ரயில் விபத்து ஏற்படுத்தி நினைவுகளை இழக்கச்செய்தவர்களை பழி வாங்கும் மேஜிக் விண்ட்!
ஆத்மாக்கள் அடங்குவதில்லை
லயன் முத்துகாமிக்ஸ்
மூலம் - செர்ஜியோ போனெல்லி பதிப்பகம்
தமிழில் எஸ் விஜயன்
# 49வது சென்னை புத்தக காட்சி 2026
இதுதான் மேஜிக் விண்ட் என்ற நாயகனுக்கு முதல் அறிமுக கதை. முத்து காமிக்ஸ் ஸ்டாலில் இரண்டு காமிக்ஸ்கள் இருந்தன. அதில், வேறொன்றை எடுத்தேன். அப்புறம் பார்த்தால் இதுதான் தொடக்க கதை. நாயகன் யாரென்ற புரிந்துகொண்டால்தான் அடுத்த கதைக்கு நகர முடியும். எஸ் விஜயன் அப்படி எல்லாம் கிடையாது என்று சொல்வார். அதை எப்போதும் போல கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்.
இந்த நூலை கருப்பு வெள்ளையிலேயே உருவாக்கியிருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். காலக்கட்டாயத்திற்காக கலர் போல. அடர்த்தியான நிறங்களைக் கொண்ட பூச்சு. சியோக்ஸ் இனத்தைச்சேர்ந்த செவ்விந்தியர்களின் மாந்திரீகர் எதையோ தேடி வருகிறார். பார்த்தால், அவர் அங்கு குற்றுயிராக கிடக்கும் நாயகன் எழுவதைப் பார்த்து தூக்கி வந்து சிகிச்சையளிக்கிறார். அவருக்கு தான் யார் என்றும் தெரியவில்லை. நினைவுகள் அழிந்துவிட்டிருக்கின்றன. மாந்திரீகருக்கு அவருடைய காலம் முடிவடையும் தருவாயில் உள்ளார். ஆனால், அவருக்கு அடுத்து அவரது நிலையில் இருக்கக்கூடியவரை அவரால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதற்கான வாக்கு அவருக்கு கிடைக்கவில்லை. இதற்காக மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உணவின்றி பயணிக்கும்போதுதான், குற்றுயிராக கிடக்கும் வாசிகுன் சிப்பாயைப் பார்க்கிறார். வாசிகுன் என்றால் வெள்ளையர்.
ஞானதிருஷ்டி உள்ள ஒருவனைத்தான் மாந்திரீகர் தன்னுடைய பதவிக்கு தேர்ந்தெடுக்கவேண்டும். அதுதான் நாயகனுக்கான இன்ட்ரோ. இந்த காமிக்ஸ் கதை முடியும் இடத்தில்தான், தன்னுடைய பெயர் என்னவென்று நாயகன் கூறுவார். அந்த இறுதி பன்ச்சும் நன்றாகத்தான் இருந்தது. ஏனெனில் கதை முடியவில்லை. அவரை கொலை செய்ய முயன்றவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பி வைத்த ஒருவனை மட்டுமே கொல்கிறார்கள். எனவே,நாயகன் புதிய அடையாளத்தில் செவ்விந்தியர்களுக்கு ஆதராக நின்று போராடுவதே கதை. அதாவது என்னுடைய ஊகம்.
கதைக்குள் செல்வோம். ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது என்பதை சிகாகோ டிரிப்யூனின் போ என்ற பத்திரிகையாளரும் தேடி வருகிறார். அந்த பத்திரிகை எடிட்டர், பத்திரிகையாளர் போ எழுத முயலும் கட்டுரையில் வரும் மோசடிப் பேர்வழியான ஹோகனுக்கு ஆதரவானர். கட்டுரை எழுதினாலும் பிரசுரிக்க மாட்டேன் என்கிறார். நீ இல்லையென்றால் வேறு பத்திரிகைகளா இல்லை என்று போ கூறிவிட்டு என்னுடைய புலனாய்வை செய்யத்தான் போகிறேன் என்று கூறுகிறார்.
இதை அந்த கேடுகெட்ட எடிட்டர், நேராக ஹோகனிடம் சென்று சொல்லிடுவிடுகிறான். அவன் எடிட்டரிடம் நல்ல மனிதன் போல பேசி அனுப்பி வைத்துவிட்டு. தன்னுடைய ஆளை அழைத்து பத்திரிகையாளர் போவை போட்டுத்தள்ள உத்தரவிடுகிறான். இவனுக்கு முன்னரே கார்மெடி என்பவனைப் பற்றி போ அறிந்து வைத்திருக்கிறான். கார்மெடி என்பது ஹோகனின் கூட்டாளி பெயர். அவனுக்கு பல்லாண்டுகளுக்கு முன்னர் தான் செய்த குற்றம் உறுத்துகிறது. அவனது கண்ணுக்கு அச்சமூட்டும் உருவங்கள் தோன்றுகின்றன. அதிலிருந்தே ரயில் விபத்தில் அவனுக்கு தொடர்புண்டு என நாம் தெரிந்துகொள்கிறோம். பத்திரிகையாளர் போ, பெரும் பணக்கார ர்களை பெரிதாக நம்புவதில்லை.
மேஜிக் விண்ட்டுக்கு ஞான திருஷ்டி இருந்தால் அவர், ஷாமானின் வாரிசாக மாறுவார். செவ்விந்தியர்களைக் காப்பார். இந்த கதையில், சக வீரர்களைக் கொன்றவன் யார் என கண்டுபிடித்து நாயகன் கொல்கிறான்.இதற்கடுத்து, இவனை அங்கே அனுப்பியவன் அதை திட்டமிட்ட கொலைகாரன் ஹோகன் இருக்கிறான். இதற்கடுத்த கதையில் அவனைப் பற்றி கூறக்கூடும். இந்தக் கதையும் வன்மேற்கு கதைதான். வெள்ளையர்கள், செவ்விந்தியர்களுக்கான மோதல் உள்ளது. சிலர் செவ்விந்தியர்களை அழித்து சுயநலமாக அவர்களது வளங்களைக் கொள்ளையிட முயல்கிறார்கள். இதை எப்படி செய்கிறார்கள் என்பதன் அரசியலையும் விளக்குகிறார்கள். ஹோகன்தான் அத்தனைக்கும் சூத்திரதாரி.
நிதானமான கதை. இதுதான் தொடக்க கதை. இதிலும் மேஜிக் விண்டிற்கு ஆக்சன் காட்சிகள் உண்டு. துப்பாக்கியைத் தட்டி சுடுவது இவரின் ஸ்டைல். அதுவும் நன்றாகவே இருக்கிறது. இவரின் அறிமுகம் மக்பை செல்லும் ரயிலில் தொடங்குவதே ஆரவாரமாக இருக்கிறது. எருமையை வேட்டையாட முயலும் வேட்டைக்காரனை ரயிலில் இருந்து எட்டி உதைத்து தள்ளி விடுவதுதான் சிறந்த அறிமுக காட்சி. அங்கு அவர் பேசுவது சூழல் அரசியல். அதை வரவேற்கலாம். அந்த சம்பவம், போ என்ற பத்திரிகையாளருக்கும் அவருக்கும் இடையே நட்பு உருவாக காரணமாக உள்ளது.நூல் தொடங்கும்போதே உள்பக்கத் தாளில் மேஜிக் விண்டும், போவும்தான் நிற்பார்கள். ஒருவன் புத்திசாலி, இன்னொருவன் பலசாலி. நல்ல காம்பினேஷன் இல்லையா?
திகில் சாகச கதை. இதில் வரும் பாத்திரங்கள் பலவும் வினோதமானவை. செவ்விந்திய மக்களின் மாந்திரீகர். அடுத்து ப்ளூஸ்டார் ஓட்டர் உரிமையாளர் ஸ்கல்வி, அறையில் அடைத்து வைக்கப்பட்ட அவரது மகன், லோமேக்ஸூக்கு வரும் வினோத பிரமை காட்சிகள், கண் முன் தோன்றும் ஆன்மாக்கள் என நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். நாயகன், தான் இனி சிப்பாயல்ல. என் பெயர் மேஜிக் விண்ட் என்று கூறுவதோடு கதை நிறைவு பெறுகிறது. ஆனால். அதுதான் நாயகனின் தொடக்கமும் கூட.
கோமாளிமேடை குழு
#மேஜிக் விண்ட், #முத்து காமிக்ஸ் #லயன் காமிக்ஸ் #செவ்விந்தியர்கள், #வெள்ளையர்கள் # வன்மேற்கு #கௌபாய் #மாந்திரீகம் #ஆத்மாக்கள் அடங்குவதில்லை
#magic wind #comics #indians #magic #accident #tribes #weapons #injustice #revenge
thanks
photos - lionmuthucomics.com


கருத்துகள்
கருத்துரையிடுக