உலகின் தொழிற்சாலையாக மாறுமா இந்தியா?
உலகின் தொழிற்சாலையாக மாறுமா இந்தியா?
ஒரு அலசல் பார்வை
அரசுகார்த்திக்
இந்தியாவில் உருவாக்கப்படும்
பொருட்கள் உலகமெங்கும் விற்கப்படும் நிலையினை உருவாக்கப்படவேண்டும் என்று இந்தியாவில்
உருவாக்குவோம்(Make in India) எனும் திட்டத்தினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்திருக்கிறார்.
பல முதலீட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதிக்க ஏதுவாக பல்வேறு தொழில் சட்டங்கள்,
சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட சட்டங்கள் தளர்த்தப்பட இருக்கின்றன. சீனாதான்
உலகின் தொழிற்சாலை என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது. இந்நிலை மாறுமா? சாதக, பாதக அம்சங்களை
அலசுகிறது இக்கட்டுரை.
இந்தியாவில் தொழில் இன்றுவரை
இந்தியாவில்
தொழில் தொடங்குவது அவ்வளவு எளிதாக எந்த தொழில் முனைவோருக்கும் இருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் நடைமுறைகள் பல மாதங்களுக்கு நீளும். ஒரு தொழில் செய்கிறார் தன்னிடம் தொழில்
தொடங்குவதற்கான உரிமம், சுற்றுச்சூழல் உரிமம் உட்பட பனிரெண்டு உரிமங்களை தன்னகத்தே
கொண்டிருக்கவேண்டும். இவற்றில் சில உரிமங்களைப் பெற பல மாதங்கள்வரை காத்திருக்க வேண்டும்.
சிறுமற்றும்
குறுந்தொழில்கள் என்ற பிரிவில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என்றாலும், தொழில்முனைவோர்களுக்கு
வங்கியிலிருந்து கடன் கிடைப்பது நிச்சயம் இல்லை என்பதால் கடும் நெருக்கடிக்கிடையில்தான்
தொழிலை நடத்த வேண்டியிருக்கிறது.
பல
தனியார் நிறுவனங்களோடு போட்டியிடும் வகையில் நவீன தொழிற்நுட்பங்கள் சிறுகுறு தொழில்முனைவோர்களுக்கு
உடனடியாக கிடைப்பதில்லை. பெரிய நிறுவனங்களோடு குறைவாக கொண்ட வசதிகளோடு போட்டி போடுவது
பெரிய விஷயம்தான்.
சிறுதொழில்நிறுவனங்களுக்கு
வழங்கப்படும் அரசு மானியங்கள், உதவிகள், பயிற்சிகள் ஆகியவை இவர்களுக்கு தெரிவதில்லை.
மேலும் இவற்றை வழங்கும் அதிகாரிகள் தொழில்முனைவோர்களுக்கு வழங்கும் மானியத்தில் குறிப்பிட்ட
சதவீதம் கர்ம சித்தியாக தன் காரிய விருத்தியாக கையூட்டும் பெறுகிறார்கள்.
சீனாவில் நிலைமை
தொழிலாளர்
புள்ளிவிபரக்குழு என்ற அமைப்பினால் எடுக்கப்பட்ட ஆய்வில் திறன் கொண்ட இந்தியத் தொழிலாளியின்
சராசரி ஊதியம் தொண்ணூறு ரூபாய் ஆகும். இது சீனாவில் இருமடங்கு அதிகம்.
இன்றுவரை
உலகின் தொழிற்சாலையாக இருக்கும் சீனாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன இயந்திரங்கள்தான்
சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டும் பணியில் பயன்படுத்தப் பட்டவையாகும்.
அவை வேறு வேறு நிறுவனங்களின் பெயரில் இருந்தாலும், உற்பத்தித்தொழிற்சாலை சீனாதான்.
இந்தியாவில்
கல்வியறிவின் சராசரி விழுக்காடு 74 ஆகும். இது சீனாவில் 95 விழுக்காடாக இருக்கிறது.
உலகில் கல்வியறிவு இல்லாதவர்களில் மூன்றில் ஒருவர் இந்தியராக உள்ளார்.
சீனா
தன் உள்நாட்டு உற்பத்தியில் 2.7 விழுக்காட்டினை சுகாதாரத்திற்கென செலவழிக்கிறது. இந்தியாவில்
இது 1.2 விழுக்காடு மட்டுமே.
மேக் இன் இன்டியா!!!
சிங்கத்தின் உடலில்
பல்சக்கரங்கள், அசோகசக்கரம் ஆகியவை உற்பத்தி, பலம், நாட்டின் பெருமை ஆகியவற்றை குறிப்பதாக
மோடி லோகோவை அறிமுகப்படுத்தி வைத்து, இந்தியா காரிலிருந்து மென்பொருள், செயற்கைகோளிலிருந்து
கப்பல், மருந்திலிருந்து துறைமுகம், தாளிலிருந்து அதிகாரம் வரை உற்பத்தி மையமாக இருக்கும்
என்று திட்டத்தின் நோக்கத்தை விளக்கிக் கூறினார்.
உலகில்
பயன்படுத்தும் பொருட்கள் எவையாக இருந்தாலும் அவை இந்தியாவில் உருவாக்கியவையாக இருக்கவேண்டும்
என்று கூறிய பிரதமர் இதற்கான இணையதளத்தினையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
24
உற்பத்தி நகரங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ஏழு நகரங்களின் பணிகள் 2019 ஆண்டிற்குள் முடிவடையும்.
www.makeinindia.com
எனும் தளத்தின் மூலம் தொழில் தொடங்குபவர்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து தொழில்
தொடங்குவதற்கான விதிகளை அறிந்துகொள்ளலாம். எழுபத்திரெண்டு மணி நேரத்தில் தொழில் தொடங்குவதற்கான
அனுமதி வழங்கப்படும்.
தொழிலகங்களுக்கான
உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்துவரும்
துறையாக அறியப்படும் தகவல் தொழில்நுட்பம், மருந்து, கட்டுமானம், ஆட்டோமொபைல், புதுப்பிக்கும்
ஆற்றல் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
மக்களுக்கு கிடைப்பது என்ன?
இளைஞர்களை
அதிகம் கொண்டிருக்கும் நாடான இந்தியாவில் அதிகளவிலான தொழில் தொடங்க வரும் பன்னாட்டு
நிறுவனங்களினால் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இது இந்திய நிறுவனங்கள் தம் நாட்டில்
எவ்வளவு நம்பிக்கை கொண்டு முதலீட்டை செய்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே பன்னாட்டு நிறுவனங்களின்
அந்நிய முதலீடு அமையும்.
தொழில்
நிறுவனங்களுக்கு சாதகமான அளவு தொழிலாளர் நலன் சட்டங்களில் வேலைநேரம் குறித்து திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட இருக்கின்றன. தொழிற்சாலை உரிமம், ஒழுங்குமுறைப்படுத்தல் ஆகியவற்றை கைவிட்டு
முழுமையான மாற்றங்கள் ஏற்படுத்தி தொடர்ந்து திறந்தமனதோடு செயல்படவேண்டும் என்கிற ரீதியில்
வணிகம் மற்றும தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது யாருக்கான உழைப்பு
இது என்று ஒரு சோறு பதமாக இருக்கிறது.
மத்திய
அரசு தொழில் தொடங்கும் நிறுவனத்தின் உற்பத்தி முதலீட்டில் 10 விழுக்காடு அளவிற்கு மானியம் அளிக்க முன்வருகிறது.
பல புதிய தொழில் நிறுவனங்களின் வருகையால் புதிய தொழில் நுட்பங்கள் நமக்கு கிடைக்கக்
கூடும்.
பாதகங்கள்
உலகின் தொழிற்சாலையாக
இருக்கும் சீனா தயாரிக்கும் பொருட்களை விட இந்தியாவில் தயாரிக்கும் விலை குறைவாக வைப்பதா,
தரத்திற்கேற்ற விலையா என்பது குழப்பமான நிலையாக உள்ளது.
சிறப்பு
பொருளாதார மண்டலங்கள் என்று கூறப்படும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் தொழிலாளர்கள்
சட்டங்கள் உட்பட பலவற்றுக்கும் விலக்கு உள்ளது. பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணிபாதுகாப்பு
என்பது கிடைக்காது. நிறுவனங்கள் தொழிலாளர் நலன் சட்டங்களை திருத்துவதால் அதிக நேரம்
பணிபுரிய நேரிடும். ஓய்வூதிய நலன்களும் புதிய திருத்தங்களினால் தொழிலாளர்களுக்கு சொற்பமாகவே
கிடைக்கும்.
தொழில்
நிறுவனங்களுக்காக விவசாய நிலம், கனிம வளங்களைக் கொண்டுள்ள வனங்கள், உள்ளிட்டவை விரைவாக நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில்
கையகப்படுத்தப்பட்டு குறைந்த விலைக்கு அதிக ஆண்டுகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு
குறைந்த விலைக்கு வாடகைக்கு தரப்படும்.
நாட்டின்
பொருளாதாரம் உள்நாட்டு உற்பத்தி முதலீடுகளை நம்பியிருந்த வகையில் உலகளவில் ஏற்படும்
பொருளாதார பாதிப்புகளை தவிர்க்க முடிந்தது. அந்நிய முதலீடு என்பது எங்கு லாபம் சம்பாதிக்க
முடியுமோ அங்கு செல்லும் பேராசை வணிகர்களின் பையில் உள்ள பணம். மானிய உதவிகள், சலுகைகளைப்பெற்று
வருமானம் ஈட்டியபின் வெளியேறும்போது முன்பு அரசுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்
படி அவர்களை இந்திய நீதிமன்றத்தினால் கட்டுப்படுத்தமுடியாது.(எ.கா: வோடஃபோன் வரி வருவாய்
வழக்கு, நோக்கியா மீதான விதி மீறல், வரிவருவாய்வழக்கு) நிலையில்லாத பொருளாதார நிலைமை
நிலவும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
அரசு
பொதுத்துறை நிறுவனங்களுக்கான போட்டியும் கட்டுப்பாடும் அதிகரிக்கப்படும். லாபத்தில்
இயங்கி வரும்போதே பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் சிறிது சிறிதாக தனியாருக்கு விற்கப்படும்போது,
வரும் காலத்தில் தனியாரின் நெறிகளைக் கடந்த போட்டியினால் இழப்புக்குள்ளாக்கப்படுபவை
தனியாருக்கு மலிவான விலையில் விற்கப்படும் அபாயம் உள்ளது.
உள்நாட்டு
மக்களுக்கான தேவைகளை தீர்க்கும் வகையிலான தற்சார்ப்பு உற்பத்தி முறைதான் ஒரு நாட்டின்
பொருளாதாரத்தை பாதுகாக்கும் என்று காந்திய பொருளாதார அறிஞர் குமரப்பா கூறியது நினைவுக்கு
வருகிறது. மக்களுக்கான பணி பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை சுதந்திரமடைந்து அறுபத்தெட்டு
ஆண்டுகளுக்கும் பின் செய்யமுடியாமல் இருக்கும்போது, அந்நிய முதலீடு என்பது வாழ்க்கையை
மாற்றிவிடும் என்பது இந்தியா ஒளிர்கிறது என்கிறதைப் போலான வார்த்தை மாயஜாலமே தவிர வேறொன்றுமில்லை.
நாட்டின் வளர்ச்சி என்று கூறி வறுமையில் இருக்கும் பலகோடி மக்களை சுரண்டலுக்கு ஆட்படுத்தி பெருநிறுவனத்தலைவர்களுக்கு
லாபம் சம்பாதித்துக் கொடுக்கத்தான் உதவும். இது தொடக்கம்தான் இன்னும் வெகு தொலைவு பயணிக்க
வேண்டியிருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக