புள்ளி விவரங்கள் ஏன் நாட்டிற்குத் தேவை?

புள்ளி விவரங்கள் ஏன் 

நாட்டிற்குத் தேவை?

                ராமமூர்த்தி அய்யாவு

                        தொகுப்பு: விளாதிமீர் வான்யா

·        புள்ளிவிவரம் திட்டமிடல்
·        புள்ளிவிவரத்தன்மை
·        புள்ளிவிவர சேகரிப்பு சிக்கல்

நாட்டின் எந்தப்பகுதிக்கு எந்த மக்களுக்கு தேவை என்பது சரியான புள்ளி விவரங்களின் மூலம் மட்டும் தெரிய வரும். பொருளாதாரத்திலே மூன்று அடிப்படை பிரச்சனைகள் உண்டு அதாவது, என்ன உற்பத்தி செய்வது, யாருக்கு உற்பத்தி செய்வது, எப்படி உற்பத்தி செய்வது என்பதைப்போல பொருளாதாரத்திட்டமிடலுக்கும் சரி அரசின் எந்த புதிய திட்டங்களுக்கும் சரி புள்ளி விவரங்கள்தான் அடிப்படை ஆதாரம்.
     அப்படிப்பட்ட புள்ளி விவரங்கள் உண்மையானதாக இருக்கும்போதுதான் நாட்டின் வருமான பகிர்ந்தளிப்பு என்பது நல்ல விளைவை ஏற்படுத்தும். குறைந்த பட்சம் புள்ளி விவரங்கள் உண்மைக்கு அருகிலாவது இருக்கவேண்டும். No data is better than wrong data என்று சொல்லுவார்கள். தவறான தகவலை கொடுப்பதற்கு, கொடுக்காமலே இருக்கலாம். தவறான தகவல்களான புள்ளிவிவரம் என்பது நாட்டுக்கு செய்வது துரோகம் மட்டுமே.

புள்ளிவிவரச்சேகரிப்பு என்பது ஒரு கூட்டு முயற்சியே. தகவல் கொடுப்பவரிலிருந்து தகவல் சேகரிப்பவர் அதை வைத்து திட்டமிடுதல் வரை முக்கியமானதுதான். தவறான புள்ளிவிவரம் தவறானதற்கு இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றில் தவறு நடந்தால் கூட போதும். நாடு சுதந்திரமடைந்து 68 ஆண்டுகளாகியும் இன்னும் வளரும் நாடாகவே இருப்பதற்கு சரியான புள்ளிவிவர தகவல்கள் இல்லாததுதான் காரணம். வளர்ந்த நாடுகளிலே புள்ளி விவரத்தின் முக்கியத்துவம் என்னவென்று மக்களுக்குத் தெரிகிறது. ஆனால் நமது நாட்டில் அந்த விழிப்புணர்வு குறைவு என்பதைவிட இல்லை என்றே கூறலாம். என்னவோ எதற்கு என்று பயப்படுகிறார்கள்.

தவறான தகவல்களை தருகிறார்கள்.  இதில் பெரிய நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டிய விவரங்களைத் தரக்கூட தயக்கம். ஏதாவது வில்லங்கம் இருக்குமா என்று பெரும் பயம். புள்ளிவிவரத்துறை தகவல் கேட்பது ஒரு தகவல் தயாரிப்பிற்குத்தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஏன் இப்படி ஒரு துறை இருப்பதையே அறிந்தவர்கள் மிகச்சிலர் மட்டுமே. மேலும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பாளருக்கு இதன் முக்கியத்துவம் தெரிந்திருக்கவேண்டும். பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். என்னதான் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டிருந்தாலும் அதன் அடிப்படையில் செயல்பாடுகளும் இருக்கவேண்டும்.

நாட்டின் திட்டக்குழுவுக்கு அடிப்படை கச்சாப்பொருளே புள்ளிவிவரங்கள்தான். இப்பொழுது புள்ளிவிவரங்கள் தயாராக இருந்தாலும் அதனடிப்படையில் நாட்டு வருமானத்தை பகிர்ந்தளிக்கவும் திட்டக்குழு இருக்குமா என்று தெரியவில்லை. 64 ஆண்டுகால திட்டக்குழு எதற்கு என்ற விபரீத கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பது மேலும் பல்வேறு அமைப்புகள் மீதும் எழுப்பப் படுகிறது. இப்படிப்போனால் மிஞ்சுவது என்ன? திட்டக்குழு என்பது அரசியலமைப்புச்சட்ட அமைப்பு அல்ல. அதனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற பேச்சும் உண்டு.

திட்டக்குழுவினுடைய நதிமூலம் எப்படிப்பட்டதாக இருப்பினும், அதன் தலைவர் பிரதமர் நாடு சுதந்திரமடைந்த போது, இரண்டாம் உலகப்போரினாலும், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையாலும், முதலீடுகள் இன்மையாலும் பசியும் வறுமையும் மிகுந்திருந்த சமயத்தில்தான் மார்ச் 15, 1950 திட்டக்குழு தொடங்கப்பட்டது. பிறவாய்ப்புச்செலவு என்ற கோட்பாடு உண்டு. இந்தக்கோட்பாட்டின் அடிப்படையில்தான் இவ்வமைப்பு அமைக்கப்பட்டது. இவ்வமைப்பு இதுவரையிலும் 3 ஓராண்டுத்திட்டங்களையும், 12 ஐந்தாண்டுத் திட்டங்களையும் கொடுத்திருக்கிறது. அமைப்பில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சீர்திருத்தம் செய்யத் தீர்மானிக்கலாம் ஆனால் அதை முற்றாக அழிப்பது என்பது தற்போது செயல்பாட்டிலிருக்கும் பல்வேறு திட்டங்களை பலவீனப்படுத்திவிடாதா?




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்