பெண்களின் காதல் வழியாக மூவேந்தர்களின் வீரம் வெளிப்படும் படைப்பு -- முத்தொள்ளாயிரம்
முத்தொள்ளாயிரம் - மூலமும் உரையும்
நாராயண வேலுப்பிள்ளை
100க்கும் அதிகமான பாடல்கள்
நன்றி - இரா மோகனவசந்தன்
முத்தொள்ளாயிரம் நூலில் மூவேந்தர்கள் பற்றிய பாடல்கள் உள்ளன. அவையும் அக்காலத்திற்கேற்ப காதல், போர், ஆட்சி, படைத்திறன், அறம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. இந்த பாடல்களை ஒருவர் வாசிக்கும்போது தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பற்றியும் அவர்களுக்கு வழங்கி வந்த பெயர்கள் பற்றியும் அறியலாம். அதோடு, மன்னரை காதலித்த பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த எதையெல்லாம் உவமையாக கொள்கிறார்கள் என்பதும் கூட ஆச்சரியப்படுத்தும்.
பழந்தமிழ் வார்த்தைகள் வாசிக்கும்போதே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் ஒரு பாடலில் சேரனைப் புகழ்ந்து வருகிறது. அதில் பெண், தனிக்கதவம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதாவது, மன்னர் மீதுள்ள மகளின் காதலை அறிந்த தாய், ஊரார் தூற்றுவார்களே என்று அஞ்சி வீட்டின் வாயில் கதவை அடைத்துவிடுகிறார். அந்த கதவுதான் தனிக்கதவம் என பாடலில் சுட்டப்படுகிறது. இப்படி கதவை மூடிவிட்டால், வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருந்துவிடுவார்களா என்று தோழியிடம் கேட்கிறார்.
இதுபோல, சோழ மன்னன் செல்லும் வழித்தடத்தில் உள்ள வண்டித்தட மண்ணை எடுத்து வந்து உடலில் பூசி அழகு பார்ப்பேனா என்று பெண் ஒருவர் காதல் வயப்பட்டு பாடுகிறார். பொதுவாக, ஆண்களே காதலில் தவிப்பதாக வரும் பாடல்களில், அவர்தான் பெண் குளிக்கும் நீரை தீர்த்தமாக குடிப்பேன் என்று பாடல் பாடுவார். பாடல் மட்டுமே... ஆனால், பெண் ஒருத்தி காதலுக்காக மண்ணை அள்ளி உடலில் பூசி அழகு பார்ப்பேன் ன்று கூறுவது எந்தளவு வெறிகொண்ட பேராசை கொண்ட காதலாக இருந்திருக்கும்?
மூவேந்தர்கள் யாருமே சூலம் பயன்படுத்தவில்லை. அனைவருமே வேல்தான் பயன்படுத்துகிறார்கள். பாடல் வழி, மூவேந்தர்கள் அணியும் மாலைகளைப் பற்றிய குறிப்பு கூறப்படுகிறது. அது முக்கியமான தகவல். மன்னனின் உடலில் சந்தனம் பூசியுள்ளான். அதேசமயம் அவன் வைத்துள்ள வேலில் பகைவர்களை குத்திச் சாய்த்து அதில் இறைச்சி, ரத்தவாடை வீசுகிறது. இது வேலின் முன்பகுதி. பின்பகுதி, மன்னனின் உடலில் உள்ள சந்தனம் பட்டு மணம் வீசுகிறது. ஒரே வேல்தான். முன்புறம், பின்புறம் என மாறுபட்ட வாசனைகள் வருகிறது.
இதில், சில பாடல்கள் நம்மை அறியாமல் புன்னகைக்க வைக்கின்றன . மன்னனைக் காண காதலிக்கும் குடிமகள் தெருவில் நிற்கிறாள். ஆனால், மன்னனை ஏற்றி வரும் பெண் யானை அந்தப் பெண் மன்னனைப் பார்க்க வாய்ப்பு கொடுக்காமல் நிற்காமல் செல்கிறது. ஒரு பெண்ணாக இருந்தாலும் நீ ஒரு பெண்ணுக்கு உதவவில்லை என்று அந்தப் பெண் கோபம் கொள்கிறாள். எவ்வளவு அழகான பாடல். நீங்கள் வாசித்தால் அந்த வாசிப்பு இன்பத்தை புரிந்துகொள்ளலாம.
இப்பாடல்களில் யானைக்கு முக்கிய இடமுண்டு. அவை மன்னனின் வீரத்தை கூறுவதற்காக பயன்படுகின்றன . கோட்டைக் கதவில் மோதி தந்தம் உடைந்ததால் பெண் யானை பார்த்தால் என்னாகும் என்று சொல்லி எதிரிகளைக் கொன்று அவர்களின் குடலை உருவி அதை உடைந்த தந்தம் மீது போட்டு உடைந்த தந்தத்தை பிறர் பார்க்க முடியாமல் செய்கிறது. இங்கு யானையின் வீரச்செயல் வழியாக மன்னனின் வலிமை கூறப்படுகிறது.
பெண்களின் காதல் வழியாக மூவேந்தர்களின் ஆட்சி, வீரம், வலிமை, படைவலிமை, பெருமை கூறப்படுகிறது. இந்த பாடல்கள் அனைத்துமே வாசிப்பு இன்பத்தை கொடுக்க தவறவில்லை. பார்ப்பனர்களைப் பற்றிய தானம் பற்றிய விஷயம் வருகிறது. அதை தவிர்த்து விடலாம்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக