ஜெய்பீம் - காலத்தின் சாட்சி - த செ ஞானவேல்
ஜெய்பீம் - காலத்தின் சாட்சி
த செ ஞானவேல்
அருஞ்சொல் - தரு மீடியா
ரூ.120
ஜெய்பீம் என்ற படம் ஓடிடியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பின்னணி, இயக்குநர் ஞானவேல் அவர்களின் கருத்து, அதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், நடிகர்கள் பற்றிய கருத்துகள் கொண்ட நூல். திரைப்படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை இறுதிப்பகுதியில் ஸ்க்ரீன்ஷாட்கள் போல எடுத்து சேர்த்திருக்கிறார்கள். ஜெய்பீம் படத்தின் திரைக்கதை அருஞ்சொல் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இந்த நூலோடு அதையும் கூட வாங்கிப் படிக்கலாம். அப்போது உங்களுக்கு முழுமையான உணர்வு கிடைக்கலாம்.
நூலில் இரண்டு நபர்களின் பேட்டி முக்கியமானது. ஒன்று, இயக்குநர் ஞானவேல் அவர்களுடையது. அடுத்து முன்னாள் நீதிபதி கே சந்துரு அவர்களுடையது. இந்த இருவரும்தான் ஜெய்பீம் படத்திற்கான மூலாதாரம். நீதிபதி சந்துரு, பழங்குடி பெண்ணுக்காக இலவசமாக பத்தாண்டுகளுக்கும் மேலாக வாதாடியிருக்கிறார். சந்துருவுக்கு படம் பற்றியெல்லாம் பெரிய கவலையில்லை. ஏனெனில் அவருடைய நோக்கம். தான் எடுத்துக்கொண்ட வழக்கில் பெற்றுக்கொடுத்த நீதிதான். அதில் எதிர்கொண்ட சவால்களைப் பற்றியெல்லாம் குறிப்பாக பேட்டியில் கூறியிருக்கிறார். குறிப்பாக, காவல்துறைக்கு எதிராக போராடும்போது அவர்கள் ஏற்படுத்திய அச்சுறுத்தல், கொடுக்க முயன்ற லஞ்சப்பணம், வழக்குரைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி காரை சேதப்படுத்தியது என நிறைய இருக்கிறது. இதையெல்லாம் ஓரிடத்தில் வலுவான கட்டமைப்போடு மோதுவார்கள். நாம் அதற்கேற்ப திட்டமிட்டு உழைக்க வேண்டும். லட்சியத்தில் நம்பிக்கை கொண்டு அமைப்பில் இயங்கவேண்டும். தனியாக இயங்கினாலும் கொண்ட கொள்கையில் இருந்து தடம் புரண்டுவிடக்கூடாது என்றுகிறார். ஆனால், அவர் அமைப்பு முழுக்க ஊழல்மயப்பட்டதாக அல்லாதபோது மட்டுமே நீதியை எதிர்பார்க்க முடியும் என்று கூறுகிறார். நீதிபதியே கறை படிந்தவராக களங்கம் கொண்டவராக அநீதியின் பக்கம் இருக்கும்போது நீதி எப்படி கிடைக்கும்? அதை சந்துரு அமைப்பின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டால் அப்புறம் ஒன்றுமில்லை என்கிறார்.
இயக்குநர் ஞானவேல் படத்தின் கதையை ஆராய்ச்சி செய்து எழுதியது. அதை நடிகர் சூர்யாவிற்கு சென்று கூறுவது, அதன் பின்னர், அதில் நடிக்க சூர்யா விரும்புவது, அதற்கேற்ப சில மாறுதல்களை செய்வது ஆகியவற்றை இயக்குநர் ஞானவேல் செய்கிறார். எது சாத்தியமோ அதை மட்டுமே செய்கிறார். அதுதான் இப்போதைக்கு நாம் பார்க்கும் திரைப்படம். அதை தயாரிப்பாளராக நடிகராக சூர்யாவும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதுதான் இங்கே முக்கியம். இயக்குநர் ஞானவேல் தனது கதை,திரைக்கதை எழுதும் செயல்பாட்டையும் கூட விளக்கிக் கூறியிருக்கிறார். அதுவும் கூட இத்துறையில் உள்ளவர்களுக்கு உதவக்கூடும். படம் ஆவணப்பட சாயலில் இருந்து வணிகப்படமாக மாறுவது பற்றியும் விளக்கம் கூறியிருக்கிறார். திரைப்படமாக மாற்ற அதற்கான நுட்பங்களைக் கற்றுக்கொண்டு செய்து வருகிறேன் என்று கூறுவது முக்கியமானது. ஒரு கட்டத்தில் காட்சிகள் இழுவை என்று கேள்வி கேட்பவர் சொல்லும்போது, கூட அதற்கான பொருத்தமான விளக்கத்தைக் கொடுக்கிறார். அது முக்கியமான பகுதி.
நிறைய இயக்குநர்கள் இப்படியான கேள்வியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இயக்குநர் ஞானவேல், அது அப்படியிருந்தால் இருந்துவிட்டுப்போகிறது. அதை அப்படித்தான் உருவாக்கவேண்டும் என்ற உருவாக்கியதாக நம்பிக்கையுடன் கூறுகிறார். ஏனெனில் இது எதார்த்த படம். அதேசமயம் சினிமாவுக்கு சுதந்திரத்தை எடுத்துக்கொண்ட இடங்கள் பற்றியும் கூறுகிறார். குறவராக இருந்த வழக்குதாரரை, படத்தில் அவர் இருளர் எனும் பழங்குடி இனத்தவராக மாற்றுகிறார். மனுதாரர் கர்ப்பிணியாக இருப்பதும் அப்படியானதுதான். அதுவே படத்தைப் பார்ப்பவர்களுக்கு மனதில் இரக்கத்தை உருவாக்குகிறது. இப்படி கர்ப்பிணியாக வழக்குதாரரைக் காட்டுவதற்கும் கூட நிறைய எடுத்துக்காட்டுகளை ஆய்வு செய்துதான் முடிவு செய்திருக்கிறார்கள். அனைத்தையும் படத்தில் யோசித்து செய்திருக்கிறார்கள். ஒரு திரைப்படம், யாரும் கவனிக்காத பழங்குடி இனத்தைப் பற்றிய கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பின்னணி, உண்மையில் அதற்காக உழைத்தவர் என நிறைய விஷயங்களைப் பேசுகிறது. சினிமா என்பது காட்சி ஊடகம். அதற்கான சுதந்திரங்களை எடுத்துக்கொண்டுதான் செய்திருக்கிறது. அந்த ஊடகத்திற்கான நிறைய வரையறைகள் உண்டு.
முன்னாள் நீதிபதி கே சந்துருவின் பேட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை கட்சியில் இருந்து நீக்கிய விவகாரமும் உள்ளது. அவர் வாதாடிய வழக்கு பற்றிய விவரத்தை எழுதாமல் இருந்திருக்கிறார்கள். வழக்கு வெற்றி பெற்ற பிறகும், அந்த வழக்கு பற்றிய ஜெய்பீம் படம் வெளியானபோதும் கூட பிற மாநிலத்தில் உள்ள இடதுசாரி கட்சித் தலைவர்கள் இவரைத் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டு இடதுசாரியினர் கள்ள மௌனத்தை கடைபிடித்துள்ளனர். இதுபோன்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள்தான் இடதுசாரிகளை,வளரவிடாமல் தடுத்துள்ளது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டியதுதான். குறுகிய மனம் கொண்டோர் எப்படி முன்னேற முடியும்? அவர்களது முன்னேற்றம் குறிப்பிட்ட அளவில்தான் இருக்க முடியும்? கே சந்துரு, நீதியை மக்களுக்குப் பெற்றுத்தருவது மட்டுமே முக்கியம் என்று இயங்கியிருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அவருக்கு திரைப்பட புகழ் பெரிய விழிப்புணர்வை, மதிப்பை உருவாக்கி தந்திருக்கிறது என்ற எந்த உணர்வையும் காண முடியவில்லை. அவர் வழக்குரைஞராக இருந்தபோதும், நீதிபதியாக இருந்தபோதும் தனது பணி என்னவோ, அதை மட்டுமே செய்திருக்கிறார். இடதுசாரி அமைப்பைப் பற்றிய பெரிய காழ்ப்புணர்வு ஏதும் இல்லை. அங்கு தான் உருவாக்கப்பட்டதாக கூறுகிறார். அப்படிக் கூறுவதே பெரிய விஷயம்தான்.
இந்த நூலின் விலை 120 என்பதுதான் இடிப்பதாக இருக்கிறது. நூல், அச்சு, அதை தயாரிப்பதற்கான செலவு ஆகியவற்றை கொண்டு இப்படி விலை வைத்திருப்பார்கள் போல. ஆனால், நூறு ரூபாய்க்குள் விலை வைத்திருக்கலாம்.
கோமாளிமேடை குழு


கருத்துகள்
கருத்துரையிடுக