அழியாத கறைகளும், நீங்காத குருதியின் வீச்சமும்


அழியாத கறைகளும், நீங்காத குருதியின் வீச்சமும்

-      முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

தமிழில்: ச.ஜெ. அன்பரசு

நரேந்திர மோடி பெரும்பகுதி இந்தியர்களுக்கு நவீன மோசஸாக, மேசியாவாக காட்சியளிப்பதோடு, மனச் சோர்வடைந்த இந்தியர்களை பாலும் தேனும் கரை புரண்டோடும் தேசமாக மாற்றும் வல்லமை கொண்டவராகவும், பிரதமர் பதவிக்கு முற்றிலும் பொருத்தமானவராக  அடையாளம் காட்டப்படுகிறார். இதனை பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகள் மட்டும் கும்பமேளாவில் கூறவில்லை. இந்தியர்களில் கல்வி கற்ற வகுப்பில் உள்ள படித்த இளைஞர்கள் மோடியால் பெரும் உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டு அவரை பின்பற்ற விரும்புகிறார்கள் என்று மோடியின் பிரம்மாண்ட விளம்பரங்கள் கூறுகின்றன.

நான் தில்லியிலிருந்து போபாலுக்கு விமானத்தில் சென்றபோது, அருகில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். மோடி பற்றிய அவரது கருத்தைக் கேட்டேன். உடனே மோடி பற்றிப் புகழ்ந்து பேசத்தொடங்கினார். நான் இடைமறித்து, 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டது குறித்து கேட்டபோது, இஸ்லாமிய மக்கள்தான் குஜராத்தில் எப்போதும் பிரச்சனைகளை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் என்றும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு இஸ்லாமிய மக்கள் அவர்களின் இடத்தில் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறினார். அந்த அமைதி சுடுகாட்டில் நிலவும் அமைதி போன்றது, அவர்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் அவ்வமைதி அதிக காலம் நீடிக்காது என்று நான் கூறியவுடன்,  ஏதோ பெரும் குற்றத்தை செய்தது போல் அவர் முகம் மாறியதோடு, தன் இருக்கையையும் வேறு இடத்தில் மாற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

சமகால உண்மை என்னவென்றால் குஜராத்திலுள்ள இஸ்லாமிய மக்கள் 2002 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை சம்பவம் பற்றிய தமது கருத்துக்களை வெளியிட்டால் கடுமையாக தாக்கப்படுவதோடு, கொல்லப்படுவோம் என்று அஞ்சி நடுங்குகிறார்கள். இந்தியா முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள்( 200 மில்லியன் இஸ்லாமிய மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்) உறுதியாக மோடிக்கு எதிராக உள்ளனர். சில இஸ்லாமியக்குழுக்கள் இதனை மறுக்கக் கூடும்.
கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 59 இந்துக்களின் பின் நிகழ்ந்த  தன்னிச்சையான நிகழ்வுதான் இஸ்லாமிய மக்களின் மீதான தாக்குதல்கள் என்று மோடி ஆதரவாளர்கள் கூறுகின்றார்கள் என்றாலும் என்னால் இதனை நம்பமுடியவில்லை. இதில்  மர்மமாக இருப்பது என்னவென்றால் கோத்ராவில் நடந்தது என்ன? என்பதும், இறந்த மக்களுக்கு யார் பொறுப்பு என்பதும்தான். கோத்ரா சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டு பிடித்து தண்டிக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றாலும் அதற்கு பதிலாக இஸ்லாமிய சமூக மக்களின் மீது வெறித்தனமாக தாக்குதல்கள் நடத்துவது எப்படி நியாயமான நடவடிக்கை ஆகும்? குஜராத் மக்கள் தொகையில் 9% விழுக்காடு மட்டுமே இஸ்லாமிய மக்கள் உள்ளனர். பெரும்பான்மையான மக்களாக இந்துக்களே வாழ்ந்து வருகின்றனர். 2002 ஆம் ஆண்டு கடும் அதிர்ச்சியில் உறையும் படி இஸ்லாமிய மக்கள் அதிர்ச்சியுறும்படி, அவர்களின் வீடுகள் எரியூட்டப்பட்டும், மேலும் பல வன்ம கொடூரங்களும் அவர்களின் மீது நிகழ்த்தப்பட்டன.

2002 ஆம் ஆண்டு இஸ்லாமியர் மீதான தாக்குதல் தன்னிச்சையான நிகழ்வு என்று அழைக்கப்படுவது 1938 ல் நிகழ்ந்த ஜெர்மனி நிகழ்வை நினைவுபடுத்துகிறது. பாரீஸில் அரசியல்வாதி ஒருவரை, யூத இளைஞன் ஒருவன் சுட்டதால் அவன் குடும்பம் நாஜி கும்பலால் கடுமையாக வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதோடு,  ஜெர்மனியிலுள்ள யூத இனம் முழுவதும் கடும் வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளானதில் பலர் இறந்ததோடு, அவர்களின் கோவில் எரியூட்டப்பட, கடைகள் அழித்து நாசமாக்கப்பட்டன. இதனை நாஜி அரசு தன்னிச்சையான நிகழ்வு என்று கூறினாலும், உண்மையில் இந்நிகழ்வு நாஜி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு இனவெறி வன்முறை கும்பல்களினால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நிகழ்வேயாகும்.
இந்தியா என்றால் என்ன?( எனது வலைப்பூவான justicekatju.blogspot.in அதிலுள்ள காணொளியை kgfindia.com எனும் முகவரியில் காணலாம்) இந்நியா பல்வேறு நாட்டிலிருந்து வந்து குடிபுகுந்து வாழ்பவர்களைக்கொண்ட பிரம்மாண்டமான வேற்றுமைகளை கொண்டுள்ள நாடு. எனவே மதச்சார்பின்மை என்பது ஒரு கொள்கையை கடைபிடித்து அனைத்து மதங்களையும் ஒன்றாக பாவித்து நடந்தால் மட்டுமே, மதச்சார்பின்மையை கொள்கையாக அமல்படுத்தி ஆட்சி புரிந்த பேரரசர் அக்பர் மற்றும் பின் வந்த இந்தியாவை உருவாக்கியவர்களான நேரு மற்றும் அவரது வழிவந்தவர்கள் உருவாக்கிய மதச்சார்பற்ற அரசியலமைப்பு சட்டம் கொண்ட இந்தியாவை பிளவு படாமல் பல மொழிகள், பல்வேறு நிலப்பரப்பு, பல்வேறு இனக்குழுக்கள் என பெரும் வேற்றுமைகளைக்கொண்ட இந்தியாவை ஒருங்கிணைத்து காப்பாற்ற முடியும்.

இந்தியா என்பது இந்துக்கள் மட்டும் தனியாக வாழ்கின்ற தேசமல்ல. அவர்களோடு இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பார்ஸிக்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின் உள்ளிட்ட பல மக்களும் வாழ்கின்றனர். இந்துக்கள் முதல் தரம் பெற்ற குடிமகன்களாகவும், பிற மதத்தினர் இரண்டாம், மூன்றாம் தர தகுதி கொண்ட குடிமக்களாக வாழ அவசியமில்லை. இத்தேசத்தில் வாழும் அனைவருமே முதல்தர தகுதி கொண்ட குடிமக்கள்தான். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டும், பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது மறக்கவோ, மன்னிக்கப்படவோ முடியாத ஒரு நிகழ்வு.  அரேபியாவில் தயாரிக்கப்படும் அனைத்து வாசனை திரவியங்களை தெளித்தாலும் மோடிக்கு இச்சம்பவத்தினால் ஏற்பட்ட களங்கத்தை, கறையை, குருதி வீச்சத்தை நீக்கவே முடியாது.
மோடியை ஆதரிப்பவர்கள் 2002 ல் நடந்த இஸ்லாமியர்களின் படுகொலையில் அவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறுவதோடு இதற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் மோடி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். இதில் நீதிபதிகள் பற்றி எந்தக்கருத்துக்களையும் நான் கூற விரும்பவில்லையாயினும், 2002 நடந்த இனப்படுகொலை சம்பவத்தில் மோடிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை என்னளவிலேனும் நம்ப முடியவில்லை. இனப்படுகொலை நடந்தபோது மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார். அந்த கொடும் வன்முறைகள் நிகழும்போது அதில் அவருக்கு எவ்வித பங்களிப்பும், இல்லை என்பது நம்பும்படியான வாதமா என்ன? நம்ப முடியவில்லை குறைந்தபட்சம் கூட.

ஒரு உதாரணம் கூறுகிறேன். இஷான் ஜாஃப்ரி எனும் மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலுள்ள சமன்புரா பகுதியில் வாழ்ந்துவந்தார். அவரது வீடு குல்பர்கா குடியிருப்பு எனும் பெரும்பான்மையான இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியில் அமைந்திருந்தது. 
அவரது மனைவியான ஸகியா அவர்களின் கூற்றுப்படி, 28.2.2002 தேதியன்று மதவெறி கொண்ட ஆயுதம் கொண்ட கும்பலொன்று குல்பர்கா குடியிருப்பின் பாதுகாப்பு சுவரினை எரிவாயு உருளைகள் கொண்டு உடைத்து உள்ளே புகுந்து, இஷான் ஜாஃப்ரியை வீட்டிலிருந்து வெளியே வலுக்கட்டாயப்படுத்தி இழுத்துவந்து அடித்து உதைத்து, கத்தியால் அவரை சராமாரியாக வெட்டியதோடு குற்றுயிராக இருக்கும்போது தீ வைத்து எரித்தனர். அக்குடியிருப்பின் மற்ற இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டதோடு, வீடுகளும் எரிக்கப்பட்டன. சமன்புராவிலிருந்து காவல்நிலையம் ஒருகிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ளதோடு, அகமதாபாத் காவல்துறை கமிஷனர் அலுவலகமும் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலேயே உள்ளது. முதல்வருக்கு இப்பகுதியில் என்ன நடந்தது என்று நிச்சயம் தெரியாதிருக்கும் என்பது நம்ப முடிகிறதா? ஸகியா ஜாஃப்ரி இன்றுவரை தன் கணவர் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுக்கு நீதி கேட்டு அலைந்துகொண்டிருக்கிறார். ஸகியா தொடுத்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில்( உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து அக்குழு இறுதி அறிக்கையில் மோடிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிவிட்டது) தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அந்நிகழ்வு நடந்து பத்து ஆண்டுகளுக்கு பின் உச்சநீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்திவைத்துவிட்டு ஸகியாவின் மனுவை மீண்டும் எடுத்துக்கொண்டுள்ளது.

இந்த விஷயத்தில் ஆழமாக செல்ல விரும்பாததற்கு காரணம் இது இன்னும் துணை நீதிமன்றங்களில் இன்னும் உள்ளதே காரணம்.
மோடி குஜராத்தின் வளர்ச்சிக்கு தனது ஆட்சிதான் காரணம் என்று கூறிவருகிறார். இதனைப்புரிந்து கொள்ள வளர்ச்சி என்பதன் உண்மை அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். என்னைப்பொறுத்தவரை வளர்ச்சி என்பது பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதுதான் என்று நம்புகிறேன். பெரும் தொழிலகங்கள் அமைய குறைவான நிலையில் நிலம் மற்றும மின்சார வசதிகள் வழங்குவது மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதாகாது.
தேசிய சராசரி ஊட்டச்சத்துக்குறைபாட்டு அளவை விட அதிகமாக குஜராத் மாநிலத்தில் 48% விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குழந்தைகள் இறப்பு விகிதம், பேறுகால பெண்களின் இறப்பு விகிதம் ஆகியவை அதிகமாகவும், பழங்குடி மக்கள் வாழும் பகுதி மற்றும் பட்டியல் வகுப்பினர், பிற்படுத்த வகுப்பினர் வாழ்கின்ற பகுதிகளில் வறுமையின் அளவீடு விழுக்காடு 57% விழுக்காடாக உள்ளது.

8.2.2013 ஆம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் ராமச்சந்திரகுகா எழுதியுள்ள கட்டுரையில் குஜராத் சுற்றுப்புறச்சூழல் அழிந்து சீர்கெட்டு வருவதையும், கல்வித்தரம் வீழ்ச்சியுற்று வருவதையும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படும் அளவும் அதிகமாக உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.  குஜராத் மாநிலத்தில் உள்ள இளைஞர்களில் மூன்றில் ஒருவருக்கு உடல்சரிநிகர வளர்ச்சி விகிதம் 18.5 எனும் அளவிற்கும் குறைவானதாக சரிந்து, நாட்டிலேயே மோசமான சத்துக்குறைபாடு கொண்ட மாநிலங்களில் ஏழாவதாக இடம்பிடித்துள்ளது.
யுஎன்டிபி அறிக்கையில் குஜராத் மாநிலத்தின் பின்னுள்ள எட்டு மாநிலங்கள் உடல்நலம், கல்வி, வருவாயம் உள்ளிட்டவற்றில் நல்ல மேம்பாடான வளர்ச்சியைக்கொண்டுள்ளன(ஹிந்துஸ்தான் டைம்ஸ் 16.12.2012 ப.13).
திரு. குகா தன் கட்டுரையில், ஒரு மானுடவியலாளர் பொருளாதார நிபுணர்களினால் தொகுத்தளிக்கும் தகவல்களை எப்படி சந்தேகமாக பார்ப்பாரோ, அதுபோல நானும் நாட்டில் நல்ல வளர்ச்சியும் மேம்பாடும் அடைந்த மாநிலம் என்று  கூறப்படும் குஜராத்தினை நம்பவில்லை. தொடர்ந்து மோடி நிலையாக மூன்றாவது முறையாக குஜராத்தில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும்போது, நான் சவுராஷ்ட்ரா வழியாக அங்கு செல்லும் போது சுற்றுச்சூழல் கெட்ட, வறண்ட நிலங்களே அந்த நிலத்தில் வாழ எப்படி சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை புரியவைக்கிறது. நகரங்களில் குடிநீர், கழிவுநீர் வசதிகள், சாலைகள், போக்குவரத்து ஆகியவை ஒரு பரிதாபகரமான மாநிலத்தை கண்முன் நிறுத்துகிறது. கிராமங்களில் இயற்கை வளங்கள் குறித்த ஆதாரமாக இடையர்கள் தமது ஆடுகளுக்கு தேவையான பசும்புற்களை தேடி பல கிலோமீட்டர் தூரம் அலையும் அவலத்தைக் கூறலாம். சமூக, பொருளாதார விதிகளின் படி சராசரியைக்காட்டிலும் உயர்ந்து நின்றாலும், அது சிறந்த மாநிலமாக வளர்ச்சி பெறவில்லை. கேரளா, ஹிமாச்சல பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் தம் மாநில மக்களுக்கு நல்ல வாழ்க்கைத்தரத்தினை உறுதி செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பெரும் முதலாளிகள் எந்த வித சந்தேகமுமில்லாமல் மோடி வணிக சூழலிற்கான சிறந்த சூழலை உருவாக்கியவர் என்று ஒப்புக்கொண்டு போற்றிப் புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் இந்தியாவில் வணிகர்கள் மட்டும்தான் குடிமக்களா?

மேலும் மோடியின் தலைமையிலான குஜராத் மாநிலம் பெற்றுள்ள வளர்ச்சி குறித்து பேசுபவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலக் குழந்தைகள் சாலைகள், மின்வசதி, தொழிற்சாலைகள் என மோடி உருவாக்கிய எதனை சாப்பிடுவார்கள்? சாப்பிட முடியுமா?

நாட்டின் எதிர்காலத்தைப்பற்றி நினைக்கும் அனைத்து இந்தியமக்களும் மேற்கூறியவற்றை சிறிது சிந்தித்துப்பார்க்க வேண்டும். இல்லையெனில் 1938 ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டினர் செய்த தவறினை மீண்டும் நாம் செய்வது போலாகும்.

(தி இந்து நாளிதழில் வெள்ளி 15, 2013 அன்று வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்)
                     நன்றி: ‘தி ஹிந்து’ நாளிதழ்

கருத்துகள்