''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’
''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’
சாண்ட்ரா டயஸ், அர்ஜென்டினாவைச் சேர்ந்த இயற்கை ஆராய்ச்சியாளர், கார்டோபா தேசிய பல்கலைக்கழக பேராசிரியர். சூழலியல் மற்றும் இயற்கை பன்மைத்தன்மை ஆராய்ச்சியில் தவிர்க்க முடியாத ஆளுமை. 2025ஆம் ஆண்டு க்கான சுற்றுச்சூழல் அறிவியல் சாதனைக்கு வழங்கப்படும் டைலர் விருதை மானுடவியலாளரான எடுவர்டோ பிரான்டிசியோவுடன் இணைந்து பெறவுள்ளார். தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இருவர் டைலர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. டைம் வார இதழில் 2025 ஆம் ஆண்டில் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.
பள்ளி, கல்லூரிகளில் உங்களது வாழ்க்கை எப்படி சென்றது, சூழல் ஆராய்ச்சியை உங்களது இலக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
பள்ளி, கல்லூரி காலம் இன்னும் மறக்காமல் நினைவிலிருக்கிறது. தொடக்க, உயர்கல்வியை சிறு நகரத்தில் படித்தேன். பிறகு, கார்டோபா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தேன். என்னுடைய பதினேழு வயதில் கல்விக்காக பெருநகரத்திற்கு வந்தது சாகசமாகவும், அதேசமயம் சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும் இருந்தது. சூழல் பற்றிய ஆராய்ச்சி, சிறுவயதிலேயே தொடங்கிவிட்டது. அம்மா சமையல் செய்துகொண்டிருக்கும்போது வீட்டு தோட்டத்தில் பூச்சிகள், களைகள், தாவரங்கள், விலங்குகள் என ஏதாவது செய்துகொண்டிருப்பேன்.
உங்களது ஆராய்ச்சி வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?
ஆராய்ச்சியை, எதிர்காலமாக தேர்ந்தெடுத்தபோது என் பெற்றோர், ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்து ஆதரவளித்தனர். பலரைப் போல மருத்துவம், சட்டம் அல்லது வேறு தொழில் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. தாவரவியல் ஆராய்ச்சியாளராகவே விரும்பினேன். பள்ளி ஆசிரியர்கள் ஆராய்ச்சி சார்ந்து நான் செல்லவேண்டிய திசைக்கு வழிகாட்டினர். பல்கலைக்கழகத்தில் நான் தேர்ந்தெடுத்த ஆராய்ச்சிப் படிப்பை ஆசிரியர்கள் சிலர் ஆதரித்து ஊக்கம் அளித்தனர். சிலர், என்னை வினோதமானவளாக கருதினர். நிதிசார்ந்த சிக்கல்கள் இருந்தாலும் கார்டோபா பல்கலைக்கழகம் சிந்தனையாளர்களுக்கான இடம். சிறுபான்மையாக இருந்தவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் எனது ஆர்வத்தை பின்தொடர்ந்தேன்.
டைலர் பரிசு (2025) அறிவிக்கப்பட்டிருப்பது, உங்கள் வாழ்க்கையில் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது?
காலநிலை மாற்ற பாதிப்புகளை மக்கள் அறிந்துகொள்ள நான் பெற்ற டைலர் பரிசு உதவிபுரியும் என நம்புகிறேன். இயற்கை வளங்கள் அழிவதால், மக்களிடையே சமூக பொருளாதார சமத்துவமின்மை உருவாகிறது. டைலர் பரிசு தொடர்ச்சியாக ஆராய்ச்சியில் ஈடுபடவும், ஆர்வம் கொண்ட துறையில் அதிக தொலைவு பயணிக்கவும் ஊக்கம் தருகிறது.
ஆராய்ச்சித்துறையில் பெண்களின் நிலைமை எப்படியுள்ளது?
அர்ஜென்டினா நாட்டில், புவியியல், பொறியியல் போன்ற துறைகளைப் போலல்லாது, தாவரவியலில் தொடக்கத்தில் இருந்தே பெண்கள் பெரும்பான்மையாக இருந்து வந்தனர். நான் படிக்கத் தொடங்கிய காலத்தில், பல பேராசிரியர்கள், துறை தலைவர்கள் பெண்களாக இருந்தனர். பல தலைமுறைகளாக பல்கலைக்கழகங்களில் உள்ள பதவிகளில் ஆண்களே மேலாதிக்கம் செலுத்தி வந்தனர். உழைப்பு விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிகம் உழைத்து தங்களை நிரூபிக்க வேண்டியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள், தகவல் சேகரிப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய பணிகளைச் செய்ய பெண்கள் சிறந்தவர்கள். ஆனால், புரட்சிகரமான சிந்தனைகள் அல்லது எல்லைகளை கடந்து யோசிப்பது என்பதில் பெண்கள் முன்னேறவில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். இத்தகைய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய நாட்டில் கல்வியாளர்கள் குழு, பாலின பேதம் தவிர்த்து சமத்துவத்தோடு முன்னே செல்லவேண்டுமென விரும்புகிறேன்.
காலநிலை மாற்ற சீர்குலைவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
காலநிலை மாற்ற சீர்குலைவு என்பது ஆழமானதாகவும், வேகமாகவும் உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. சூழல் பன்மைத்தன்மை என்று கூறுவது அரசுகளுக்கு, வணிகர்களுக்கு, விளம்பரத் துறையினருக்கு கூட புரிவதில்லை. நாம் எதிர்மறையாக யோசிக்க நிறைய காரணங்கள் உள்ளது என்றாலும் நம்பிக்கையை கைவிட்டுவிடக்கூடாது. அரசியலில் உள்ள பற்றாக்குறைகளை சமூக ஆற்றல் மூலம் நீக்க முயலலாம். இந்தச்சூழலில் நாம் விட்டுக் கொடுப்பதா, சூழலை மாற்ற தீர்வுகளைத் தேடுவதா என முடிவெடுக்கவேண்டும். எதிர்கால தலைமுறையினர், இரண்டாவது வாய்ப்பைத் தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன். முடிவுகளை எடுக்க ஆற்றல், பொறுமை, துணிச்சல் ஆகியவை நம் சமூகத்திற்கு தேவை. மேலிருந்து கீழாக உள்ள அதிகார படிநிலை சமூகத்தில் மாற்றங்கள் எப்படி நடைபெறப்போகின்றன என்று தெரியவில்லை.
டைலர் பரிசு - பசுமை நோபல் பரிசு
1973ஆம் ஆண்டு, டைலர் பரிசை ஜான் மற்றும் ஆலிஸ் டைலர் தம்பதியர் இருவரும் உருவாக்கினர். அப்போதைய கலிஃபோர்னியா ஆளுநர் ரொனால்ட் ரீகன் பரிசு விழாவை தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் துறையில் செய்யப்படும் சாதனைகளுக்கு(இயற்கைவளப் பாதுகாப்பு, அரசு கொள்கை வகுப்பு, காற்று மற்றும் நீர் மாசுபாடு, பன்மைத்தன்மை இழப்பு, ஆற்றல்) டைலர் பரிசு வழங்கப்படுகிறது. பரிசு பதக்கம் மற்றும் பரிசுத்தொகை 2,50,000 டாலர்களைக் கொண்டது. 79 தனிநபர்கள், 4 அமைப்புகள் டைலர் பரிசை இதுவரை பெற்றுள்ளனர். விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க தனி கமிட்டி உள்ளது. விருது வழங்குவதை தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் நெறிப்படுத்தி ஒருங்கிணைக்கிறது.
மூலம்
https://www.academie-sciences.fr/interview-de-sandra-diaz-laureate-du-prix-tyler-pour-lenvironnement
Tylerprize.org
தமிழ் மொழிபெயர்ப்பு
ச.அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக