.பசுமை இயக்க முன்னோடிகள்-தெரு விளக்கு


பசுமை இயக்க முன்னோடிகள்

இந்தியாவின் நான்கு திசைகளிலிருந்தும் இயற்கையைப் பாதுகாக்க திரண்டெழுந்த அர்ப்பணிப்பு கரங்களைக் கொண்ட தெரு விளக்கு போன்ற மனிதர்களில் சிலரை அறிமுகம் செய்து வைப்பது நமது கடமை.
பிலிண்டா ரைட்
    கானுயிர்களைக் காப்பதில் எப்போதும் முன்னிற்பவர். புலிகளை வேட்டையாடி, அதன் பல் ,தோல், நகம், எலும்புகள் என அனைத்தையும் கள்ள வணிகம் செய்யும் கொடியவர்களை எதிர்த்த இவரது போராட்டம் தீரமானது.  இந்திய கானுயிர் சங்கத்தை உருவாக்கி அரும்சேவை செய்தவரும் இவர்தான். 1994 ல் புலியின் உறுப்புகளை கள்ள வணிகம் செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் சங்கம் தொடங்கப்பட்டது. அரசு அதிகாரிகள், வனத்துறை ஆகியோருடன் தொடர்ந்து உரையாடி புலிகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க சட்டங்கள் கொண்டு வர சங்கத்தின் மூலம் பாடுபட்டார்.

பிட்டு ஷகல்
    சுற்றுச்சூழல் செய்திகளை மக்கள் படித்தறியும் வகையில் சான்ட்சுரி என்ற மாத இதழையும், கிளப் இதழையும் 1980 ல் தொடங்கியவர். The Ecologist Asia  மனிதவுரிமைக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவுமான இதழ் அவரது பங்களிப்பே. இயற்கை பாதுகாப்பு குறித்த முப்பது விவரணப் படங்களை எடுத்து தூர்தர்ஷனில் வெளியிட்டவர். மும்பையில் வாழ்ந்த பிட்டு ஷகல் பல சூழல் காப்பு பிரசாரங்களை  மேற்கொண்டவர். ‘’ இப்போது எனது முதன்மை கவனம் புலிகளைக் காப்பதை மையமாகக் கொண்டது. இந்தியக் கடற்கரையையும், மனித வாழ்வையும் அழித்து சீர்குலைப்பதைத் தடுப்பதுமே’’ என்கிறார். நர்மதை பாதுகாப்பு இயக்கம், தேசிய மீனவர் சங்கம், என்ஏபிஎம் ஆகியவற்றின் தீவிரப் போராளியாக முன்னிற்பவர்.
சாண்டி பிரசாத் பட்
    1992 ல் சிறந்த சமூகத்தலைவரென மகசேசே விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டவர். இவரது தச்சோலி கிராம சுயராஜ்ய சங்கம் உத்தராஞ்சல் மாநிலத்தின் கோபோய்வர் பகுதியில் பெரும் புரட்சியை செய்தது. இவரது சங்கம் வனத்தின் படுபொருட்களைக் கொண்டு மலைவாழ் மக்களுக்கான சிறிய தொழிற்சாலையைத் தொடங்கி, வாழ்வளிப்பது. இவர் சுந்தர்லால் பகுகுணாவுடன் இணைந்து வனத்தின் சிடார் மரங்களை கிரிக்கெட் மட்டை செய்ய சமவெளியின் விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் வெட்ட முயன்றதை தடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டார். பெண்கள் பெருமளவில் பல்வேறு மரங்களைக் கட்டிப்பிடித்தபடி சிப்கோ எனப் போராடி விரட்டினர். இந்தியாவின் சூழல் விழிப்புணர்வுக்கு முன்னோடி இந்தப் போராட்டம் எனலாம். இன்றும் இமயமலைச் சாரலில் கிராம மக்கள் மேம்பாட்டுக்காகவும், இயற்கைச்சூழல் பாதுகாப்பிற்காகவும் ஓய்வின்றி பாடுபட்டு வருபவர்.
டி.பி கோயங்கா
    ஒரு பட்டயக் கணக்காயராகிப் பணம் குவிக்க விரும்பிய இவர் எப்படியோ சூழல் போராளியாகிப் போனார். பம்பாய் சுற்றுச்சூழல் செயல்பாட்டுக்குழுவின்  தீவிர உறுப்பினர். ‘’ நான் உலக கானுயிர் சங்க உறுப்பினரானேன். பின் 1983 ல் பிஇஏஜியில் இணைந்தேன். சியாம் சைனி மும்பையின் பணபலம் வாய்ந்த மனிதர்களுடனும், சூழல் பாதுகாப்புக்காக அச்சமின்றி மோதியதைப் பார்த்து அவருடன் இயற்கை காப்பு பணிகளில் ஈடுபட்டேன். இப்போது பிஇஏஜி வாகனப் புகைக் கட்டுப்பாடு, ஆக்கிரமிப்புகள், மும்பை சஞ்சய் காந்தி தேசியப்பூங்காவில் நடந்துவரும் சீர்கேடுகள் குறித்தும் போராடி வருகிறேன் ‘’ என்கிறார். அரசின் மீது சிறிதும் நம்பிக்கையற்ற அவர், விழிப்புணர்வுற்ற மக்களைத் திரட்டினால் எதையும் சாதித்துவிட முடியுமென அடித்துக் கூறுகிறார்.

குமார் ஜோதி நாத்
    பேராசிரியர் குமார் ஜோதி நாத் பொது சுகாதாரப்  பொறியாளர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். நீரில் உள்ள ஆர்சனிக் நச்சினைப் போக்கும் நுட்பத்தை கண்டறிந்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகராக கடந்த முப்பது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவிவருகிறார். அப்போது திட்டக் குழுவின் உறுப்பினராகவும், ஐ.நா சபை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். 150 நூல்கள் எழுதியுள்ளார். சுலப் எனும் சர்வதேச அமைப்பின் தலைவராகவும் உள்ளார். கொல்கத்தாவின் பரூஸ்பூரில் தொழில் நுட்ப பூங்கா நிறுவி, ஆர்சனிக் நச்சு போக்கும் பத்து தொழில்நுட்பங்களை மக்கள் அறிய உதவியுள்ளார்.
எம்சி மேத்தா
    1984 ல் பொது ஆர்வ சட்ட நிபுணராக தாஜ்மஹாலைக் காணச்சென்று, வெண்பளிங்கு மாளிகை மஞ்சள் கறை படிந்து அழகிழந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அருகில் உள்ள மதுராவின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையும், ஆக்ரா நகரின் தொழிற்சாலைகளின் காற்று மாசும்தான் காரணம் என்று அறிந்து நீதிமன்றத்தில் முதல்முதலாக சுற்றுச்சூழல் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். கூடவே யமுனா நதியை மாசுபடுத்தும் தொழிற்சாலை, நகராட்சிக் கழிவுகளைத் தடுக்கவும் வழக்கு தொடர்ந்தார். சட்டம் மூலம் இயற்கை அழிவுகளைத் தடுக்க முடியும் என்ற விழிப்புணர்வின் தொடக்கத்திற்கு மூலவரானார். சுற்றுச்சூழல் காப்பதற்கான நாற்பது வழக்குகளில் முன்னோடியான நல்ல தீர்ப்பு பெற்ற ஒப்பற்ற சுற்றுச்சூழல் வழக்குரைஞர் என்ற புகழைப் பெற்றார்.
மேதா பட்கர்
    நர்மதாவின் ஓட்டத்துடன் ஓடிவரும் போராளி இவர். அமைதியான போராட்டக்காரராகத் தொடங்கி பெரிய அணைகளுக்கு எதிரான உலகறிந்த போராளியானவர். நர்மதா நதியின் மீது பெரிய அணைகட்டி, அதன் கரையோர கிராமங்களை, பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதை எதிர்த்து நீண்ட போராட்டங்களை நடத்திவருபவர். 1991 ல் இவர் மேற்கொண்ட அணைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் இருபத்திரெண்டாம் நாளை எட்டியபோது, மரணத்தை எட்டிப் பார்த்துவிட்டு திரும்பினார். 1993, 1994 எனத் தொடர்ந்து கடுமையான போராட்டங்களை காந்தியவழியில் மேற்கொண்டு வருபவர். என்ஏபிஎம் எனும் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு மூலம் மக்கள் நேய, சூழல் இயக்கங்களை ஒன்று படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
    சமூக அறிவியல் பட்டதாரியான மேதா பட்கர் 1980 ஆண்டில் நர்மதா பள்ளத்தாக்கின் பழங்குடி மக்கள் பற்றிய ஆய்வைத் தனது முனைவர் பட்டத்திற்காக மேற்கொண்டார். அணையால் அவர்கள் வாழ்வு அழிந்து புதைக்கப்படுவதைக் கண்டு அதில் ஈடுபட்டு, அந்த மக்களுக்காக போராட அங்கேயே தங்கிவிட்டார். போராட்டம் பல நிலைகளைக் கடந்துள்ள இன்றைய நிலையில் ‘’ எனது வாழ்வு இன்று மனிதவுரிமை, இயற்கை வளப்பாதுகாப்பு, மாற்று வளர்ச்சி, ஆய்வு என மாறி மாற்று அரசியல் நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது ‘’ என்கிறார். அமினிஸ்டி விருது, மனிதவுரிமைப் பாதுகாப்பு விருது எனப் பல உலகுதழுவிய பாராட்டுகளைப் பெற்றும், தனது போராட்ட வாழ்வைத் தொடர்கிறார்.
ராஜேந்தர் சிங்
    வறண்டு கிடந்த ராஜஸ்தான் ஆல்வார் நதியை உயிர்த்தெழச் செய்து மீண்டும் ஓடச் செய்த மகசேசே விருதினைப் பெற்ற சூழலியலாளர். சமூக சேவகர். ஜோஹடாஸ் என்ற பாரம்பரிய நீர்சேமிப்பு முறையை வறண்ட ராஜஸ்தானின் பல பகுதிகளில் வெற்றிகரமாக கையாண்டு நிரூபித்தவர். தருண் பாரத் சங்கம் எனும் இவரின் நீர் சேமிப்பு இயக்கம் மக்களுக்கு நீர் சேமிப்பை சேமிக்க கற்றுக் கொடுத்தது. சரிஸ்கா புலிகள் காப்பு வனப்பகுதி மக்களுடன் இணைந்து வனவளம் காக்கவும், கானுயிர்களைக் காக்கவுமான விழிப்புணர்வை வளர்த்தார். வனம், நீர், வாழ்வு எனும் கோஷத்தின் மூலம் ராஜஸ்தான் மக்களைக் காடுகளையும், நீரையும் பாதுகாப்பதன் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை உணர்த்தி பயிற்றுவித்தார்.
ஸ்யாம் சைநானி
    டாடா     நிறுவனத்தில் பணியாற்றிய இவர் பம்பாயைக் காப்போம் இயக்கத்தைக் தொடக்கினார். பின்னர், அதுவே பம்பாய் சுற்றுச்சூழல் செயற்குழு (பிஇஏஜி) என்று பெயர்பெற்றது.
 ‘’ இருபத்தைந்து விழுக்காடு லண்டன் பாதுகாப்புக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதுபோல டெல்லியும் பிற நகரங்களும் மாற்றப்பட வேண்டும். சுற்றுச்சூழல் என்பது புனிதக் கடமையாக ஏற்கப்பட வேண்டும் ‘’ என்கிறார். நாட்டின் அனைத்து மலை நகரங்களையும் இயற்கை நுட்ப பகுதிகளாக அறிவித்து காக்க வேண்டும் என்கிறார் இவர். மகாபலீஸ்வரர், பஞ்ச கனி என இரண்டையும் சிறப்பு மலை நகரங்களாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் கண்டோன்மென்ட் எனும் பாதுகாப்பு பகுதியில் கட்டிட வரையறைச்சட்டம் கொண்டு வருவதற்கும் அவர் முயன்று வருகிறார். இந்தியாவில் உள்ள அறுபத்து ஒன்று கண்டோன்மென்ட் பகுதிகளில் தென்னிந்தியாவில் உள்ள பதினைந்து பகுதிகள் இத்தகைய வரையறையை ஏற்றுள்ளன. விரைவில் அவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
சுபாஷ் தத்தா
    தொழில் வழியில் பட்டயக் கணக்காயரான இவர் சூழலின் பக்கம் திரும்பினார். ஹவ்ரா நகரின் மக்கள் பிரச்சனைகளில் முன்னின்று 1977 ல் போராடினார். இவற்றை சூழல் பிரச்சனையாக மட்டும் பார்த்து போராடி வெற்றிபெற முடியாது என்பதைத் தன் அனுபவத்தில் உணர்ந்தார். பொதுநல வழக்காக 43 வழக்குகளை பதிவு செய்துள்ளார். இதில் ஒன்றில் கூட தோல்வி காணாது வெற்றி கண்டுள்ளார். இருபத்திரெண்டு சமூகப் பிரச்சனைகள் குறித்து உச்ச நீதி மன்றத்தில் 22 வழக்குகளை 1985 ல் தொடுத்துள்ளார். இவை குறித்து ஐநூறு பக்க அளவில் ஆவணங்களைத் தயாரித்து நீதி மன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.  இதனால்  உச்சநீதி மன்றம் இவ்வழக்குகளை ஆராய கொல்கத்தாவிலேயே சிறப்பு அமர்வை நடத்தியது. இதன் காரணமாக பசுமை நீதிமன்றம் உருவானது. கடந்த செப்டம்பரில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுக்காக தனி வழக்கு போடக் கோரப்பட்டார். கழிவுக் குப்பைகள் குவிப்பு, வனப்பகுதிக்கு வெளியே உள்ள வனப்பகுதி அழிப்பு போன்ற பல்வேறு பட்ட பிரச்சனைகளைக் கையிலெடுத்துப் போராடிக் கொண்டுள்ளார். நகரின் சாலையோர மரங்களைக் காக்கவும், கங்கை மாசுபடுதலை எதிர்த்தும், ஆட்டோக்களின் புகைக் கட்டுப்பாடு போன்ற வற்றிற்காகவும் போராடி உள்ளார். சுபாஷ் தத்தாவின் வழியில் அவரது இளம் மகனும் இயற்கைக்காக போராடுபவராக வளர்ந்துவருகிறார் என்பது மகிழ்ச்சி தருகிறது.
சுந்தர்லால் பகுகுணா
    மரங்களைத் தழுவுங்கள் என்றார். மக்கள் மரங்களைக் கட்டிப் பிடித்து நின்றனர். காடுகள் காக்கப்பட்டன. சிப்கோ இயக்கம் பிறந்தது. முதுமையின் தள்ளாமையிலும் இமயமலையிலிருந்து டெல்லிக்கும் தெஹ்ரிக்குமாக வழக்குக்காக அலைகிறார். இமயமலை அடிவார கிராமங்கள் ஒவ்வொன்றுக்கும் நடந்து சென்று தமது இமயக்காடுகள் காக்கும் போராட்டத்திற்கு வலிமை கூட்டினார். ‘’ என் உழைப்பு வீண் போகவில்லை. சிப்கோ போராட்டப் பெண்கள் இன்று சிப்கோ இயக்கமாகியுள்ளனர். நாங்கள் அன்று தொடங்கிய புரட்சி நெருப்பு நாடு முழுவதும் பரவியுள்ளது. மக்கள் வாழ்வை அழிக்கும் வளர்ச்சிமுறைக்கு எதிரான விழிப்புணர்வு எங்கும் பரவியுள்ளது ‘’ என்கிறார் அவரது மனைவி பிம்லா பகுகுணா. வளர்ச்சியின் கோரத் தாக்குதலால் இமயம் ரத்தம் சிந்திக் கொண்டுள்ளது என்கிறார் மரங்கள், காடுகள், மலைகள் ஆகியவற்றைக் காப்பாற்ற, சுரங்கங்கள் மற்றும் அணைகளுக்கு எதிராகப் போராடிய இக்கிழவர்.
சுனிதா நாராயண்
    அனில் அகர்வாலின் மரணத்திற்குப் பின், அவர் விட்டுச்சென்ற  மகத்தான பணிகளைத் தொடர்கிறார் சுனிதா. டவுன் டூ எர்த் இதழின் ஆசிரியர் பொறுப்பை அனிலுக்குப்பிறகு ஏற்று சூழல் போராட்ட எழுத்தை தொடர்கிறார். 1992 ல் Towards a Green world  நூலை எழுதினார். நீர் சேமிப்பு பற்றிய சிறப்பு அக்கறை கொண்ட சுனிதா Dying Wisdom என்ற நூலையும் எழுதியுள்ளார்.  ஜோகன்ஸ்பர்க் பூமி மாநாட்டின் போது அவர் ‘’ ஜோகன்ஸ்பர்க் வேண்டுவது பெருங்கனவு. உலகை மாற்றுவோர் பெருங்கனவில் நம்பிக்கை கொள்ள வேண்டும் ‘’ என்றார்.
வந்தனா சிவா
    பௌதீக அறிவியலாளர், சூழல் ஆர்வலர், பசுமைப் போராளி, எழுத்தாளர் எனப் பல முகம் கொண்ட வந்தனா ஒரு புதிய சூழலியல் யுகப் படைப்பாளர். கடினமான பலரும் தொட அஞ்சும் பிரச்சனைகளை தொடும் நெஞ்சுரம் பெற்றவர். இயற்கைத் திருடர்களை எதிர்த்து உலகளவில் போராடுபவர். ‘’நான் எடுத்துக்கொண்ட போராட்டங்கள் பற்றியும், அதில் என் பங்கு பற்றியும் மனநிறைவு கொண்டுள்ளேன். வெற்றி, தோல்வி ஒரு பொருட்டல்ல. மக்கள் மனசாட்சியைத் தட்டியெழுப்ப ஒவ்வொன்றும் எனக்கு உதவியுள்ளன. அறிவு சார்ந்த பயணம் செல்கிறேன் என்ற நிறைவு உள்ளது ‘’ என்கிறார். பெங்களூர் இந்திய நிர்வாக மேலாண்மை அமைப்பில் ஆய்வாளராக பணியாற்றியவர். இயற்கைப் பன்முகத்தன்மை பாதுகாப்புக்கென ‘நவதான்யா’ என்ற அமைப்பை நிறுவி, பாரம்பரிய விதை, விவசாயம் காப்பு, விவசாயிகள் உரிமைக் காப்பு ஆகியவற்றிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரது அமைப்பு மூலம் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து மக்கள் உரிமைக்காகவும், இயற்கை வளப் பாதுகாப்பு கொள்கைகள் வகுக்கவுமான அறிவு சார்ந்த வேலைகளைச் செய்து வருகிறார்.
    பசுமைப் புரட்சியின் கேடுகள் பற்றியும், இரண்டாம் பசுமைப்புரட்சி கொண்டுவரும் மரபீணி விதைகள் பற்றியும் துணிவான விமர்சனத்தையும், வழிகாட்டலையும் முன்வைத்து செயல்படுபவர். ‘’மகத்தான நிர்வாகத் திறனின்மை நிலவுகிறது. பொறுப்புணரா அரசு புவிகாக்கும் திறன் கொண்டதாக முடியாது ‘’ என உலக வர்த்தக கழகக் கொள்ளை பற்றி விமர்சிக்கிறார்.
இந்திய விவசாயிகளின் வடிவு சார்ந்த உரிமைகளுக்காக போராடி வருகிறார். உணவு உரிமை, மக்கள் அறிவுரிமை, உணவுப் பாதுகாப்பு ஆகியன அவரது சிறப்பு கவனத்தைப் பெற்று வருகின்றன. 1993 ல் Right Livelihood எனும் மாற்று நோபல் விருதைப் பெற்ற சுற்றுச் சூழல், விவசாயப் போராளி இவர் ஆவார்.

கருத்துகள்