பசுமை அரசியல்2

இந்திய சுயராஜ்யமும்

பசுமை இயக்க கொள்கை சாசனமும் 

ஆங்கிலத்தில் பில் கோல்யர்

தமிழில்:ஜீவா


பசுமை இயக்கத்தின் உலகத் தலைவர்கள் பசுமை இயக்கத்தின் உருவாக்கம், தத்துவம் ஆகியவற்றில் மகாத்மா காந்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். காந்தியின் விடுதலை இந்தியா பற்றிய எதிர்பார்ப்பு இன்றைய நவீன பசுமை சிந்தனையுடன் மிகுந்த பொதுத் தன்மை கொண்டதாக உள்ளதைக் காண்கிறோம். அவருடைய சிந்தனைகள் எவ்விதம் முழுமையாக பொருந்தி வருகிறது என்பது பசுமைச் சிந்தனைகளில் மிக அரிதாகவே விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் பொருத்தப்பாடு எத்தனை சிறப்பாகப் பாராட்டப்பட்டுள்ளது என்பதும் சிந்தனைக்குரியது. காந்தியம், பசுமை எனும் இரண்டு தத்துவங்கள் எவ்வாறு ஒரு மையப்புள்ளி நோக்கிக் குவிகின்றன என்பது குறித்த முழுமையான புரிதல் அவசியம். குறிப்பாக முதல் உலகப்போர் சார்ந்த குறுகிய பார்வையே பெரிதும் பசுமை குறித்த  அக்கறை மீது படிந்துள்ளது.
    இந்த நோக்கத்துடன்தான் நான் காந்தியின் இந்திய சுயராஜ்யம் நூலை ஆராய முயல்கிறேன். விரிந்த பசுமை அக்கறையுடன்  இந்திய சுயராஜ்யம் எவ்விதம் பொருந்தும் என்பதைக் காட்டுவதிலும் பசுமை ஆர்வலர்களிடையே அவர்களின் இயக்கத்தின் தன்மையிலும் பயனற்ற விவாதத்தை தவிர்ப்பதிலும் அது மாற்றத்திற்காக யுக்தியை தருவதில் எத்தகைய வாய்ப்பை அளித்துள்ளது என்பதை ஆராய முற்படுகிறேன். இதன் மூலம் பசுமை வளர்ச்சிக்காக பழைய முதல் உலகப்போரில் காலத்து குறுகிய பார்வையிலிருந்து விலகிய பொருத்தமான முன்மாதிரியை பெறமுடியும். இம்முயற்சியின் பயனாக வலிமைமிக்க மாற்றத்திற்கான சாசனத்தை வழங்குவதில் அது பசுமை இயக்கத்திற்குப் பெரிதும் உதவக்கூடும். பண்பாட்டு அக்கறை கடந்து ஒரு தீவிரமான சமூக மாற்றத்திற்கான அறைகூவலை அது ஒலிக்கும் என நம்புகிறேன்.
    இப்பெரிய பணியை தொடும் முன் பல விளக்கங்கள் தருவது அவசியமாகிறது. இந்தக் கட்டுரை பசுமை அரசியல் குறித்த பரந்த பார்வை தர முயல்கிறது. ஆனால் அதே வேளையில் ஒவ்வொரு பசுமை இயக்கமும், வேறு வேறுபட்ட செயல்திட்டங்களைக் கொண்டிருக்கும் என்பதும் உண்மையே. எனவே தத்துவம் குறித்த பல்வேறு பார்வைகள் பற்றித் தேர்வு செய்து ஆராய்வது அவசியம். பசுமை இயக்கம் குறித்த எனது விமர்சனக் கருத்துக்கள், பசுமைத் தத்துவத்தைக் கடைபிடிக்கும் அனைத்து அமைப்புகளுக்குப் பொருந்துபவையாகும் என்று கூற முடியாது.
கட்டுரையின் முதல்பகுதி இந்திய சுயராஜ்யத்தை பசுமை சிந்தனையுடன் ஆராய்கிறது. சமூகம் பற்றிய விரிவான விமர்சனம் அதன் பொன்னுலகப் பார்வை, மாற்றத்திற்கான கோட்பாடு, தத்துவங்களின் பொருத்தப்பாடு ஆகியவற்றை ஆராய்கிறது. இரண்டாவது பகுதி, பசுமைவாதிகள் இந்நூலின் ஒரு பசுமைக்கொள்கை சாசனமாக அடையாளம் காண்பதன் தேவை பற்றி ஆராய்கிறது.
   காந்தி இந்த நூலை சுமார் எண்பது  ஆண்டுகள் முன் எழுதினார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் எனவே பல நவீன உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியாலான பல விஷயங்களைப் பற்றிப் பேசுவதில்லை. எனினும் காந்தியின் இந்தப் பார்வைகளை வளர்ச்சிக்கான அக்கறை தேவை, பொருத்தம் ஆகியவற்றை நவீன வாழ்வின் நிழலில் காண்பதும், பொருத்திப் பார்ப்பதும் அவசியமாகிறது. இந்த நோக்குடனும் இக்கட்டுரை நகர்கிறது.
    முதலாவதாக காந்தியின் இந்திய சுயராஜ்யம் உண்மையான தன்னாட்சி அடைவது குறித்த அவரது ஈடுபாட்டை விளக்குகிறது. நிலவியல் வழியிலான விடுதலை என்ற கருத்தை மீறிய அவரது தன்னாட்சி பற்றிய பெருநோக்கைத் தெளிவுபடுத்துகிறது. அவர் தனது லட்சியத்தை விளக்கும் முன் சுயாட்சி என்பதற்கு முன் மாதிரிகளாக காட்டப்பட்டு வரும் பல அமைப்புகளையும், மதிப்பீடுகளையும் பற்றிய விமர்சனப்பார்வைகளை முன்வைக்கிறார்.
நாடாளுமன்றம்
அவரது முதன்மை விமர்சனப் புள்ளியாவது நாடாளுமன்ற அமைப்பு. இது மக்களுக்கு தொண்டாற்றுவதாக இல்லை என்பதே அவரது பெரும் கவலையாக உள்ளது. மக்களுக்கு தொண்டாற்றுவதற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அச்சத்துடனும், சுயலாபத்துடனும் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். நாடாளுமன்றச் செயல்பாடுகள் மக்கள் நலனை முதன்மையாகக் கொள்ளாமல் அற்பத்தனமானவற்றில் சிதறடிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தின் பயன்பாடு என்பது பொருளற்ற வெற்று விவாதங்களில் செயற்கைத்தனமான வாக்களிப்புச் சடங்கில் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு மனசாட்சியின்றி செயல்படுவதில் அழிந்து விடுகிறது. பிரதமர் மக்கள் நலன் மீது அக்கறையற்றவர் என்ற விமர்சனத்திற்கு உள்ளாகிறார். அவரது செயல்பாடுகள் தனது நலன், தான் சார்ந்த கட்சியின் நலன் எனும் எல்லைக்குள் முடங்கிப்போகிறது. அரசியல்வாதிகள் மீதான காந்தியின் விமர்சனம் கடுமையானதாக
 ‘’அவர்களுக்கு நேர்மையுமில்லை, வாழ்க்கைக்கான மனசாட்சியுமில்லை’ என்று முடிகிறது.
    பசுமைவாதிகளின் பாராளுமன்ற ஜனநாயகம் குறித்த விமர்சனமும் இத்தகையதே. அவர்களின் முதன்மையான இரு குற்றச்சாட்டுகள் ஒன்று அவர்களிடம் உறுதி செய்யப்பட்ட உண்மை ஜனநாயகம் இல்லை. மக்கள், சமூக நலனுக்கேற்றபடி கட்சிகள் செயல்படுவதில்லை. அரசியலின் இறுதி நோக்கம் என்ன என்பது பற்றி பசுமைவாதிகள் ஆழமான விமர்சனம் வைத்துள்ளனர். இக்கருத்து பெரிதும் காந்தியின் விமர்சனத்தை விடவும், அவரது நோக்கத்துடன் நெருங்கியதாக உள்ளது. அவர்களின் ஆய்வு அவரது சிந்தனையின் ஒரு பகுதிக்கு பொருந்துவதாக உள்ளது.
1.    இரண்டாம் பிரிவு விமர்சனம், காந்தி முன்வைத்த கருத்துக்கு நெருங்கியதாக உள்ளது. அரசியல்வாதிகள் கொள்கைக்கு உண்மையானவர்களாக செயல்படும் துணிவற்ற சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர்.
2. வலிமை பெற்ற அரசியல் கட்சிகள் ஊழலில் ஊறித் திளைப்பவையாக உள்ளன. அதிகாரத்தில் நாட்டம் கொண்ட அவர்கள் புதிய சிந்தனையற்றவர்களாக உள்ளனர்.
3.    அரசியல்வாதிகள் இயற்கை சூழல் குறித்த அக்கறை ஏதுமற்ற குறுமதி கொண்ட, வளர்ச்சி மோகம் கொண்டவர்களாக உள்ளார்கள்.
4.    பெரும்பாலான அரசியல்வாதிகள் மக்களின் நலனுக்காக கடினமான பிரச்சனைகளை எடுத்தாள்வதில் தீர்வு காண்பதில் புகழ் பெறுவதைவிட எளிதாக குறுக்குவழியில் புகழ்பெறுவதைவிட புகழ்பெற வகை செய்கிறது, இன்றைய அரசியல் சூழல்.
5.    நேர்மையின்மையும், மனசாட்சியின்மையும் நெருக்கமான இணைகோடுகள் என்பது காந்தியின் கணிப்பு. பசுமைவாதிகளின் நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த விமர்சனம், காந்திக்கு மிகவும் நெருங்கிய உறவு கொண்டுள்ளவை. இரண்டும் அரசியல்வாதிகள் சமுதாயத்திற்கான உண்மையான தொண்டுள்ளமற்றவர்களாக உள்ளனரே என்ற மனக்கவலையில் உருவானது.
நவீன நாகரிகம்
நாம் சந்தித்துவரும் நெருக்கடிகளின் வேர் நமது நவீன நாகரிகமே என்று அதை ஆய்வு செய்ய முற்படுகிறார். நவீன நாகரிகத்தின் மூலக்கோளாறு அதன் பொருள் நுகர்வு மோகம், பொருள் குவிப்பே போதும் என்ற மனநிறைவுதான். அதுவே நமது ஒவ்வொரு செயல்பாட்டிலும் சமூக மதிப்பீட்டிலும் பிரதிபலிக்கிறது. நவீன நாகரிகத்தின் ஒவ்வொரு பகுதியையும் இதன் அடிப்படையில் அணுகுகிறார். குறைந்த ஆடைகளுக்கு மாற்றாக, ஆடம்பர ஆடைகள், வாள், ஈட்டி, போன்றவற்றிற்கு மாற்றாக துப்பாக்கிகள், மனித உழைப்பிற்கு மாற்றாக இயந்திரங்கள் என ஏற்கனவே இயல்பாகவும் எளிமையாகவும் செயல்பட்டு வருவனவற்றிற்கு மாற்றாக சிக்கலான, செலவுமிக்க ஆடம்பரத் தொழில்நுட்ப மாற்றுகளாகத் திணிக்கப்படுகிறது.  பொருள் குவிப்பு பேராசையே மேலும் இது வளர்க்கிறது. இதனால் மதம் தேவையற்றதாக பிற்போக்குத்தனமாக ஒதுக்கப்படுகிறது. காந்தி நவீன நாகரிகத்தை ‘’பொறுமையுடன் காத்திருங்கள். அது தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்’’ என்று அதை எதிர்கொள்ளும் வழியையும் காட்டுகிறார்.
    நவீன தொழில் மய சமூகம் மீதான பசுமை விமர்சனத்தை வடிவமைக்க காந்தியின் விமர்சனம் அற்புதமான அடித்தளத்தை அமைத்து தருகிறது. அதீதப் பொருட் தேவைக்கான பொருள் வளர்ச்சிக்கான பொருளாதார வளர்ச்சியே சூழல் கேடுகளுக்கு ஆணிவேராக உள்ளது. மதம், ஆன்மிக மதிப்பீடுகள் பொருள் வெறிச் சமூகத்திற்குப் பகையானவை என்ற காந்தியின் கருத்து தனிநபரின் பேராசைப்பொருள் வெறி கொண்ட சமுதாயத்திற்கான விளக்கமாக அமைகிறது. நவீன நாகரிகம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்ற கருத்து பசுமை இலக்கியங்களிடம் பிரதிபலிக்கக் காண்கிறோம். காப்பரா ‘’அணு ஆயுத உற்பத்தியின் அபரிமிதமான செலவு, இயற்கையின் சீரழிவு, பெருகிவரும் உடல்நலக்கேடுகள், தொழில்மய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி, தீர்வு காண முடியாது திண்டாடும் அரசியல் நிலை என்பன நமது தவறான வளர்ச்சிப் போக்கிற்கு நாம் தரும் விலையாகி உள்ளன ‘’ என்கிறார்.
    இதன் பொருள் இயற்கை காவலர்களும் காந்தியும் இந்தப் பேராசைப் பொருளாதாரத்தின் பெரும் சீரழிவைக் கைகட்டி பார்த்துக்கொண்டு இரு,  தானே சரியாகட்டும் என்று காத்திருப்பதல்ல பொருள். செயலற்று பிரார்த்திப்பது, பொறுப்பை தட்டிக்கழிப்பதேயாகும். இந்த முடமாக்கும் பேராசைக்கு மாற்றாக, திட்டமிட்ட மாற்றுக்கான முயற்சியே சரியான வழிகாட்டி என்கின்றனர். அந்த நல்லுலகுக்கான வழிகாட்டலில் நவீன நாகரிகம் மீதான விமர்சனப்பார்வை முதலில் தேவை என்கிறார் காந்தி.
புகைவண்டி
    புகைவண்டியின் பங்கு பற்றி விவாதிக்கும் காந்தி ஒரு மனிதன் தனது சமூக எல்லைக்குள் நிறைவுடன் வாழ்வது நிறைவானது என்கிறார். மனிதன் உருவாக்கிக் கொண்ட இந்த போக்குவரத்து காரணமாக இயற்கையின் எல்லைகள் தகர்க்கப்படுகின்றன. இதனால் மனிதர்கள் தேவையற்ற மன உளைச்சலுக்கு மட்டுமின்றி தொற்றும் பல நோய்களைச் சுமந்து சென்று நோய் பரப்புதலுக்கும் காரணமாகிறது என்கிறார்.
    புகைவண்டி மட்டுமின்றி மிகத்துரிதமான விமானப்பயணம், மோட்டார் சைக்கிள் போன்றவற்றின் பயன்பாடும் பசுமையாளர்களின் பரிசீலனைக்குரியது. இவையாவும் மாற்றற்ற திரும்ப உருவாக்க முடியாத எரிபொருட்களின் பயன்பாட்டால் உண்டாகும். சமூக இழப்பு பற்றி காந்தி கவலை எழுப்புகிறார். கோல்ட்ஸ்மித் ‘’விரைவு பயணங்களுக்கான மனித  சாதனங்கள் நோயையும் சுமந்து சென்று விரைந்து பரப்புகின்றன ‘’ என்கிறார்.
மருத்துவர்கள்- வழக்குரைஞர்கள்
காந்தி தனது காலத்தின் மிக முக்கிய முன்னணித் தொழில்களாக இருந்த மருத்துவர் மற்றும் வழக்குரைஞர்  பணிகளின் பங்குகளையும் விமர்சனம் செய்கிறார். ‘’ வழக்குரைஞர்கள் மோதல்களை வளர்த்துத் தமது வருமானத்தைப் பெருக்கி கொள்பவர்கள் தமது வளமான வாழ்வுக்காகவும், பொய்பேசிப் பகை வளர்ப்பவர்கள், மனிதர்கள் பேசித்தீர்த்துக் கொள்ளும் எளிய விஷயங்களை வழக்காக்கி லாபம் சம்பாதிப்பவர்கள்’’ என்கிறார்.
மருத்துவம் என்பது நமது அலட்சியத்தாலும், சுகபோக கடலாலும் நாமே உருவாக்கிக் கொள்ளும் நோய்களுக்கு மருத்துவம் பார்ப்பது. செயற்கையான அதன் விளைவுகளைத் தடுத்து நிறுத்தி, ஆரோக்கியமற்ற தவறான வாழ்க்கை முறையைத் தொடரவே மருத்துவம் உதவுகிறது. இதன்மூலம் நமது உடலை கட்டுப்படுத்தி, வெல்லும் சுயக்கட்டுப்பாட்டை மருத்துவம் அழிக்கிறது.
பசுமைவாதிகள் நமது நீதித்துறையின் செயல்பாடுகள் மீது இதே வகையான விமர்சனம் கொண்டவரே. வழக்குகளுக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பது உன்னதம். மருத்துவம் பற்றிய காந்தியின் கருத்துடன் ஒப்புதல் உள்ளவர்களே பசுமைவாதிகள். மருத்துவம் நோயினை உண்டாக்கும் அடிப்படைக்காரணியை நீக்குவதே அன்றி நோயைக் குறைக்க மருந்து தருவது மட்டுமல்ல. எனவே மாசுபடுத்தும் கழிவுகள், நீக்குதல், ஆரோக்கியம் தரும் நச்சற்ற உணவு தருவது, நோய்கள் அனைத்தின் பிறப்பிடமான வறுமையைப் போக்குதல் (சத்துக்குறைவு, நீர்வழி நோய்கள், வாழ்விட, வாழ்வுமுறை நோய்கள்)

நாகரிகம்
    நாகரிகம் என்பது என்ன என்பது பற்றிய விமர்சனப் பார்வை கொண்டுள்ளார் காந்தி. உண்மை நாகரிகம் தொன்மை பண்பாடு, வாழ்வுமுறை பற்றி காந்தி விளக்குகிறார். அது உண்மையான எளிமை, பொருள்வெறி வாழ்வுமுறைக்கு எதிர்ப்பு ஆகியவையே. முற்போக்கான நவீன நாகரிகம் பற்றி காந்தி விளக்குகிறார். மனிதனின் மனநிறைவை பொருட்களின் குவிப்பால் உருவாக்கிவிட முடியாது. அதை வழங்கும் அடிப்படை கொண்ட தொழில்நுட்ப வளர்ச்சி தேவை. பொருள் குவிப்பு வெறி பற்றிய நாட்டமில்லா வாழ்வில், கழுத்தறுக்கும் போட்டிகள் இல்லை. அதுதானே இன்றைய தொழில்மய வளர்ச்சி உலகில் எங்கும் காண்பது! மக்கள் தமக்கு உண்டான வகையில் தொழில் புரிந்து மனநிறைவுடன் வாழ்வதால் முரண்பாடுகள், மோதல்கள் இல்லை. இயந்திரங்கள் அற வேர்களை அறவே அறுத்துவிடுகின்றன.
    கிராம வாழ்வே இத்தகைய இயைந்த வாழ்வின் அடிப்படையாகிறது. நகரங்கள் முரண்பாடுகளின் திரட்டு. யாரைப் பற்றியும் யாரும் கவலைப்படாத சமூகம் அது. குற்றங்கள், களவு, விபச்சாரம், என்பன ஏழ்மை, வறுமையுடன் பிணைக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் ஒருவரின் பணி என்ன என்பது மற்றவர்களுக்கு தெரியும். அவர்கள் தகுதிக்கு மீறியதை எவருக்கும் செய்துவிட முடியாது. காந்தி இந்த வாழ்வுமுறை கொண்ட சமூக அமைப்பே தன்னாட்சியை அனுபவித்து வாழ்வதற்கான தகுதி பெற்றதென்கிறார்.
கிராமவாழ்வு
    காந்தியின் கிராமப்புற வாழ்வு குறித்த மதிப்பு, பசுமைவாதிகளிடம் உண்டு. அதைப் பசுமை சமூகப் பார்வை என்கின்றனர். இத்தகைய சமுதாயத்தில் மனநிறைவு கொண்ட உறவுகள் பொருள் வெறியும், தன்னலமும் கொண்ட சமுதாயத்தை வென்று மகிழ்வு தரும். இத்தகைய பொருள் வெறியற்ற சமூகத்தில் எளிய, சிறிய தொழில் நுட்பங்கள் மேற்கொள்ளப்படும். மக்கள் சுயநிறைவு கொண்ட உற்பத்தியாளர்களாவர். இவர்களின் சுற்றுச்சூழல் இயற்கை நலப் பார்வை கொண்ட உற்பத்தி, நுகர்வு முறையே இதற்கு காரணம். உழைப்பு என்பது தன்னிறைவு பெறுவதற்கான முயற்சி மட்டுமே. சொத்து குவிப்பதற்கல்ல. சமூக உறவைப் பலப்படுத்தவே உற்பத்தி, வணிகம், தொழில் என அனைத்தும் அமைய வேண்டும்.
    மையமற்ற பரவலான சமூகம்தான் காந்தியின் கிராமம். அதுவே பசுமை விதி. அத்தகைய சமூகம் சுயநிறைவுடன் உழைப்பிற்கான அனைத்து வசதிகளுடனும் சமூக பண்பாட்டு வளர்ச்சிக்கான உணவுத் தன்னிறைவு பெறுவதற்கான நிலம், உற்பத்திமுறை கொண்டதாக இருக்கும்.
    இத்தகைய வாழ்வுமுறை பல்வேறு காரணங்களுக்காக மதிப்புமிக்கதாகப் போற்றப்படும். தன்னிறைவு பெற்ற பெரிய சமூகத்தில் , உற்பத்தியும் நுகர்வும் இணையாக அமையும். தேவைக்கேற்ற உற்பத்தி, பொருட்கள் கொண்டு செல்லல், ஏற்றல், இறக்கல், சந்தைப்படுத்தல், லாபம் எனும் சிக்கல்கள் தவிர்க்கப் படுகின்றன. ஒரு பயன்மிக்க பொருளாதாரத் திட்டமிடல் சாத்தியமாகிறது.
    இத்தகைய சிறிய சமூகத்தில் மக்கள் சந்திப்பு, பகிர்வு இயல்பாகிறது, எளிதாகிறது, மகிழ்வாகிறது. மக்களின் நலனே முதன்மை கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. குறுகிய தன்னலம் அடிபட்டுப்போகிறது. தனிப்பட்ட நபர்களின் வசதியைவிட சமூக நலன் முதன்மை பெறுகிறது. இதனால் நேரிடையான மக்கள் ஜனநாயகம் மலர்கிறது. முடிவெடுப்பதில் மக்கள் நலன் முதலாகிறது. சமூக நலன் கொண்ட அலகில் தானும் ஒருவர் எனும் மனநிறைவு பெற்றவராக சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவராக உணராத நிலை உருவாகிறது. மையப்படுத்தப்படாத சமூகம், உள்ளூர்ப் பிரச்சனைகளைச் சிறப்பாக எதிர்கொள்ளும் திறன் பெறுகிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எளிதாகிறது. மையப்படுத்தப்பட்ட பெரிய சமுதாய அமைப்பில் முடிவெடுப்பது கடினம். நடைமுறைப்படுத்துவது நீர்த்துப்போகும் வாய்ப்புண்டு.
நகரமயமாதல்
    பசுமையாளர்களிடையே நகர்மயமாதல் குறித்த ஒத்த கருத்து இல்லை. உற்பத்திப் பெருக்கம், கலை, பண்பாடு வளர்ப்பு இவற்றை மையப்படுத்திய நகர்ப்புற அமைப்பில் உருவாக்குவதும், வளர்ப்பதும் எளிது என்ற கருத்து ஒரு புறம் உள்ளது. மறுபுறம் இது செயற்கைத்தனமான தொழில்மயத்தை வளர்க்கிறது. கட்டுப்பாடற்ற ஒழுக்கமற்ற, குற்றங்கள் மலிந்த தனித்தன்மையற்ற சமூக நெருக்கடிகள் நிறைந்த கூட்டத்தை வளர்க்கிறது. நகரங்கள் விரிந்து பரந்தன. தனிக்கவனமற்றவை. அரசியல், பொருளாதார வலிமை சிலர் கைகளில் குவியச் செய்வது. எனவே நகர்ப்புறங்களில் எப்படி பசுமை சிந்தனைக்குழுக்கள் தப்பி வாழ முடியும்? எனவே உண்மையான தன்னாட்சி கொண்ட சமூகம் என்பது மையப்படுத்தல் மறுத்த கிராம வாழ்க்கையிலேயே பெற முடியும் என்ற காந்தியின் முடிவு பசுமைவாதிகள் ஏற்கக் கூடியதாகிறது.
கல்வி, இயந்திரங்கள்
இந்திய சுயராஜ்யம் நூலில் காந்தி தனது லட்சிய சமூகம் பற்றிய ஆய்வை கல்வி, இயந்திரம் எனும் இரு முக்கிய அமைப்புகள் மூலம் மேற்கொள்கிறார். தனது சுயராஜ்யத்தில் அவை எத்தகைய மாற்றங்களைப்பெறும் என்பதை விளக்குகிறார். ஆங்கிலக் கல்வி குறித்த அவரது முடிவு மட்டுமின்றி, கலை, அறிவியல் போன்றவையும் கூட முக்கியத்துவமற்றவைகளாக உள்ளன. பண்பாட்டுக் கல்வி புறந்தள்ளப்படுவதன் விளைவாக மதம், அறநெறி, விழுமியம் சார்ந்த கல்வி முக்கியத்துவம் பெறுவதில்லை. இன்றைய கல்விமுறை செயற்கைத்தனமான அறிவு, அழுத்தம் மூலம் சிந்தனையை முடமாக்குகிறது என்பதில் காந்தியும், பசுமையாளர்களும் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். தனிமனித மாண்பு வளர்ப்பு, சேவை மனப்பான்மை, தத்துவச்சிந்தனை, தொன்மை, ஞானம் போற்றுதல் போன்றவற்றை வளர்த்தும் கல்வியை முன்மொழிகின்றனர்.
    இயந்திரங்கள் மீதான காந்தியின் தாக்குதல் கடுமையானது. தொழிற்சாலைப் பெருக்கம் அறநெறி அழித்து, பணம் சிலர் கைகளில் குவியவும், ஒழுக்கம் சிதையவும் வழிவகுக்கிறது. அறச்சிதைவு இயந்திரமய உலகில் தவிர்க்க முடியாததாகிறது. மாற்றம் எளிதானதல்ல. தொழிற்சாலை உற்பத்திகளை மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினால் இது மெல்ல ஈடேறும். இயந்திரத்தின் அசுரத்தன்மையை உணரத்தொடங்கிவிட்டால் அதன் வீழ்ச்சி நிகழ்ந்தே தீரும்.
    பசுமை இயக்கமும், இயந்திரத்தின் வளர்ச்சி கிராம சமுதாயத்தையும், அதன் பண்பாட்டையும் அழிப்பதை விமர்சிக்கிறது. ஆனால் காந்தி போல் முழுமையான தொழில்நுட்பம் இயல்பாகவே மோசம் என்று ஒதுக்கவில்லை. அதன் கேடு என்பது தொழிலாளரை வஞ்சிப்பதும், இயற்கையைச் சுரண்டுவதுமே. எனவே ஒவ்வொரு இயந்திரப்பயன்பாடு குறித்தும் பொதுவாக முடிவு செய்யாமல், தனித்தனியாக அளவிட்டு முடிவெடுக்க வேண்டும் என்கின்றனர்.  சமூக, சூழல் கேடுகளை நீக்க முடியுமானால், மாசுபடுத்தலுக்கான வரி, போன்றவற்றால் தொழில்நுட்பத்தை சீர்படுத்த முடியும். நீடித்து உழைக்கும் சீர்படுத்திப் பயன்படுத்த இயலும். மறு பயன்பாட்டிற்குரிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம் என்பது பசுமையாளர்களின் நிலைப்பாடு.
    இந்நிலைப்பாடு இயந்திரங்களை முற்றாக மறுக்கும் காந்தியின் தத்துவத்தை மறுப்பதாக விமர்சன அணுகுமுறையை வேண்டுவதாக உள்ளது. பசுமை சமுதாயத்தில் சிறிய நடுத்தர இயந்திரப் பயன்பாடு தொடர்ந்து தேவைப்படுகிறது. படிப்படியான இயந்திரங்களின் ஒதுக்கலுக்கு அது வழிவகுக்கும். இயந்திரப் பயன்பாடு தொடருமானால், கேடு விளைவிக்கும் மாற்றத்திற்கு உட்படும் வாய்ப்பும் உள்ளது. பசுமைப் பார்வையும் புரட்சிகர நலவாழ்வு அணுகுமுறையும் மாற்றத்திற்குத் தேவைப்படுகிறது.
அகிம்சை
    இத்தகைய சமூகத்திற்கான வழிமுறையை விவாதிக்கும் காந்தி அதற்கான வன்முறை தவிர்த்த அகிம்சை எதிர்ப்பு முறையை முன்னிறுத்துகிறார். இதற்கான வழிமுறைகளை விளக்கும் முன், அகிம்சையின் தத்துவப் பின்னணியினை விளக்குகிறார். முடிவு மட்டுமல்ல, அதை அடைவதற்கான பாதை இரண்டும் தவிர்க்கமுடியாதபடி ஒன்றுடன் ஒன்று பிணைந்தன . நல்ல அமைதியான மாற்றத்தை வன்முறையால் பெற்றுவிடமுடியாது. ஒரு திருடன் ஆயுதத்துடன் வீட்டினுள் நுழையும்போது, அவனை வன்முறையால் பிடித்து, அடித்து துன்புறுத்துவது வெறுப்பையும், வன்முறையையுமே வளர்க்கிறது. மாறாக புரிதல் வளர்ப்பு மூலம் அனுகூலமான நல்ல விளைவு உருவாகக் கூடும்.
    காந்தி தனிநபர் மனமாற்றமே சமூக மாற்றத்தின் மையப்புள்ளி என்கிறார். நாகரிக வலைச் சிக்கலிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதே மாற்றங்களின் தொடக்கம். மூழ்கிக் கொண்டிருப்பவன் மற்றவனைக் காப்பாற்ற முடியாது. அடிமைப்பட்டிருக்கும் ஒருவன், மற்றொரு விலங்கிடப்பட்டவனை விடுவிப்பது எப்படி? இதுவே காந்தியின் முதன்மையான யுக்தி. சத்தியாகிரகம், அமைதி எதிர்ப்பு, சுய துயராற்றல் உணர்வை வளர்ப்பது. அற வழியற்ற கொடும் சட்டத்தை எதிர்க்கும் அமைதி வழியே அகிம்சை. நவீன, நாகரிக விலங்குகளிலிருந்து விடுபட இதுவே வழி. அமைதி வழி எதிர்ப்பு என்பது பெருமளவில் பயன்படுத்தப்படுமானால் மக்கள் நம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை எத்தகைய வலிமையான அரசும் வன்முறையால் நிலைநாட்டிவிட முடியாது.
இந்த யுக்தி வழியான மாற்றத்திற்கு தனிநபரின் முழுமையான அர்ப்பணிப்பு அவசியமென்றார் காந்தி. வெறும் பேச்சு மட்டும் போதாது. சத்தியாகிரகி தனது அர்ப்பணிப்பை உணர்ந்தும், சிறப்பான யுக்திகளைக் கடைபிடிக்கவும், தன்னை விடுவித்துக்கொள்ளத் துயரங்களை ஏற்றுக்கொள்ளும் மனவலிமை பெறவும் வேண்டும். தனக்கு எவ்வித ஆதரவும் இல்லாத நிலையிலும் தனது அறப்போராட்டத்தை தனித்து நடத்தும் துணிவு வேண்டும். தமது உறுதியான கடைபிடிப்பின்  மூலமே அவர்கள் பிறரைத் தம் வழியில் ஈர்க்க முடியும். தனிநபரின் சத்யாகிரகத்தின் தன்மை மற்றும் பங்கு குறித்த கருத்து விவாதத்திற்கு உரியதாகவே உள்ளது. ஆழ்ந்த சூழலியல் மாயத்தன்மை, தனிநபரிடம் உருவாக்கும் மாற்றம் அவர்களின் இயற்கை மீதான ஆன்மிக உறவு  சார்ந்தது. இந்த கருத்துப் பாதை ஒரு மாற்று சமூக அமைப்பு. இன்றைய சமூக அமைப்பிலிருந்து விலகி, மனிதன் தன்னை இந்த பூமியுடன் ஒன்றுபட்டு இணைந்தவனாக உணர்வதில்தான் உருவாக முடியும்.



அரசியல்வாதிகளும், சோசலிசவாதிகளும்
இந்நிலைப்பாட்டை அரசியல் சூழல்வாதிகள் கோழைத்தனமானது அடித்தள ஜனநாயக செயல்பாட்டிற்கு உதவாது என கடுமையாக எதிர்க்கின்றனர். சோசலிச சூழல்வாதிகள் புதிய நாகரிகத்தின்  பிரச்சனைகள், சமூக உறவுகள் மூலமாக கிளைத்து எழுவனவே அன்றி இயற்கையிலிருந்து விலகும் ஆன்மிகத் தனிமைப்படுதலால் உண்டாவதில்லை என்கின்றனர். இவர்கள் இருவருமே தனிநபர் மாற்றம் என்பது மாற்றுப் பொருளாதார அமைப்பை, சமூக ஒத்துழைப்புடன் பலப்படுத்துவதிலேயே அமைக்க முடியும் என நம்புகின்றனர். இந்த மாற்றுப் பொருளாதாரம் இளக்கமான வேலை நேரமாற்றம், தற்சார்பு உருவாவதற்கான  பெரும் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு தூண்டுகோலாக அமைந்து, மக்களை பெருவாரியான இன்றைய பொருளாதார போக்கிலிருந்து விலகி புதுவழி காணத்தூண்டும் என்கின்றனர்.
    இந்த விவாதம் பசுமை இயக்கத்தினுள் இருக்கும் பல்வேறு போக்குகளின் அறிகுறியே. இதில் இரண்டு விஷயங்கள் பசுமை இயக்கத்தின் எதிர்காலம் குறித்து நிர்ணயிக்கக் கூடியன. வளர்ந்த நாடுகளில் உள்ள பலவகை பசுமையாளர்களிடையே நிலவும் நிதானச் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாக உள்ளது. அறிவுசார்ந்த விவாதத்தில் நீண்ட காலம் வீணடிக்கப்பட்டுள்ளது. எது மனித இயல்பின் முக்கியம் என்பது குறித்த நீண்ட சலிப்பூட்டும் விவாதம் நடைபெறுகிறது. அது தேவையற்றது என்பதுடன் இயக்கத்தை பிளவுபடுத்துவதாக உள்ளது. பெரும் சமூக மாற்றத்திற்கான ஒற்றுமையைக் குலைக்கிறது.
    இரண்டாவதாக இந்த விவாதம் பெருந்திரளாக மத்தியதர வர்க்கத்தை அலட்சியப்படுத்துகிறது. முதல் உலக சிந்தனைப் போக்குதான் பெரிதும் பசுமை இயக்கச் செயல்பாட்டை நிர்ணயிக்கிறது. வளரும் நாடுகளின் பசுமைவாதிகள், பெரும் நேரமெடுக்கும் ஆய்வு விவாதங்களில் ஈடுபடும் வாய்ப்பளிக்க முடியாதவனவாக உள்ளன. பெரும்பாலானோர் தம்மை பசுமை இயக்கத்துடன் இணைத்து அடையாளம் காண விரும்புவதில்லை. அவர்களின் சூழல் ஆர்வம், யார் மூலவளங்களின் ஆதிக்கத்தைக் கையில் வைத்துள்ளார்கள் என்பதில் ஆர்வம் காட்டுபவர்களாகவும், இயற்கைப் பாதுகாப்பு உள்ளார்ந்த நன்மை தருவது எனக் கருதிப் பாதுகாப்பவர்களாக இல்லை. அவர்களைப் பொறுத்தவரை மேலைநாடுகளின் பசுமை இயக்கங்கள் தேவையற்றவற்றில் தம் கவனத்தை சிதறடித்துக் கொண்டுள்ளன எனக் கருதுகின்றனர். இந்த இடைவெளியை நிரவிப் பொதுப்பாதை அமைப்பது வளர்ந்த, வளரும் நாடுகளின் பசுமை இயக்கங்களின் கடமையாகும்.
    சுற்றுச்சூழல் சார்ந்த பின்விளைவுகளே வளரும் நாடுகளின் வளர்ச்சி சார்ந்த பெரும் சவால். விரைவுத் தொழில்மயம், மிகைப்பொருளாதாரம் வேண்டும் வளரும் நாடுகள் பசுமைத் தொழில்நுட்பம் , ஆற்றல் சிக்கனப் பயன்பாட்டு முறை, குறைவான இயற்கைச் சூழல் பாதிப்பு ஆகியன பற்றி சிந்திக்க வேண்டும்.  எனினும் இந்த நுட்பங்கள் அதி வேகமான சமூக பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்து விடுவதில்லை. இவை மறுக்கும்போது பேரழிவு தவிர்க்க முடியாததாகிறது. இன்றைய வளர்ச்சி போக்கை வழி நடத்துவதில் பசுமைவாதிகளுக்கு மகத்தான பங்கு உள்ளது. அவர்கள் தமது பணியை சிறப்பாகவும், பயனுள்ள வகையிலும் செய்து முடிப்பதில் பல தடைகளும் உள்ளன. வளர்ச்சி என்பது மேலைச் சிந்தனை, அறிவியலின் வழிகாட்டுதலில், மத்தியதர வர்க்க ஆசைகளுக்கு இரை போடும் வகையில் வளர்ச்சி உள்ளவரை அதைச் சிறப்பாகச் செய்ய முடியாது.
    இந்நிலையில்தான் காந்தியின் இந்தியத் தன்னாட்சி நூல் பசுமை வாதிகளுக்குத் துணிவான வழிகாட்டும், மிக முக்கியத்துவம் கொண்ட நூலாக உள்ளது. இந்த நூல் நவீன பசுமையாளர்களின் ஆழ்ந்த அக்கறை, கவலை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது. உண்மையில் இந்நூல் விடுதலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தடுமாற்றமான சூழலில், சரியான திசைகாட்டலுக்கென எழுதப்பட்டது. ஆனால் இதில் விவாதிக்கப்பட்டுள்ள தலைப்புகள் அன்றைய உடனடிச்சூழலை மனதில் கொண்டிருந்த போதிலும், இன்றைய நவீன மேற்கத்திய பசுமை இயக்கங்களுக்கும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.
பசுமை மயவாதிகளும் பசுமை அரசியல்வாதிகளும்
    அதே வேளையில் வளரும் நாடுகளின் வளர்ச்சி குறித்த தடுமாற்றம், தேடலுக்கு வளரும், வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு வழிகாட்டி உதவுவதாக இந்திய விடுதலை காலத்தின் மகத்தான முக்கியத்துவம் பெற்ற இந்நூல் இன்று வழிகாட்டி உதவுகிறது.  நவீன வளர்ச்சிப்பாதையில் நடைபோடத்தொடங்கும் இளம் நாடுகளின் நேரடி அனுபவத்தைப் பெற்று, அதற்கு மாற்றாக பாரம்பரியம், மையம் ஒழித்த வாழ்வு, வளர்ச்சி முறையின் அவசியத்தையும், பயன்பாட்டையும் இந்நூல் உணர்த்துகிறது. இதை மேலைச் சிந்தனையாளர்களும், படைப்பாளிகளும் பயன்படுத்த முடியும். மேலும் இந்நூல் மாற்றத்திற்கான யுக்திகள், பசுமையாளர்களிடையே உள்ள பிரிவினைகள், தடைகள் போக்கவும் உதவக்கூடும். இது பசுமை மயவாதிகள், பசுமை அரசியல்வாதிகள் என இருவரையும் இணைக்கும் கூறுகள் இதில் உண்டு. காந்தியின் ஆன்மிக எழுச்சி மனநிறைவு பெற்ற பேராசையற்ற சமூகம் என்பன பசுமை மயாவாதிகளின் நம்பிக்கைகளை, கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது. அதே வேளையில் சத்தியாகிரகம் தன்னாட்சிக்கான தளர்வற்ற தொடர்போராட்டம், பசுமை அரசியல்வாதிகளின் அடித்தள ஜனநாயகம் மிக்க சமுதாயம் உருவாக்கத்திற்கு துணைபுரிவதாகவும் உள்ளது. பசுமை கருத்தேட்டங்களின் சங்கமமாக இந்திய சுயராஜ்யம் பண்பாட்டு வேறுபாடுகள் கடந்து இணைக்கிறது. வளர்ச்சி குறைந்த நாடுகளின் தேவைக்கேற்ற, பொருத்தமான, இணைப்பு அறைகூவலாக, பிற எந்தப் பசுமையாளரும் செய்யமுடியாத அரும்பணியை இந்நூல் நிறைவேற்றுகிறது.
பசுமை சாசனம்
    இந்நூல் மாற்றத்திற்கான பசுமை சாசனமாக பசுமையாளர்களின் உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாக, நாடுகடந்த பண்பாட்டுப் பிரிவினைகளை, எல்லைகளைக் கடந்து, பசுமை இயக்கங்களின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக அமைகிறது.
    காந்தி தமது கொள்கையை ஏற்போர் இவ்வழியில் செயல்படத் தொடங்கும்போது, அவர்களைப் பார்த்துப் பிறரும் இதைப் பின்பற்றத் தொடங்குவார்கள் என்று நம்பிக்கையுடன் இந்நூலின் இறுதியில் கூறுகிறார்.








கருத்துகள்