கணவரில்லாத கைம்பெண்ணான ஷெல்லி, அவளது மகனை வேட்டையாட முயலும் மர்ம பூதங்கள்!
டைலன் டாக் வேட்டையாடும் - சட்டைப்பையில் சாவு
லயன் முத்துகாமிக்ஸ் - வி காமிக்ஸ்
விலை ரூ.90
டைலன் டாக் என்பவர் டிஒய்டி 666 எனும் ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் வரும் அமானுஷ்ய டிடெக்டிவ். இவரது முக்கிய வேலை. ஆவிகளை வேட்டையாடுவது. அல்லது ஆவி என்று வேடமிட்டு மனிதர்களை கொல்பவர்களை அடையாளம் கண்டு கைது செய்வது...டைலன் டாக் - டிடெக்டிவ், க்ரௌச்சோ அவரது உதவியாளர். இவர்கள்தான் பெரும்பாலும் கதையில் இருப்பார்கள். மீதி வரும் பாத்திரங்கள் எல்லாமே வரும் போகும். டைலன் டாக்கின் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் எப்போதும் வருவார்.
ஷெல்லி, தனது ஒரே மகனுடன் வீட்டில் வாழ்ந்து வருகிறாள். அவளுடைய கணவர், ஜாக். சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து இறந்து போயிருக்கிறார். அவர் ஏன் இறந்துபோனார், எப்படி இறந்துபோனார் என்பதே மர்மம்தான். இந்த காமிக்ஸ் தொடங்குவது, ஷெல்லி வீட்டில் தனது ஃபிரிட்ஜில் தற்கொலை செய்துகொண்ட கணவர் ஜாக்கின் தலையைக் காண்கிறார். பயந்து நடுங்குகிறார். ஷெல்லியின் மகன் டேன்னி, இவன் வீட்டுக்குள் மணலைக் கூட்டி விளையாடுகிறான். அதில் இருந்தும் ஏதோ மணல் பூதம் போல எழுகிறது. ஷெல்லிக்கு ஒன்றும் புரிவதில்லை. இதனால் அவள், டைலன் டாக்கை விசாரிக்க அழைக்கிறாள். டைலனும் வருகிறான். ஷெல்லி, டேன்னியை விசாரிக்கிறான். ஆனால், ஒன்றும் புரிவதில்லை. இதனால், தனது சகாக்களான ஹெச் ஜி வெல்ஸ் பிரபு, ஆண்டலெஸ் என்ற இரு நபர்களை உதவிக்கு அழைக்கிறான். வெல்ஸ் பிரவு, ஆண்டலெஸ் என இருவருமே வருகிறார்கள். ஆனால், யார் குற்றவாளி என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆவியும் வருவதில்லை. ஆண்டலெஸ்ஸூக்கு ஏதோ விஷயம் புரிபடுகிறது. வெல்ஸ் பிரபுக்கு ஒன்றும் புரிபடவில்லை.
ஷெல்லிக்கு, மருத்துவர் ஜெஃப்புடன் காதல் உறவு இருக்கிறது. அவளுக்கு கணவர் ஜாக் இறந்தபிறகு அவர்தான் ஆறுதலாக இருக்கிறார். அவரை மணந்துகொள்ளக்கூட ஷெல்லி முடிவு செய்து வைத்திருக்கிறாள். அவர் ஷெல்லி வீட்டுக்கு வரும்போது, டைலன் டாக் அங்கிருந்து க்ரௌச்சோவோடு வெளியேறி செல்கிறான். ஜெஃப்புக்கு டைலன் டாக் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. அவனை டுபாக்கூர் என அழைக்கிறார். இவர்கள் இருவரும் காதல் உறவில் ஈடுபடுகிறார்கள். இதை டேன்னி கேள்வி கேட்கிறான். அவனுக்கு ஜெஃப்பை பிடிப்பதில்லை. இதை தொடக்கத்தில் நாம் படிக்கும்போது வினோதமாக தோன்றாது. ஆனால், இறுதியாக அதில்தான் இருக்கிறது, அத்தனை விவகாரமும்.
சட்டைப்பையில் சாவு என்ற தலைப்பை விட மரண தூதுவன் பொருத்தமாக இருக்கக்கூடும். இதை கதையைப் படித்து முடித்தபிறகு நீங்கள் உணரலாம்.
டைலன் டாக் வம்பு பண்ணும், ஷெல்லியை தாக்கி கொல்ல முயலும் ஆவியைக் கட்டுப்படுத்தினாரா, அதன் மூலம் என்ன என்று கண்டுபிடிப்பதே கதை. நூலில் வரைந்துள்ள ஓவியங்கள் நன்றாக உள்ளன. இது கருப்பு வெள்ளை புத்தகம். லயன் காமிக்ஸில் இப்போது அனைத்தையும் கலராக்கி விட்டனர். விலையும் கூடி வருகிறது. கருப்பு வெள்ளை நூல்களையும் வெளியிடலாம். ஆனால், வண்ணம்தான் வியாபாரம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். புதிய தலைமுறையினரை ஈர்க்கவேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள் போல. மகிழ்ச்சி. ஷெல்லி கணவர் இல்லாத கைம்பெண். அவருக்கு பிடித்த ஆண்களோடு உறவு கொள்கிறார். இதை காமிக்ஸில் நாம் காணலாம். இரண்டு மூன்று படுக்கை அறை காட்சிகள் உண்டு. டைலன் டாக் ப்ரூட்டல் ஹானஸ்ட் என்பார்களே அப்படித்தான். அந்த வேளையிலும் கூட கல்யாணம் சாத்தியமில்லை என்று கூறிவிடுகிறார். என்ன மனுஷன்யா?
டைலன் டாக் கதையில் சொல்ல முடியாத வலி, வேதனை இருக்கும். கதை பெரும்பாலும் இறுதியாக அப்படித்தான் முடியும். கேஎன் சிவராமன் மொழியில் நெஞ்சை நக்குவது.. ஆனால், அப்படி நெஞ்சை நக்குவது கதையின் போக்கில் இயல்பாக நடக்கும். வாராதோ விடியலே கதையை வாசித்திருக்கிறீர்களா? அதேபோல்தான். டைலன் டாக், நினைத்தால் எதிரியை முற்றாக அழித்திருக்கலாம். ஆனால், அவன் ஷெல்லியை நினைத்துப் பார்த்து அதை செய்யாமல் இருக்கிறான். ஆனால் ஆண்டலெஸ் பதிலுக்கு அதை செய்கிறார். இறுதியாக அவர் இறந்துபோகிறார்.
டைலன் டாக் கதையைப் பொறுத்தவரை கும், ஆ.. அம்மா என்ற சத்தமெல்லாம் இருக்காது. கதை அமைதியாக நகரும். மலையாளப்படங்களின் சாயல் இருக்கும். அமைதியாக நகரும் கதையில் இறுதியாக வெடிகுண்டு வெடிக்கும். அதேதான். அதைப் புரிந்துகொண்டால் மட்டுமே டைலன் டாக் கதைகளை ரசிக்க முடியும். இது மேற்கத்திய காமிக்ஸ் கதை. அமெரிக்கா அல்ல. இத்தாலி. எனவே, கதையில் ஒன்றுக்கு இரண்டாக படுக்கை அறை காட்சிகள் உண்டு. ஆசிரியர் விஜயன், பார்ப்பன தமிழைக் குறைத்துக்கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். அலம்பி என்ற சொல்லை எதற்கு பயன்படுத்துகிறாரோ, உலகம்தான் அறிய வேண்டும். பேச்சு வழக்கு சொற்களையே உரையாடலுக்குப் பயன்படுத்தலாம். இன்னும் இயல்பாக இருக்கும்.
#DYLAN DOG #COMICS #ITALY #HORROR #CRIME #DETECTIVE
#49வது சென்னை புத்தகத் திருவிழா 2026
சென்னை, நந்தனம்

கருத்துகள்
கருத்துரையிடுக