உங்களது படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நூல் - டெய்லி ரிச்சுவல்
டெய்லி ரிச்சுவல்
மாசன் குரே
சுயமுன்னேற்ற நூல்
171 பக்கம்
தினசரி சடங்கு என கலைஞர்களுக்கு என்ன இருக்கும்? கட்டுரை, நாவல், ஓவியம், திரைப்படம் இதுதானே? அதை எப்படி உருவாக்குகிறார்கள், அதற்கு என்னென்ன விஷயங்களை செய்கிறார்கள் என்பதுதான் நூலின் மையப்பொருள்.
நூலில் ஏராளமான திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கட்டுமான கலைஞர்கள், ஓவியர்கள், இசை அமைப்பாளர்கள் தங்களின் பழக்க வழக்கம் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களே தங்களைப் பற்றி கூறுகிறார்கள் அல்லது அவர்களைப் பற்றி சுயசரிதை எழுதும் பத்திரிகையாளர்கள் விளக்கமாக எழுதியிருக்கிறார்கள். நூலை வாசிப்பவர்களுக்கு தேவையான குறிப்புகளும் கூட நூலின் பின்பக்கத்தில் உள்ளது. நூல்களை தேடி எடுத்து பார்த்துக்கொள்ளலாம்.
சில எழுத்தாளர்கள் திருமணம் செய்தாலும் கூட எழுத்தாளராக சாதிக்கும் இயல்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதற்காகவே ஒருவர் வேலைக்கு செல்வது இன்னொருவர் எழுதுவது என திட்டமிடுகிறார்கள். அதில் ஒருவர் வெற்றி பெறுகிறார், இன்னொருவர் தோல்வியுறுகிறார். இந்தவகையில் எழுத்தாளர் கார்சன், ரீவ்ஸ் ஜோடியில் கார்சன் வெற்றிபெறுகிறார். அதாவது, மனைவி. கணவர் அந்தளவு இலக்கியத்தில் வெற்றி பெறமுடியவில்லை. ஆனாலும் அவர்கள் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிட திருமண உறவை தொடர்கிறார்கள். இதேபோல இன்னொரு எழுத்தாளர் ஜோடி வாழ்க்கையை தொடங்குகிறார்கள். இதில் கணவர், பொருளாதார சுமையை ஏற்கிறார். அதேநேரம் இலக்கியத்தில் கவனம் செலுத்தி வெற்றி பெறுகிறார். மனைவியின் இலக்கிய படைப்புகள் தடைகளை சந்திக்கிறது.எதிர்பார்த்தபடி வெற்றியும் அடைவதில்லை.இப்படியான சூழலில் அந்த உறவு துண்டுபடுகிறது. எழுத்தாளர்களின் எழுத்துக்கு இணையாக அவர்களிடம் உள்ள மூடநம்பிக்கைகளையும் நாம் அறிந்துகொள்கிறோம்.
ஒருநாளுக்கு மூன்று முறை பாலுறவு கொள்வது, படைப்புக்காக தன்னை அறையில் அடைத்து வைத்து வருத்திக்கொள்வது, ஒரே மாதிரியான உணவை ஆண்டுக்கணக்கில் சாப்பிடுவது, படைப்புத்திறனுக்காக போதை உட்கொள்வது, மாத்திரைகளை உண்பது, கட்டுப்பாடு இன்றி மது அருந்துவது, விருந்துகளுக்கு செல்வது, புகைப்பது என நிறைய விஷயங்களை அறிகிறோம்.
சில பெண் எழுத்தாளர்கள் குடும்பத்திற்கு தெரியாமல் இலக்கிய படைப்புகளை எழுதியிருக்கிறார்கள். குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, தனக்கு பிடித்த வேலையையும் செய்து வந்திருக்கிறார்கள். இந்த வகையில் விளம்பர கம்பெனியில் வேலை செய்துகொண்டே கவிதை எழுதும் கவிஞர் பற்றிய குறிப்பு நூலில் வருகிறது. பல ஆண்டுகள் அவர் அலுவலகத்திலேயே அமர்ந்து அலுவலக வேலையை முடித்துவிட்டு கவிதை எழுதிக்கொண்டே வந்திருக்கிறார். பிறகு முதலாளி அதைக் கண்டுபிடித்து பணியை விட்டு நீக்கிய அநீதியும் நடந்திருக்கிறது.
நூலில் உள்ள பெரும்பாலான ஆட்கள் குறிப்பிட்ட நேரம் செலவிட்டு படைப்புகளை உருவாக்கியவர்களே அதிகம். மற்றபடி ஓவியர்கள், கட்டுமான கலைஞர்கள் சிலர், படைப்பை உருவாக்குவது இயல்பாக வரட்டும் என அவர்கள் போக்கில் சிந்தனை வந்தால் மட்டுமே வேலை செய்வது என வாழ்ந்திருக்கிறார்கள். தினசரி குறிப்பிட்ட நேரம் எழுத செலவிடுவது சிறந்த பயன்களை அளிக்கும் என்றே தோன்றுகிறது. அதை முடிவானது என கருத வேண்டியதில்லை. ஒருவர் பிழைப்புக்காக இன்னொரு வேலையை செய்தாலும் கூட நேரம் கிடைக்கும்போது எழுதினாலே படைப்புகளை உருவாக்க முடியும். அப்படியான நம்பிக்கையை நூல் மெல்ல மெல்ல உருவாக்குகிறது.
நிறைய எழுத்தாளர்களது வாழ்க்கையில் திருமணம் ஆரோக்கியம் சார்ந்த மாறுதல்களை உருவாக்கியுள்ளது. உலகை பற்றி கவலையேபடாது தனியாக வாழ்ந்து சாதித்தவர்களும் இருக்கிறார்கள். அதை மறுக்க முடியாது. மனைவி, குடும்பம், பிள்ளை என வாழ்ந்தவர்கள் குறிப்பிட்ட பட்டியல் போட்டு வேலைகளை செய்து முன்னேறியிருக்கிறார்கள்.
பல்வேறு கலைஞர்களுடைய வாழ்க்கையை அறியும்போது, கூடுதலாக சில சுயசரிதைகளைப்பற்றிய தகவல்களும் கிடைக்கிறது. ஆர்வமுள்ளோர் அந்த நூல்களை வாங்கி படிக்கலாம்.
படைப்பாளிகள் இந்த நூலை வாசிக்கும்போது, தங்களுடைய படைப்புகளை உருவாக்குவதற்கான சிந்தனைகளைப் பெற முடியும். தேக்க நிலையில் இருந்தாலும் கூட ஏதேனும் ஒரு சிந்தனை அவர்களுக்கு கிடைக்கலாம். அவர்களது வாழ்க்கை மாறக்கூடும்.
நன்றி எழுத்தாளர் செல்வேந்திரன்
கோமாளிமேடை குழு

கருத்துகள்
கருத்துரையிடுக