டி.எம் சௌந்தர்ராஜன்

அஞ்சலி
வெகுஜன இசையின் செவ்வியல் கலைஞன்
டி.எம் சௌந்தர்ராஜன் (24.03.1922 – 25.05.2013)
            திரு. டி.எம் சௌந்தர்ராஜன்  அவர்கள் மறைந்த 25.05.2013 அன்று இரவு நான் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். சில மணி நேரம் முன்புதான் அவரின் மறைவு செய்தி அறியப்பட்டிருந்தது. திருமண கச்சேரியில் சாக்ஸபோன் கலைஞர் திரு. டி.எம்.எஸ் அவர்கள் பாடிய புகழ்பெற்ற ‘’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…’’ பாடலை தனது இசைக்கருவியில் இசைக்கத்தொடங்கினார். திருமண சந்தடியிலும் எனது கற்பனையின் சஞ்சாரத்தில் அவரின் குரல் ஒலிப்பதாகவே உணர்ந்தேன். பாடல் முடிந்து நிகழ்வுலகில் உணர்ந்த தருணத்தில் டி.எம்.எஸ் இல்லாத உலகில் வாழ்வது என்கிற எண்ணம் தந்த வெறுமை என்னைச் சூழ்ந்தது.
            எண்பதுகளின் பிற்பகுதியில் எனக்கு ஆறுவயதிருந்த போதெல்லாம் வானொலியே என் உற்ற துணைவன். தமிழக கிராமப் பகுதியில் அன்று தொலைக்காட்சிப் பெட்டிகள் பரவலாக இல்லை. நான் அதிகாலை 5.30 க்கு டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகும் ‘’திரைகடலாடி வரும் தமிழ்நாதம் ’’ தொடங்கி ஆல் இந்தியா ரேடியோவின் உள்ளூர் ஒலிபரப்பு, இலங்கை வானொலி, பி.பி.சி தமிழோசை, சீன வானொலி தமிழ் ஒளிபரப்பு ஆகியவற்றினை மத்திய அலை மற்றும் சிற்றலை வரிசைகளில் தேடிப்பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்தேன். வானொலி கேட்க முடியாத பள்ளி வகுப்பறை ஒரு சூனிய வெளியாகவே இருந்தது. அந்த வானொலி நிகழ்ச்சிகளில் அவரின் பக்திப்பாடல்களும், திரையிசைப் பாடல்களும் இல்லாமல் எந்த ஒலிபரப்பும் இராது.
            ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் அவரின் பத்து பாடல்களாவது இல்லாமல் இருந்ததில்லை. இப்படித்தான் அவர் எனக்கு அறிமுகமானார். பின்னாளில் அப்பாடல்களின் திரைக்காட்சிகளைப் பார்த்தபோதும் எனக்கு டி.எம்.எஸ் தான் நினைவுக்கு வருவார். எப்போதும் திருநீற்றுப்பட்டை நீங்காதிருக்கும் முகம் அவரின் முகம் நினைவுக்கு வராமல் அவர் பாடிய பாடல்களை இப்போதும் கூட கேட்க முடிவதில்லை. அக்காலகட்டத்திலும் அவருக்கு அடுத்த தலைமுறை பாடகர்கள் எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன் ஆகியோர் புகழ்பெறத்தொடங்கியிருந்தனர். இளையராஜாவின் புகழ்கொடி உச்சியில் பறந்த நாட்கள் அவை. இருந்தபோதும் டி.எம்.எஸ் அவர்களின் குரல் என் ஆன்மாவின் ஒரு பகுதியாக மாறியிருந்தது.
            டி.எம்.எஸ் அவர்கள் மறைவின் போதும் அதற்கு முன்பும் அவரது வாழ்க்கை குறித்த பல கட்டுரைகள் வழியே அவரின் இசையாளுமை பேசப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில்  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலடல்களைப் பாடியிருப்பினும் அவரின் குரல் தமிழ் மொழிக்காகவே வடிவெடுத்தது என்றே தோன்றுகிறது. தமிழ்மொழியைக் கச்சிதமாக கையாண்ட இசைக்குரல்  என்று ஒன்றை வரையறுத்துச் சொல்ல வேண்டி வந்தால் அவரைத்தவிர வேறுயாரை சொல்ல முடியும்? திரையிசை என்பது வெகுஜன ரசனைக்குரியது. பெரிதும் திரைப்பாடல்களையே பாடிய அவரின் குரலில் அமைந்த பாடல்களை கவனமுடன் கேட்கும் எந்தவொரு இசைரசிகனும் அக்குரலில் ஒரு வலிமையான செவ்வியல் தன்மையை உணர முடியும். சான்றாக அவரின் ‘என்னடி முனியம்மா’, பாடும்போது நான் தென்றல் காற்று, ஆறு மனமே ஆறு, எங்கே நிம்மதி போன்ற பல்வேறு வகை மாதிரியான பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக கேட்டுப்பாருங்கள். இங்கு நான் குறிப்பிட்ட செவ்வியல்தன்மையை பொதுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
            1922 ஆம் ஆண்டில் மதுரையில் ஒரு எளிய சவுராஷ்டிர குடும்பத்தில் பிறந்த டி.எம்.எஸ் அவர்களின் இசையார்வம் சிறுவயதிலேயே வெளிப்பட்டது. தியாகராஜ பாகவதரே அவரின் ஆதர்சம்.  பல்வேறு நிலைகளில் கர்நாடக இசையின் நுட்பங்களை மிகுந்த ஆர்வத்துடன் கற்ற அவரை பெருங்கலைஞர்களின் பேறான வறுமை, துயர் மிகுந்த இளமைப்பருவம், வாய்ப்பு தேடலில் அடையும் அவமானம், சோர்வு ஆகியவை விட்டுவைக்கவில்லை. 1946 ஆம் ஆண்டில் கிருஷ்ண விஜயம் படத்தில் பாடத்தொடங்கிய அவரின்  இசை வாழ்க்கை சுமார் அறுபது ஆண்டுகால தமிழிசை வரலாற்றின் பிரதான பகுதியாக விளங்கியது. அவருக்குப்பின் பாட வந்த அனைவருக்கும் அவரின் குரல் தாண்ட முடியாத சவாலாகவே நீடிக்கிறது. அன்றைய உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகிய இருவருக்கும் நுட்பமான குரல் மாறுபாட்டுடன் அவர் பாடிய எண்ணற்ற பாடல்களின் வழியேதான் இருவரின் திரையுலக மற்றும் அரசியல் வாழ்க்கை பயணித்தது என்றால் அதில் மிகையேதுமில்லை. இருவர் தவிர பிற நடிகர்களுக்கும் அவர் பாடியிருக்கிறார். யாருக்காக அவர் பாடியிருப்பினும் அவை டி.எம். எஸ் பாடல்கள்தான். அப்பாடல்களின் வரிகள் அவர் குரல் மூலமே உயிரும் உணர்வும் பெற்று கலையனுபவத்தை அளித்தன. தமிழ் திரையிசை அவரின் பங்களிப்பு மகத்தானது. இன்னும் சொல்லப்போனால் பக்தியிசையை சூழ்ந்திருந்த பெரும் சுவர்களைத் தாண்டி ஒரு விரிவான பெரும் பரப்பிற்கு எடுத்துச் சென்ற பாடகர் அவரே. தமிழ் மக்களின் உணர்வுகளை ஆட்கொண்டிருந்த கடவுளர்கள் அவரின் குரல் வழியாகவே உருவகம் பெற்றனர். ‘’ கற்பனையென்றாலும்..’’, ‘’அழகென்ற சொல்லுக்கு’’ , ‘’ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ’’, போன்ற பாடல்கள் ஒலிக்காத கோவில்களோ, திருவிழாக்களோ உண்டா என்ன?
            தமிழிசை வரலாற்றில் டி.எம்.எஸ் ன் வருகை ஒரு பாடகனின் வருகை என்பதைத்தாண்டி ஒரு பண்பாட்டு நிகழ்வு என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். அவரின் குரல் நாற்பதாண்டுகளாக தமிழ் வாழ்வில் வியக்கத்தக்க வகையில் ஊடுருவி இருந்தது. தங்களின் கொண்டாட்டத்திற்கான உற்சாகத்தையும், துக்கத்திற்கான ஆறுதலையும், தமிழ்மக்கள் அவரின் குரலின் வழியே பெற்றார்கள். தமிழ் சமூகத்தின் வெவ்வேறு உணர்வு கொந்தளிப்புமிக்க உணர்வுகளின் வடிகாலாக விளங்கினார்.  அவரின் பாடல்களால் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை, அதற்கான ஊக்கத்தை பெற்ற என் முந்தைய தலைமுறையினர் பலரை நான் அறிவேன். என் போன்றோர் கூட அவர்களின் பின்தொடர்ச்சியே.
உண்மை என்பது என்றும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்…
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்…  
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்..
என்கிற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளை டி.எம்.எஸ் அவர்களின் குரலில் கேட்டவர்கள் இதை உணராமலிருக்க முடியாது.
            எனது இசை ரசனையின் தேடல்களின் வழியே பல வகை மாதிரியான இசை வடிவங்களில் பாடிய பல மொழிகளில்  செல்வாக்கு பெற்றிருந்த கலைஞர்களின் குரல்களை அறிவேன். அவற்றின் சிறப்புகளை உணர்ந்து உள்ளபடியே நெகிழ்ந்திருக்கிறேன். வெவ்வேறு நிலையிலான வெளிப்பாட்டு முறைகள், அவற்றின் மூலம் பெற்ற ஆன்ம அனுபவம் ஆகியவை சார்ந்து அவர்கள் அனைவரும் எனது நன்றிக்குரியவர்கள். ஆனால் ஒரு செவ்வியல் மொழியை பேசும் சமூகத்தின் மனிதனாக எனது வாழ்வின் பலநிலைகளிலும், பெருமித த்துடன், குதூகலத்துடன், துக்கத்தின் ஆற்றாண்மையுடன், தத்துவ வேட்கையுடன், அன்பின் பெருக்குடன், முணுமுணுத்த, மனதில் அசைபோட்ட பாடல் வரிகளைப் பாடியவர் என்கிற நிலையில் டி.எம்.எஸ் எனது வணக்கத்திற்குரியவர்.
            அவரின் பிற்கால வாழ்க்கை அவருக்கு மிகவும் சிக்கலாகவும், அசௌகரியமாகவும் அமைந்தது. பெரும் புகழ் பெற்றிருந்த கலைஞன் அப்புகழின் வீரியம் குறையும்போது உணரும் கையறு நிலையையும், அது தரும் சோர்வும், நிராசையும் அவரை ஆட்கொண்டிருந்தது. கொடியதல்லவா முதுமையில் தனிமை…? போதாக்குறைக்கு உடலும் நலிவுறும்போது அந்த இறுதி நாட்கள் மிகவும் கசப்பானதாகிறது. இது குறித்து இசை விமர்சகர் ஷாஜி விரிவாக எழுதியுள்ளார்.
            பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற மத்திய, மாநில  அரசுகளின் பல விருதுகளை அவர் பெற்றிருந்தாலும் அவரின் பங்களிப்பை முன்வைத்துப்பார்த்தால், இந்த விருதுகள் பொருட்படுத்த தகுந்தவை அல்ல. இவரை விட கூடுதலான அங்கீகாரம் பெற்ற பலர் தங்கள் பங்களிப்பின் மூலம் இசையை வளப்படுத்தினார்கள் என்றால் டி.எம்.எஸ் தனது இசைப் பங்களிப்பின் மூலம் தமிழ் சமூகத்தின் ஒரு காலகட்டத்தில் வாழ்வையும், பண்பாட்டையும் வளப்படுத்தியவர். அவ்வகையில் அவர் மக்களின் கலைஞன்.
            பாராட்டு பத்திரங்களையும், கேடயங்களையும், பணமுடிப்புகளையும், உள்ளடக்கிய இவ்விருதுகள் மூலம் அவர் கௌரவம் பெற ஏதுமில்லை. ஏனெனில் தமிழிசையின் வெகுஜன குரலான அவர் தமிழ் சமூகத்தின் தவப்பயன்களில் ஒருவர். சமூகத்தின் அங்கீகாரத்தையும் காலத்தின் கவுரத்தையும் அவர் ஏற்கனவே பெற்றுவிட்டார்.
                                                                                    இரா. முருகானந்தம்.
           



கருத்துகள்