சேட்டன் பகத்:இளைஞர்களின் இந்தியா

சேட்டன் பகத்


இளைஞர்களின்            இந்தியா

 

கட்டுரைகளும்

பத்திகளும்


தமிழில்: வின்சென்ட் காபோ

ஆங்கில பதிப்பாளர் முகவரி:
ரூபா பப்ளிகேஷன்ஸ்(பி) லிமிடெட்.,
7/16, அன்சாரி ரோடு, தர்யாகன்ஞ்
நியூ டெல்லி – 110002.
காப்புரிமை: சேட்டன் பகத் All rights reserved.
மூல நூல்: What young india wants
தமிழ் வலைப்பூபதிப்பு: ஆரா பிரஸ்
தொகுப்பு: அரசமார் மற்றும் ஜெய்ஸன்
மின்னஞ்சல்: sjarasukarthick@rediffmail.com
இதனை அனைவரும் படிக்கலாம். வணிகரீதியில் பயன்படுத்தக்கூடாது.








சேட்டன் பகத் எழுதியுள்ள ஐந்து நாவல்கள் வெளியான காலத்திலிருந்து இன்றுவரையிலும் மிக அதிகமான அளவில் விற்பனையாகி சாதனை படைத்துவருகின்றன. இவரது நாவல்களை தழுவி பல இந்தித் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பத்திரிகைகளில் கட்டுரைகள், பத்திகள் எழுதுவதோடு மாணவர்களுக்கான உத்வேகம் தரும் சிறந்த பேச்சாளராகவும் விளங்கிவரும் சேட்டன் பகத் உலகின் 100 பெரும் அதிகாரம் கொண்ட மனிதர்களில் ஒருவராக டைம்ஸ் இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 100 சிறந்த புதுமைத்திறன் கொண்ட வணிக மனிதர்களில் ஒருவராக ஃபாஸ்ட நிறுவனத்தின் பட்டியலில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.
    மும்பையில் தன் ஐஐஎம் அகமதாபாத்தில் படித்தபோது  காதலித்து மணந்துகொண்ட  மனைவி அனுஷா மற்றும் தன் இரு இரட்டை மகன்களான இஷான், ஸ்யாம் ஆகியோருடனும் வாழ்ந்துவருகிறார்.
     சேட்டன் பகத்தின் எழுத்துக்களை பின்தொடர www.chetanbhagat.com என்ற இணையத்தளத்தினையும், மின்னஞ்சலில் தொடர்புகொள்ள info@chetanbhagat.com எனும் முகவரியுயையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

                எனது பயணம்

அன்பிற்குரிய வாசகர்களுக்கு,
     இந்தப்புத்தகத்தினை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இது நாவலல்ல. கடந்த இரு ஆண்டுகளாக இந்தியா சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளைக் குறித்த எனது கருத்துக்களைக் கொண்ட கட்டுரைத் தொகுப்பு இது.

    பல்வேறு உணர்ச்சிகளைத்தூண்டும் கதைகளை எழுதவதற்கும் குறையாத மனவெழுச்சியினை இக்கட்டுரைகளை எழுதும்போது உணர்ந்தேன். இக்கட்டுரைகளை கோபம், ஏமாற்றம், விரக்தி அல்லது நம்பிக்கை என பல்வேறு மனநிலைகளில் எழுதினேன். இந்த பக்கங்களில் இன்றைய இந்தியாவை பற்றியும் மட்டுமல்ல என் கனவுகளில் இருக்கும் இந்தியா அறிந்துகொள்ள  முடியும்.

    எனது கட்டுரைகள் இந்தியா பற்றிய முழுமையான பார்வையையும், உருவாக வேண்டிய, பயணிக்க வேண்டிய  பாதை பற்றிய சிந்தனைகளை, தரிசனத்தை உருவாக்கித்தரும் என்று நம்புகிறேன்.

ஏன் இந்த கடிதம்?


    நான் ஏன் நாட்டின் பிரச்சனைகள் பற்றி எழுத வேண்டும்? புகழ்பெற்ற நாவலாசிரியர் ஏன் சமூகம் மற்றும் சமகால பிரச்சனைகள் குறித்து பேசவேண்டும்? நாடு சந்திக்கும் பிரச்சனைகளைக் குறித்து எனது தரப்பை பேசவந்தது ஏன்? இத்தனைக்கும் அலுவலகம், கல்லூரி ஆகியவற்றில் உள்ள இளைஞர்களைப்பற்றியும் (அ) வோட்காவினை அருந்திகொண்டிருப்பது (அ) காதலில் வீழ்பவர்களைப் பற்றியும் எழுதிக்கொண்டிருப்பவன் நான். ஊழல், தேர்தல்கள், அரசியல் கட்சிகள், சமூகத்திற்கான சவால்கள் பற்றி எப்படி என்னால் எழுத முடிந்தது? இந்தி திரைப்பட இயக்குநர்களோடு பணிபுரியும் ஒருவர் நாட்டின் பிரச்சனைகளைப் பற்றி எப்படி வலுவான பொருத்தமான குரலை எழுப்பிட முடியுமா? இந்தக்கடிதம் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிக்கிறது. என்னுடைய வாழ்க்கை பற்றி வேகமான பார்வை ஒன்றையும் பார்த்திட தங்களை அழைத்துச் செல்கிறேன்.

சிறுவயது


    எளிமையான நடுத்தரவர்க்க குடும்பத்திலிருந்து வந்தவன் நான். டெல்லியில் நான் வளர்ந்துவரும் தருணத்தில் பெற்றோர்கள் இருவரும் அரசுப்பணியில் இயங்கி வந்தார்கள். எனது சிறுவயதை நினைக்கும்போது பணப்பற்றாக்குறை என்பது வீட்டில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது என்பதை உணர்கிறேன்.  சிக்கனமாக செலவு செய்வது, சமையல் செய்வது என்றிருந்தாலும் சிறிய அளவிலான சொத்துக்கள் சேர்ப்பது (அ) பெரிய செலவுகள் ஏதாவது எதிர்பாராது வந்து பற்றாக்குறையாகிவிடும். இதற்கு ஒரு உதாரணமாக உடைந்த ஸோபா ஒன்றினை பழுதுபார்க்க பணமில்லாது பல ஆண்டுகளாக அப்படியே வைத்திருந்தோம்.

விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால் விலை அதிகமான கோலாவிற்கு பதிலாக எலுமிச்சம் பழச்சாறினைத் தந்து உபசரித்திருக்கிறோம். மிகவும் குறைவான முறையே குடும்பமாக ஹோட்டல்களுக்கு சென்றிருக்கிறோம். எச்சரிக்கையாக கவனமுடன் விலை மலிவான உணவு வகைகளை மட்டுமே பட்டியலில் தேர்வு செய்து சாப்பிடுவோம். உணவை போதுமான அளவு சாப்பிட முடிந்ததில்லை.

வாழ்க்கைக்கு பணம் ஒரு அடிப்படையான விஷயம். இந்தியா போன்ற நாட்டில் பல கோடி ஏழை மக்களின் வாழ்வை விட மேலாகத்தான் வசதியாகத்தான் வாழ்கிறோம் என்று நினைத்துக்கொள்வேன். வளரும்போது, ஒரு நல்லவேலையையும், போதுமான அளவு பணமும் என் ஆசையாக இருந்தது. அது தொடர்ந்து ஒரு பிரச்சனையாகவும் இல்லை.
எனக்கு அறிவியல் பாடங்கள் பிடித்திருந்தன. அதோடு பொறியியலாளர்களுக்கு நிச்சயமான வேலை வாய்ப்புகளும் இருக்கின்றன என்று கூறினார்கள். மக்களை மகிழ்ச்சி படுத்துவது எனக்கு மிகவும் பிடித்தமானது. சிறுவயதில் என் மாமா மற்றும் அத்தைகள் விருந்து நிகழ்ச்சிகளின் போது ஜோக்குகளைக் கூறச் சொல்லுவார்கள். நான் இதனை அனுபவித்து ரசித்து செய்தேன் என்றாலும் மற்றவர்கள் யாரும் இதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவதில் என்ன காரணம் இருக்கமுடியும்? எனது அறிவியல் தொடர்பான பாடங்களில் கவனம் செலுத்திப் படித்ததோடு, நுழைவுத்தேர்வுகளுக்கும் தயாராகத் தொடங்கினேன். இதுதான் அதன்பின் நான் செய்தது.

கல்லூரிச்சாலை


    ஐஐடி தேர்வுகளுக்கு தயாராகத்தொடங்கியபோது, நடுத்தர தகுதி கொண்ட கல்லூரியிலாவது சேர்ந்துவிட வேண்டும் என்கிற உன்னத குறைந்தபட்ச இலக்கோடு படிக்கத்தொடங்கினேன். ரஷ்ய இயற்பியல் புத்தகங்களிலிருந்து அஞ்சல் வழி கல்வி புத்தகங்கள் வரை அனைத்தையும் நகலெடுத்து ஏதோ ஆகிவிட்டது பையனுக்கு என்று நினைக்கும்படி இரண்டு ஆண்டுகள் கடுமையாக படித்தேன். அதற்கு முன்பு எங்கள் குடும்பத்தில் யாரும் ஐஐடி படிக்கச்சென்றதில்லை. நான் செல்வேன் என்று யாரும் நினைக்கவில்லை.

    எப்படியோ சின்ன அதிர்ஷ்டத்தினால் ஐஐடியில் ஒரு நாகரீகமான மதிப்பெண்களைக் கொண்டு தகுதி பெற்று ஐஐடியில் நுழைந்தேன். ஐ.ஐ.டி டெல்லியில் இயந்திரவியல் பொறியியலாளனாக படிப்பில் சேர்ந்த காலம் என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1991 ஆம் ஆண்டு படிப்பில் சேர்ந்தபோது, இந்தியாவின் பொருளாதாரத்தில் தாராளமயக் கொள்கைகளுக்கான சீர்திருத்தங்கள் தொடங்கின. தாராளமயம் இந்தியாவிற்கு என்ன தந்ததோ, அதுபோலவே ஐ.ஐ.டி எனக்கு பலவாய்ப்புகளை உருவாக்கி என் வாழ்க்கையினை என்றென்றைக்குமாக மாற்றியது.

    ஐ.ஐ.டி மிகச்சிறந்த மாணவனாகவெல்லாம் நான் இருக்கவில்லை. அங்கு மிகச்சிறந்த அறிவுஜீவிகள் இருந்தார்களென்றாலும் நான் அவர்களில் ஒருவனாக எல்லாம் இல்லை. பல ஐ.ஐ.டி மாணவர்கள் எந்திரத்தை பார்த்தார்கள். நான் அங்கு அதிலிருந்து மாறுபட்ட ஒன்றை கண்டடைந்தேன். மக்களின் மேல் அதிக ஆர்வம் கொண்டு ஐ.ஐ.டி வரும் பல்வேறு பகுதி மாணவர்களை கவனித்து உள்வாங்கத் தொடங்கினேன்.

    தாங்கள் படித்த பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். சிலர் மட்டுமே அறிவியலில் ஆராய்ச்சி செய்வது (அ) தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வந்திருந்தார்கள். பெரும்பாலானோர் தங்கள் நடுத்தர வர்க்க குடும்பக் கனவான நல்ல வாழ்க்கையினைப் பெறவே முயற்சித்தார்கள். ஐ.ஐ.டி அந்தக் கனவுகளை நிறைவேற்றவும் செய்தது.

    மக்களின் மீதிருந்த ஆர்வம் என்னை ஐ.ஐ.எம் சேர்ந்து எம்பிஏ படிக்கத் தூண்டியது. பொறியியல் படிப்பை விட எம்பிஏ படிப்பில் மிகச்சிறந்த மதிப்பெண்களைப் பெற்று நிறைவு செய்தேன். எனது படிப்பை முடித்தவுடன் ஹாங்காங்கை சேர்ந்த பெரிகிரைன் எனும் முதலீட்டு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். இந்தியாவை விட்டு வெளியே எங்கும் பயணித்திராத எனக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது பெரும் மனக்கிளர்ச்சியினை ஏற்படுத்தியது. நல்ல சம்பளத்தோடு, சீனாவின் வளர்ச்சியைப் பார்க்கவுமான வாய்ப்பை ஹாங்காங் நிறுவன வேலை எனக்கு சாத்தியப்படுத்தியது.

ஹாங்காங்கில் கற்ற பொருளாதார பாடங்கள்


    ஹாங்காங் எனது கண்களை விரிய வைத்து நகரத்தில் இறங்கி பார்க்கவைத்தது. அனுமதி பெற்று சுற்றிப்பார்க்கும்போது அந்த இடம் நினைத்துப்பார்க்க முடியாதபடி மேம்பட்டும், செல்வச்செழிப்பாகவும் காணப்பட்டது. சாலைகள் மென்மையாகவும், தெருக்கள் சுத்தமாகவும், கட்டிடங்கள் பளபளப்பாகவும் இருந்தன. இந்தியாவைப் போலில்லாமல் அங்கு அரசு பொதுத்துறைப் போக்குவரத்து தனியார் நிறுவனங்களைவிட சிறப்பாக செயல்பட்டு வந்தது. எப்படி இந்த இடங்களைப் பராமரிக்கிறார்கள்? இந்த சமூகம் எப்படி இதனைப் புரிந்துகொள்கிறது? அதோடு தொடர்ந்து இந்தியா ஏன் இதுபோல இல்லை? ஏன் பல கோடி மக்கள் இன்னும் ஏழைகளாக இருக்கிறார்கள்? என்று பல்வேறு கேள்விகள் எழ, ஹாங்காங்கில் முதலிரண்டு வாரங்கள் அதிர்ச்சியிலே செலவழித்தேன்.
    சிறுவயதில் நமக்கு இந்தியா சிறந்த நாடு என்று கற்பிக்கப்படுகிறது. மறைந்த அரசியல் தலைவர்கள் கதாநாயகர்களாக அடையாளம் காண்பிக்கப்படுகின்றனர். அவர்கள் அற்புதங்கள் நிகழ்த்தியவர்கள் என்று அவர்களது பிறந்த நாட்களைக் கொண்டாடுகிறோம். நாம் என்றும் அவர்களை கேள்விகள் எழுப்புவதில்லை. நம் எதிர்காலத்திற்கான நல்ல தொலைநோக்கு முடிவுகளை அவர்கள் எடுத்தார்களா? நேர்மையும், உண்மையும் கொண்டு வாழ்ந்தார்கள் என்று கூறப்படும் வாழ்த்திற்கும், நன்றிக்கும் தகுதி கொண்டவர்கள்தானா?
    இந்திய மக்களும் கலாச்சாரமும், அற்புதமானவை என்று என் வாழ்வு முழுவதும் கூற, எனக்கு  தயக்கம் ஏதுமில்லை. சிறுவனாக இருக்கும்போது இந்தியனாக இருப்பதற்கு பெருமையே பட்டேன். ஆனால் இன்றோ, அந்த நம்பிக்கைகள் அனைத்தும் பொய்யாகி உடைந்து போய்விட்டன.

    உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக ஏன் இன்னும் தொடர்கிறோம்? பல்வேறு சமூகப்பிரச்சனைகள் ஏன் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன? ஏன் நாம் பிரிந்தும் துன்பங்களோடும், நேர்மையற்றும், ஊழல்களோடும் வாழ்கிறோம்? என்று பல்வேறு கேள்விகள் என் மனதில் இடைவேளையில் தோன்றிக்கொண்டே சுற்றி வந்து கொண்டிருந்தன.

    ஹாங்காங்கில் செய்த வங்கிப்பணி நாடுகளையும், பொருளாதாரம் குறித்தும் புரிந்துகொள்ளும் என் ஆர்வத்தை தூண்டியது. இந்தியாவிற்கு வெளியே செல்லும் வாய்ப்பு கிடைக்கும் யாரும் வெளியே உலகில் என்ன நடக்கிறது என்று கவனித்து பார்க்க விரும்புகிறேன். முதலீட்டு வங்கியில் கிடைத்த பணி உலகத்தில் பரவுகின்ற பணத்தின் ஓட்டத்தை பார்க்கின்ற வாய்ப்பினை தந்தது. அந்த ஓட்டத்தில் இந்தியா பொருட்படுத்த தகுந்த நாடே அல்ல. இந்தியாவிலும் பல்வேறு புள்ளி விவரங்கள் நமது நாட்டின் சிறப்பைக்கூற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தம் கவனத்தை இந்தியாவின் மீது திருப்பியுள்ளனர்( இது 1990 காலப்படி. இன்று இந்தியா முதலீட்டாளர்களுக்கு முக்கியமான சந்தை).

    மேலும் சில வழிகளில் ஹாங்காங் என்னை பயப்படுத்தியது. சிறந்த கல்லூரிகளையும் கொண்டுள்ள சிறந்த நாடாக எனது நாடு இல்லை. வறுமையும், பொருத்தமுமற்ற ஒவ்வாத நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். காலம்தான். உலகம் செல்வம் கொண்டதாகவும், நாகரிகமாகவும், அழகாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாறியிருக்கிறது. ஆன்மிகம், பல்வேறு கலாச்சாரங்கள், அடையாளங்கள், நெறிகள் நம்மை இங்கு உருவாக்கி தந்திருக்கிறது.

தாக்கிய குற்றவுணர்வு


    வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்த நிலையில் நான் வளர்ச்சியடைந்து இருந்தேன் என்றே கூறலாம். அதில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டது 1997 ஆம் ஆண்டாகும். ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார குழப்பநிலையில் நான் வேலை செய்து வந்த பெரிகிரைன் வங்கி உடைந்து போனது. அதிக பணம் செலவழித்து வாழவேண்டிய நகரமான ஹாங்காங்கில் சில மாதங்கள் வேலையில்லாமல் இருந்தபின் உலகத்தின் முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

    அந்நிறுவனத்தில் தரவரிசை ஆலோசனைத்துறையில் பணி சேர்ந்தேன். என் உயரதிகாரிகளோடு இணைந்து தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடன் மதிப்பை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றிய ஆலோசனைகளை அந்த அரசுகளிடம் கூறுவது எங்களது பணி. உலகளாவிய தரநிர்ணய நிறுவனங்களோடும் இணக்கமாக, அவர்களின் செயல்பாடுகளுக்கும் உதவி வந்தோம். கடினமான பணி என்றாலும் ஒரு சாகச அனுபவத்தை அனுபவிக்க உதவிய வேலை  என்பதை மறுக்கமுடியாது. நிதித்துறை அமைச்சர்கள், தரநிர்ணய நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் ஆகியோரை சந்தித்து வந்தோம். அரசின் தகவல்களை படித்து அதில் உள்ள அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முயற்சித்தேன். நாட்டின் பொருளாதாரம் பற்றி அறிந்துகொள்ள இம்முயற்சி பெரும் பலனைத் தந்தது. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சில மாதங்கள் தங்கியிருந்து வருவாய் நிலுவைச் சிக்கல்களை அவ்வரசுகள் சமாளிக்க உதவி வந்தோம். அந்த தருணத்தில் பொருளாதாரத்தில் நான் குறிப்பிடத்தக்க நிபுணத்துவம் பெற்றிருந்தேன் எனலாம். இந்த விஷயத்தில் வித்தியாசமான அணுகுமுறையை அரசியல்வாதிகள் இந்நாடுகளில் பின்பற்றினார்கள். நிச்சயமாக மக்களை தன் வசப்படுத்தும் தந்திரங்களைக் கொண்ட அரசியல்வாதிகள்தான் என்றாலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் அந்நிய முதலீடு உள்ளிட்டவற்றில் உறுதியான முடிவுகளை எடுத்தார்கள்.

    கிழக்காசிய நாடுகளில் அந்நிய முதலீட்டுக்கேற்றாற் போல விதிகளை மாற்றியமைத்து உலகநாடுகளின் முதலீடு தங்கள் நாட்டிற்கு கிடைக்கச்செய்ய அரசியல்வாதிகள் முயற்சி செய்தார்கள். நிதி அமைச்சர்கள் சிலிக்கன் வேலியிலுள்ள நிறுவனங்கள் தங்கள் நாட்டில் தொழிற்சாலைகள் அமைக்க ஆதரவு தேடி கடுமையாக முயற்சித்தார்கள். இது இந்தியாவில் யோசித்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.

    அந்நிய முதலீட்டாளர்களுக்கான குறிப்பிட்ட வணிக வாய்ப்புகளை உருவாக்கிற இடம், திறந்த பொருளாதாரம், தொழில்களை சிக்கல் இல்லாமல் நடத்த அடிப்படை கட்டுமானங்களை அரசு உருவாக்கித்தருவதோடு, தெளிவான வலுவான சட்டத்தினையும் அதற்கேற்றாற் போல மாற்றங்களைச் செய்யவேண்டும். மேற்குறிப்பிட்ட அனைத்தையும் நாட்டின் குடிமகனுக்கும் உறுதி செய்வது அரசின் கருணையல்ல கடமை. அந்நிய முதலீட்டில் உருவாகும் தொழில்கள் வெற்றிபெறும்போது கிடைக்கும் வருவாய் நாட்டின் மேம்பாட்டிற்கும் உதவி செய்கின்றன. இந்தியா தனது அடிப்படை எதிர்பார்ப்புகளை கைவிட்டு, அந்நிய முதலீட்டு வாய்ப்புகளை வரவேற்க வேண்டும்.  கிழக்காசிய நாடுகளிலும் அரசியல்வாதிகள் மோசமான கறைபடிந்த அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்களென்றாலும், வணிகத்தைப் பொறுத்தவரை ஏமாற்றத்தை தருவதில்லை.

    பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்தியா செய்யவேண்டிய விஷயங்கள், திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த ஆர்வங்களும் ஆசைகளும் எனக்கிருந்தன. திறந்த பொருளாதாரம், முதலீடுகளை ஈர்ப்பது, தொழில்கள் தொடங்க ஏதுவான நட்புறவான சூழலை உருவாக்குவது என்று என்னுடைய குழப்பமான வார்த்தைகளில் கூறலாம்.

    நிச்சயம் இவை சிறந்த சிந்தனைகளைக்கொண்ட கருத்துக்கள்தான். மேலும் இவை குழந்தைத்தனமானதாக தோன்றக்கூடும். தீர்வுகள் பற்றி நானறிந்திருந்தாலும், இந்தியா ஏன் இதனை செயல்படுத்தவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை. மக்களையும், அவர்களை ஆட்சி செய்கிற அரசியல்வாதிகளும் நாட்டை தவறான பாதையில் ஏன் நடத்தி செல்கிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  நாடுகளோடு கலந்துகொண்ட வளர்ச்சி பந்தயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் பின்தங்கி நின்று தோற்றுவிடுவோம் என்று உரக்க கத்தவேண்டும் போலிருந்தது. எனக்கு வேறு வழியும் இல்லை.

    நாட்டின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும், அன்பும் கடும் வெறுப்பாக மாறி குற்றம்குறைகளையும் கூறுபவனாகவும், விரக்தி கொண்டவனாகவும் என்னை மாற்றி விட்டது. வெளிநாட்டில் வாழும் இந்திய ஆலோசனை அதிகாரி போல ஆகிவிட்டிருந்தேன்.

இந்திய அரசியல்வாதிகள் மோசமான அரசியல் கொள்கைகள் சட்டங்களை உருவாக்குவதை எப்போதெல்லாம் கேள்விப்படுகிறேனோ, அப்போதெல்லாம் எப்போதும் மதம் குறித்தும், பகுதியில் ஏற்பட்ட வன்முறைச் செய்திகளின் போது கடும் வலியை மனதில் உணர்ந்தேன். ‘’ நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? ‘’ என்று வெளிநாடு வாழ் இந்தியர்களிடேயயான குழுக்களிடையே கேட்டேன். ‘’ மலேசியா நிதியமைச்சர் இன்டெல் நிறுவனத்தை சந்தித்து அவர்களது கோலாலம்பூர் அருகே அமைக்குமாறு கேட்டுக்கொள்ள சென்றிருக்கிறார். நமது அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு இருப்பார்கள் அல்லது ஊழல்களை திட்டமிட்டுக்கொண்டு இருப்பார்கள் என்றார்கள்.

    ‘’ இது இந்தியா என்றுமே மாறாத தேசம். மாற்றங்கள் நிகழும் என்பதை மறந்துவிடு ‘’ என்று என் நண்பர்கள் கூறினார்கள்.
நிச்சயம் நான் மறந்துபோகத்தான் வேண்டும். எங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு இப்பணியில் இருப்போம். வங்கிக்கணக்கில் தேவையான அளவு பணம், குளிர்சாதன வசதி கொண்ட வீடுகள் மற்றும் முதலீட்டு வங்கிப்பணி காரணமாக உலகத்தை வசதியாக சுற்றிவரலாம். ‘’ நீங்கள் உங்கள் வாழ்வின் மேல் கவனம் செலுத்துங்கள். வேறு யாராவது ஒருவர் வந்து இந்தியாவைக் காப்பாற்றட்டும் ‘’ என்று என் நண்பர்கள், உறவினர்கள் ஆலோசனை கூறினார்கள்.

    என்னால் இதனை மறக்க முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை. இந்தியாவிலிருந்து என்னைத்துண்டித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவில் நடப்பது என்னவென்று தெரிந்துகொள்ளாமல் ஒரு நாள் கூட இருக்கமுடியவில்லை. ஹாங்காங்கின் செல்வச்செழிப்பை பார்த்து குழம்பியவனாக பெரும் ஆசையோடு, எப்படி அதனை செயல்படுத்துவது என்று தெரியாமல் இந்தியாவை அப்படி உருவாக்கிவிட விரும்பினேன்.
எனக்கு கிடைத்திருக்கும் வசதிகள் என் குற்றவுணர்வையே கடுமையாக அதிகரித்திருந்தது. ஹாங்காங்கில் தங்கியிருந்த பகுதியிலுள்ள வீடுகளின் ஆண்டு வாடகை புது டெல்லியிலுள்ள அபார்ட்மெண்ட்டிற்கானதை விட பலமடங்கு அதிகம். ஒவ்வொரு வாரமும் ஆசிய தலைநகருக்கு வணிக வகுப்பில் விமானத்தில் பறப்பேன். மிகச்சிறந்த ஹோட்டல்களில் உணவுக்கென அனுமதிக்கப்படும் 100 டாலர் தொகையினை எனது நாட்டில் இத்தொகை பெற ஒருவர் அதுபோல ஒரு வேலையைத்தேடி அலைந்து பெறவே ஒரு மாதம் வேண்டியிருக்கும்.

நான் பல வசதிகள் அனுபவிக்க காரணமான கல்வியை அளித்து பட்டம் பெற உதவிய நாட்டிற்கு ஏதாவது திரும்பி செய்ய விரும்பினேன். அதற்கான வாய்ப்பு எனக்கு விரைவில் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. 2001 ஆம் ஆண்டு எனக்கு என்ன அளிக்கப்போகிறது என்று அப்போது அறியவில்லை.

வங்கியாளனாக இருந்து எழுத்தாளராக


    இந்தியர்கள் விதியை நம்புகிறார்கள். சிலர் அதனை அதிர்ஷ்டம் என்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். எனது வாழ்க்கையும் எழுதப்பட்டு இருக்கலாம். இந்தியாவை மிகச்சிறந்ததாக மாற்றக்கூடிய சிந்தனைகளை சிலரிடம் மட்டுமில்லாமல் பலகோடி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்கிற சிறிய நம்பிக்கை எனக்கு சுடர்ந்து கொண்டு இருந்தது.

ஒரு வங்கியாளனாக பதவியில் இருந்திருந்தால் வெளிநாடு இந்தியர்கள் போல டாலர்களை சம்பாதித்து மாலை நேரங்களை இந்தியா பற்றிய பழைய நினைவுகளில் கழிக்க வேண்டியிருக்கும். வங்கிப்பணியை விட்டு விலகி, இந்தியாவிற்கு திரும்பி மும்பை தெருக்களைச் சுற்றுவேன் என்று விதியினை நம்புபவர்கள் கூறியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நடந்தது அதுதான்.

    இந்த அனைத்தும் சாத்தியமானதற்கு காரணம் எனக்குள் இருந்த மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட அல்லது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படாத மகிழ்ச்சிப்படுத்தும் திறமைதான். இந்நினைவு என் மனதிலிருந்து மீண்டும் எழ என் வாழ்க்கையே மாறியது. உங்களுக்கு முன்பே மாமாக்கள் மற்றும் உறவினர்களிடையே சிறுவயதிலிருந்தபோது பொழுதுபோக்கின் கர்த்தாக இருந்ததை கூறியிருக்கிறேன். ஹாங்காங்கில் அந்த பொழுதுபோக்குக்காரன் வெளியே மீண்டும் வந்தான். வங்கி நண்பர்கள் பொழுதுபோக்காக கோல்ப் மற்றும் சீட்டாட்டம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்தபோது, நான் எனக்குப்பிடித்தமான கதை சொல்லுவதைத் தேர்ந்தெடுத்தேன். அதோடு என்னுடைய மனச்சோர்வு, விரக்தி ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறும் தேவையும் இருந்தது. இந்தியாவோடு மீண்டும் இணைய விரும்பினேன். என்ன காரணமாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. நான் புத்தகம் ஒன்றினை எழுத விரும்பினேன்.

புத்தக வெளி


    என்னுடைய முதல் புத்தகம் வெளிவந்துவிட்டபோது அது பற்றிய சில விளக்கங்களை மக்களுக்குத் தரவேண்டி இருந்தது. ஐ.ஐ.டியில் சராசரி மதிப்பெண்களோடு படிக்கும் மூன்று மாணவர்களின் கதையது. நான் எப்படி போராடி எழுத்தாளனாக மாறினேன் என்பது போன்ற நாயக சாகசக் கதையை எழுத நான் விரும்பவில்லை. ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன் மே 2004 ல் வெளியானது. இப்புத்தகம் நல்ல விற்பனையும், பரவலான வாசகர்களையும் பெற்றுத்தந்தது.

    தொடர்ந்து பல புத்தகங்களை எழுதினேன். ஒவ்வொன்றிலும் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளைப் பற்றிய கருத்துக்களை வைத்தேன். ஒன் நைட் அட் தி கால் சென்டர் எனும் இரண்டாவது நாவலில்  கால்சென்டர் தலைமுறையின் வாழ்க்கை பற்றி எழுதினேன். மூன்றாவது புத்தகமான  தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆப் லைஃப் எனும் நாவலில் குஜராத் மதக்கலவரங்கள் பற்றிய செய்திகள் கொண்டது. தொடர்ந்து என் எழுத்துக்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை நூறிலிருந்து ஆயிரமாக மாறியது.

    புத்தகங்கள் இந்தியா பற்றிய என் கருத்துக்களை முன்வைக்கும் ஒரு வெளியாக மாறியது. இது முழுக்க ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் கொண்டாட்டத்தன்மையினை பெரும்பான்மையாக கொண்டிருக்கும். ஒரு சமூக பிரச்சனை ஒன்றை எடுத்துக்கொண்டு எழுதினாலும், அவை நிறைவு பெற இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகின்றன. தேசத்தின் நிலை பற்றிய கருத்தைத் தெரிவிக்க இது நீண்ட காலம் என்று உணர்ந்தேன்.

வேலையிலிருந்து விலகுதல்


    மூன்று புத்தகங்களும் நல்ல வெற்றியைப் பெற்ற பிறகு எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. அதிக அளவில் வாசகர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு எனது எழுத்துநடை பிடித்திருக்கிறது. ரசிகர்களை என்னை நம்புபவர்கள், எழுத்தை ரசிப்பவர்கள், தொடர்ந்து எழுத்துக்களை வாசிப்பவர்கள் என்று வகைப்படுத்தலாம். இவர்களைக் கொண்டு வேறெதுவும் அதிகமாக செய்யமுடியாதா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை உருவாக்க பல ஆண்டுகள் தேவைப்படும். அதனை ஏன் தீவிரமாக இப்போதிருந்தே தொடங்கக்கூடாது?

    பலரிடமும் ஆலோசனைகள் பெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்ந்து யோசித்துவிட்டேன். நான் என் நோக்கத்தில் தோல்வியுற்றிருந்தேன். ஆனால் இதனை கைவிட்டால் அந்த முடிவு என்னை கடும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கும். மேலும் நான் என் முயற்சியை தொடர்ந்து நீடிக்காதது குறித்து வருந்தினேன். வயது 34 ஆகும் போது ஓய்வு பெற்றுவிடும் வயது ஆகிவிடும். எனது பணிவிலகல் கடிதத்தை  மின்னஞ்சலில் அனுப்பி வைத்துவிட்டு தங்கியிருந்த அறையினை காலி செய்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

    என் மனைவி தொடர்ந்து வேலைக்கு சென்றுகொண்டிருந்தாள். நான் வீட்டில் இருந்த முதல் சில வாரங்கள் வித்தியாசமான தனிமை, மனஅழுத்தம் ஆகியவை எனக்கு ஏற்பட்டதால் எதையும் செய்யமுடியவில்லை. மிச்சமிருக்கும் நாட்களில் நான் என்ன செய்யப்போகிறேன் என்பது நிச்சயமில்லாமல் என்முன் சிந்தனைகள் நிழல் போல அசைந்துகொண்டு இருந்தன.

    என் அடுத்த புத்தகமான டூ ஸ்டேட்ஸ் எனும் இரு வேறு மதங்களை, மாநிலங்களைச்சேர்ந்தவர்களின் திருமணம் குறித்த நாவலை எழுதத்தொடங்கினேன். என் முந்தைய புத்தகங்களை காட்டிலும் மிகப்பெரும் வெற்றியை இந்நாவல் பெற்றது. ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன் நாவலை மையமாக கொண்ட த்ரீ இடியட்ஸ் திரைப்படம் சில மாதங்களுக்குப்பின் வெளிவந்து இதுவரையிலும்  இல்லாத வசூல்மழையை இந்தி திரையுலக வரலாற்றில் பதிவு செய்தது.

உள்ளொளி வளர்க்கும் பேச்சாளன்


    கல்வி நிறுவனங்களில் ‘ஸ்பார்க்ஸ்’ என்ற தலைப்பில் நான் பேசிய உரைகள் இணையத்தில் பெரும் வெற்றி பெற்றன. இவ்வுரைகள் தொடர்ச்சியாக பலராலும் கவனிக்கப்பட, காணப்பட உரையாற்றுதல் என் புதிய தொழிலானது. உரையாற்றும் பேச்சாளனாக 75 நகரங்களில் 100 க்கும் மேலான நிகழ்ச்சிகளில் அமராவதியிலிருந்து நியூயார்க் வரையும், கோரக்பூரிலிருந்து கொச்சி வரையும், குவகாத்தியிலிருந்து ஜெய்பூர் வரையும் கலந்துகொண்டிருக்கிறேன். இந்தியா மற்றும் அதன் இளைஞர்கள் பற்றியும் கற்றுக்கொண்டதோடு, பல்வேறு நிலப்பகுதிகளில் உள்ள மக்களின் கலாச்சாரங்கள் வேறுபட்டதாக இருந்தாலும், அனைத்து இந்தியர்களும் நல்ல சமூகத்தில் சிறந்த வாழ்க்கையினை வாழ விரும்புகிறார்கள்.
நாடு முழுவதும் செய்த பயணம் என் புரிந்துகொள்ளும் தன்மையினை புத்துணர்ச்சி அடையச் செய்தது. ஹாங்காங்கில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் போல வாழ்ந்துகொண்டு இந்தியா பற்றிப்பேசும் வாழ்வு அதிக நாட்கள் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு இந்தியனாக பெரும்பாலான நேரங்களை இளைஞர்களோடு, அவர்களுக்கிடையே செலவழிக்கிறேன். நான்  நிற்கும் மேடை பிரம்மாண்டமானது. இதற்கான பார்வையாளர்களும் அதிகம்.

    இந்தியாவில் என்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கான நேரமும் வந்தது. என் விதி அதை முடிவு செய்திருக்கலாம். அப்போது பத்திரிக்கையில் பத்திகள் எழுத வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

பரவலான கவனிப்பு பெற்ற பத்திரிகை எழுத்து


    2008 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தி நாளிதழான தைனிக் பாஸ்கர்(dainik bhaskar) நிறுவனத்திலிருந்து இளைஞர்கள் மத்தியில் எனக்கிருந்த வரவேற்பு கண்டு தம் பத்திரிகையில்  எழுத அழைத்தார்கள். இந்தியாவில் ஒரு ஆங்கில மொழி எழுத்தாளர் இந்தியில் எழுதுவது யோசிக்க முடியாத ஒன்று. ஆங்கில மொழி மேல்தட்டினருக்கானது. எழுத்தாளர்களும் அப்படித்தான் இருந்தார்கள். எழுதுவது குறித்து ஆழ்ந்து யோசித்துவிட்டு, நான் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாமா என்று நாளிதழின் தரப்பைக் கேட்க, அவர்களும் அதற்கு இசைந்தார்கள்.

    தைனிக் பாஸ்கர் நாளிதழின் வாசகர் எண்ணிக்கை பலகோடிகளில் இருந்தது.  அதிர்ஷ்டம் என் கதவருகில் இருந்தது. ஹாங்காங்கில் கற்ற சில ஆண்டுகளாக கற்றுக்கொண்ட பொருளாதாரப்பாடங்கள், இந்தியா முழுவதும் பயணித்தது ஆகியவை நல்ல பயன்களைத் தந்தன. எனது எழுத்துக்கள் இந்தியாவின் பெரும்பாலான இந்தி வாசகர்கள் கிடைக்க உதவியது. இவ்வாய்ப்பினை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்.

    சில மாதங்களுக்குப் பிறகு எனது விதி இன்னொரு வாய்ப்பையும் வழங்கியது. உலகம் முழுவதும் இந்தியாவிலும் அதிகமாக விற்பனையாகும் ஆங்கில நாளிதழான ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ எனக்கு எழுத வாய்ப்பளித்தது. ஒவ்வொரு இரண்டாவது வாரமும் நான்கு கோடி இந்திய வாசகர்கள் என் எழுத்துக்களை வாசித்தார்கள். விமர்சகர்கள் கூட நாவல் எழுதுபவருக்கு பத்திரிகையில் என்ன வேலை? என்று கேட்டார்கள். வெளுத்த முடி கொண்ட அறிவுஜீவி நான் கிடையாது என்பதால், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. அவர்கள் கூறியது சில நிலைகளில் சரியாகவும் இருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவேண்டுமென்பது தீர்மானிக்கப்பட்டதாக, விதியாகவும் இருக்கலாம்.

முக்கியத்துவமான வெற்றி


    ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழின் ஆசிரியர்குழுத் தலைவரான ஜாய்தீப் போஸ் அவர்களை சந்தித்து எழுத்து பற்றிய சில சிந்தனைகளை பெற்றதோடு, எழுத்துக்களால் அனைவரையும் உலுக்கவந்திருக்கிறேன் என்றேன்.
    எழுதுவது குறித்து சில நிமிடங்கள் பேசியபிறகு, ‘’சரி, நாங்கள் விரும்புவதும் அதுவேதான் ’’ என்றார். தொடக்கத்தில் நிதியறிக்கை பற்றிய பத்திகளையும், பாதிக்கப்பட்ட விவசாயத்துறை, பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் கொள்கைகளைக் குறித்தும் எளிமையாக எழுதத் தொடங்கினேன். ஆனால் அதில் நான் எதிர்பார்த்த  கோபம் இல்லை. என்னை முழுமையாக எழுத்தில் வெளிப்படுத்த முதலில் தயக்கமாகவும், பதட்டமாகவும் இருந்தது. ஆகையால் அது குறித்து கோபப்பட ஏதுமில்லை.
2010 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி எனக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த ஒரு வாய்ப்பு என்பேன். நமது தவறான அமைப்பு பற்றி பல இந்திய மக்களும் தெரிந்துகொள்ள உதவிய ஒரு நிகழ்வு இது எனலாம். காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் நடைபெற்ற ஊழலானது சுதந்திரமடைந்த இந்தியாவின் வரலாற்றில் பெரிய ஊழலாக இன்றுவரையிலும் உள்ளது. அரசு கர்வமாக அப்படி ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று கபடமாய் நாடகமாடி நடந்த விஷயங்களை மறைப்பதிலேயே கவனமாக இருந்தது. அப்போது ஒரு சாகசத்தை துணிந்து செய்தேன். காமன்வெல்த் போட்டிகளை பார்க்காமல், நிராகரிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். நாட்டை நேசிக்கும் குடிமகனின் வேகமும், கோபமும் அதில் வெளிப்பட்டிருந்தது. நாளிதழானது நான் எழுதியதில் ஒரு எழுத்தையும் மாற்றாமல் பிரசுரிக்க, எனது கோபம் வாசகர்களோடு பிணைந்தது. கட்டுரை இணையம் முதலியவற்றில் பரபரப்பாக வாசிக்கப்பட்டதோடு கட்டுரை எழுத்தாளராக என்னை உறுதி செய்தது. காமன்வெல்த் போட்டி ஊழல் பற்றிய ஆழ்ந்த சோதனையை விழிப்புணர்வை மக்களுக்கு எனது கட்டுரை தலைமையேற்று செய்யவில்லை என்றாலும், ஊழலுக்கு எதிரான கடுமையான எதிர்வினையாக அமைந்த எழுத்துக்களில் அதுவும் ஒன்று எனலாம்.

ஊழல்குறித்த எனது சிந்தனைகள் 


    ஊழல் தன்னிடம் அதனை நீக்குவதற்கான     அத்தனை விஷயங்களையும் கொண்டிருக்கிறது. அன்னாவின் இயக்கம் தொடங்கப்பட்டபோது இளைஞர்களை என் எழுத்தின் மூலம் ஒருங்கிணைத்து ஒரு சமூக குழுவாக திரட்ட முயற்சித்தேன். நம் மனதின் அறநிலையை உணர்வைக் கொன்றுவிட்டு ஊழலை குறைக்க முடியாது. வளர்ந்த வளமான நாடாக மாறுவோம் என்பதற்கு வேறு நம்பிக்கையும் இல்லை. லோக்பால் போன்ற சட்டங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. அரசியல்வாதிகளுக்கு இதில் பெரும் பங்கிருக்கிறது என்பது உண்மைதான். ஊழலை ஒழிக்க இவை மட்டும் போதுமானதாக இல்லை.

    ஊழல் என்பது அரசியல்வாதிகளிடம் தொடங்கி அவர்களிடமே முடிந்துவிடுவதில்லை என்பதை இந்தியர்கள் புரிந்துகொள்ளவேண்டும். நமக்கும் இக்குற்றத்தில் பங்கிருக்கிறது. நம் மனதின் வளைந்துபோன நேர்மை பண்புகள், அறநெறி ஆகியவை லஞ்சத்திற்கு தாராள இடமளிக்கின்றன. குறிப்பிட்ட தொகையைப் பெற, ஏமாற்ற நினைத்தாலும் அது சிறந்த கண்ணியமான நடத்தை ஆகாது. மக்களான நமக்கும் உள்ள பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே மாற்றங்கள் நிகழ்வது தேசத்தில் சாத்தியமாகும்.

    ஊழல் என்பது ஒரு வாழ்க்கை முறையாக இந்தியாவில் மாறிவிட்டது. அதிகார அமைப்பின் பொருளாக அது உள்ளது. நமது சமூகம் அதிகாரத்திற்கு மதிப்பளிப்பதை போல தனித்திறமைகளுக்கோ அல்லது நேர்மைக்கோ மதிப்பளிப்பதில்லை. அதிகார அமைப்பு வனத்தை ஒத்தது. சிங்கம் செய்யும் செயல்கள் அனைத்தும் நியாயமானவை. சிங்கத்தின் நண்பர்களுக்க நல்ல வாழ்க்கை வசதிகள் கிடைக்கும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் தரமும் அவரிடமுள்ள ஆற்றலைப் பொறுத்ததே. ஆற்றலைப் பொறுத்தே வாழ்வில் அவர்களுக்கான இடம் கிடைக்கிறது. சில சமூகங்கள் அப்படி இயங்கலாம். ஆனால் அதிகாரங்கள் நீடிக்காது.

    சமூகமானது தனித்திறமைகள், புதிய கண்டுபிடிப்புகள், நிர்வாகத்திறமை மற்றும் நேர்மை ஆகியவற்றை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நேர்மையும், தனித்திறமைகளையும் அங்கீகரித்தால் மட்டுமே இந்தியா செழிப்பான வளமான நாடாக மாற முடியும். சமூகத்தின் இதயத்தில் உள்ள மதிப்பீடுகளை அதன் முன்னுரிமை வரிசைகளை மாற்ற வேண்டிய தேவையுள்ளது.

மாறுதல் எப்படி சாத்தியம்?

    நேர்மை மூலம்தான். முழு சமூகமும் நேர்மையை பின்பற்ற வேண்டும். மற்ற அனைவரும் நேர்மையை கடைபிடிக்காமல் நீங்கள் மட்டும் கடைபிடித்தால் அது நிச்சயம் உங்களை வருத்தும். இன்று இந்தியாவில் இருக்கும் தடைகளும் இதுதான். நாம் அனைவரும் நேர்மையை விரும்புகிறவர்கள்தான். ஆனால் நம்மை வருத்தும் ஒரு நேர்மையான மனிதனையும் நாம் நிச்சயம் விரும்புவதில்லை. மாற்றங்களை தடுத்துக்கொண்டிருக்கும் ஆகப்பெரும் உண்மை இதுதான்.

    உதாரணமாக, பேருந்திற்கு காத்திருக்கும் பெரும் மக்கள் கூட்டம் ஒன்று நிறுத்தத்தில் நிற்கிறது. பேருந்து வந்து நிற்கும் போது, பலரும் தான் முதலில் உள்ளே செல்ல இடித்து தள்ளி, அடைத்து ஏறும் நிகழ்ச்சி தவறாமல் நிகழ்கிறது. இந்த செயல்பாடும் மனப்பான்மையும் அனைவரையும் வருத்துகிறது. அனைவரும் வரிசையாக இறங்குபவருக்கு  வழிவிட்டு ஒருவர் பின் ஒருவராக உள்ளே செல்வதுதான் இப்பிரச்சனை தீர எளிய வழி. இதில் அனைவரும் குழுவாக வரிசையில் நிற்க வேண்டிய தேவையுள்ளது. ஒருவர் மட்டுமே வரிசையில் ஏற முற்பட்டால் தள்ளிக்கொண்டு ஏறும் பயணிகளின் பின்னால் நிற்கவேண்டிய நிலைதான் இருக்கும்.
    அனைவரும் முடிவு செய்து ஒன்றிணைந்தால்  மாற்றங்களை சாத்தியப்படுத்தலாம். பெரும்பாலான இந்தியர்கள் தமது தவறுகளை ஒத்துக்கொண்டு சிறந்த எதிர்காலத்திற்கான மாற்றங்களை முன்னெடுக்க தயாராக வேண்டும். சமூகத்திற்கான நெறிகளை புதுப்பிப்பதோடு அவற்றை மக்களின் மனதில் பதியவைக்க வேண்டும். தற்போது, நாம் கொண்டிருக்கும் நெறிகளை அழிப்பதைவிட உருவாக்குவது அவசியம். இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழ்வது சாத்தியம்தானா? இப்போதுதான் தலைவர்கள் உள்ளே வருகிறார்கள்.

    ஒரு சிறந்த தலைவன் பெரும் பரப்பிலான மக்களை சென்றடைகிறான். தலைமைத்துவ நம்பிக்கையையும், வசீகர செல்வாக்கையும் கொண்ட தலைவராக ஆண், பெண் என இருவரில் யாராக இருந்தாலும் மக்களின் சிந்தனையில் நேர்மறை சக்தியை எண்ணங்களை ஏற்படுத்திவிட முடியும். மேல் இருக்கையில் சிறந்த செயலாளுமை கொண்ட தலைவர்களை அதிர்ஷ்டவசமாக நாம் பெற்றுவிட்டால் மாற்றங்கள் வேகமாக நிகழும். துரதிர்ஷ்டவசமாக அப்படி நமக்கு நடக்கவில்லை. பிரிவினைகள், ஊழல்கள், நெறிகளின் பிறழ்வு என மோசமான சூழலில் நல்ல தலைவரை தேர்ந்தெடுப்பது என்பது மிகச்சிரமமான காரியம்.

    ஆழமாக கவனித்தால் நாம் அனைவரும் சந்தேகமும், வெட்கமும் நம்மைக்குறித்தே கொண்டுள்ளவர்கள்தான். இந்தியாவை சிறந்த நாடாக மாற்றும் எண்ணம் கொண்டவர்கள் கூட குற்றம் கூறும் கண்களையே கொண்டிருக்கிறார்கள். நமக்குத் தெரியும், நாம் கறை படிந்தவர்கள் என்று; அதனால் நாம் அனைவரையும் சந்தேகப்படுகிறோம். இந்த மோசமான சூழலில் யாரையும் நம்பாதபோது நல்ல தலைவர் நமக்குத் தேவைப்படுகிறார். ஊழல் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் சந்தேகங்களுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். நான் பந்தயமே கட்டுவேன். நிச்சயம் இதைப்படிக்கும் மக்களில் சிலர், சேட்டனின் நோக்கம்தான்என்ன? எதனை சாதிக்க நினைக்கிறார்? என்ன கூற நினைக்கிறார்? அவருக்கு என்னதான் தேவை? என்று பல கேள்விகளை எழுப்புவார்கள். ஒரு தலைவராக இருந்தாலும் எந்த வேலையும் செய்வதற்குமுன், செய்தாலும் அதை நிறுத்திவைத்துவிட்டு  மக்களின் முன் தன்னிலைவிளக்கம் அளிக்க வேண்டிய சூழ்நிலை இங்குள்ளது.

    இந்த தருணத்தில் கலைஞர்களுக்கும் இச்செயல்பாட்டில் பங்களிப்பும், முக்கியத்துவமும் உள்ளதாக நினைக்கிறேன். தலைவர்கள் செய்துள்ள செயல்பாட்டினை தேங்காமல் விரிவாக்க கலையும், கலைஞர்களும் உதவ முடியும். திரைப்படங்கள், புத்தகங்கள், இசை ஆகிய புகழ்பெற்ற கலை வடிவங்களின் மூலம் நவீன கருத்துக்களையும், இந்திய நெறிகளையும் பரப்ப முடியும் என்று நம்புகிறேன். ஒரு எழுத்தாளராக புதிய கோணத்திலான மாற்றுச்சிந்தனைகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். நிச்சயமாக நான செல்வாக்கு கொண்ட தலைவரோ, அல்லது அதிக அதிகாரங்கள் கொண்ட அதிகாரத்தலைமை கொண்டவன் அல்ல. மூத்த அரசியல் தலைவரிடம் இல்லாத சில திறமைகளை நான் கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைத்த இந்தப்பலன்களை நடுநிலையாகவே கொள்கிறேன். எந்த அரசியல் கட்சியிலும் இன்றும், நாளையும் இணையும் எண்ணம் இல்லை என்மீதான குற்றம் குறைகளும், சுயலாப ஆர்வம் ஆகியவற்றிற்கான சந்தேகங்கள் பற்றிய கேள்விகளும் விலகுகின்றன. மேடைகளில் பேசுவதற்காக நான் பெறும் பணமே எனக்கு போதுமானது என்பதால் எந்த அரசியல் கட்சியின் ஆதரவு வேண்டியும் நான் இல்லை. இன்றைய காலத்தில் இவையெல்லாம் இல்லாமலிருப்பது மதிப்பிழந்த ஒன்று என்றாலும் மக்களின் கருத்துக்க்களை பிரதிபலிக்க, குறிப்பிட்ட தாக்கத்தினை ஏற்படுத்த உதவுகின்றன. இவையே என் எழுத்துக்களின் வசீகரத்தன்மைக்கு பெரும் பலமாக, மூலகாரணமாக உள்ளது.

மாற்றத்தை உருவாக்கியிருக்கிறேனா?

    சிந்தனையாளனாக, கருத்துக்களை உருவாக்குபவராக எழுத்தாளராக நீண்ட பாதையில் பயணித்திருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக பல விஷயங்களை மகிழ்ச்சியாக கற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தினால் அதிகார மேடையில் உள்ள பல நண்பர்களோடு பரிச்சயம் கிடைத்தது. ஒருவருக்கொருவர் தமது சிந்தனைகளை பகிர்ந்துகொண்டு ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சித்திருக்கிறோமே ஒழிய வேறெந்த பலன்களைப் பெறவும் இந்நட்புகளைப் பயன்படுத்தவில்லை.தவிர நடைமுறை பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கூற நான் முயலவில்லை. கட்சி வேறுபாடுகளைத் தாண்டி பல எம்.பிக்கள், அமைச்சர்கள் ஆகியோரை இரண்டு ஆண்டுகளாக  சந்திப்பதோடு எனது கருத்துக்களையும் அவர்களிடம் தெரிவித்து வருகிறேன். பாதுகாப்பு மற்றும் ரகசியம் ஆகியவற்றின் காரணமாக அவற்றை இங்கு வெளிப்படையாக தர முடியாது.
உதாரணங்கள் சில.

    மத்திய அரசின் அமைச்சர் ஏர் இந்தியா நிறுவனத்தின் பிரச்சனைகள் குறித்து எழுதியிருந்ததை படித்துவிட்ட அதுபற்றிப்பேச அழைத்திருந்தார். தன் தரப்பிலான விஷயங்களைப் பேசியவர் பிரச்சனை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். விமான நிறுவனத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அதனை கட்டுப்படுத்த பலமுயற்சிகளை எடுத்தார்.
    பிரதமர் தேர்தல் சமய அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டதைப் பற்றி நான் எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதியை முக்கியமான அரசியல் கட்சி தலைவர் மேற்கோள் காட்டிப்பேசினார்.

    லோக்பால் மசோதா குறித்து நான் எழுதிய பதிவுகள் சிவில் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை சந்திக்கவும், அரசு கருத்தொற்றுமை ஏற்படவும் உதவியது.

    பா.ஜ.க வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கட்சி பற்றிய பிரச்சனைகளை விளக்கமாக என்னை எழுதித்தரக் கேட்டுக்கொண்டார். நமது தலைவர்களுக்கு இருக்கவேண்டிய துணிச்சல் பற்றி நான் எழுதிய கட்டுரையைப் படித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு என்னை வாழ்த்தி பாராட்டியதோடு அதனை அனைவரும் படிக்க வசதியாக சுற்றறிக்கையாக அனுப்பிவைத்தார்கள்.
அதிக உதாரணங்களை கூற விரும்பவில்லை. மேலும் கூறினால் அது தற்பெருமை ஆகிவிடுமோ என்று தயக்கமாகவும் இருக்கிறது. அது என் நோக்கமல்ல. மேலே குறிப்பிட்டவை சிலவே. என் எழுத்துக்களின் மூலம் தாக்கம் பெற்ற பல தனிநபர்கள் உள்ளனர்.
இளைஞர்களின் இந்தியா வேண்டுவது என்ன?

    இந்தப்புத்தகத்தில் பல்வேறு பரவலான தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை எழுத சில வழிமுறைகள் அல்லது பொதுவான கருத்துக்களை பின்பற்றியுள்ளேன். சமூகம் மற்றும் அமைப்பு பற்றிய விமர்சனங்களை முன்வைத்துள்ளேன். அமைப்பு சிறந்த கொள்கைகளால் மாறும். சமூகம் நல்ல நெறிகளால் மாறும். இளைஞர்கள் சார்ந்த அடிப்படையாகக் கொண்ட பாதிக்கும் பிரச்சனைகளான ஊழல், கல்வி, மதச்சார்பின்மை பற்றி கவனம் கொண்டுள்ளேன். என் எழுத்துக்களின் வழி பிரச்சனைகளுக்குத் தீர்வு கூறுவது சிலருக்கு அபத்தமாகவும், முட்டாளத்தனமாகவும் தோன்றலாம். எந்த தீர்வுகளையும் நான் முன்வைக்காதபோது நான் பேசுகின்ற அனைத்தும் வெற்று உளறலாக மாறிவிடும். எளிமையான பிரச்சனைகளுக்கான தீர்வை நாம் சிந்திப்போம். வாழ்விற்கான நேர்மறை உந்துதலை அது தரக்கூடும்.
    இந்தியா பல்வேறு பெரிய முக்கியமான பிரச்சனைகளை கொண்டிருக்கிறது. அவற்றை நிச்சயம் தீர்க்கமுடியும் என்று உளமார நம்புகிறேன்.

    இந்த நீண்ட கடிதத்தினை படித்தததற்கு நன்றி!

                                                                                  சேட்டன் பகத்
                                                                                 4 ஜூலை 2012

கருத்துகள்