நினைவில் இரண்டு தலைமுறையின் டிக்.. டிக்..டிக் ஒலி

நினைவுக்குறிப்புகள்

நினைவில் இரண்டு தலைமுறையின் டிக்.. டிக்..டிக் ஒலி
                           டான்ஜூவான் ப்ரூட்

            இந்திய மக்களின் நாடித்துடிப்பாக நகர்ந்துகொண்டிருந்த ஹெச்எம்டி வாட்ச் தொழிற்சாலைகள்  தொடர்ந்த வருவாய் இழப்பினால் மூடப்பட்டுவிட்டன. நமது மூத்த தலைமுறையின் கையில் இனி அவை இழந்துவிட்ட வாழ்வின், அணியப்பட்ட தருணத்தின் மகிழ்வான பொழுதுகளை நினைவுபடுத்தியபடி இருக்கும்.
            1960 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டு நம் முந்தைய இரு தலைமுறைகளின் கைகளில் அணியப்பட்ட கைகடிகாரம் என்றால் நினைவுக்கு வருவது ஹெச்எம்டி நிறுவனத்தின் கடிகாரங்கள்தான்.  பல வெளிநாட்டு வாட்ச் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வாட்ச் நிறுவனங்களின் கடும் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் 2000 ஆண்டிலிருந்து ஹெச்எம்டி நிறுவனம் இழப்பை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டது.
            கைகடிகாரங்கள் என்பது இன்றுமே எனக்கு ஒரு பெரிய ஆச்சர்யத்தையும், அற்புதத்தையும் ஒருசேர மனதில் ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. நாளிதழில் கைகடிகாரங்களின் படங்களைப் பார்த்தாலும் உட்புற டயல், வடிவமைப்பு, நீர் உள்ளே புகாத வசதி என்று திருப்பித்திருப்பி பார்ப்பேன். பெரும் வசியத்தில் ஆட்பட்டது போல கைகடிகாரங்கள் மட்டுமல்லாமல் சுவர்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றின் எண்கள் நொடிமுட்கள் மீது பெரும் ஆர்வமும் அவற்றை நின்று நிதானமாக பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் இன்றும் குறையாது இருக்கிறது. பேருந்தில் செல்லும் போது நான் ஏறுகின்ற, பயணிக்கிற பயணிகளின் கைகளை பார்ப்பேன்.

            இன்று டைட்டன் மட்டுமல்லாது பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் பல கடிகாரங்கள் பெரும்பாலான இந்தியர்களின்  மணிக்கட்டை அலங்கரிக்கிறது என்றாலும் 1960 களில் கைகடிகாரங்கள் என்றால் அது அரசு நிறுவனமான ஹெச்எம்டி என்ற நிறுவனத்தின் கடிகாரங்களாகவே பொருள் கொள்ளப்பட்டன. இன்றைய காலத்தில் கைகடிகாரங்களில் டைட்டன் பாஸ்டிராக், சிட்டிசன், கேஸியோ, ஒமேகா, கார்டியர், ரோலக்ஸ் என பல்வேறு உள்நாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. ஆனால் இவற்றை வாங்கி பரிசளிப்பது என்பது குறித்த ஒரு பரவசம் நம் மனதில் வசப்படவில்லை ஏன் என்று யோசித்தோம் என்றால் அரிதான நாம் விரும்பியதான  தரம், மதிப்பு இன்றிருக்கும் பொருட்களில் இல்லை என்று ஆகிவிட்ட காலச்சூழ்நிலை காரணமாக இருக்கலாம். பல வாய்ப்புகள் இருக்கும் நிலையில் நம் மனம் எதிலும் நிலைகொள்வதில்லை.

            ஹெச்எம்டி நிறுவனம் மூடப்படும் நிலை பற்றிக்கேட்டதும் கடுமையான குற்றவுணர்வுக்கு ஆட்பட்டேன். இன்று என்னிடமிருக்கும் இரு கடிகாரங்களும் ஒன்று டைட்டன் பாஸ்டிராக்கும், மற்றொன்று சொனாடா ஃபைபர் ஆகும். ஒரு கைகடிகாரத்தைக் கூட ஹெச்எம்டியில் வாங்கவில்லை என்று வருத்தினேன் என்றாலும் பின்னார் அப்பாவிடம் கேட்டபோது, அவர் அலமாரியைத் திறந்து தான் வாங்கிய ஹெச்எம்டி கடிகாரத்தை வெளியே எடுத்தார். சாவி கொடுத்தால் ஓடும் கடிகாரம். மெல்லத்திருகினார் அதன் சாவியை. இன்றும் தடையற ஓடுகிறது. அப்பாவுக்கு முகம் பூத்திருந்தது. எனக்கு மனம் அப்போதுதான் ஆசுவாசமடைந்தது. நம் அப்பாக்களுக்கு அவர்களுடைய முந்தைய தலைமுறையினரின் அன்பளிப்பாக வழங்கப்படுவது ஹெச்எம்டி கடிகாரமாகத்தான் இருந்திருக்கிறது.
            ஹெச்எம்டி கடிகாரங்கள் அஜித், சுதீப், சோனா, விஜய் எனும் பெயரில் பல்வேறு வடிவமைப்புகளில் விற்கப்பட்டன. அழகை விட அதன் இயந்திர இயக்கம் மிக கச்சிதமாக இருக்கும். கடிகாரங்களிலேயே நம்பகத்தன்மைகொண்ட கடிகாரம், சிறந்த பராமரிப்பு சேவை வழங்கும் ஒரு நிறுவனமாகவும் இருந்தது ஹெச்எம்டிதான்.
            ஹெச்எம்டியின் வருமான இழப்பு குவார்ட்ஸ் கடிகாரங்கள் தயாரிக்காமல் விட்டதில் இருந்து தொடங்குகிறது. அப்போது சந்தையில் டைட்டன் தன் குவார்ட்ஸ் கடிகாரங்களை தயாரித்து விற்று வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்க்கத்தொடங்கியது. அதோடு ஹெச்எம்டி கடிகாரங்களின் விலைகள் விளம்பரத்தில் வெளியிடப் படவில்லை.
            இன்று தொழிற்சாலைகள் மூடப்படும் நேரத்தில் ஒரு நினைவுச்சின்னமாக ஹெச்எம்டி கடிகாரங்களை பாதுகாக்க பலரும் முயற்சிக்கின்றனர். 1,200 ரூபாய் விலையுள்ள கடிகாரம் 8,000 ரூபாய் விலைக்கு பல இணையதளங்களில் விற்கப்படுகின்றன. நவீன தொழிற்நுட்பங்கள் கொண்ட கடிகாரங்கள் வருகையில் நம் முந்தைய தலைமுறையினரின் உள்ளங்கை நேச வெம்மையை இக்கடிகாரங்கள் மணிக்கட்டில் பிணைந்திருக்கும்போது உணரமுடிவதுதான் இன்று  யாரும் வாங்க விரும்பாத இக்கடிகாரங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட காரணமா? உண்மையில் கடிகாரங்கள் மணி பார்க்க மட்டும்தானா என்ன?

            தோற்றமும், முடிவும் தீர்மானிக்கப்பட்டவை என்றாலும் அரசு நிறுவனங்களைப் பொறுத்தவரை வீழ்ச்சி என்பது நேர்மையற்ற அதிகாரிகளால் தீர்மானகரமான திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அஞ்சல் துறையில் தந்தி சேவை நிறுத்தப்பட்டபோது, நிறைவடையும் நாள் அதிகளவு தந்திகள் பலருக்கும் அனுப்பப்பட்டன. இன்று ஹெச்எம்டி கடிகாரங்கள் வாங்க கூட்டமாய் அலைமோதுகிறோம். தரத்தை உத்தேசித்து கூட பொதுத்துறை நிறுவனங்களின் பொருட்களை வாங்கி வந்தால் அவை மூடப்படும் நாட்களை தள்ளிப்போட முடியும். சுதேசி, விதேசி வாதங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பொருட்களின் தரம், திருப்தி ஆகியவற்றை பொறுத்தும் கூட பல நல்ல விஷயங்களை அரசு நிறுவனங்களில் தேடிப்பெற முயற்சித்தால் அவற்றை நம் அடுத்த தலைமுறை முற்றிலும் இழப்பதிலிருந்து தடுக்கமுடியும் தோழர்களே! மிகச்சிறந்த எதையும் அடுத்தவருக்கு பரிசளிப்பதில் மகத்தான மகிழ்ச்சி இருக்கிறதுதானே!
           



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்