கோட்டை மாரியம்மன் கண்நோய் தீர்ப்பாளா? - மாயாதீதம் - என். ஶ்ரீராம்
மாயாதீதம்
என். ஶ்ரீராம்
தமிழ்வெளி
ப.104
இது ஒரு குறுநாவல். இதில் வரும் பாத்திரங்கள் வடகிழக்கு பகுதியில் இருந்து தாராபுரம் வருகிறார்கள். பிறகு அங்கே நடக்கும் என் ஶ்ரீராமின் உலக வழக்கங்கள்தான் கதை. இந்த எழுத்தாளரின் பலமே, அசாம், குவகாத்தி என செல்வதல்ல. தாராபுரம், நல்லிமடம், ஒற்றம் புற்கள், ஊசிப்புற்கள், கிளுவை மர வேலி என மண்ணோடு இணைந்து எழுதுவதுதான். இதுவும் கூட அவருக்கு சிறுவயதில் தெரிந்த வாழ்க்கையாக இருக்கக்கூடும். கதைக்குச் செல்வோம். அசாமைச்சேர்ந்தவர், தன்னுடைய மகனின் கண்நோயைக் குணப்படுத்த முயல்கிறார். நவீன மருத்துவமனைகளுக்குச் செல்கிறார். ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை. இதனால், அவர் அசாமிலிருந்து புறப்பட்டு தாராபுரத்திற்கு வருகிறார். அங்கு அவரின் தம்பி வாழ்கிறார். அவரிடம் பிள்ளையை ஒப்படைக்கிறார். சித்தப்பா, தனது அண்ணன் மகனை கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்க வைத்து கண் சிகிச்சையை அளிக்கிறார். ஆனால், அம்மன் மனமிரங்கவில்லை. பல மாதங்கள் இப்படியே கழிகின்றன. அந்த சிறுவனுக்கு கண்ணில் வலி அதிகரிக்கிறது. அந்த சூழலில் தேசாந்திரக்காரன் என்ற பாத்திரம் வந்து வழிகாட்ட, சித்த வைத்தியரின் முகவரி கிடைக்கிறது. அவரது உதவி மூலம் கண் குணமாகிறது.
பிறகு, வேணு சித்தப்பா வீட்டுக்கு வருகிறான். அவனது அப்பா, பையனை கைவிட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டு போய்விடுகிறார். இதனால், பெற்றோர் இல்லாத வேணுவுக்கு சித்தப்பா, சித்தியே துணை. அவர்களுக்கு கார்த்திக் என்றொரு பிள்ளை இருக்கிறான். அவனுக்கு புத்தி சுவாதீனம் இல்லை. வேணுவுக்கு ஓவியம் வருகிறது. இதையும் வெளியே கொண்டு வருவது தேசாந்திரக்கார சித்தர்தான்.அவர்தான் வேணுவின் திறமையைக் கூறி சித்தப்பாவுக்கு புரிய வைக்கிறார். பள்ளியில் உள்ள ஓவிய ஆசிரியருக்கு காட்டுகிறார். இதற்குப் பிறகுதான் வேணுவுக்கு கும்பகோணத்தில் ஓவியக்கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அங்கு அடிப்படையான நுட்பங்களைக் கற்றுக்கொள்வதாக கதையில் கூறப்படுகிறது. இந்தப்பகுதியெல்லாம் இன்னும் விரிவாக துல்லியமாக இருந்திருக்கலாம். ஆனால், கதையின் மையம் கோட்டை மாரியம்மன் - கண் நோய் மட்டுமே. அதற்காகவே கதை எழுதப்பட்டுள்ளது. நூலின் தலைப்பு மாயாதீதம் என்பதை வாசகர்கள் மறந்துவிடக்கூடாது.
வேணு, சித்தப்பா வீட்டில் வளர்கிறான். அவன் வளர்ந்து வேலைக்குப் போய் சம்பாதித்தால் வீடு தலைநிமிரும் சூழல். அந்த சூழலில் சித்தியின் தம்பியின் மகள் பார்க்கவி அங்கு வருகிறாள். சித்திக்கு உடல் நலம் சரியில்லாமல் போக அவரைப் பார்த்துக்கொள்ள வருகிறார். அப்புறம் என்ன உங்களுக்கும் கதை தெரியும்தானே? வேணுவுக்கும் பார்க்கவிக்கும் உறவு உருவாகிறது. இதன் விளைவாக இருமுறை கூடுகிறார்கள். குழந்தை உருவாகிறது. அவளை மணப்பதே அவனது எண்ணமும்.ஆனால், அதை செயல்படுத்த முடியாதபடி சுயநலமான சில சக்திகள் தடுக்கின்றன. யார் அதை செய்தது, பார்க்கவியை வேணு சந்தித்தானா, மணந்துகொண்டானா, புத்தி சுவாதீனம் இல்லாத கார்த்தியின் வாழ்க்கை என்னவானது என்பதே மீதிக்கதை.
கதையில் உருப்படியாக இருந்த விஷயம், தாராபுரம் மண்ணில் உள்ள பூச்சிகள், தாவரங்கள், செடிகள், மரங்கள் பற்றி எழுத்தாளர் ஆத்மார்த்தமாக விவரித்துள்ளார். அதை வாசிக்கும்போது நாம் நேராக அந்த நிலத்திற்கே சென்று வருகிறோம். ஆனால், கதையில் அசாம் பகுதி செம்மையாக இல்லை. அதை நம்மால் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. அசாமில் இருந்து ஒருவர் தாராபுரம் வருவதும் வேகமாக கூறப்படுகிறது. முக்கியக்கதை கோட்டை மாரியம்மன் - தேசாந்திரக்கார சித்தர் - கருப்பு நிற நாய்தான். இந்தக்கதையை படிக்கும்போது திடீரென விடாது கருப்பு சீரியல் எல்லாம் நினைவுக்கு வந்து போகிறது.
நவீன மருத்துவங்கள் தோற்று சித்த வைத்தியர் பச்சிலையை பிழிந்து கண் நோயை குணப்படுத்துகிறார் என்று கூறுவது அறிவியலுக்கு எதிரானது. அதையும், கண்நோய் குணமாக சித்தப்பா வேணுவை அழைத்து்க்கொண்டு அமுது - பிச்சை எடுத்து உண்பதும் ஒருகட்டத்தில் அயர்ச்சி ஆகிவிடுகிறது. அந்தப்பகுதியில் புதிய விஷயங்கள் இல்லை. சித்தப்பாவுக்கு ஊரில் செல்வாக்கு உண்டு. அவரே பிச்சை எடுக்க வந்து நிற்கும் ஒற்றை ஆச்சரியம் மட்டுமே தொடக்கத்தில் நமக்கு உள்ளது. ஊராருக்கு உள்ளது போன்று... மற்றபடி இப்பகுதி மிகவும் இழுத்துக்கொண்டே செல்கிறது.
நோய் தீர கோவிலுக்குப் போவது, அங்கேயே தங்குவது, சோறு பிச்சை எடுத்து சாப்பிடுவது என வலதுசாரி மதவாத அரசியலுக்கு சாதகமான அத்தனை அம்சங்களும் கதையில் உள்ளது. என் ஶ்ரீராம் அவர்கள் எழுதும் கதைகள் பெரும்பாலும் கிராமம் சார்ந்தவை. அதில் மக்கள் கையாளும் பல்வேறு நடைமுறைகள் சார்ந்தவை என்பதை உணர்ந்தாலும் ஒருகட்டத்தில் இந்தக் கதை உண்மையில் என்ன கூற வருகிறது என்று புரியவில்லை. கதை முடியும்போது கதை எங்கே தொடங்கியதோ, அதே இடத்தில் நிற்கிறது. கதை கர்மாவை அடையாளப்படுத்துகிறது. ஆனால், உண்மையில் செய்த செயலுக்கான பொறுப்பை ஏற்பதில் உள்ள சோம்பல் காரணமாகவே நிறைய எதிர்பாராத சங்கடங்கள் வருகின்றன. இதில் வரும் சித்தி பாத்திரம், அப்படியானது. அவருக்கு தனது மகனைப் பற்றிய கவலை. ஆனால், பார்க்கவி தனது சகோதரரின் மகள், அவளது வாழ்க்கை தனது மகனை திருமணம் செய்தபிறகு எப்படியிருக்கும் என்று யோசிக்கவில்லை. சித்தப்பா, தனது மனைவி பற்றி தெரியாமல் வேணு அனுப்பிய கடிதங்களை பார்க்கவிக்கு கொடுக்காமல் தனியாக போட்டு மறைத்து வைத்திருக்கிறார். வேணுவுக்கு பார்க்கவியின் மீதான காதல் அதிகம். அதை அவன் ஓவியமாக தீட்டுகிறான். அதுவே அவனது தொழில் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறது. ஆனால், சுயநலமான சில மனிதர்களால் சொந்த வாழ்க்கை சிதைகிறது.
திரைப்படம் போல குறுநாவலை உருவாக்க நினைத்திருப்பார் போல...
இந்தக் கதையில் நீர்வண்ண ஓவியம், ஆற்றில் மீன் பிடிப்பது, பீமன்மடை ஓவியம், கிளுவை மர இடைவெளியில் உடும்பை வேட்டையாடி வரும் ஒருவர் தர்மரைப் பார்த்து கும்பிடுவது, நன்றிக்கடனுக்காக காதலை விட்டுக்கொடுப்பது என நிறைய இடங்கள் நன்றாக வந்துள்ளன.
கோமாளிமேடை குழு
https://www.panuval.com/-10025578?srsltid=AfmBOordD1nhvjC5unjdssa5TYr7WKWBhnW4GauAOA69WpNrLa5yvs5b

கருத்துகள்
கருத்துரையிடுக