வண்ணத்தால் நீர்த்துப்போகும் மக்களின் வாழ்வு


வண்ணத்தால் நீர்த்துப்போகும் மக்களின் வாழ்வு
                   அருண் நல்லதம்பி
        மஞ்சள், துணிகள், மக்களின் விருந்தோம்பல் என்று பலவகைகளில் பெரும் புகழ்பெற்றது ஈரோடு மாவட்டம். செய்யும் தொழில் என்பது தனக்கு தரும் பயன்களை விடவும் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கணக்கிலெடுத்து செயல்பட்டது முன்னோர்களின் காலமாகிவிட்டது. இன்று பெருகிவரும் உலகமயமாதல் சூழல், தாராளமயக்கொள்கை என பல்வேறு நாடுகள் தொழிற்சாலைகளின் கழிவுகளை இயற்கையை பாதிக்காமல் அழிப்பது குறித்து சிந்தித்து வருகின்றனர். ஆனால் கிடைக்கும் வருவாய் இயற்கையை குறித்து மட்டுமல்ல தன் சக மனிதர்கள் குறித்தும் சிந்திக்க இடம் தர மறுத்து எஜமானனாகிவிடும் போது, நம் நிலைதான் என்ன?
வியாபாரத்தில் கெட்டி! மக்கள் நலத்தில்?
            ஈரோடு மாவட்டத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. துணிகளுக்கு சாயம் ஏற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சாயத்தொழிற்சாலைகள் பலவும் அரசின் ஒழுங்குமுறைக்குப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று முறையாக கழிவுகளை சுத்திகரிக்காது செயல்புரியாமல் கழிவுகளை ஆற்றில் கலப்பதால் நதி மாசுபடுவதோடு இல்லாமல் மண்படுகைகளின் வழியே உள்ளிறங்கும் கழிவுநீர் பல பகுதிகளின் குடிநீர் ஆதாரங்களையும் விஷமாக்கிவிடுகிறது. விவசாயம் செய்யும் நிலங்களில் வேதிப்பொருட்கள் கொண்ட நீர் பாயும்போது நிலங்கள் தம் இயல்பை இழந்து சாகுபடி செய்யமுடியாத தரிசு நிலங்களாக மாறுகின்றன.
நடவடிக்கைகள் ஏன் இல்லை?
            முக்கியமான எதிர்கட்சி, ஆளும் கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள்தான் இத்தகைய சாயப்பட்டறைகளை நடத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் என்பதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அளிக்கும் புகார் என்பது  கட்டுப்பாட்டு அதிகாரிகள் அப்பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடமிருந்து  கணிசமான தொகை பெற்றுத்தரும்  வருமான வாய்பை அளிக்கிறீர்கள் என்பதே உண்மை.
            சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு கல்வி கடன் பெற்று தந்த மாவட்ட ஆட்சியர் கூட விவசாய நிலங்கள் சாயப்பட்டறை நீரினால் பாதிக்கப்படுகிறது என்று விவசாயிகள் பலரும் மனு கொடுத்து பேசியபோது, ‘’ என்னால் ஆலையை இன்று மூட முடியும். ஆனால் நாளை அவர்கள் திறந்து விடுவார்கள் என்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான் ’’  என்று கூறும் அளவு தொழிலதிபர்களின் செல்வாக்கு, அதிகாரம் கோலோச்சுகிறது என்றால் வேறென்ன சொல்ல இருக்கிறது?
            அரசு சில மாதங்களுக்கு முன்பு காலிங்கராயன் வாய்க்காலின் அருகிலே கழிவு நீரை விட பேபி கால்வாய் என்ற அமைப்பை விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று அமைத்தார்கள் என்றாலும் அதற்கு எந்த பலனும் இல்லை. கழிவு என்றாலும் அது திரவ வடிவில் இருப்பதால் மண்ணை ஊடுருவி மக்களின் குடிநீர் ஆதாரத்தில் கலக்க அதிக காலம் ஆகவில்லை. மேலோட்டமான அரசின் இதுபோன்ற திட்டங்கள் எள்ளளவும் மக்களுக்கு பயன்படபோவதில்லை. ஓரத்துபாளையத்தின் அணைநீர் முழுக்க சாயக்கழிவுகள் கொண்டதுதான். அந்நீரை விவசாய நிலத்திற்கான நீரோடு திறந்துவிட்டு பல ஏக்கர் நிலங்கள் தரிசு நிலங்களாகி போயின.
நொய்யல் நதி கரைந்துபோன அவலம்
            சாயநீர் கழிவுகளால் முழுக்க பாதிக்கப்பட்டுப்போன ஆறு என்றால் அதற்கு நொய்யலை முழுமையாக கைகாட்டிவிடலாம். நதி படுகை, அதைச்சார்ந்த நிலங்கள் என்று இன்றும் காய்ந்து பயிர்கள் வளராமல் கருகிப்போன பல்வேறு கதைகள் அந்நீரை நம்பி விவசாயம் செய்த பல குடும்பங்களில் இருக்கின்றன. இதோடு காவிரி நதி மற்றும் ஈரோடு, கரூர், திருப்பூர் எனப்பயணப்படும் அமராவதி நதியையும் இதில் குறிப்பிடலாம்.
            நதி என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது. நம் தமிழர்களின் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்ததே நதிக்கரைகளில்தான் என்பதை அனைவரும் அறிவோம்.
            சாயப்பட்டறைகள் தனது தொழிற்சாலைக்கழிவுகளை ஒட்டுமொத்தமாக ஒரு உயரிய தொட்டியில் சேர்த்து சூரிய வெப்பத்தினால் ஆவியாக்கப்படுகிறது. அவைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. ஒன்று மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. மற்றொன்று திடக்கழிவுகளாக சிறு கட்டிகளாக மாற்றப்பட்டு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினால் அப்புறப்படுத்தப்படுகின்றன.
முன்நிற்கும் சவால்கள்
            சாயப்பட்டறைகளை மூடச்சொல்வது பிரச்சனைக்கு தீர்வாகாது. கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையங்களை எந்த சமரசமில்லாது மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதிக்க வேண்டும்.
            கழிவுநீரை வேறு வழியில் நிலத்தடியில் உள்ளிறங்காது தடுத்து பயன்படுத்த ஆராய்ச்சிகளை முடுக்கிவிடவேண்டும்.
            மாசுபடும் கழிவுகளின் அளவினைப்பொறுத்து அதனால் பாதிக்கப்படும் இயற்கையின் சமநிலையினை பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தொழிற்சாலைகள் முன்வரவேண்டும்.
            வணிக நலன்களை உற்பத்தி செய்து தரும் தொழிற்சாலையில் சாயங்களிலுள்ள வேதிப்பொருட்கள், அமிலங்களால் பணியாளர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முன்னேற்பாடுகளான கையுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும். தொழிற்சாலைகள் சம்பாதிப்பதில் கால்பகுதி கூட இந்த உபகரணங்களை வாங்க செலவாகாது என்றாலும் தொழிலதிபர்கள் பணத்தை மிச்சம் பிடிப்பது இந்த உபகரணங்களில்தான்.
            தொழிற்சாலைகளினால் பணத்தினைப்பெறமுடியும் என்றாலும் நம் பசிக்கு அவற்றை உண்ணமுடியாது. விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால் இன்று பாதிப்பில்லாதது போன்று தோன்றலாம் ஆனால் விரைவில் உணவிற்கு ஏற்படும் தட்டுப்பட்டினால் அனைவருமே தவிக்கும் நிலை வரக்கூடும். மேலும் உலகத்தில் மனிதர்கள் மட்டும் வாழவில்லை. நாம் வாழ பல கோடி நுண்ணுயிரிகள் உதவுகின்றன. அவற்றின் இடங்கள் வெறுமையாகும் நம் வாழ்வு பூமியில் தொடர வாய்ப்பில்லாது போகவும் வாய்ப்பிருக்கிறது. உணவுச்சங்கிலியின் அமைப்பில் ஒவ்வொரு உயிரும் மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளதால், ஒன்று இதில் மறைந்துபோனாலும் கட்டுப்படுத்த எதிரி இல்லாத மற்ற உயிரினங்களான பூச்சிகளால் வாழ்வே முடிந்துபோகும்.
           


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்