கள் பிரியத்திற்கும் கடிதம் எழுதியதற்கும் நன்றி.
கி.ரா
கி.ரா முகவரி:
0-4, அரசு வீடுகள்,
இலாசுப்பேட்டை,
புதுச்சேரி – 605 008
பேச: 0413251506
ஆ. இரா வேங்கடசலபதி
அன்பார்ந்த
திரு. முருகானந்தம், வணக்கம். தங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள். பழைய இதழ்கள் கண்ணில்
பட்டால் அவசியம் தெரிவித்து உதவிடுங்கள். தமிழகம் முழுவதும் ஊர் ஊராகத் தேடினால் கிடைத்தற்கரிய
இதழ்கள் தட்டுப்படும்.
அன்புடன்,
ஆ.இரா வேங்கடாசலபதி.
ஆ.இரா.வே முகவரி:
ஆ.இரா வேங்கடாசலபதி,
விரிவுரையாளர்,
வரலாற்றுத்துறை,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை,
திருநெல்வேலி- 627 012
நீல.பத்மநாபன்
26.4.2002
அன்புள்ள திரு. இரா. முருகானந்தம் அவர்களுக்கு,
தங்கள்
அன்பும் இனிமையுமிக்க பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிடைத்தது. மிக்க நன்றி.
அன்புடன்,
நீல.
பத்மநாபன்.
நீல.பத்மநாபன் முகவரி:
நீல.பத்மநாபன்,
நிலகாந்த் 39/1870,
குறியாத்தி ரோடு, மணக்காடு(அ),
திருவனந்தபுரம் – 695009.
தி.க சிவசங்கரன்
16.2.2001 வெள்ளி, காலை 8மணி
பேரன்புடையீர்,
வணக்கம்.
தங்கள் வாழ்த்துக்கடிதம் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி. என் முகவரி மாற்றம் குறித்துக்கொள்க.
கருத்துவேற்றுமைகளை நான் வரவேற்பவன். ஆனால் பாரதி, பாரதிதாசன், ஜீவா, வ.ரா, புதுமைப்பித்தன்
பாதையை மேன்மேலும் வளப்படுத்தும் வழியில். தமிழ்படைப்பாளிகளும், வாசகர்களும் ஒன்றுபட
வேண்டும் என்பது என் ஆழ்ந்த விருப்பம். இக்கருத்தை தாங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.
பின்குறிப்பு மேலே காண்பதுதான் என் நிரந்தர முகவரி. குறித்துக்கொள்க.
உளமார்ந்த
வாழ்த்துக்கள்.
என்றும்
அன்புடன்,
தி.க.சி
தி.க.சியின் முகவரி:
21இ, சுடலைமாடன் தெரு,
நெல்லை- 627006.
திருப்பூர்
கிருஷ்ணன்
17.5.2001
அன்புள்ள திரு. முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம்,
நலம்தானே?
உங்களது அன்பான கார்டு கிடைக்கப்பெற்றேன். மிகுந்த
மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் அளிக்கும் உற்சாகத்தால் இனி நிறைய சிறுகதைகள் எழுதுவேன்
என்றே நினைக்கிறேன். நல்ல நட்பை தவிர வாழ்வில் அடையக்கூடிய செல்வம் வேறெதுவும் இல்லை.
மனப்பூர்வமாக பாராட்டும் உங்களைப் போன்ற வாசகர்கள்தான் என் எழுத்தின் உந்துசக்தி. உங்களை
நேரில் சந்திக்க வேண்டுமென மனம் விரும்புகிறது. வாய்ப்பு கிட்டும்போது சந்திப்போம்.
முன்னர் தினமணி கதிரிலும், பின்னர் அம்பலத்திலும் பணிபுரிந்தேன். தொடக்கத்தில் தீபம்
இலக்கிய இதழில் துணை ஆசிரியனாக இருந்தேன். தற்போது முழுநேர எழுத்தாளனாக இயங்கி வருகிறேன்.
உங்கள் அன்புக்கு உண்மையிலே மனமார்ந்த நன்றி பாராட்டுகிறேன். நண்பர்கள், குடும்பத்தினர்
அனைவருக்கும் எனது அன்பு.
அன்பு
மறவாத,
திருப்பூர்
கிருஷ்ணன்.
தி.கி முகவரி:
57 – பி, பத்மாவதி நகர்,
விருகம்பாக்கம்,
சென்னை – 600 092.
ஞானக்கூத்தன்
20.12.2000
நண்பருக்கு, வணக்கம். தங்கள் கடிதம் படித்து
மகிழ்ச்சியும், நன்றியும். எனது கவிதைகள் தங்களுக்கு பிடித்திருந்த செய்தி கேட்க மட்டற்ற
மகிழ்ச்சி. என்ன செய்கிறீர்கள்? எழுதுவதுண்டா? தெளிவாக எழுதுகிறீர்களா?
அன்புடன்,
ஞானக்கூத்தன்.
ஞானக்கூத்தன் முகவரி:
38, செங்கல்வராயன் தெரு,
இரண்டாவதுமாடி,
திருவல்லிக்கேணி,
சென்னை – 5.
2.1.2001
நண்பருக்கு,
வணக்கம்.
புத்தாண்டு வாழ்த்துகள். கடிதம் கிடைத்தது. உங்கள் கவிதைகளில் ஆக்கம் நன்று. எழுதிக்கொண்டிருங்கள்.
சில மாதங்கள் கழித்து சந்திக்கலாம்.
அன்புடன்,
ஞானக்கூத்தன்.
அசோகமித்திரன்(ஜே.
தியாகராஜன்)
1.1.2001
அன்புள்ள நண்பருக்கு,
இரு
பக்கங்களுக்குள்தான் எவ்வளவு வாசிப்பு ஞானத்தையும், நல்லெண்ணத்தையும் தெரிவித்திருக்கிறீர்கள்?
இது ஒரு பக்குவமான மனதுக்கும், சொற்கள் மீது லாவகமான உரை கொண்டுள்ள உள்ளத்துக்குமே
சாத்தியம். என் பணி மிகச்சிறியதே. அதைச் செவ்வனே செய்துவரத் தாங்கள் போன்ற அன்பர்களின்
கவனம் ஊக்கம் தருகிறது. மிக்க அன்புடன்,
அசோகமித்திரன்.
பி.கு: என் முகவரி மாறிவிட்டது.
22.09.2001
அன்புள்ள நண்பருக்கு,
என்
பிறந்த நாளை நினைவில் கொண்டு தாங்கள் எழுதிய கடிதம் இன்று என் பிறந்த நாளன்று வந்து
சேர்ந்தது. மிகவும் ஆறுதலாயிருந்தது. என் இடுப்பு எலும்பு முறிந்து சுமார் இரு மாதங்கள்
அவதிப்பட்டு 19 ஆம் தேதிதான மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினேன். என் உதவிக்கு
என்று ஊரிலிருந்து வந்த என் மூத்த மகனுக்கு நள்ளிரவில் விபத்து நேர்ந்து அவனும் என்
மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டான். இது யதார்த்தம்.
தங்கள்
மாறாத அன்பு கண்டு எனக்குப்பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மிக்க அன்புடன்,
அசோகமித்திரன்.
27.3.2002
அன்புள்ள நண்பருக்கு,
என்
உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லை. வயது 71. குடும்பத்தில் இரு பெரிய விபத்துகள்.
உண்மையில் நம்மை நேரிடையாகப் பாதிப்பவை சந்தர்ப்ப சூழ்நிலைகள். இலக்கியம் பிந்தைய இடம்தான்
பெறமுடியும். கண் அறுவை சிகிச்சை நடக்க வேண்டும். தங்களுடைய மாறா அன்பு ஊக்கம் தருகிறது.
ஆனால் இயற்கையை மீறி நாம் என்ன செய்ய முடியும்? மிக்க அன்புடன்,
அசோகமித்திரன்.
14.2.2005
அன்புள்ள நண்பருக்கு,
தங்களுடைய
அன்பான கடிதம் கிடைத்தது. சகாரியா சென்ற வாரம் சென்னை வந்திருந்தார். மிகவும் உருக்கமாக
உரையாற்றினார். நாம் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது. நாம் எல்லாம் அடைந்துவிட்டதாக
நினைப்பது சரியாகாது. தங்கள் அன்புக்கு நன்றியுடன் இப்படிக்கு,
அசோமித்திரன்.
23.1.2006
அன்புள்ள முருகானந்தத்திற்கு,
தங்கள்
கடிதம் கிடைத்தது. உடல்நலம் சரியில்லைதான். இந்த மூன்று மாதங்களில் ஐந்தாறு கட்டுரைகள்,
சிறுகதைகள் வெளிவந்து விட்டன. சுந்தர ராமசாமி பற்றி நான்கு! எல்லாம் பத்திரிகைகள் கேட்டுக்கொண்டதின்
பேரில் தான். வயது 74 முடிந்து விட்டது. மிக்க அன்புடன்,
அசோகமித்திரன்.
7.4.2006
அன்புள்ள நண்பருக்கு,
தாங்கள்
இவ்வளவு தீவிரமாக என் வாழ்க்கையை இடைவிடாது கவனித்திருக்கிறீர்கள். அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள்.
தாங்கள் ஏன் ஒரு நூலாக இதை எழுதக்கூடாது? இன்று இத்தகைய நூல்களுக்கு தேவை இருக்கிறது.
மிக்க அன்புடன்,
அசோகமித்திரன்.
11.11.2006
அன்புள்ள நண்பருக்கு,
தங்களுடைய
கடிதம் கிடைத்தது. தங்கள் முயற்சிகள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.
தனி
வாசகனாக இருப்பதில் ஒரு சுதந்திரம் உண்டு. அமைப்பு என்றால் சுதந்திரத்தில் ஒரு பகுதியாவது
தியாகம் செய்ய வேண்டியதிருக்கும். ஒன்றாகப் பலருக்கும் பலரை அறிமுகப்படுத்தலாம்.
இதை
எழுதுவது அமைப்புகளில் உள்ள சில அபாயங்களையும் உணர்த்தத்தான்.
மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
மிக்க அன்புடன்,
அசோகமித்திரன்.
பி.கு: வெளியூர் சென்று இன்றுதான் வீடு திரும்பினேன்.
அசோகமித்திரன்
முகவரி:
1 ஏ, 9 வது குறுக்கு அவென்யூ,
தண்டீசுவரம்,
வேளச்சேரி,
சென்னை – 600042.
5.2.2007
அன்புள்ள நண்பருக்கு,
தாங்கள்
அன்புடன் எழுதிய கடிதம் கிடைத்தது. நான் இருநாட்கள் வெளியூர் சென்றிருந்தேன். நேர்காணல்
எழுத்துக்கு எழுத்து எழுதிக்கொள்ளக்கூடியதல்ல. முதலில் எனக்கு அச்சில் பேச்சுத்தமிழாக
வருவதில் சம்மதமில்லை. நேர்காணல் எடுக்க வந்தவர் நல்ல வாசகர். எனக்கு மறுக்க மனமில்லை.
ஒரு காலத்தில் சிறு பத்திரிகைகளில்தான் விசேஷ படைப்புகள் வெளிவந்துகொண்டிருந்தன. இப்போது
பல முக்கிய எழுத்தாளர்கள் தனி நூலாகவே வெளியிட்டு விடுகிறார்கள். மிக்க அன்புடன்,
அசோகமித்திரன்.
கருத்துகள்
கருத்துரையிடுக