திண்ணையில் அவர் இல்லை

சு.ரா. நினைவுகள்
 திண்ணையில் அவர் இல்லை
இரா.முருகானந்தம்
            இருமாதங்களாகிவிட்ட போதும் சு.ரா மறைந்துவிட்டார் என்ற உண்மையை நம்ப மனம் மறுத்தவண்ணம் உள்ளது. இருந்தாலும் நிதர்சனம் அதுவேயாகும். எதிர்பாராததொரு தருணத்தில் நிகழ்ந்துள்ள இவ்விழப்பு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே படுகிறது.
            அகில இந்திய வானொலியின் மதியச்செய்தியை பெரும் சலசலப்புக்கிடையே கேட்டபோதும் சு.ரா மறைந்துவிட்ட செய்தி உள்வாங்க இயலாத வகையில் கிடைத்தவுடன் ஒரு விதமான பதற்றம் தொற்றிக்கொண்டது. இதனைத் தெளிவு படுத்திக்கொள்ள யாரைத்தொடர்பு கொள்ளலாம்? கண்ணணை தொடர்பு கொள்வது உசிதமாகப்படவில்லை. அடுத்து யாரை?  சென்னையிலிருந்த நண்பர் என். ஸ்ரீராமை தொடர்பு கொண்ட போது, அவருக்கும் ஏதும் தெரிந்திருக்க வில்லை. அவர் மணா உள்பட சிலரிடம் விசாரிப்பதாக சொன்னார். எனது பதட்டமும், தவிப்பும், தாறுமாறாக அதிகரித்தபடியே இருந்தது. அப்படி இருக்கக் கூடாது என மனம் ஓயாது கூவிக்கொண்டு இருந்த தருணத்தில் ஆமாம் சு.ரா காலமாகி விட்டார் என்கிற செய்தி இடியென தாக்கியது எனச்சொல்லமுடியாவிட்டாலும் மிகுந்த மன அதிர்வினை ஏற்படுத்தும் வண்ணம் ஸ்ரீராமிடமிருந்து வந்தது.
            ஒரு படைப்பாளியாக வாசகனோடும், ஒரு சிந்தனையாளனாக சமூகத்தோடும் ஒரு மனிதாபிமானியாக மனிதகுலத்தோடும் அக்கறை மிக்க ஒரு உறவைப் பராமரித்து வந்த ஒருவரை காலம் பறித்துச்சென்றுவிட்டது.. இப்போது நினைவுக்கு வருவது உமா மகேஸ்வரியின் நாவலின் தலைப்பு யாரும் யாருடனும் இல்லை ஆனால் அப்படித்தானே நம்புகிறோம். ஆனால் பலவற்றைப் போலவே இந்த நம்பிக்கையையும் இயற்கை கொன்றுகொண்டேயிருக்கிறது.
            சு.ராவின் புதியமண் புதிய முளைகள் கட்டுரை 1998 தினமணி தீபாவளி மலரில் வெளியாகியிருந்தது. நான் முதன்முதலில் படித்த அவரின் எழுத்து அதுதான். இலக்கியம் குறித்த மேம்போக்கான அபிப்பராயங்களையும்,நுனிப்புல் மேய்கிற இயல்பையும் அடித்து நொறுக்கியது அக்கட்டுரை. தொடர்ந்த இரு ஆண்டுகளில் சு.ரா என்னைப் பேய் போல் பீடித்திருந்தார். பலரையும் போலவே ஜே.ஜே சில குறிப்புகள் என்னை உசுப்பி அலைகழித்தது.  அடுத்து குழந்தைகள் பெண்கள் ஆண்கள் படித்தபோது இலக்கியம் எனக்கு ஆற்றுப்படுத்தும் கருவியாகியிருந்தது. இப்போதும் சு.ராவின் படைப்புகளில் எனக்கு பிடித்தமானதாக மனநெருக்கத்திற்கு உவப்பானதாக இருப்பது குழந்தைகள் பெண்கள் ஆண்கள் தான். அதில் விரியும் குழந்தைகளின் அகவுலகச்சித்திரம் மிக அபூர்வமானது. மேலும் அதன் நடையும் வடிவமும் அலாதியான எளிமை கொண்டதாக இருந்தன. இதனை நான் அவரிடம் குறிப்பிட்டபோது அவர் சொன்னார். அதன் நடை எளியதாக இருக்கலாம். ஆனால் அதன் உள்ளடக்கம் அப்படியானதல்ல. இப்போது அது சரியென்றே படுகிறது.
            அவரின் கடிதங்கள் எனது பிரக்ஞை மற்றும் சிந்தனையை கூர்மைபடுத்தியது. கருத்துக்களை எதிர்கொள்ளவும், உள்வாங்கவும், எதிர்வினை புரிகையில் அவரிடம் கூர்மையும் அதேநேரம் தவறிவிடாத நிதானமும் இருக்கும். என்போல பலரும் அவரோடான தொடர்பின் மூலம் தங்களை சிந்தனை சார்ந்து செழுமை படுத்திக்கொண்டுள்ளனர் என்பதைப்பின்னாளில் அறிந்துகொள்ள முடிந்தது. சாதாரண வாசகனை தேர்ந்த வாசகனாகவும், சாதாரண படைப்பாளியை தேர்ந்தவனாகவும் மாற்றும் வித்தையை தனது உரையாடல் மூலம் செய்துவந்தார். அவர் போன்ற ஒரு உரையாடியை நான் அதற்கு முன் கண்டதில்லை. அவர் குறித்த நினைவு வரும்போதெல்லாம் ஒரு வேளை அவருக்கு மெஸ்மரிசம் தெரியுமா என்கிற அபத்த ஐயமும் இணைந்தே வரும்.
            தமிழ் சூழலில் வாசகனின் இருப்பிற்கும், வாசக அபிப்ராயத்திற்கும் மதிப்பும், அங்கீகாரமும் தந்தவர் சு.ரா.யாரிடமும் எது பற்றியும் பேசவும், பேசுவதைக்கேட்கவும் தயங்கியதில்லை. யாருடைய கருத்தும், விமர்சனமும் அவரை கோபப்படுத்தியதோ, வெறுப்படைய வைத்ததோ இல்லை. ஆனால் தரம் தாழ்ந்த அவதூறுகள் அவரை கசப்பும் துயரமும் கொள்ளச்செய்தன. தனது ஆளுமை குறித்த பெருமிதம் அவருக்கிருந்தது. ஆனால் அது எல்லைகடந்து கர்வம் கூடி தன்னகங்காரமாக உருமாற அவர் அனுமதிக்கவில்லை. என்னைப்போல பலரையும் அர் ஈர்த்ததன் ரகசியங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.
தமிழ்சமூகத்தின் சகல தரப்பின் மீதும் அவருக்கு கடும் விமர்சனமிருந்தது. அதனை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் முன்வைத்த வண்ணமிருந்தார். தன்னை அனைத்துக்கும் அப்பாற்பட்டவராக நிலைநாட்டிக்கொள்ளும் முயற்சி என்று சிலர் விமர்சித்தாலும், சமூகத்தின் மீதிருந்த ஆழ்ந்த அக்கறையின் வெளிப்பாடே இது என்று நினைக்கிறேன். அவரின் பல கட்டுரைகளும், உரைகளும் தமிழகத்தில் கல்வி எனும் வே. வசந்திதேவியுடனான உரையாடலும் அக்கறையின் விளைவுகளை அறிய உதவும்.
            மரண தண்டனைக்கு எதிராகவும், மனித உரிமை ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்காகவும் பல நிலைகளில் தனது வலுவான குரலை அவர் முன்வைத்தார்.
            பல தமிழிலக்கியமுன்னோடிகளை போலில்லாமல் அவரின் லௌகீக வாழ்வு நிறை வாழ்வுதான். பொருளாதார ரீதியாக பாதுகாப்பான நிலையில் எழுத்தை பிழைப்பிற்கான ஒன்றாக மாற்ற தேவையில்லாதவராக இருந்தார்.  வாழ்வின் சிறு துக்கங்கள் தவிர பெருந்துக்கங்களுக்கு ஆட்படாதவராக வாழ்ந்தாலும் இளம் வயதிலிருந்தே இதய நுரையீரல் குறைபாடுகள் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனது தீவிரமான உடல் மற்றும் மனப்பயிற்சிகள் மூலம் ஒழுங்குமுறையிலான உணவுப்பழக்கத்தின் மூலமே அவற்றை கட்டுப்படுத்தினார்.
 இந்த 74 ஆண்டுகளைத்தாண்டி அவர் இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம். சற்றும் எதிர்பாராததொரு தருணத்தில் அவர் விடைபெற்றுக்கொண்டதான உணர்வு அவரை சந்தித்துள்ள அனைவருக்கும் உள்ளது. நவீன தமிழிலக்கியப்பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சு.ரா ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகிய மூவர்க்கும் ஏறக்குறைய சமவயது. வெவ்வேறு வகையில் நவீனத்தமிழிலக்கியத்திற்கு இம்மூவரும் அளித்துள்ள பங்களிப்பு மிகவும் முக்கியத்துவமுடையது.
            சு.ராவின் மதிப்பீடுகள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவை. அவரின் மீது கடுமையான விமர்சனங்களை கொண்டுள்ள தருணத்தில் கூட அ.மார்க்ஸ் மீது அவர் நல்ல மதிப்பு கொண்டிருந்ததை நேர்ப்பேச்சில் கேட்டிருக்கிறேன். தனக்கு வேண்டியவர்களின் பங்களிப்பை மிகையாகவும், தன்னை விமர்சிப்பவர்களின் பங்களிப்பை குறைவாகவும் ஒருபோதும் அவர் மதிப்பிட்டதில்லை. நவீனத்துவத்தினராக இருப்பதால் விமர்சனங்களில் அந்த பாதிப்பு இருப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் உள்ளீடற்ற படைப்புகளையும்  அதனைப் படைப்பவர்களையும் அவர் தயவு தாட்சண்யமின்றி நிராகரித்தார். தமிழ்ச்சூழலில் போலிகளையும் மூன்றாம் தரமான பிரதிகளையும் கொண்டாடும் போக்கு நிலவியது அவருக்கு வருத்தமானதாகவும், அவர்களே இங்கு மதிப்பீடுகளை தீர்மானிக்கும் நிலையிலிருந்தது அவருக்கு கோபமூட்டுவதாகவும் இருந்தது. இக்கோபம் அவர் மறையும் வரை நீடித்தது. அவரின் எழுத்து மற்றும் செயல்பாடுகளுக்கு அக்கோபம் அடிப்படையானதாக இருந்தது.
            தனது மனதிற்கு முக்கியமானதாக தோன்றும் நூல்களையும், நூலாசிரியர்களையும் கவனப்படுத்தவேண்டும் என்கிற ஆர்வமும் காய்தல் உவத்துலுக்கப்பாற்பட்டது. திருநாவுக்கரசரின் அறிவியல் நூல்கள் வரிசைக்கும், நா. தர்மராஜனின் மொழிபெயர்ப்புகளுக்கும், ச.தமிழ்செல்வனின் அறிவொளி இயக்க அனுபவப்பதிவான இருளும் ஒளியும் நூலுக்கும் அவர் புதிய பார்வை நூலில் எழுதிய குறிப்புகள் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன.
            சு.ராவின் மறைவு ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகள் கனமானவை. சொல்லில் வடிக்கமுடியாத வெறுமை நிலவுவதை உணரமுடிகிறது. தமிழிலக்கியப்பரப்பில் படைப்பாளிகள், வாசகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தளத்திலும் அவரின் மரணம் இழப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அவரோடு நெருங்கியிருந்தவர்கள் மட்டுமின்றி அவரோடு முரண்பட்டு விலகியிருந்தவர்களையும் தொடர்ந்து விமர்சித்தவர்களையும் கூட அவரின் மரணம் பாதித்திருக்கிறது. அவர்களுக்கான வெளியையும், வேலையையும் ஏற்படுத்தி தந்தவர் அவரே. வெகுசன இதழ்களின் தடித்தனத்தினால் புறக்கணிக்கப்பட்டிருந்த தமிழின் நவீன இலக்கியத்தின் வேரை கருகிவிடாது காப்பாற்றிய சிற்றிதழ் இலக்கியத்தின்  ஒரு முக்கிய ஆதரவாளராக இருந்த சு.ராவின் மறைவு தமிழின் சிற்றிதழ்களில் பெரும்பாலானவற்றில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
            மொத்தத்தில் தன் மரணத்தின் மூலம் ஒரு படைப்பாளியாகவும், ஒரு மனிதாபிமானியாகவும் சு.ரா அனைவரையும் வென்று விட்டார் என்றே தோன்றுகிறது.
            கற்றறிந்தவர்களின் மேடையை விட பகிர்ந்து கொள்பவர்களின் திண்ணையை பெரிதும் விரும்பிய திரு. சுந்தர ராமசாமி விடைபெற்றுக்கொண்டு விட்டார்.  அவரின் நினைவுகள் உலவும் திண்ணையில் அவர் இல்லை.


கருத்துகள்