அமெரிக்கா, சீனா வர்த்தகப்போரில் மாட்டிக்கொண்ட ஹூவாய்!

 






ஹவுஸ் ஆப் ஹூவாய்
ஈவா டு
பெங்குவின்
2025

சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை அறிந்திருக்கிறீர்களா? வதந்தி நாளிதழைபடிப்பவர்கள் கூட தடை செய்யப்பட்ட சீன நிறுவனம் என தகவல் அறிந்திருப்பார்கள்.அதை அறியாதவர்கள் கூட ஹூவாயின் பிராண்டான ஹானர் போனை பயன்படுத்தியிருக்க கூடும். சீனா மட்டுமல்ல வல்லரசு நாடுகளிலும் சிறப்பாக வளர்ந்து வந்த நிறுவனம் ட்ரம்ப் காலத்தில் வழக்கு போடப்பட்டு அதன் வளர்ச்சி பலவந்தமாக தடுக்கப்பட்டது. ஒரு நாடு மட்டுமல்ல, அமெரிக்காவின் நட்பு நாடுகள் பலவும் ஹூவாயின் தொலைத்தொடர்பு சேவையை, பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்தின. இந்த நூல், ஹூவாய் நிறுவனர் ரென்னின் முதல் மனைவி மகளான ரென் வாங்சூ கனடாவில் காவல்துறையால் கைது செய்யப்படுவதில் தொடங்கி அந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்னே என்ன நடந்தது, பின்னே என்ன நடந்தது என விளக்கி ஹூவாய் எப்படி எதிர்ப்பை சந்தித்து தன்னை காப்பாற்றிக்கொண்டது என்பதோடு நிறைவடைகிறது.

நூல் முழுக்க ஹூவாய் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள், அதை செய்ய அந்த நிறுவனம் செய்த முயற்சி, திட்டமிடல் ஆகியவை நிறைந்திருக்கிறது. அதேசமயம். சீன நிறுவனம் என்ற ஒரே காரணத்திற்காக இரு நாடுகளுக்கு இடையில் பகடைக்காய் போல பயன்படுத்தப்பட்ட தனியார் நிறுவனம் ஹூவாய். இசட்டிஇ என்ற அரசு நிறுவனம் கூட பெரியளவில் இக்கட்டுகளை சந்திக்கவில்லை. காரணம், அந்த நிறுவனம் தொழில்நுட்ப அளவில் ஹூவாய் போல வளர்ந்திருக்கவில்லை. ஆனால், ஹூவாய் நிறுவனம், 2016ஆம் ஆண்டிலேயே 5ஜி தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து செயல்படுத்த முயன்றது. அதில் கணிசமான வெற்றியும் கண்டுவிட்டது.

இதை கண்டு வயிறு எரிந்த வல்லரசு நாடுகள் திட்டமிட்டு ஹூவாய் மீது வழக்குகள் போட்டு, அதன் நிறுவனரின் மகள் வாங்சூவை கனடாவில் கைது செய்து மூன்று ஆண்டுகள் வீட்டு சிறையில் வைத்திருந்தனர். இந்த அநீதியை அமெரிக்கா செய்ததோடு, ஹூவாயின் வணிகத்தை உருக்குலைக்க நாடு தாண்டியும் முயன்றது. அதனால் மேற்கு நாடுகள் பலவும் ஹூவாய்க்கு எந்த ஆதரவையும் வழங்கவில்லை. அதனால் யாருக்கென்ன நஷ்டம். இன்று ஹூவாய் நிறுவனம், கூகுள், குவால்காம், இன்டெல் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் ஆதரவின்றி தனியாக ஆற்றல் வாய்ந்த சிப்புகளை உருவாக்கிவிட்டது. தனி இயக்கமுறைமையை பயன்படுத்தி வருகிறது. ஆப்பிளை விட அழகான திறன் வாய்ந்த ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருகிறது. நூலாசிரியர், 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் ஹூவாய் முன்னிலை வகிக்கிற நிறுவனம் என ஒப்புக்கொள்கிறார். ஒரே ஒரு இடத்தில் மட்டும் அமெரிக்கா பிற நாடுகளை எப்படி உளவறிந்தது. அதற்காக டெல், சிஸ்கோ ஆகிய நிறுவனங்களை எப்படி பயன்படுத்திக்கொண்டது என கூறப்படுகிறது.

ஆசியாவில் ஒரு நாடு தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்து முன்னேறிவிடக்கூடாது என பொறாமையில் அமெரிக்கா, ஜனநாயகம், தேசிய பாதுகாப்பு என பல்வேறு அநீதிகள் ஹூவாய் நிறுவனத்திற்கு செய்தது. இன்றளவுக்கு அந்த நாட்டின் கட்டப்பஞ்சாயத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஹூவாய் தனது தொழிலை நடத்தமுடியவில்லை. சேவைகளை வழங்கமுடியாத சூழ்நிலை உள்ளது.

நிறுவனத்தைப் பற்றி மட்டுமே சொல்லாமல் ரென்னின் பிறப்பு தொடங்கி தேசியவாதியான அவரது பெற்றோரின் அரசியல் நிலைப்பாடு காரணமாக அவரது படிப்பு, தொழில் என பலவும் மாறுகிறது. நிறைய துன்பங்களை எதிர்கொண்டு ரென் முன்னேறுகிறார். அவரது இளமைக்காலம் வலி, வேதனைகளை உள்ளடக்கியது. இதெல்லாம் கடந்து தனது நாட்டை அவர் நேசித்தார். அதற்காகவே உள்நாடு, வெளிநாடு என பல்வேறு அரசுகளால் தாக்கப்பட்டார். ரென் நல்லவர் கெட்டவர் என கருப்பு வெள்ளை ஆய்வுக்கு செல்லவேண்டாம். அவர் ஒரு வணிகர்,

ஹூவாய் நிறுவன கலாசாரம் ஓநாய் கலாசாரம். பணியாளர்களுக்கு இடையில் குரூரமான போட்டியை உருவாக்கி வேலை செய்யும் அணுகுமுறை தொடக்கத்தில் வெற்றியை கொடுத்தாலும் பின்னாளில் அதுவே பணியாளர்களின் தற்கொலைக்கு காரணமானது. பிறகு பணியாளர்கள் மீதான அணுகுமுறை மாற்றப்படுகிறது. ரென் பழமையான எண்ணங்களைக் கொண்டவர். குறிப்பாக பெண்களை பணியாளர்களாக ஏற்பது பற்றிய நிகழ்ச்சியில் அவர் கூறும் கருத்து சங்கடமானது. சரிதான். அவருடைய காலகட்ட கலாசாரம் வேறு. இன்றுள்ள சூழல் வேறு என புரிந்துகொள்ள வேண்டியதுதான்.

ரென் எலக்ட்ரானிக்ஸ் படித்த பொறியாளார். அதேசமயம் ஏஐ, ஸ்மார்ட்போன் பற்றியெல்லாம் அவருக்கு பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால், அதேசமயம் உலகம் மாறுவதை அவர் உணர்ந்திருக்கிறார். நிறுவனம் பிழைத்திருக்க ஸ்மார்ட்போன், ஏஐ தேவை என்பதை அவருக்கு கீழுள்ள அதிகாரிகள் கூறுவதை கவனித்து கேட்கும் மனநிலை அவருக்கு இருக்கிறது. அதனால்தான் ஹூவாய், ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியில் சாதனை படைத்தது. இன்று மடிக்கணினி, டேப்லட், ஸ்மார்ட்வாட்ச் என முன்னேறிகொண்டிருக்கிறது.


ஹூவாயில் பணியாளர்களுக்கான சம்பள உயர்வை கீழேயே வைத்திருக்க புது தந்திரத்தை கையாண்டிருக்கிறார்கள். அதாவது, பணிவிலகல் விழாவை நடத்தி குறிப்பிட்ட இலக்கை அடையாதவர்களை வேலையில் இருந்து நீக்குவது, அதாவது அவர்களே கடிதம் எழுதி நிர்வாகத்திடம் கொடுத்துவிடுவார்கள். ஒருமுறை பணி விலகிவிட்டால் சீனியாரிட்டி என்ற அனுபவம் காணாமல் போய்விடும். பிறகு மீண்டும் நிறுவனத்தில் இணைந்தால், சம்பளம் குறைவாக கொடுத்தால் போதும். சீனியாரிட்டியை இப்படி அழிக்க முடியுமா என ஆச்சரியமாக உள்ளது. அடுத்து, ஹூவாயின் பங்குகள். தனியார் நிறுவனத்தை சீனாவில் நடத்துவது அரசியல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என உணர்ந்து, பங்குகளை தொழிலாளர்களுக்கு வாங்கச்சொல்லிவிட்டு அவர்களை சங்கம் ஒன்றை தொடங்கச்சொல்லி அதை வைத்து ஹூவாய் ஒரு பல்வேறு மக்கள் பங்கேற்றுள்ள நிறுவனம் என கூறுகிறார்கள்.

ஹூவாய் செயல்பட்டுள்ள விதம், நிர்வாக ரீதியாக முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்டது. அவர் தேசப்பற்று என்று கூறினாலும் ஊழியர்களுக்கான நலன்கள் என்று பார்த்தால் வேலை செய்யும் நிறுவனம் செய்தது குறைவுதான். ஹூவாய்க்கு சீன அரசு ஆதரவு தரவில்லை என்றால் சாலை கண்காணிப்பு கேமரா வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்க முடியுமா ? குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்பம். இதை இன்று உலகம் முழுக்க 80 நாடுகளில் பயன்படுத்தி வருகிறார்கள்.  

ஒரு தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி, அந்த நிறுவனத்தின் நாட்டையே வலுவாக்கி வளர வைக்க முடியுமா என்றால் முடியும் என்று திடமாக சொல்கிறது ஈவா டு எழுதியுள்ள இந்த நூல்.

கோமாளிமேடை குழு

 








































































கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!