பசுமை அரசியலுக்கான செயல்திட்டம்

பசுமை அரசியலுக்கான செயல்திட்டம்

எஸ்.பி உதயகுமார்

தமிழில்: ஜீவா


‘’அரசியல்வாதியையும் மாதவிலக்கு பட்டையையும் அவ்வப்போது விலக்கிவைக்க வேண்டும்’’ என்று ஒரு ஆட்டோ வாசகம் அறிவித்துச் செல்கிறது. மாற்றவில்லை என்றால் அவற்றால் நோய் வரக்கூடும். நடக்கவும் முடியாத தாத்தாக்கள் அதிகாரமையமாக நகர்கிறார்கள். ஊழல் நாயகர்கள் புரட்சி வீரர்களாக முழங்குகிறார்கள். அசிங்கமான அகவாழ்வு, மேடையில் கண்ணகி வேஷம் போடுகிறது. இந்தியா மாற்றம் வேண்டி எதிர்பார்த்து நிற்கிறது.
அவர்களை மாற்றலாம்; ஆனால் அவர்களுக்கு மாற்றாக யார் உள்ளார்கள்? புதிய தூய அரசியல்வாதிகளை உடனே மந்திரத்தினால் உருவாக்கிவிட முடியுமா? மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அலங்காரமாக அன்றி ஆத்மார்த்தமாகச் சொல்லும் அரசியல்வாதி யார்? அவர்களின் தகுதி, பண்பு, அர்ப்பணிப்பு, உழைப்பு எப்படி இருக்க வேண்டும்? அப்படிப்பட்ட தலைவர்களை உருவாக்குவது, பயிற்றுவிப்பது, அரசியல் தத்துவம் சொல்லிக்கொடுப்பது, நாடுபற்றி, மக்கள் பற்றி, உலகம் பற்றிச் சிந்திக்கச் செய்வது எப்படி?
நாம் நாட்டின் நிலை என்ன? கிழக்கிந்தியக் கம்பெனிக் கொள்ளையர்களிடம் சிக்கிய நாட்டைப் போராடி விடுவித்தோம். இன்று ஒரு நூறு நிறுவனங்கள் நம் தாய்நாட்டை கொள்ளையடித்துக் கொண்டுள்ளனர். பிரிட்டிஷ் காலனியை விரட்டி, அமெரிக்க காலனியாக விருப்பத்துடன் இணைந்துள்ளோம். வெள்ளை எஜமானர் போய், கருப்பு எஜமானர்கள் ஆள்கிறார்கள். கருப்பு எஜமானர்களோ, மீண்டும் தம்மோடு சேர்த்து நம்மையும் வெள்ளை  எஜமானர்களுக்கு விற்க முயற்சிக்கின்றனர். நாடு சில நூற்றாண்டுகள் பின்னோக்கி முன்னேறி உள்ளது. அடிமைபுத்தியும் குழப்பமும் எங்கும் நிறைந்து கிடக்கிறது இன்னும்.. இன்னும்… இன்னும்…. அதிகத் தொழில்கள், அதிக வளர்ச்சி அதிக மாசுபடுதலையும், அதிக கள்ளச் செல்வத்தையும் வளர்த்து மறுபுறம் அதிக வறுமையையும் வன்முறையையும் வளர்க்கும்.
இந்திய விஞ்ஞான வியாபாரிகள் பெரிய அணைகள், பெரிய ராணுவம், பெரிய அணுவுலைகள், பெரிய கட்டிடங்கள் எஸ்இ2 என வல்லரசுக் கனவுகளை இடையறாது வளர்க்கிறார்கள். இதற்கு அனேகமாக அனைத்து கட்சிகளும் இரையாகி ஆதரிக்கின்றன. அமெரிக்காவுடன் தந்திர நட்புறவு வளர்ப்பது காங்கிரசிற்கும், பிஜேபிக்கும் கொள்கையாக உள்ளது.
இந்திய பசுமைக்கட்சி மண்ணுக்கேற்ற லட்சியம், கொள்கை, செயல்பாடுகள் கொண்டதாக வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால் சில உலகுக்கே பொதுவான பிரச்சனைகள், செயல்பாடுகள் தவிர்க்க முடியாது. பசுமை என்பது உலகம் முழுவதும் உருவாகி வளர்ந்து வரும் புதிய அரசியல் போக்கு என்ற போதும் அதற்கான உலகத்தலைமையகம்  கோமிங்கன் என நிச்சயம் இருக்கமுடியாது. நமது பிரச்சனைகள் பல பொதுவானவை. எனினும் அவற்றிற்கான தீர்வுகள் நாட்டுக்கு நாடு மாறுபட்டவை. உலகமய பாதிப்பு, ராணுவப் பெருக்கம், ஆயுதவணிகம், வன்முறை, வறுமை, மாசுபடுதல், நிற, இன, மத வேறுபாடு என்பன எங்கும் பொதுவாக உள்ளன.
நமக்கான செயல்திட்டம் என்ன? எதிர்காலத் தேவைகள் என்ன? அவற்றைச் சிந்தித்து ஆராய்ந்து வடிவமைக்க வேண்டும். ஒரு சின்னக் குழு இதற்கான அடிப்படை அறிவு பெறுவதற்காக சில அடிப்படை நூல்களை கூர்ந்து படித்து தெளிவு பெறுவது முதல் தேவை. இதில் ஆண்கள், பெண்கள், பல வயதினர், பல இன, மொழி , ஜாதிவர்க்கம் சார்ந்தவர்கள் இடம் பெற வேண்டும். சில மாதங்கள் கடுமையான கூட்டுப்பணிகளின் பின் ஒரு தேசியப் பார்வையை உள்ளூர் முக்கியத்துவத்துடன் கட்டமைத்து வாசிப்பு, விமர்சனம் சுற்றுக்கு விட்டபின் இறுதியில் செயல்பாட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். அது அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளையும் நாட்டு மனித குல நலனுக்காகப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும்.
மொத்தத்தில் எவ்வித ஒதுக்கலுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் உள்ளிருத்திய செயல்பாடு அவசியம்.
வன்முறையற்ற அகிம்சை வழி பின்பற்றுவதாக இருக்க வேண்டும்.
நமது சொந்த சுதேசி வலிமை, பன்முகத்தன்மை, மொழி, மதம், இனம், வர்க்கம் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும், மதிக்கும் வாய்ப்பளிப்பதாக இருக்கவேண்டும்.
முற்போக்கான துணிவான வழிகாட்டல் அவசியம். ஜாதி வேறுபாடு, மத மோதல், தீண்டாமை, மூட நம்பிக்கைகள், வரதட்சணை, குழந்தை மணம் போன்றவை மறுக்கப்பட வேண்டும். அன்பு, சகிப்புத்தன்மை, மனசாட்சி முதன்மை பெற வேண்டும்.
மாற்றத்தின் முன்னோடியாக நாம் ஒவ்வொருவரும் மற்றவரை எதிர்பார்க்காமல் முன்நடக்க வேண்டும். நான் விரும்பும் மாற்றத்தின் தொடக்கம் நானே எனும் முடிவெடுக்க வேண்டும். நமது முடிவுகளை நாமே நடைமுறையாக்கி காட்டி வாழ வேண்டும்.



இனி என்ன செய்யவேண்டும்?
உன்னிடத்தில் தொடங்கு
    உன்னில், உன் வீட்டில், உன் தெருவில், உன் பகுதியில், உன் வேலையிடத்தில், உன் பயணத்தில் பசுமை அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ளவும். ஆர்வமுள்ளோரை சேர்த்துப் பணிபுரியவும்.
அனைவருக்குமானது
    ஜாதி, மதம், பாலினம், மொழி, பண்பாடு, அரசியல், தத்துவம், உடற்கூறு, பணம் என எவ்வித தடையுமின்றி அனைவரும் பங்கேற்கக் கூடியதாக்குங்கள். போதை பழக்கங்களுக்கு அடிமையானோர், வன்முறையாளர்கள், சமூக எதிரிகளுக்கு இடமில்லை என்பதை உறுதி செய்யுங்கள். பதவிகள், ஏற்றத்தாழ்வுகள் கூடாது. முழுமையான ஜனநாயகமும் கூட்டுச் செயல்பாடும் முதன்மையானது.
நேரம் ஒதுக்குதல்
    தமது நேரத்தில் குறைந்தது இருபது விழுக்காட்டை பசுமை அரசியல் பணிக்கு ஒதுக்க முயலுங்கள். சுய தொழில், வருமானம் உள்ளவர்கள் அதிலிருந்து எவ்வித வருமானமும் எதிர்பார்க்காதவர்களாக இருப்பது அவசியம். பொது இடங்களில் கூடிப்பேசுங்கள்.
திட்டமிடுங்கள்
    நமது பகுதியின் முக்கியமான உடனடித்தேவைகளைப் பட்டியலிடுங்கள். தீர்வுக்கு திட்டமிடுங்கள். பின் மாவட்ட, மாநில, தேசிய, உலகத்தேவைகள், பிரச்சனைகள் பற்றிய நடுநிலையான மனிதாபிமான அணுகுமுறையுடன் விவாதித்தும் பட்டியலிடுங்கள்.

வாழ்விடத்தூய்மை
    நமது பகுதியைச் சுற்றிப்பார்த்து, தூய்மைப்படுத்துங்கள். வீடு வீடாகச் சென்று, மக்களிடம் பேசி தனிநபர் தூய்மை, சுற்றுப்புறத்தூய்மை, இயற்கைச் சூழல் பாதிப்புகள், சீர்படுத்துதல் பற்றிப் பேசி விவாதியுங்கள். குப்பை, கழிவுகள் சேமிக்கவும், போடவும் இடம் உள்ளதா, வசதிகள் உள்ளதா பார்த்து, அதை உடன் நிறைவு செய்யவும்.
சமூக பண்பாட்டுத் தூய்மை
    கள்ளச் சாராயம், போதை மருந்துகள், புகையிலை, விபச்சாரம், ஜாதி மோதல், மதவெறி, பெண்கள் பாகுபாடு, குழந்தைத் தொழிலாளர், வரதட்சணைக் கொடுமை, ஆபாச நிகழ்வுகள் இருக்குமானால் அதில் கவனம் செலுத்தி, சீர்படுத்தக் கூட்டாகச் செயல்படுங்கள்.
பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் முதியோர்நலன்
    நமது பகுதியில் இவர்களின் நிலை தேவைப்படும் தீர்வு, அணுகுமுறைகள், விழிப்புணர்வூட்டல், சமூக அழுத்தம் தருதல், ஒத்துழைப்பு உதவிகள் செய்தல் அவசியம். சத்துணவு, ஆரோக்கிய வாழ்வு, சுற்றுப்புறத் தூய்மை ஆகியவற்றை பயிற்றுவித்தல். சிறு சிறு கைத்தொழில்கள் மூலம் பெண்கள் நேரத்தைப் பயன்படுத்தவும், வருமானம் பெறவும் பயிற்றுவித்தல், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், முதியோர் நலனுக்கான செயல்பாடுகள் மேம்பாடு முயற்சிகள் செய்தல்
இலக்கியம், கணிதம், பேச்சு
    கல்லாமை ஒழிக்கும் மாபெரும் சமூகக்கடமை, நம்முன் உள்ளது. இரவுப்பள்ளி, முதியோர் கல்வி, எழுத்து, வாசிப்பு, அடிப்படைக் கணிதம், அறிதல், உணர்தல் என்பனவற்றை ஒவ்வொரு குடிமகனும் பெறச் செய்வது நம் கடமை.
    மனிதர்களின் தனித்திறன், உள்ளூர் தேவை ஆகியவற்றை அரசியல் பணியாளர் அறிய முயல வேண்டும். கலை வடிவங்கள் மூலம் மக்களைச் சென்றடைய அறிவதும் அவசியம். ‘’ இந்த தலைமுறை தீயோரின் வெறுப்பு மிக்க வார்த்தைகளுக்காகவும், செயல்களுக்காகவும், நல்லவர்களின் செயலற்ற மௌனத்திற்கும் வேதனைப்படவும், அவமானப்படவும் வேண்டியுள்ளது’’ என்ற மார்டின் லூதர் கிங்கின் வாசகத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம்.
    இந்தியா ஊழல், ஏழை பணக்காரன் வேறுபாடு, மக்கள் தொகை பெருக்கம், நோய்களின் பெருக்கம், இல்லாமை, வளர்ந்து வரும் குற்றங்கள், வன்முறைகள் என இந்தியா மோசமான சரிவுப் பாதையில் விழுந்து கொண்டுள்ளது என அக்கறையுடன் கவலைப்படுவோர் பலர் உண்டு. இதற்கான நல்ல காரணங்கள் உண்டு. அரசியல், சமூக சார்புகள் கொண்டு ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டு, கடமையைத் தட்டிக் கழிக்கிறோம். ஆனால் நம்மை நாமே நொந்து கொள்வது தவிர வேறு வழியில்லை.
    நாம் எங்கு உள்ளோம் என்பதை நாம் நன்கறிவோம். சிந்தனை கற்பனை, கனவுகள் நம்மை அங்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே முன்னோக்கி பார்ப்போம். என்ன வேண்டுமென்பதை முடிவு செய்வோம் எப்படி அடைவது என்பதைத் திட்டமிடுவோம். பயணத்தைத் தொடக்குவோம்.
முன்னோக்கிப் பார்ப்போம்
    எதிர்காலம் பற்றிய ஆக்கப்பூர்வமான சிந்தனை தேவை. அது எளிதானது போலத் தோன்றலாம். செயல்படத் தொடங்கும்போது சிரமம் தெரியும். உலகளவு நினைக்கலாம், ஆசைப்படலாம். பயணப்படும்போது பல தடைகள், எதிர்பாராத திருப்பங்கள் நம்மை தடுமாறச் செய்கின்றன. திசை தெரியாத கடலிலும் திசைகாட்டியின் துணையுடன் பயணிக்கும் கப்பல் போல நமக்கு நமது லட்சியமே வழிகாட்டியாக பயணிக்கவேண்டும். லட்சியப் பயணமே இலக்கை எட்ட உதவும். கடந்த கால அனுபவங்கள் நமக்கு பாடம் சொல்லட்டும்.
எது இலக்கு?
    எத்தனை வளைவுகள்?, எத்தனை பிரிவுகள்?, எத்தனை தடைகள்? இத்தனையும் கடந்த பின்தான் எட்டவேண்டிய இலக்கு உள்ளது. இலக்கை முடிவு செய்யாதவன் பயணம்  ஊர் போய் சேராது. காலமும், பொருளும் வீணாகும். நமது கவிஞர்களும், தத்துவ ஞானிகளும், அரசியல்வாதிகளும் கற்பனையில் பலவற்றைக் கனவு கண்டு பதிவு செய்து உற்சாகமூட்டலாம். நடைமுறை உலகுக்கும், நமது சூழலுக்கும், திறமைக்கும், மக்களின் மனநிலைக்கும் சாதிக்க முடியும் என்று நம்புவனவற்றை மட்டும் அடைவதற்கான வழிகாண வேண்டும்.
எப்படி இலக்கை எட்டுவது?
    ஜனநாயக வழியில் கூட்டாக சிந்தித்து முடிவெடுத்தவற்றை நிறைவேற்ற வழிகாண வேண்டும். அந்தப் பயணத்திற்கான வாகனம், எரிபொருள், ஓட்டுநர் என அனைத்தையும் தயார் செய்ய வேண்டும். ‘’இலட்சியமும், பயணமும், பாதையும் சரியாக இருக்க வேண்டும். தூய்மையற்ற வழியில் புனிதமானவற்றை அடைய முடியாது. சத்தியமற்ற பாதையில் சத்தியத்தைக் கண்டடைய முடியாது. ‘’தூய்மையற்ற மனம், உடல் உள்ளே பொய்மையும், வன்முறையும் குடியிருக்கும்’’ எனும் காந்தியின் வாசகம் நம் லட்சியம் மட்டும் உன்னதமானதாக அன்றி, அதற்கான நமது பயணப்பாதையும் நேர்மையானதாக அமைத்துக் கொள்வோம்.

மலையேற்றம் தொடங்கு
    முடிவெடுத்தபின் பயணப்படு. போகும் பாதை, பயண வாகனம், அதன் தன்மை, அனைத்தும் சரியாக அமையட்டும். வாகன ஓட்டுநர் தெளிவானவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் நம்மைக் கூட்டிச் செல்ல தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும். கூட்டு முயற்சியால் வலையில் சிக்கிய புறாக்கள் சேர்ந்து பறந்து விடுதலை பெற்ற கதை நமக்குள் ஓர் முன்மாதிரியாக வேண்டும். தன்னம்பிக்கையுடன் நமது இரண்டாம் விடுதலைப் போரைத் தொடர்வோம். பிரச்சனைகளைப் படிக்கட்டுகளாக்கி முன்னேறுவோம். ஒரு உன்னதமாக, மதிப்புமிக்க மண்ணை நமது குழந்தைகளுக்கு உருவாக்கித் தருவோம்.









பசுமை அரசியல் போராளிகளுக்கான அகிம்சைப்பாதை
    ஹவாயின் பெரிய தீவு மழைக்காடு காப்புக்குழு மகாத்மா காந்தி, மார்டின் லூதர்கிங்கின் அகிம்சைப் பாதையில் போராடி வருகிறது. அவர்கள் தங்கள் பெயரால் நடத்தப்படும் எந்த வன்முறை அழிவுச் செயல்பாடுகளையும் பொறுப்பில் கொள்வதில்லை.
    நல்லெண்ணம், அன்பு அணுகுமுறையை எந்த நேரத்திலும் கைவிடாதீர். நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டுமென நினைக்கிறோமோ அவ்விதமே அவர்களையும் நாம் நடத்துவோம்.
    அனைத்து மக்களையும் நேசிப்போம். நம்மைக் கடுமையாக எதிர்ப்பவர்களையும், நமது கொள்கைகளை எதிர்ப்பவர்களையும், கருணையுடன் சகித்துக்கொள்வோம். அவர்களின் புண்படுத்தும் ஏச்சுக்கள், கிண்டல், எதிர்ப்புகளைப் பொறுத்துக்கொள்வோம்.
    கடுமையான பகை மொழிகளை, முக மாற்றங்களைத் தவிர்ப்போம். பொறுமை இழப்பதையும், அச்சமடைவதையும் தவிர்ப்போம்.
    ஆயுதங்களையோ, ஆயுதமாகக் கூடும் எனும் பொருட்களையோ எடுத்துச்செல்வதையோ தவிர்ப்போம்.
    மது, போதைப்பொருட்களைத் தவிர்ப்போம்.
    அகிம்சைப் போராட்டத்திற்கான பயிற்சிகளைப் பெறுவோம். ஒத்துழையாமை இயக்கங்களில் பங்கேற்க முயல்வோம்.
    அழைப்பு மணியோசை அமைதியையும், கூடலையும் அறிவிக்கிறது.
    போலீசுடனோ ஊடகத்துடனோ, அரசு அதிகாரியுடனோ பொறுப்பேற்றவர் மட்டும் கருத்து கூற அனுமதிப்போம்.
    குழுவின் அமைதித் தலைவரின் முடிவுகளை ஏற்று நடப்போம். நெருக்கடி வரும்போது அமைதித் தலைவரை உடன் அழைப்போம்.
தீவிரப்போராளிகளுக்கான விதிகள்
    வலிமை என்பது நமக்கு மட்டுமல்ல, நம் எதிரியிடமும் உள்ளது.
    அனுபவம் வாய்ந்த தோழர்களைப் பிரிந்து போகாதே.
    எதிரிகளின் அனுபவ எல்லை கடந்து செயல்பட முயல்.
    ஏளனம் வலிமை வாய்ந்த ஆயுதம்.
    நல்ல யுக்தி போற்றப்படும்.
    உணர்வை உயர்த்தி வை.
    அச்சுறுத்துவது ஆயுதத்தைவிட வலிமையானது.
    வெற்றிகரமான தாக்குதலின் விலை பயனுள்ள மாற்று தருவது.
எதிரியின் மீது அழுத்தம் உண்டாக்கும் செயல்பாடுகள் பெரிய போர் யுக்தி.
ஒவ்வொரு பலவீனத்தின் பின்னும் ஒரு பலம் உண்டு.
இலக்கைக் குறி, கவனத்தைக் குவி. கலந்து போ.
ஒத்துழையாமைப் போராளிக்கு
போராட்டத்தை ஓட்டையின்றி திட்டமிடு.
போராட்டத்தின் விளைவுகளை நன்கு அறி. தயாராகு.
குழுவின் கொள்கை, லட்சியம் ஆகியவற்றை தெளிவாக புரிந்துகொள்.
அகிம்சை பயிற்சி பெறு. பின் போராடப் புறப்படு.
ஆதரவாளரை அறிந்து கொள்.
செயல்பாடு, அதற்கான தண்டனை, தாக்குதல், சிறை என அனைத்தையும் சிந்தித்து அறிந்து உணர்ந்து புறப்படு.
உன் தேவை, உன் உடமைகள், உன் வாகனம் மீது கவனமிருக்கட்டும்.
கைது செய்யப்படும் சூழலில் கவனமாகச் செயல்படு. கேமிரா இருப்பது நன்று.
உனக்கான பிணையைப் பணமாகக் கொடு. பாதுகாப்பாக வெளியேறு.
ஆதரவுக் குழுக்களுடன் சேர்ந்து கொள். அது பாதுகாப்பளிக்கும்.
குழுவின் முடிவுகள் ஒருமித்ததாக இருக்கவேண்டும்.
ஆதரவுக்குழுக்களுக்கென ஒரு ஆதரவாளர் இருப்பது அவசியம்.
அமைதிகாப்பாளரின் பங்கு
    செயல்பாட்டு யுக்திகள் வடிவமைக்க உதவுதல்.
    அமைதி, பாதுகாப்பினை செய்தல்.
    சந்தேகங்களுக்கு சரியான விடைகாண உதவுகிறது.
    உதவிக்கு உடன் வருவது.
அகிம்சை தொண்டரின் தகுதி
    அகிம்சைப் போராளி எவருடைய தயவிலும் வாழும் ஒட்டுண்ணியாக இருக்கக் கூடாது. பிறர் செலவில் சுகம் காணுபவராக இன்றி மக்கள் தொண்டராக வாழவேண்டும். பாதி நேரத்தைச் சேவைக்கும், பாதி நேரத்தை வருமானம் ஈட்டவும் செலவிடவும் வேண்டும். அவரது அரசியல், செயல்பாடுகள், ஈடுபாடுகள் இவ்விதம் இருக்கவேண்டும்.
சுற்றுச்சூழல் அக்கறை, இயற்கை விவசாயம், உணவே மருந்து, வாழ்க்கை கல்வி, எளிய வீடு, இயற்கை நேயப் பயணம், பொழுதுபோக்கு, நிர்மாணப் பணியில் ஈடுபடல், மனிதநேய அறிவியல், பயனுள்ள தொழில்நுட்பம், தாக்குப்பிடிக்கும் வளர்ச்சி, பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு, எதிர்கால நலன் பற்றிய சிந்தனை, தொடர்விவாதம், பகிர்வு, முரண்பாடுகள் சீர்படுத்தல், அகிம்சை ஆகியவற்றில் ஈடுபாடும், தெளிவும் கொண்டவராக இருக்கவேண்டும்.
பசுமை அரசியல் தொண்டர்களுக்கான உறுதிமொழி
    பசுமை அரசியல் தொண்டனான நான்….
மனிதவாழ்வை மதிக்கவும், பிற உயிரினங்களுடன் இணக்கமாக வாழவும், மனித உயிருக்கும் பிற உயிர்களுக்கும் தக்க மதிப்பைத் தரவும், உரிமைகளை மதித்து வழங்கவும் செய்வேன்.
    உண்மை, அகிம்சையின் அடிப்படையில் புதிய சமுதாயம் அமைக்கப் பாடுபடுவேன்.
    சமூக நீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மனிதர்களின் உரிமை ஆகியவற்றிற்காகப் போராடுவேன்.
    உலகின் பன்முகத்தன்மையைப் போற்றவும், அதே வேளையில் அனைத்து உயிர்களுடனும் நல்லிணக்கம் காண முயல்வேன்.
    கிராமப் பஞ்சாயத்து அரசே ஜனநாயகத்தின் வேர். அதன் வழியேதான் தேசிய ஜனநாயகமும், நலனும் தளைக்கும்.
நல்ல தொழில்நுட்பம், உழைப்பாளர் பங்கேற்பு மூலமான தாக்குப்பிடிக்கும் சமத்துவ வளர்ச்சிக்குப் பாடுபடுவேன்.
    பொதுவாழ்வில் திறந்த தன்மை, நேர்மை வளர்ப்பேன்.
    எதிர்காலத் தலைமுறையை மனதில் கொண்டு நிகழ்காலத்தை திட்டமிடுவேன்.
ஜாதி, மத, இன, மொழி, பாலின வேறுபாடுகள் கடந்து வாழ்வேன்.
    இவை கொண்டு மக்களைப் பிரிப்பதை தடுப்பேன்.
    தேசிய வாழ்வில் வன்முறை தவிர்ப்பேன். அழிவுக்கும், பிரிவினைக்கும் என் அறிவையும், திறமையையும் பயன்படுத்த மாட்டேன்.
    பலவீனமான மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முன்நிற்பேன். பெண்கள், குழந்தைகள், தலித்துகள், முதியோர், சிறுபான்மையினர், இயற்கையின் பாதுகாவலனாகவும் செயல்படுவேன்.
    இந்த உறுதி மொழிகளின் அடிப்படையில் எனது அரசியல் இந்த பூமியின் நலனுக்கும், வாழ்வுக்கும் உதவும் வகையில் செயல்படுவேன்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்