நூல் அறிமுக விழாவில் வாசிக்க தயாரித்த உரை

இயல்வாகைப்பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பால் ஒரு உயிர்க்கொல்லி’ தமிழ் மொழிபெயர்ப்பு நூலின் நூல் அறிமுக விழாவில் வாசிக்க தயாரித்த உரை


                                                                     ச.ஜெ அன்பரசு


     வணக்கம் நண்பர்களே. பெரும்பாலான நண்பர்களை இங்கு சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. நான் மொழிபெயர்த்துள்ள பால் ஒரு உயிர்க்கொல்லி எனும் நூலின் மூலம் பினாங்கு தோழர்களின் வெளியீடான புத்தகம்தான். என் வயதும், முடி கருக்காததும் புத்தகம் குறித்த ஐயத்தை ஏற்படுத்துகின்றது என்பதை ஒரு பத்திரிகையின் ஆசிரியையின் பேச்சில் இருந்து அறிந்தேன். அறிவிற்கும் வயதிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று உண்மையில் எனக்கு குழப்பமாக உள்ளது. இது நமது மரபான யாரையும் நம்பாத, நேர்மையில் நம்பிக்கை கொள்ளாது ஆனால் அனைவரும் நேர்மையாக நடக்கவேண்டும் என்று எண்ணுகிற இந்திய மரபின் தொடர்ச்சியாகவே எண்ணுகிறேன்.

குக்கூவில் யாரையும் எதிர்பார்க்க ஒன்றுமில்லை. இதில் உள்ள ஒவ்வொருவருமே தன்னகங்காரம், ஒற்றுமை, காட்டுப்பள்ளி குறித்து தனியாக ஒருமணி நேரத்திற்கும் மேலாக சொற்பொழிவு ஆற்றும் நெஞ்சுரம் கொண்ட உண்மையின் பேரொளி என்று கூறிக்கொள்பவர்கள்தான்; பயிற்சி அப்படி இல்லையா…? பெரும் லட்சியவாதக்கூட்டணி என்பதால் எனக்கு என்ன கிடைத்திருக்கும்… !!!பேருந்திற்கான பயணச்சீட்டு பணம் கூட ஆருயிர் தோழர்கள் கொடுக்கவில்லை. அகங்காரம் நிறைந்த உள்ளங்களிடையே அன்பு எப்படி தங்கியிருக்க முடியும்? இணைய முடியாத இருதுருவங்கள்தான் அவை.

     மேலோட்டமான இதழ் நடத்துவதை லைப்ஸ்டைல் பத்திரிகையில்தான் கண்டேன். நான் மொழிபெயர்த்த பல புத்தகங்களை அனுப்பியும் எதையும் அவர்கள் படிக்கவில்லை அனைத்தையும் நான் இறைவனின் சம்பத்து பெற்ற பாடகன் போல மனப்பாடமாக கூறவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். எதிலும் அவசரமாக இருந்தார்களே ஒழியே ஆழமாக ஒரு பார்வை, திட்டம் இதழுக்கென்று இல்லை. என் வாயும் அமைதியாக இருக்கவில்லை. எனக்கு தெரிந்த விஷயங்களை கூறினேன். அவர்களுக்கு கோபம் வரலாம். உண்மை தனியாகத்தானே இருக்கமுடியும். காலையிலிருந்து எதுவும் சாப்பிடவேயில்லை. ஆசிரியை மிக உற்சாக பாவனையாக பேசிக்கொண்டே(கேள்விகளாக) செல்ல எனக்கு கண்கள் கலங்கிவிட்டது. டி.வியில் வேலை செய்பவர்களுக்கு எதற்கு அச்சு ஊடகப்பணி? யோசித்த பின் பேசினால் சிறப்பானதாக இருக்கும். வெற்று ஆர்வக்கோளாறுகளை என்ன செய்ய? நிற்க.
     பால் அருந்தலாமா இல்லையா என்று ஒரு கேள்வியோடு பாலைக் குடித்துக்கொண்டு கூட இப்புத்தகத்தை நீங்கள் படிக்கலாம். எதையும் விழிப்புணர்வோடு செய்யுங்கள். அவ்வளவுதான். நான் பால் பொருட்களை பயன்படுத்துகிறேன். என் சிறுவயது உடல் நலிவு தொடர்ந்து பால்பொருட்களை பயன்படுத்தும் நிர்பந்தத்தை ஏற்படுத்திவிட்டது. வணிக நோக்கிலான பால் பொருட்களின் வணிகம் மக்களின் உடல்நலனை கருத்தில் கொள்வதில்லை என்பதுதான் பால் நூலின் மையக்கருத்து. ஒவ்வொருவரும் தங்களின் அனுபவத்திலிருந்தே பாடங்களைக் கற்பது நல்லது. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

     பால் என்பது ஏழைகளுக்கான மலிவு விலை ஊட்டச்சத்தாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. பல மருத்துவர்களும் இன்றைய நாகரிகமான சிறுதானியங்களை உண்ணக்கூறுகிறார்கள் என்றாலும் ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள் பால் பொருட்களை நெய்ப்பு குணத்திற்காக பயன்படுத்தக் கூறுவதைக் கவனிக்க வேண்டும். மேலும் பால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதுபற்றி என் நண்பர் ஒருவரிடம் கேட்கும்போது, பால் பொருட்களை பயன்படுத்தாத போது ஒரு நிறைவு ஏற்படுவதில்லை என்று கூறினார். நமது மனநிலை, தொழிற்சூழல் போன்றவையும் முக்கியமான நோய்க்காரணிகள் என்று கொள்ளலாம்.

     உணவுப்பொருட்களைப்பற்றி பினாங்கு தோழர்கள் கவனம் கோரும் காபீன், மாமிசம், மாத்திரை பற்றி என பல விழிப்புணர்வு நூல்களை எழுதியுள்ளார்கள். குக்கூ சிவராஜ் அவர்கள் பால், காபீன் பற்றி எழுதச்சொல்லிவிட்டு, பின்னர்  எதற்கு வேண்டாம் வேண்டாம் என்று கூறவேண்டும் என்றவர் பால் மட்டும் பிரசுரம் செய்து விடலாம் என்று கூறிவிட்டார். இதில் சிவராஜ் அவர்கள் காற்றையும் உண்டு வாழ முடியுமா என்று வேறு பரிணாமத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் காட்டுப்பள்ளி நிறுவனர்களில் முக்கியமானவர். அதுபற்றி பின்னாளில் இயல் வாகையிலிருந்து ஏதாவது புத்தகம் வரலாம். ஒரு நகைமுரணாக பாலை அருந்தாதீர்கள் என்று கூறும் உணவுப்பழக்கத்தை மாற்ற மன்றாடும் என்னையும், பதிப்பாளர் ‘குக்கூ’ சிவராஜ் ஐயாவையும் பாருங்கள். நூலை வாங்கும் நம்பிக்கை போய்விடும்படி ஆய்வக எலும்புக்கூடுகளின் மாதிரி போலவே இருப்போம். மனதில் நன்றாக நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். நான் மொழி பெயர்ப்பு மட்டுமே செய்தவன். இந்நூலில் எழுதிய எதனையும் ஆராய்ச்சியெல்லாம் செய்யவில்லை. தமிழ் மொழி மூலம் ஆங்கில சொற்களுக்கு வடிவம் ஒன்றினைக் கொடுத்தேன். அவ்வளவுதான். மேலதிக கேள்விகளை நான் விரும்பவில்லை. நாம் உண்ணும் பொருட்களில் என்ன இருக்கிறது என்பது பற்றிய அறிவு நமக்கு அவசியம்.

     தொடர்ந்து உணவுப்பொருட்களின் அரசியல் பற்றி பேசும் இடதுசாரிகள் மற்றும் சில தன்னலம் கருதாது இயற்கை விவசாயம் செய்யும் மனிதர்கள் போன்ற இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள்தான் விழிப்புணர்வு ஏற்படுத்தி உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க போராடும் உண்மையான போராளிகள். மரு.கு சிவராமன் எழுதிய ஆறாம் திணை, தற்போது எழுதிவரும் நலம் 360 டிகிரி உட்பட பலவும் வெகுஜன மக்களுக்கு பெரும் நம்பிக்கையை உயிர்ப்பை சிறுதானியங்கள் மீது ஏற்படுத்தியிருக்கிறது.

     புகோகா கூறியது போல செயற்கையான வேதிஉரம்இட்டு வளர்க்கப்படும்  தானியங்கள் விற்பதை விட இயற்கை தானியங்கள் குறைவான விலைக்கு விற்கப்பட வேண்டும்; அப்போதுதான் சாதாரண மக்களுக்கு இவற்றை கொண்டுபோய் சேர்க்கமுடியும். இல்லையெனில் இதுவும் மேல்தட்டுவர்க்கத்தினர் காரில் வந்து வாங்கிக் கொண்டு செல்லும் ஒரு பொருளாகவே அமையும் வாய்ப்புகள் அதிகம். தனது சுயநலன்களுக்கு செய்வதைத் தாண்டி சிலர் மட்டுமே சிந்திக்கிறார்கள். அவர்கள் மூலம்தான் சமூகம் மேம்பட வாய்ப்புண்டு. இயல்வாகை பதிப்பாளர் சிவராஜ் அவர்களுக்கு நன்றி பல. அவரின் ஊக்கத்தினால்தான் நான் இதை எழுதி தட்டச்சு செய்தேன். கடுமையான உழைப்பின் மூலமாக இப்பிரதி தயாரானது என்று பதிப்பாளர் முன்னர் கூறினார். நோக்கம் சரியாக இருந்தால் எந்த உழைப்பும் வீணாகாது. காந்தி கூறியதும் அதுதானே. அவரைப் பயன்படுத்தி வாழ்பவர்களுக்கு இது தெரியாதா என்ன? ராகுல் ஆல்வாரிஸ் குறித்த எனது தமிழ் மொழிபெயர்ப்பினை ‘freetamilebooks.com எனும் தளத்தில் விலையில்லாது தரவிறக்கி படிக்க இயலும். பயம் என்பது சிறந்த வணிக முறையாக மாறி வருகிறது. விழிப்புணர்வோடு உணவை உண்போம். இது மட்டுமே இந்த காலத்தில் சாத்தியம் என்று நம்புகிறேன். பல வாய்ப்புகளை உருவாக்குவதும் , அதனை அடையாளம் கண்டு கூறுவதும் தற்காலத்தில் மிகமுக்கியமான ஒன்றாக கருதுகிறேன். சந்திப்போம் நண்பர்களே.

     

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்