தொடர்பு அறுந்துபோகும் பிஎஸ்என்எல்

தொடர்பு அறுந்துபோகும் பிஎஸ்என்எல்
                                                        ச.ஜெ அன்பரசு
        அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களோடு போட்டியிலிருந்தால், குறிப்பிட்ட நிறுவனத்தின் ஏகபோக ஆதிக்கத்தை தடுக்கமுடியும் என்று பல துறைகளிலும் அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அவைகளில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், செயில், கெயில், பிஎஸ்என்எல், பெல் உள்ளிட்ட நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கி வருவதோடு இவற்றில் பல நிறுவனங்கள் அவற்றின் சிறப்பான சேவைக்காக மத்திய அரசின் நவரத்னா உள்ளிட்ட  விருதுகளைப் பெற்றவையாகும். பொதுத்துறை நிறுவனங்களான 260 நிறுவனங்களில் பத்து நிறுவனங்கள் அவை நஷ்டப்படுகின்றன என்று கூறி அவை மூடப்படபோகின்றன. வெற்றிகரமாக செயல்பட்டு வந்த அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்நிலையடைய காரணம் என்ன என்று ஆராய்கிறது இக்கட்டுரை.

இன்றைய நிலைமை

            1990லிருந்து பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்த தொடங்கியதிலிருந்து அரசு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள்  தொடங்கப்பட்டுவிட்டன. ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரூ. நாற்பத்து ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக வருவாய் ஈட்டி வந்த பிஎஸ்என்எல் இன்று நஷ்டத்தில் இயங்கிவருகிறது என்று கூறி தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அரசு நிலம், நிதி கட்டமைப்போடு கூடிய இந்நிறுவனத்தை விற்பதற்கான முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இன்றைய சந்தை பங்களிப்பு 12.3 விழுக்காடும், எம்டிஎன்எல் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 4.83 விழுக்காடு மட்டுமே.

சரிவு தொடங்கியது எப்படி?

            1995 வரை அரசு நிறுவனமாக இருந்த பிஎஸ்என்எல் காங்கிரஸ் அரசினால் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றப்பட்டது. தில்லி மற்றும் மும்பை பகுதிகளை ஒருங்கிணைத்து எம்டிஎன்எல் நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதுவரை அதிக லாபம் ஈட்டி தனியார் நிறுவனங்களுக்கு கடும் சவாலை தந்துகொண்டிருந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சரிவு தொடங்கியது அன்றிலிருந்துதான். தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்த டிராய் எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. செல்போன்கள் அறிமுகமாயிருந்த காலத்தில் அந்த துறையில் இறங்க அனைத்து வசதிகளையும் கொண்டிருந்த பிஎஸ்என்எல்  இறங்க அனுமதி மறுக்கப்பட்டது.
            தனியார் தொலைத்தொடர்புத்துறையில் செல்போன்கள் அறிமுகம் செய்து ஓரளவு வெற்றிபெற்றபின் பிஎஸ்என்எல்க்கு அனுமதி கிடைத்தது. வரும் அழைப்புகளுக்கும் கட்டணம் தனியாரினால் வசூலிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் பிஎஸ்என்எல் அவ்வழைப்புகள் இலவசம் என்று அறிவித்தது. இதனால் மற்ற தனியார் நிறுவனங்களும் இதையே பின்பற்ற வேண்டியதாயிற்று.
விற்கும் திட்டம்
            தொலைக்காட்சியில் விஜய் நகையை வாங்கச் சொல்லும் அடுத்த நொடி விக்ரம் அதை அடமானம் வைக்கச்சொல்லும் இன்றைய காலத்தில் விற்பது ஓஎல்எக்ஸ் மூலம் மிக சாதாரணமாகிவிட்டது என்றாலும் இதை அன்றே தொடங்கி வைத்தது விடுதலைக்கு பாடுபட்ட தேசியக்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான அரசு என்பது சிறிது வருத்தமாகத்தான் இருக்கிறது.
            1995 ல் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அந்நிய முதலீட்டினை 26 விழுக்காடாக்கினார்கள். இரண்டாவது ஆண்டிலேயே அதனை 49 விழுக்காடாக மாற்றினார்கள். பின்வந்த ஆண்டுகளில் அதன் விழுக்காடு 74 ஆக மாறியது. 1998 ஆம் ஆண்டில் தனித்துவமிக்க கட்சியான பா.ஜ.க அரசு இதனை எதற்கு சிறிது சிறிதாக என்று ஒரேயடியாக 100 விழுக்காடாக்கினார்கள்.
            பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இருக்கும் திடமான தொலைத்தொடர்பு கோபுரங்கள், அலுவலகங்கள் போன்ற கட்டுமானங்கள் இன்றுமே பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கிடையாது.

பிஎஸ்என்எல் வீழ்ச்சிக்கு பாடுபட்டவர்கள்

            முதலில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது அமைச்சராக இருந்த சுக்ராம் என்பவர் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவான நடவடிக்கை எடுத்து பிஎஸ்என்எல் நலிவடையச் செய்தவர்களில் முதலிடம் பெறுகிறார்.
            இதன் பின் அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் தனியார் நிறுவனங்களுக்கான தொலைத்தொடர்பு உரிமக்கட்டணத்தை மிக கணிசமாக குறைத்தார்.
            பிரமோத் மகாஜன் அரசுக்கு வரும் வருமானத்தை குறைத்து தனியார் நிறுவனங்கள் பன்னாட்டு உரிமம் பெற சகாயம் செய்தார். இதே காலத்தில் விஎஸ்என்எல் நிறுவனம் நன்கு இயங்கிக்கொண்டிருந்த போது, இருப்பிலிருந்த மூவாயிரம் கோடியுடன் அப்போது பெரும் நஷ்டமாகியிருந்த டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்தில் தலைவரான இந்தியாவை உருவாக்கியவர் என்று பெருமை பேசும் டாடாவிற்கு விற்கப்பட்டது. இதன் பின்னரே டாடா தன் நிறுவனத்தை இழப்பிலிருந்து மீட்டெடுத்தார்.
            பா.ஜ.க அரசில் இருந்த அமைச்சர் அருண் ஷோரி பிஎஸ்என்எல் பங்கினை மிகக் குறைந்த விலைக்கு விற்று அரசிற்கு இழப்பை ஏற்படுத்தினார்.
            தமிழுக்காக பாடுபட்டதாக கூறிக்கொள்ளும்  கட்டுமரத் தலைவரின் இந்தி பேசும் வல்லமை கொண்ட பேரனான தயாநிதி மாறன் வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றியமைத்து ஏமாற்றியதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அரசு விதித்த அபராதமான ஆயிரம் கோடி ரூபாயினை அறுநூறு கோடியாக குறைத்து அரசிற்கு இழப்பு ஏற்படுத்தி, தன் விசுவாசத்தை அந்நிறுவனத்திற்கு நிரூபித்தார். இதோடு வேறு பல அரசு விசுவாச பணிகளை செய்திருக்கிறார் என்பதை நாளிதழ்களில் வரும் வழக்கு விபரங்களைப்  படித்தாலே தெரிந்து கொள்ள முடியும்.
            அடுத்த வந்த ஆண்டிமுத்து ராசா தன்னால் தயாநிதியை விட அரசிற்கு அதிக இழப்பை ஏற்படுத்தவேண்டும் என்கிற லட்சிய உந்துதல் ஏற்பட்டுவிடவே அலைக்கற்றைகளை உணவு விடுதியில் முன்பு வந்தால் சாப்பாடு கிடைக்கும் என்பது போல் உரிமங்களை தூக்கி வீச, அரசிற்கு ஒரு லட்சத்து எழுபத்திரெண்டாயிரம் கோடிக்கும் மேல் இழப்பானது.
என்ன மிச்சமிருக்கிறது?
            இந்திய ரயில்வே துறையை அடுத்த அதிக ஊழியர்களாக 2.5 லட்சம் பேர்கள் பணிபுரிவது பிஎஸ்என்எல் நிறுவனத்தில்தான். சொத்துக்களும் ரயில்வேத்துறைக்கு அடுத்தபடி அதிகம் கொண்டிருப்பது பிஎஸ்என்எல்தான். தான் சாப்பிடுவது பணிசெய்யும் பிஎஸ்என்எல் நிறுவனத்தால்தான் கிடைக்கிறது என்று உணராமல், தனியார் நிறுவனங்களுக்கு உபகாரம் செய்யும் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரின் நேர்மையற்ற துரோகம்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தினை இத்தகைய இக்கட்டுகளில் தள்ளிவிட்டது.

காப்பாற்றும் வழி!!!

            மற்ற நிறுவனங்களின் கேபிள்களை வெட்டியெறிவது, போட்டியில் வெல்வதற்காக விதிகளை மீறி செயல்படுவது, நிறுவனத்தை முடக்க நிர்பந்தப்படுத்துவது, அதிக கட்டணங்களை விதித்து பயனாளர்களை துன்புறுத்துவது என்று எதனையும் தனியார் நிறுவனங்கள் போலல்லாது அரசு விதித்த விதியின்படி நேர்மையாக செயல்படும் நிறுவனமாக இன்றுவரையும் இருப்பது பிஎஸ்என்எல் தான் என்பது அனைவரும் அறிவார்கள். தனியார்களின் ஏகபோகத்தை குறைக்க, தவிர்க்க அத்துறையில் அரசு நிறுவனம் இயங்கி வருவது தவிர வழியேதுமில்லை
            பிஎஸ்என்எல் ஊழியர்கள் தமது பணி பறிபோகக்கூடாது என்பதை விட அரசு நிறுவனத்தை காப்பாற்றும் எண்ணத்தோடு போராடினால்தான் மக்களின் ஆதரவு கிடைக்கும். மிக நேர்மையான தம் ஆன்மாவை நல்ல விலைக்கு விற்கும் அமைச்சர்கள்  இருக்கும்போது வேறு வழியென்ன இருக்கிறது நமக்கு?
           


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்