எழுத்தாளர்களின் கதையில் வரும் குழந்தைகளின் பாத்திரங்கள் - கதைகளில் பேசும் குழந்தைகள்


கதைகளில் பேசும் குழந்தைகள் 

செந்தில் ஜெகன்நாதன்

அகரம் ஃபவுண்டேஷன்

விலை ரூ.150

ப.136


மயிலாடுதுறையை பூர்விகமாக கொண்ட எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் எழுதியுள்ள கட்டுரை நூல். இந்த நூல், யாதும் என்ற இதழில் வெளிவந்து பிறகு நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. தொடராக வருவது, பிறகு அதை நூலாக தொகுப்பது என இரண்டுமே முக்கியமான பணிகள். தொடராக வரும்போது கூறிய தீபாவளி வாழ்த்துகள் கூட நூலில் நீக்கப்படாமல் இருக்கிறது. நூலின் அட்டைப்படமோ, நூலின் உள்பக்க கட்டமைப்போ, புகைப்படங்களோ பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. மிகவும் சுமாராக அலட்சியத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் சிரத்தை எடுத்து நூலை உருவாக்கியிருந்தால், நூல் நன்றாக வந்திருக்கும். பெரிய ஆறுதல், எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனின் எழுத்துகள் மட்டுமே. நூலுக்கு கொடுக்கும் காசை எழுத்துக்கு மட்டுமே நம்பி கொடுக்கலாம். அந்தளவு முக்கியமான எழுத்தாளர்கள் சிறுகதைகளில், குறுநாவல்களில் வரும் குழந்தை பாத்திரங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். 


மொத்தம் 31 எழுத்தாளர்கள். இதில் நான்கு மேற்கத்திய எழுத்தாளர்கள் உண்டு. மேற்கத்திய எழுத்தாளர்களின் கதைகள் அனைத்துமே சிறந்த மையப்பொருட்களைக் கொண்டவை. அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். இந்த நூலிலேயே மிகச்சிறந்த கதை என்றால், அது சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய முதல் ஆசிரியர் கதை நூலை கூறலாம். அந்தளவு நெகிழ்ச்சியான கதை. குழந்தை திருமணம் செய்துவைக்கப்பட இருந்த சிறுமியை உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றி படிக்க வைத்து மேலே கொண்டு வரும் ஆசிரியர் பற்றியது. அதற்குப் பிறகு அவர், காப்பாற்றிய மாணவியைச்சந்திப்பதில்லை. தனது கடமையை செய்தோம் என அவர் தன் வேலையைப் பார்க்கிறார். ஆனால், அவரால் முன்னேறியவர், விஞ்ஞானியாகிறார். ஆசிரியரைப் பார்க்க முயல்கிறார். அது சாத்தியமானதா என்பதே கதை. மாணவர் - ஆசிரியர் உறவு பற்றிய அற்புதமான கதை. குட்டி இளவரசன் கதை எழுதிய அந்துவான் துசெந்துடையது குழந்தைகள் கதைதான். அதில் தத்துவம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகளை நாம் நம் எலிப்பந்தய வாழ்வில் எப்போது கேட்டுக்கொண்டாலும் திகைத்துப் போய் நின்றுவிடுவோம். வாழ்நாள் முழுக்க தேடி கண்டடைய வேண்டிய பதில்களாக அவை இருக்கின்றன. 


தி.ஜானகிராமன், ச.தமிழ்செல்வன், புதுமைப்பித்தன், கந்தர்வன், சார்வாகன் கதைகளைப் பற்றி நூலாசிரியர் விவரிக்கும்போது அந்த கதைகளும் கதை மாந்தர்களும் தனியொரு அழகில் இருப்பது போல தோன்றுகிறது. இந்த எழுத்தாளர்களின் வரிசையில் நீங்கள் கி.ராஜநாராயணன் அவர்களின் கதவு சிறுகதையையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் சிறுவர்கள், அந்த வயதுக்கான ஆசை, அவர்களுக்கான உலகம் என இயங்கி வருகிறார்கள். பிற எழுத்தாளர்கள், குழந்தைகளின் கதையில் பெண்ணியம், வறுமை, ஊழல், இளமையின் சுதந்திரம், பொறாமை, சர்வாதிகாரம், தத்துவம் என நிறைய கனமான விஷயங்களை முயன்றிருக்கிறார்கள். இதைக்கூற காரணம், குழந்தைகளுக்கு அந்த கனமான கருத்துகள் தோளை வருத்துமோ என்று அஞ்சித்தான். ஒரு படைப்பை எப்படி வேண்டுமானாலும் எழுத்தாளர் உருவாக்கலாம். அதற்கு அவருக்கு உரிமை உண்டு. இந்த நூலில் இறுதியில் நூலாசிரியர், திரைப்பட உதவி இயக்குநர் என்பதற்கான தனித்துவ முத்திரையாக மலையாள திரைப்படம் ஒன்றின் நிழல்படம் இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான சிறுகதை நூலில் எதற்காக திரைப்பட போஸ்டர் என்று புரியவில்லை. 


புனைவு என்ற வகையில் எழுத்தாளர்களை பதிவு செய்துகொண்டு, குழந்தைகளுக்கான பாடல் என்ற வகையில் தனி நூலையே எழுதலாம். இதில் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா இடம்பெறுகிறார். நூலில் எழுத்தாளர்களின் பிற புனைவு, அபுனைவு நூல்களையும் அல்லது சிறுவர் நாவல்கள் எழுதியிருந்தால் அதையும் கூட அறிமுகம் செய்திருக்கலாம். இரா.நடராசன் எழுதிய ஆயிஷா என்ற சிறுகதையைக் கூட நூலில் சேர்த்திருக்கலாம். குறைந்தபட்சம் பின்னிணைப்பாகவேனும் நூல்களின் பட்டியலை சுருக்கமாக இணைத்திருக்கலாம். புனைவு, அபுனைவு என எழுத்தாளர்களது நூல்களை வாசிக்க இளம்பருவமே ஏற்றது. அப்போதும் கூட நீங்கள் திரைப்படத்திற்கே சென்றால் எப்படி? வாசிப்பு குழந்தைகளுக்கு ஆயுள் முழுக்க கூட வரவேண்டும். இருந்தாலும் கூட எதிர்கால திரைப்பட இயக்குநராகவிருக்கும் நூலாசிரியர் எழுத்தாக்கம் செய்ய முயன்ற சிந்தனை முக்கியமானது. அதை செயல்படுத்திய விதம் சற்று சொதப்பிவிட்டது. நூலின் இறுதியாக வரும் பயணம் - பாவண்ணன் சிறுகதை பெரிய ஆறுதலை நமக்கு தருகிறது. அக்கதை,ஒன்றை பிறருக்கு அளிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி. ஏக்கம் கொள்ளும் ஒன்றை பெற்றுவிட்ட களிப்பு என இரண்டையும் பேசுகிறது. எது பெரிது என்பதல்ல. இரண்டுமே அவரவருக்கு முக்கியம்தான். போஸ்ட்மேனாக உள்ள இளைஞன், வறுமையில் சைக்கிளுகாக ஏக்கம் கொள்ளும் சிறுவனோடு பேசுகிறான். பழகுகிறான். அவனது குடும்ப நிலை அறிந்து, சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்கிறான். முகம் மீது மெல்லிய தென்றல் மோதிச்செல்வது போன்ற அனுபவத்தை கதையின் சுருக்கமே தருகிறது. ஆம், அத்தோடே நூல் நிறைவு பெறுகிறது. ஒரு தொடர், மாத இதழில் வரும்போது இடம் பற்றிய கவனம் இருப்பது அவசியம். தேவையும் கூட. ஆனால் நூலாகும்போது எழுதியவற்றை மீண்டும் சரிபார்த்து இன்னும் அதை விரிவாக்கி கூடுதலாக சில கட்டுரைகளைச் சேர்க்கலாம். ஒருமுறை நூலை வாங்கினால் அவர், அதை திரும்ப திரும்ப படிக்கலாம் அல்லவா? கதைகளில் பேசும் குழந்தைகள் நூல் இப்படியான பார்வையோடு வடிவமைக்கப்படவில்லை. தொகுக்கப்படவில்லை. இப்படியான குறைகளை நூலாசிரியரின் நோக்கமும், சிறந்த எழுத்தும் சற்றே தணிக்கிறது. முற்றாக அல்ல.     


கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?