அணுமின்சக்தி ஆபத்தானது – பசுமை மின்உற்பத்தியே சிறந்த தீர்வு

அணுமின்சக்தி ஆபத்தானது – பசுமை மின்உற்பத்தியே சிறந்த தீர்வு

    2006 போர்ப்ஸ் புள்ளிவிவரப்படி உலகப் பணக்காரர் பட்டியலில் ஆசியாவிலேயே அதிகம் கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடு இந்தியா எனும் புகழைப் பெற்றுள்ளது. முப்பத்தாறு கோடீஸ்வரர்கள், நூற்று தொண்ணூற்று ஒன்று பில்லியன் டாலர் சொத்துடையவர்கள் ஜப்பான் இருபத்துநான்கு கோடீஸ்வரர்களுடன் அறுபத்து நான்கு பில்லியன் டாலர் சொத்துடன் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.
    2008 ல் உலகின் பத்து பெரும் பணக்காரர்களில் நான்கு பேர் இந்தியர் ‘’2020 ல் அறுபது விழுக்காடு உலக உற்பத்தி, இந்தியா, சீனாவிலிருந்து தான் கிடைக்கும்’’ எனப் பெருமையுடன் கூறுகிறார்  நமது நிதியமைச்சர். இதன் மறுபக்கம் முற்றிலும் வேறுமாதிரி உள்ளது. இந்திய ஒருங்கிணைக்கப்படாதோர் பற்றிய தேசியக் குழு முப்பத்திரெண்டு கோடிப்பேர் இருபது ரூபாய்க்கும் கீழான வருமானம் பெறுகிறார்கள். ஒரு லட்சத்து அறுபத்தாறு ஆயிரத்து முந்நூற்று நான்கு விவசாயிகள் 1997 முதல் பத்தாண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறான்.
    இந்தியா ஒன்பது அல்லது பத்து விழுக்காடு வளர்ச்சியைப் பெற வேண்டுமானால் ஆற்றல் தன்னிறைவு, ஆற்றல் சுதந்திரம் பெற வேண்டுமானால், விளக்கெரியவும், பயணிக்கவும், ஆலைகள் இயங்கவும் ஆற்றல் தேவை. வாகனங்களின் எண்ணிக்கை 1998 – 2003ல் 10.16 விழுக்காடு பெருகியுள்ளது. நமது வாகனங்களில் தொண்ணூற்றுஎட்டு விழுக்காடு இயங்க பெட்ரோலியம் தேவை. அத்தனையும் இறக்குமதி செய்யப்பட வேண்டும். ஆண்டுக்கு முப்பத்தேழு கோடி டன் பெட்ரோலியம் தேவை. இந்தியாவின் சொந்த உற்பத்தி இன்னும் முப்பத்து நான்கு கோடியைத் தாண்டவில்லை. 2007ல் நமது எண்ணெய் இறக்குமதிச் செலவு 6.6 கோடி டாலர் ஆகும். நமது எரிவாயு உற்பத்தி 8.6 கோடி க்யூபிக் மீட்டர் நாள் ஒன்றுக்கு ஆனால் தேவையோ வானைத் தொடுகிறது.
நமது ஆற்றல்நிலை
    மேலைநாடுகளின் தனிநபர் ஆற்றல் பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் நமது பயன்பாடு மிகக் குறைவு. 2004 – 2005 ன் ஆற்றல் பயன்பாடு 572 mtoc( மில்லியன் டன் எண்ணெய்க்கு சமம்) தனிநபர் பயன்பாடு 531 kgoc. ஜிடிபி எட்டிலிருந்து பத்து விழுக்காடு என்ற நிலையை அடைய நமது ஆற்றல் தேவை ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியத் தொழில்களின் கூட்டமைப்பின் ஆற்றல் தேவை பற்றிய ஆய்வு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நூற்றிருபதிலிருந்து – நூற்றைம்பது பில்லியன் டாலர்கள் இதற்கென முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்கிறது. நமது திட்டக்குழு 2031 ல் நமது மொத்த ஆற்றல் தேவை 1652 mtoc இதில் 1022 mtoc நிலக்கரியிலிருந்தும், 76 mtoc அணுசக்தி மூலமும், 13 mtoc நீர் மூலமும் கிடைக்கும் என்கிறது.
    இந்தியாவில் மின்னாற்றல் என்பது வளர்ச்சிக்கானது என்று கருதப்பட்ட காலம் மாறி வணிகப் பொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் மின்சாரம் மக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவைப்படுகிறது. வீடுகளுக்கும், கிராமங்களுக்கும் மின்சாரம் எட்ட நீண்ட தொலைவு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. விவசாயத்தில் தண்ணீர் இறைப்பதற்கும், தொழிற்சாலைகளுக்கும் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. 2004 – 2005ல் மின்உற்பத்தி ஐம்பத்திரெண்டு விழுக்காடு வளர்ச்சி கண்டது.
    1947ல் நாடு விடுதலை பெற்றபோது மின்உற்பத்தி 1300 மெகாவாட். இன்று 14301 மெகாவாட். இன்னும் ஒரு லட்சம் மெகாவாட் தேவை உள்ளது. அறுபத்து ஐந்து விழுக்காடு மின்சாரம் அனல் மின்நிலையங்களிலிருந்து நிலக்கரி, டீசல், எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு நீர்மின் உற்பத்தி 2.9 விழுக்காடு (4120 மெகாவாட்) மட்டுமே அணுவுலைகளிலிருந்து கிடைக்கிறது. புதுப்பிக்கும் மாற்று மின் உற்பத்தி மூலம் 7.7 லிருந்து 10,855 மெகாவாட் கிடைக்கிறது. எனினும் நம்மிடம் ஏழாயிரம் கிலோமீட்டர் நீண்ட கடற்கரை, காற்று, ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இருந்தும் பயன்படுத்தப்படவில்லை.
    1991 கணக்குப்படி நமது 5,93,732 கிராமங்களில் 4,74,982 கிராமங்கள் எண்பது விழுக்காடு மின்சாரம் பெற்றுள்ளன. ஆனால் 13.8 கோடி கிராமப்புற வீடுகளில் 6.02 கோடி வீடுகளே 2001 வரை மின்சாரம் பெற்றுள்ளன. மின்சாரம் வந்தும் வாங்கும் வசதி இல்லை என்பதையே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விரைவுபடுத்தப்பட்ட கிராமப்புற மின் வசதித்திட்டத்தின் படி ஒரு லட்சம் கிராமங்கள், ஒரு லட்சம் வீடுகள் 2009ல் மின்வசதி பெற்றிருக்க வேண்டுமென்பது இலக்கு. 2012 ல் அனைவருக்கும் மின்வசதி தரப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர். இதற்கான நம்பகமான தேவையான மின் வழங்கல் மூலம் எட்டு விழுக்காடு வளர்ச்சி புள்ளியை எட்டிவிட வேண்டும் என்கின்றனர்.
    இந்தியா தன் தேவைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஆனால் நாற்பத்தைந்து விழுக்காடு மின்சாரம் கசிவு, திருட்டு ஆகியவற்றால் காணாமல் போகிறது. நாற்பது விழுக்காடு மின்சாரம் கடத்தல் குறைபாட்டால் இழக்கப்படுகிறது. தவறான மின் அளவிடும் மீட்டர் குறைபாடு, களவு, தவறு ஆகியவற்றின் மூலம் மின்சாரம் பெரிதும் இழக்கப்படுகிறது. கடத்தல் குறைகளை சரிசெய்தல், வழங்கல், கணக்கிடல் முறை சீர் செய்தல், ஏற்புடை கட்டணத்தில் மின்சாரம் வழங்குதல், மக்களின்  வறுமை போக்கி, வருமானம் பெருக்குதல் ஆகிய சவால்களை எதிர் கொள்வதன் மூலம் மின்தேவையை எதிர்கொள்ள முடியும்.
    நமது  இன்றைய மின் தாராளமயப் சந்தைப்போக்கு தனியார் முதலீட்டை இத்துறைக்கு ஈர்க்க உள்ளது. மக்கள் தனியாரிடமே மின்சாரம் வாங்கியாக வேண்டும். இதனால் போட்டியும், அதனால் விலை குறைவும் திறமையான நிர்வாகமும் உண்டாகும் என்கிறார்கள்.
    தனியார் வந்தால் அரசின் பொறுப்பு குறையும். மின்சாரம் என்பது மத்திய, மாநில அரசுகளின் உரிமைப்பட்டியலில் உள்ளது. தனியார் மயமானபின் அரசு கட்டுப்பாடு நேரடியாக இருக்காது. ஆனால் ஒரு அமைப்பு இதனைக் கட்டுப்படுத்த அமைக்கப்படும். அந்த கட்டுப்பாட்டு அமைப்பே புதிய பயனீட்டாளர்களுக்கு அனுமதி தரவும், புதிய கட்டணத்தை முடிவு செய்யவும் உரிமை பெற்றதாகும். மாநில அரசுகள் கடத்தல், பகிர்ந்தளித்தல் பணிகளைச் செய்யும். சீர்திருத்தத்தின் விளைவாக மின்கடத்தல் துறையில் விநியோக சீர்திருத்தம், தேசிய, மாநில பங்கீடுகள் அனுமதிக்கப்பட்டு பாதுகாப்பும், பொருளாதாரப் பலனும் உண்டாகும் என்கிறார்கள்.  2003ல் இந்திய நாடாளுமன்றம் மின்சார சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. தனியார்மயப் போட்டியால் நிதியுகத்தால் பெரும் நிதிக்கான வாய்ப்பு உருவாகும். பங்கீடு முறையால் விற்பனை வாய்ப்புகளும், ஒழுங்கான பங்கீடும், சந்தைத் தேவையில் முறையான பகிர்வும் நடக்கும் என்கின்றனர்.
    பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007 – 2012) 28,000 கோடி நிதியும், 78577 மெகாவாட் மின்னுற்பத்தியும் இலக்காக வைக்கப்பட்டது. மின்னுற்பத்தி இலக்கு மூன்றாம் ஆண்டில் 12, 038 மெகாவாட் என நிர்ணயிக்கப்பட்டு உற்பத்தி 7263 மெ.வா ஆக இருந்தது. இதனால் அடுத்த உற்பத்தி இலக்கு 10821 மெ.வா என குறியிடப்பட்டது. இதில் 8015 மெ.வா அனல்மின், 2587 மெ.வா நீர், 220 மெ.வா அணுமின் உற்பத்தியால் பெறப்பட்டது. 3991 மெ.வா அளவுக்கு மின்னுற்பத்திக்கான தனியார்துறை திட்டங்கள் பத்து ஏற்கப்பட்டன. மேலும் 18,030 மெ.வா தனியார் உற்பத்திக்கான அனுமதியை மாநில அரசுகள் வழங்கியுள்ளன. 4000 மெ.வா உற்பத்தித் திறன் கொண்ட நான்கு புதிய உற்பத்தி திட்டங்கள் தமிழ்நாட்டில் செய்யூரிலும், மகராஷ்டிரத்தின் கிர்யிலும், கர்நாடகாவின் டாட்ரியிலும், ஒரிசாவின் சுந்தர்கிரியிலும் தொடங்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் நிலம் பெறுவது, மக்கள் எதிர்ப்பு ஆகிய காரணங்களால் அவை நின்று போயின.
மரபுவழி மின்னுற்பத்தி
    உணவு, தண்ணீர் ஆகியவற்றை விட அதிகமான ஆர்ப்பாட்டம் மின்தேவைக்காக நடந்துகொண்டுள்ளது. மின்தேவைக்கு மூன்று வழிகள் உள்ளன. மரபுவழி நீர், அனல் மின்னுற்பத்தி, அணுவுலை, இயற்கை வழி காற்று, சூரியன், கடல், பூமியின் வெப்பம், கழிவுகள் ஆகியன.
    டீசல், நிலக்கரியால் அறுபத்தைந்து விழுக்காடு மின்னுற்பத்தி நடக்கிறது. இதில் நிலக்கரியின் பங்கு எழுபத்தெட்டு விழுக்காடு. 2030ல் உலகில் மின்தேவை ஐம்பது விழுக்காடு உயருமாம். அனல் மின்னுற்பத்தி இந்தியாவிலும், சீனாவிலும் எழுபது விழுக்காடு இருக்கும். இதற்கு ஐம்பது பில்லியன் டாலர் செலவிடப்படும். அதிகமாக கரி காற்றை குவித்து பூமியைச் சூடாக்கும் முதன்மை நாடு அமெரிக்காவே. இதன் தொடர் விளைவாகவே பருவநிலை மாற்றம், புயல், வெள்ளம், பனிமலை உருகல், கடல்மட்டம் உயருதல் எனப்பல அழிவுகள் தொடர்கிறது.
    2020ல் அணுமின்னுற்பத்தி 20,000 மெ.வா ஆக இருக்கும் என அணு ஆய்வுத்துறை திட்டமிடுகிறது. இது நம் தேவையில் 2.9 விழுக்காடே. இதற்கு 80,000 கோடி ரூபாய் தேவை. அணுமின்சாரம் பசுங்குடில் வாயுக்களை உருவாக்காது என்ற வாதம் தவறானது. அணுவுலை கட்டுமானம், செயல்பாடு, மூடல், ஆகியவற்றிற்கு பெரும் அளவிலான ஆற்றலை பெட்ரோலியம் மூலமே பெறுகின்றனர். மிகப்பெரும் அளவிலான சிமெண்ட், கட்டுமானப்பொருட்கள் உற்பத்தி, அணுவுலை பயன்படுத்தி முடித்தபின் அதற்கான கான்கிரீட் சமாதி, அணுக்கழிவு பாதுகாப்பு, யுரேனியம் எடுத்தல் போன்றவை கணக்கிட முடியாத பருவநிலை சூழல் கேடுகளை உண்டாக்குவன ஆகும்.
    நீர் மின்சாரம் நானூற்றிருபது நீர்மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக, 1423 மெ.வா(இருபத்தைந்து விழுக்காடு) மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. மேலும் 187 கட்டுமானத்தில் உள்ளன. அவை 521 மெ.வா உற்பத்தி செய்யும். இந்திய நீர்மின் பகுதியில் பதினேழு விழுக்காடு எடுக்கப்படுகிறது.  எழுபத்தெட்டு விழுக்காடு இன்னும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. இந்தியாவில் மொத்தம் 1,50,000 மெ.வா நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்பு உள்ளது. இதைப் பெறுவதில் பல தடைகள் உள்ளன.
அணுமின்னுற்பத்தி
    1948 ஆகஸ்டில் இந்திய அணுசக்தி அமைப்பு தொடங்கப்பட்டது எனினும் 1954ல் தான் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தது. அது பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குப்பிறகு பிரதமர் நேரு அணுசக்தி அமைதிப்பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார். “ நாம் அணு ஆற்றலை மின்னுற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஏனெனில் வளர்ச்சியின் முதன்மைத் தேவை மின்சாரம்’’ என்றார். இதையே அணுசக்தித் துறை பின் ஐம்பது ஆண்டுகளுக்கு கொள்கையாக கொண்டிருந்தது. 1998 ல் மின்னுற்பத்தி 90,000 மெ.வா. இதில் அணுவின் பங்கு 1840 மெ.வா இரண்டு விழுக்காடு மட்டுமே. இப்போது அணுமின்சக்தியின் பங்கு மூன்று விழுக்காடைத்தொட முயற்சித்துக்கொண்டுள்ளது. அது தனது 10,000 மெ.வா அளவை எட்டவேயில்லை. 2,000 வரை தாராபூர்-2, ராவத்பாட்டா-4, கல்பாக்கம்-2, நரோரா-2, கக்ராபூர்-2, கைகா-2 என பதினான்கு அணுவுலைகள் அனைத்தும் புதிய தொழில்நுட்பத்தை சந்தித்துக்கொண்டே உள்ளன. ஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரி பி.கே சுப்பாராவ் ‘’ நமது பதினான்கு அணுவுலைகளில் ஆறு தனது உற்பத்தியளவைவிட குறைவாகவே உற்பத்தி செய்து கொண்டுள்ளன ‘’ என்கிறார்.
    அணுமின் உற்பத்தியை, நீர், அனல் மின் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும்போது, அது செலவு பிடிக்கும் வெள்ளையானை என்பதும், பயன் குறைவு என்பதையும் உணரமுடியும். 1984 முதல் இதற்கான செலவு, உழைப்பு அளவு பலன் கிடைக்கவில்லை என்ற போதும், இதை ஏன் தொடர்ந்து கட்டி இழுக்கிறோம்? இப்போது நம் அதிகாரிகள் தனியார் நிறுவனங்களை மின்னுற்பத்திக்கு அழைக்கின்றனர்.
    2020 ல் அணுமின்னுற்பத்தி 20,000 மெ.வா அவர்களின் இலக்கு. இதற்காகும் செலவு 800 பில்லியன் டாலர் ஆகும். தனியாரினை செலவு பிடிக்காத பிற முறைகளில் உற்பத்தி செய்து லாபமீட்ட வழி செய்துவிட்டு, நமது அரசு வெள்ளையானையை வாங்கி, நாட்டை கடனில் மூழ்கடிக்க திட்டமிடுகின்றனர். பணக்காரரின் பணம் லாபம் ஈட்டும். ஏழைகளின் பணம் பயனின்றி அந்நிய நாட்டு வணிகர்களின் பையினுள் கொட்டப்படும்.
    மக்கள் தொகை மிகுந்த நம்நாட்டுக்கு வளர்ச்சியும், அதற்கான ஆற்றலும் தவிர்க்கமுடியாத தேவையே. ஆனால் மின்சாரம் செலவு குறைவாக நீடித்து, இயற்கை பாதிப்பின்றி கிடைக்க வழி என்ன? மின்சாரம் மட்டுமல்ல கல்வி, மருத்துவம், வீடுகள், சாலைகள் எனப்பல முன்னுரிமைத் தேவைகளும் உள்ளன. பயன்படுத்தி வீசி எறியும் மேலைவாழ்வு முறை நமக்கு உதவாது. எனவே நீடித்துப் பயன்தரும், சிக்கனமான, இயற்கையை பாதிக்காத மின்னுற்பத்திமுறைகளைப் பற்றி நாம் சிந்திப்பது  இன்றியமையாத தேவையாகும். மின்சாரம் தேவை என்பதற்காக ஆபத்தான செலவுமிக்க மடங்கு அதிகமான வழியைத் தேடிச் செல்லக் கூடாது. மாற்று வழிகளை ஆராய்வது அவசியம். நீர்மின் உற்பத்திக்கான வாய்ப்புகள் நம் நாட்டில் ஏராளமாக உள்ளன. புதுப்பிக்கும் ஆற்றல் உற்பத்திமுறைகளைக் கணிசமான அளவு பெருக்குவதற்கான வழிகளை ஆராய்வதாக ஆற்றல் அமைச்சகம் கூறியுள்ளது.
புதுப்பிக்கும் இயற்கை மின்னுற்பத்தி முறைகள்:
இயற்கை ஆற்றல்
    இயற்கை எரிபொருள், இயற்கை கழிவு, இயற்கை எரிவாயு, ஆற்றல் காடுகள், கடலலை போன்றவையே. மின்சாரம் உற்பத்திக்கான இயற்கை வழிகள் எனலாம். இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி செய்யும் மின்சார உற்பத்தியை இயற்கை ஆற்றல் என்கிறோம். இயற்கை தானியங்கள் (கரும்பு, சோயா, சோளம்) போன்றவற்றிலிருந்து எரிஎண்ணெய் கொண்டு மின்னுற்பத்தி செய்வதற்கு அது எண்பது விழுக்காடு புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கவேண்டும். இது இறக்குமதி செய்யும் பெட்ரோலியத்திற்கு மாற்று என்பதால் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தும். விளைபொருளிலிருந்து வருவதால் கிராமத்தின் விவசாயப்பொருளாதாரம் மேம்படும். மக்கும் தன்மை கொண்ட கழிவுகள் என்பதால் இயற்கையும் மாசுபடாது. இது வேறு பயன்பாடுகளும் கொண்டது.
    2000 முதல் இந்த இயற்கை ஆற்றல் அதிகம் சிந்திக்கப்பட்டு வருகிறது. 2002 முதல் அரசு ஐந்து விழுக்காடு எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. 2003 ஜனவரி முதல் ஐந்து விழுக்காடு எத்தனால் பெட்ரோல்  விற்பனையை மத்திய அரசு ஒன்பது மாநிலங்களில் யூனியன் பிரதேசங்களிலும் சட்டப்படி அனுமதித்துள்ளது. படிப்படியாக நாடு முழுவதும் அதை விரிவாக்கும் திட்டம் உள்ளது. கரும்பு விளைச்சல், சர்க்கரை உற்பத்திக் கழிவான மெலாசஸ் இதன் அடிப்படைப் பொருள்.
    இந்தியா 52 பில்லியன் டாலர் கரிக்காற்று சந்தை மதிப்பை இயற்கை எரிபொருள் மூலமும், மரம் நடலின் மூலமும் எண்ணெய் தரும் ஆமணக்கு, புங்கன், சால், வேம்பு போன்றவற்றை வளர்ப்பதன் மூலமும் பெறமுடியும். உணவுக்கு பயன்படும் எண்ணெயை, எரிபொருளாகும் பலவற்றை நாம் பயன்படுத்தி வந்துள்ள மரபை அறிந்து அதை நமது புதிய தேவைக்குப் பயன்படுத்த வேண்டும்.
    இயற்கை எரிவாயுக் களனிகள் வீட்டுச் சமையலுக்கு உதவும் மாசுபடுத்தாத மூலமாகும். இதனால் மரம்வெட்டுவதும் குறையும். எரிவாயு உருளை தேவையும் குறையும். 2000 எரிவாயுக்கலன்கள் நாளொன்றுக்கு பதினான்கு டன் மரங்களைக் காக்கும். பெண்கள் விறகு சேமிக்க அலைவதும், சுமப்பதும், தவிர்க்கப்படும். புகை இல்லாத தூய சமையலறை பெண்களை நோயிலிருந்து காக்கும். கால்நடைக் கழிவு எரிபொருளாகாமல் எருவாக மாறும். ஈக்கள் தொல்லை குறையும். நோய் பரவல் தடுக்கப்படும். பசுங்குடில் வாயுக்கள் உருவாவது குறையும்.
    இயற்கை எரிபொருளின் கழிவு உரமாகிறது. ரசாயன உரப்பயன்பாடு குறைகிறது. நீர் மாசுபடுதல் தடுக்கப்படுகிறது. நைட்ரேட், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் தடுக்கப்படுகிறது. சாம்பல் பூச்சி களைக் கொல்லியாகவும் பயன்படுகிறது. இயற்கை எரிவாயுக்கலன் உருவாக்கம் பலருக்கு வேலைவாய்ப்பாகவும் அமைகிறது. சீனாவில் இரண்டு கோடி இயற்கை வாயு கலன்கள் உள்ளன. மனிதக்கழிவுகள் கூட எரிவாயுவாக்கிப் பயன்படுத்தப்படுவதாக அறுபது ஆண்டுகள் முன்பு சீனா சென்ற குமரப்பா சுட்டிக்காட்டியுள்ளார். இன்னும் இந்தியாவின் 2.75 லட்சம் இயற்கை எரிவாயுக்கலன்களே உள்ளன.
    கால்நடைக் கழிவுகள், மனிதக்கழிவுகள், பண்ணைக்கழிவுகள், மரத்துண்டுகள், சந்தைக்கழிவுகள், தேங்காய் மட்டை, புல், களை,கரும்புச்சக்கை என அனைத்துமே எரிவாயு உற்பத்திக்குப் பயன்படும். கார்டியர் மூலம் எரிவாயுவை மின்சாரமாக்க முடியும். விஜயவாடா நகராட்சி குப்பைக்கழிவு தனியாரால் பத்து ஏக்கர் நிலத்தில் பிரித்து வகைப்படுத்தப்பட்டு எரிபொருளாக்கப்பட்டு அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவதுடன் உரமும் தயாரிக்கப்படுகிறது.
ஆற்றல் காடுகள்:
    ஆற்றல் காடுகள் முக்கியமான ஆற்றல் வாய்ப்பளிப்பதாகும். விரைவில் வளரும் மரங்களின் மூலம் எரிபொருளாக அவற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்க முடியும். இலை, கால்நடை உணவாகவும், உரமாகவும், எரிபொருளாகவும், உரமாகவும் பயன்படுகிறது. இடுக்கியில் உள்ள டாடா தேயிலைத் தோட்டத்தில் வளர்க்கப்படும் ஆற்றல் காடுகள் தேயிலை தொழிற்சாலையின் உற்பத்திக்கு எரிபொருளாகிறது.
அலைமின் உற்பத்தி:
    அலைமின் உற்பத்தி பிரிட்டனில் ஸ்காட்டிஷ் தீவுகளில் முதன்முதலாக அலை ஆற்றல் மூலம் மின்சாரம் எடுக்கப்பட்டது. கேரளாவில் விழிஞ்ஜ எனுமிடத்தில் அலையாற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு பழைய முறைதான் பயன்படுத்தப்படுகிறது. ஹைதராபாத் விஞ்ஞானிகள் தண்ணீரில் மூழ்கி இயங்கும் புதிய ஆற்றல் திறன் கருவியை உருவாக்கியுள்ளனர். நமது 7000 கிலோமீட்டர் நீளக் கடற்கரை மின்னுற்பத்தி மூலமாக்கப்பட வேண்டும்.
கடல் ஆற்றல்:
    தினமும் அறுபது லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பு 170 பில்லியன் பீப்பாய் டீசல் எரித்து பெறும் ஆற்றலையே தந்துள்ளது. கடல் வெப்ப ஆற்றல் பாதுகாப்பு கப்பல் விடவுமான மின்னாற்றல் தரும். தூத்துக்குடியில் தேசிய கடல் எரிபொருள் நிறுவனம் இத்தகைய கடல் ஆற்றல் மின்னுற்பத்தியை நிறுவியுள்ளது. இந்தக் கடல் ஆற்றல் முழுமையாக பயன்படுத்த முடியுமானால் உலகே ஒளிபெறும். இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பரப்பை நாம் ஆற்றல் உற்பத்திநிலையமாக்க முடியுமா?
மீத்தேன் ஹைட்ரேட்:
    இது ஒரு புதிய ஆற்றல் மூலம். கடலடியில் உருவாகும் மீத்தேன் உயர்ந்த அழுத்தமும், குறைந்த வெப்பமும் கொண்டது. அந்தமான் தீவுகளைச் சுற்றி இந்த மீத்தேன் ஹைட்ரேட் ஆழ்கடலில் அதிகம் உற்பத்தியாகிறது. சுமார் 20,000 ட்ரில்லியன் அளவு மீத்தேன் ஹைட்ரேட் உருவாகிறது. நமது எண்ணெய் எரிவாயு நிறுவனமானது (ஓஎன்சிஜி), இதை எடுத்து பயன்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
சூரிய ஆற்றல்:
    சூரிய ஆற்றல் மின்னுற்பத்தியே வேகமாக வளர்ந்து வரும் மின் மூலம் என்கிறது உலகக் கொள்கை நிறுவனம். மின்னுற்பத்தியை இரண்டாண்டுக்கொருமுறை இரட்டிப்பாக்க வேண்டும் என்கிறது. உலகம் முழுவதுமான சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி 5000 மெ.வா சூரிய ஒளிமாற்று செல்லின் மேம்பாடு மூலம் மைய மின் தொடர்புடன் இதை இணைத்திட முடியும். சூரிய மின்சக்திக்கான அதிக நிதி ஒதுக்குவதன் மூலம் அமெரிக்கா தனது அறுபத்தொன்பது விழுக்காடு மின் தேவையைப் பெற்றுவிட முடியும். இந்தியா சூரியமின்னாற்றலை பெருமளவில் பெறக்கூடிய வாய்ப்பு பெற்றுள்ளதாக நாசா ஆய்வு கூறுகிறது.
    சூரிய ஆற்றல் சுடுநீர், தெருவிளக்கு, விசிறி, சமையல் நீர் இறைப்பு, போன்றவற்றை நாம் பெற்றுள்ளோம். சூரிய ஆற்றல் வானொலி, பேட்டரி கூட இயக்கப்படுகின்றன. 2002 வரை ஐந்து லட்சம் சமையல் பெட்டி விற்கப்பட்டுள்ளது. மவுண்ட் அபூ பிரும்மகுமாரிகள கோவிலில் 10,000 பக்தர்களுக்கு உணவு சமைப்பது சூரிய ஆற்றலில் மின்தகனம் ஒவ்வொரு உடலுக்கும் 600 பவுண்ட் விறகை சேமித்து மரஅழிவைத்தடுத்துக் கொண்டுள்ளது. ஜோத்பூரில் 30 மெ.வா சூரிய மின்னுற்பத்தி ஆலை உள்ளது. 2005ல் 245 மெ.வா சூரிய மின்னுற்பத்தி செயல்படத்தொடங்கியது.
    பதினொன்றாவது ஐந்தாவது திட்டகாலத்தில் ஐந்துலட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை மக்கள்தொகை நகரங்களை சூரிய மின் ஆற்றலுக்கு மாற்றும் திட்டம் போடப்பட்டது. ஹைதராபாத் டெலிகாம் நிறுவனம் ஸ்பெயின், போர்ச்சுக்கலில் 28 மெ.வா சூரிய மின் உற்பத்தியை தொடங்கியுள்ளது. அடுத்த கட்டமாக 200 மெ.வா உற்பத்தி மையங்களை உருவாக்கி உள்ளது. ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் மலிவான முறையில் சூரிய ஒளியைக் கண்ணாடி கொண்டு குவியச் செய்து ஆயிரம் செல்சியஸ் வெப்பம் உண்டாக்கி மின்னுற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது. இது கிராமப்புறத்தில் பெரிதும் உதவும். இதன் செயல்பாட்டுக்கு ஒளியைக் குவித்து வெப்பசக்தியாக்குதல், வெப்பம் ஏற்பு, வெப்பத்தை செயல்சக்தியாக மாற்றல், செயல்சக்தியை மின்சக்தியாக மாற்றல் ஆகிய பல்வேறு மின்னாற்றல் உற்பத்தி நிலைகளில் உதவுவதற்கான கருவிகள் அவசியம். இதில் பயன்படும் shrling engine சூரிய சக்தியை செயல்சக்தியாக மாற்றுகிறது. எனவே இதை shrling unit என்கிறார்கள்.
காற்றாற்றல்:
    உலகம் முழுவதும் காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரம் 80,000 மெ,வா. இந்தியா காற்றாற்றல உற்பத்தியில் டென்மார்க்கை விஞ்சி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. ஜெர்மனி, ஸ்பெயின்,  அமெரிக்கா ஆகிய நாடுகள் நமக்கு முன் நிற்கின்றன. 2006 ல் நமது காற்றாற்றல் உற்பத்தி 5200 மெ.வா. நாற்பத்தைந்து விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.  முறையான திட்டமிடல் இருந்தால் நாம் இதனை விரைவாக மேம்படுத்தி வளர்க்க முடியும். காற்றாலை நுட்ப அமைப்பில் இந்தியா சீனாவை விஞ்சும் தொழில்நுட்ப ஆற்றல் பெற்றுள்ளது. 2003 ல் தமிழகத்தில் காற்றாற்றல் உற்பத்தி 990 மெ.வா 2004 ல் 1380 மெ.வா மேலும் 2000 மெ.வா.க்காக உருவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. மகராஷ்டிரம், கர்நாடகம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை விட தமிழகம் முன்னிற்கிறது.
    காற்றாற்றலில் கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி முன்னணியில் உள்ளன. காற்றாற்றல் உற்பத்தியில் நான்கு நிலைகள் உள்ளன. உயர்நிலை 39 -64 மெ.வா – தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுவை மழைக்காலத்தில் அதிகமான மின்னுற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பின் மழைக்காலத்தில் பாம்பன், தூத்துக்குடி, குமரி, புதுவை அதிகம் உற்பத்தி செய்துள்ளன. இந்தியா 45,000 மெ.வா மின்சாரம் உற்பத்தித் திறன் கொண்டது.
புவிவெப்ப ஆற்றல்:
    பூமியின் மிக ஆழ்ந்த பகுதி இன்னும் அணையாத நெருப்புக் குழம்பாகவே இருக்கிறது. நிலத்தடி நீர் இத்துடன் தொடர்பு கொள்ளும் போது நீரூற்றாக எழுகிறது. இது கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும். லடாக்கில் இம்முறையில் 1 கி.வா மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.  தமிழகத்தில் நெல்லையில் இதற்கான சூழல் உள்ளது. ஹைட்ரஜன் வெளிமண்டபத்தில் ஏராளமாக உள்ளது. இதைச் சேமித்து எதிர்காலத்திற்காக மாசுபடுத்தாத தீங்கற்ற ஆற்றல் பெற முடியும்.
மின்சாரம் - வளர்ச்சி - சந்தை – சுற்றுச்சூழல்:
    மின்னாற்றல் உற்பத்தி பெரும் செலவு பிடிப்பது; உடனடியான லாபம் தராது. மின்னாற்றல் பயன்பாட்டுக்கான புதிய அணுகுமுறையுடன் விலை நிர்ணயம் செய்யவேண்டும். விலையேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழைமக்களே என்பதை உணர்ந்து தக்க கவனத்துடன் ஆதரவு வழங்கப்படுவது அவசியம். சந்தைப்படுத்தல் மனிதாபிமானமற்ற விலை நிர்ணயத்திற்கே வழிவகுக்கும்.
    விலை நிர்ணயம், போட்டி முதலியன சந்தைப்படுத்தலின் தவிர்க்கமுடியாத பகுதி. மின்னுற்பத்தி தனியார் நிறுவனங்கள் தன் ஒரே இலக்கான வணிக செயல்பாட்டுத் திட்டத்துடன்தான் செயல்படும். ஆற்றல் உற்பத்தி எந்த ஒரு நிறுவனத்தின் முழு உடமையாகி போவது பல பிரச்சனைகளையே உருவாக்கும். எனவே வெளிப்படையான செயல்பாடு அவசியம் தேவை. உற்பத்தித் திறன், விலை நிர்ணயம் பற்றிய வெளிப்படையான ஒப்பந்தம் தேவை.
மின்சார விற்பனைச் சந்தை தொடக்க காலத்திலேயே மின் விற்பனை தாராளமயமாக்கல் எங்கும் வெற்றி பெறவில்லை. அமெரிக்க விற்பனைமுறை இந்தியாவுக்குப் பொருந்தாது. கலிபோர்னியா மக்கள் இதற்கு எதிராகப் போராடி வருகின்றனர். அரசு கட்டுப்பாடு தேவை என்கின்றனர். மையக்கட்டுப்பாடு அவசியம் தேவை என்கின்றனர்.
எனினும் மின்னுற்பத்தியில் தனியார் பெரும்பங்காற்ற முடியும். ஆனால் அதற்கு அரசு கட்டுப்பாடு அவசியம். கட்டுப்பாட்டு அமைப்பு ஊழல்மயமாகி விடக்கூடாது. மின்சாரம் என்பது வளர்ச்சியுடன் பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டது. கிராமப்புற தேவை மையப்படுத்துகின்ற உற்பத்தி விநியோகம் மூலமே எளிதாகும். மின் உற்பத்தியில் மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்க ஆற்றல் கல்வி வழங்குவது பயன்தரும்.
ஆற்றல் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளற்ற மக்களுக்கு இரண்டாவது முக்கியத்துவத்தைப் பெறுகிறது. புதுப்பிக்கும் ஆற்றல் உற்பத்தி முறைகள் மக்களை சென்றடைய வேண்டும். இதனால் உள்ளூர் மின்னுற்பத்தி வளரும். தீங்கு பயக்கும், மாசுபடுத்தும் பெரிய உற்பத்தி முறைகள் குறையும். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள வேடமமிதி  பகுதியில் உள்ள வனப்பகுதியில் யெலேரு நதியில் மின்னுற்பத்தி இருபது பெண்கள் கொண்ட கிராம சபையால் மேற்கொள்ளப்படுகிறது. இது ஆண்டுக்கு 45 லட்சம் மெ.வா மின்சாரம் செய்கிறது. அதை யூனிட் ஒன்றக்கு 2.49 ரூபாய்க்கு அரசிற்கு விற்கிறது. இதனால் வரும் நூறு லட்சம் ரூபாயில், எழுபது லட்சம் ரூபாயைக் கடனடைக்கத் தந்து முப்பது லட்சம் லாபமீட்டுகின்றனர். இத்தகைய எழுபது சிறு நீர் மின்னுற்பத்திக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றால் 147 மெ.வா மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இத்தகைய மக்கள் மைய சிறு மின்னுற்பத்தி மக்களது வாழ்வை உயர்த்தவும், நாட்டின் தேவையை நிறைவு செய்யவும் உதவும்.
மின்னுற்பத்தி, இயற்கை பாதிப்பு இவைகளை ஒப்பிட்டு பயன்படுத்தவேண்டும். இயற்கை மனித வாழ்வின் நீடிப்புக்கு அடிப்படை என்பதை மறந்துவிடக் கூடாது. பூமி சூடாதலின் விளைவுகளை நாம் ஏற்கனவே அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம். 2007 ல் அதுவரை இல்லாத அளவு அண்டார்டிகா பனிப்பாறைகள் உருகியுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இன்று 20,000 உள்ள பனிக்கரடிகளின் எண்ணிக்கை 2050ல் மூன்றில் ஒரு பங்காக குறைந்து விடும் என்கின்றனர்.
மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டிற்கு மின்சாரத் தேவையும் அதிகமே. அதை இயற்கையை அழிக்காமல்  மலிவாகப் பெற முயல வேண்டும். இயற்கை பாதிக்கப்பட்டால் பெரிதும் சிதைவுறுவது அடித்தட்டு ஏழை மக்கள்தான். மின் பயன்பாட்டில் சிக்கனம் தேவை. ஏனெனில் அதைவிடவும் அதிகமாக கல்வி, மருத்துவம், சாலை, வீடுகள் உடனடியாகத் தேவையுள்ளது. மலிவற்றது, ஆபத்தானது, தலைமுறைகளைப் பாதிப்பது என்ற காரணங்களால் அணுமின் உற்பத்தி ஒதுக்கப்பட வேண்டியதாகிறது.
நமது பெட்ரோலியம் எழுபது (அ) எண்பது ஆண்டுகளிலும், எரிவாயு நூறு ஆண்டுகளிலும் முற்றாகத் தீர்ந்துபோய் விடும். பின் என்ன செய்யப்போகிறோம்? நமது வளர்ச்சி சிந்தனை, செயல்பாடுகள், மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். மேற்கத்திய நுகர்வுமுறை ஆபத்தானது. சிக்கனப்பயன்பாடு, தாக்குப்பிடிக்கும் வளர்ச்சி ஆகியவையே நமது தாரக மந்திரமாக வேண்டும். எண்ணெய் சிக்கனம், மின்சார சிக்கனம், இயற்கையையும், எதிர்காலத்தையும் காக்கும்.
சாதாரண பல்புகளுக்கு மாற்றாக சிஎப்எல் பல்புகளை பயன்படுத்துவது மின்சிக்கனத்திற்கு உதவுகிறது. நிலக்கரியின் பயன்பாட்டை மேம்படுத்துவதாக அதிக மின்சாரத்தை அனல்மின் நிலையங்கள் உற்பத்தி செய்ய முடியும். பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். பெரிய என்று தொடங்கும் அணைகள், பாலங்கள், கட்டிடங்கள் சுயலாப வணிகர்களின் பையை நிறைக்குமே தவிர மக்களுக்கு எவ்வித நலன்களையும் தராது.
ஆற்றல் , எரிபொருள் என்பன வெறும் பொருட்கள் அல்ல. அவை நாட்டின் உலகின் கூரிய அரசியல் கருவிகள். டெல்லி ஆற்றல் யுக்தி கொண்டதாக இல்லை. அவர்கள் கனடாவின் நலனுக்காக எண்ணெய் வணிகம் செய்பவர்களே அன்றி, நமது மண்ணில் உள்ள வளங்களைப் பயன்படுத்தும் சிக்கன உணர்வற்றவர்களாக உள்ளனர். ஈரான் – பாகிஸ்தான் – இந்தியா எரிவாயுக்குழாய் திட்டத்தை ஒழித்து அமெரிக்க அணுவுலைக்கு கையெழுத்து போடுபவர்களாகவே நமது அரசியல்வாதிகள் உள்ளனர். என்ன செய்வது?



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்