தனது அம்மாவை அடித்தவர்களை பழிவாங்கும் எவர்க்கும் கீழ்ப்படியாத குணம் கொண்ட நாயகனின் போராட்டம்!
தி வேஸ்ட்ரல் டர்ன்டு டு லெஜண்ட்
மினி டிராமா
டிராமா ரஷ்
யூட்யூப்
ராணுவ தளபதி குடும்பம். தளபதி இறந்துவிடுகிறார். அவருக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே. அவன் அரசு வேலைக்கு கூட முயலாமல் தத்தாரியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். ரே டுன் என்ற அவனது உடலில் வேறொருவரின் ஆன்மா உள்ளே புகுகிறது. அவனது குடும்பத்தில் அம்மா மருத்துவர். அவரது வருமானத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகனுக்கு அம்மா, அவர்கள் வளர்ப்பு பிள்ளையாக வளரும் பெண் சூ என்ற பெண் பிள்ளை இருக்கிறாள். நாயகன் ரேவுக்கு சூ தங்கை போல.
ரே டுன்னின் குடும்பம் நொடித்துப்போனதால் அவனோடு நகரத்தின் அட்மிரல் வார்ட் செய்துகொண்ட திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொள்கிறார். அதற்கு அவர் ஒரு நாடகம் ஆடுகிறார். அதாவது, நாயகன் ரே வாழும் வீட்டை வார்ட் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவன் வாங்கிக்கொண்டதாக, அவர்களை காலி செய்யுமாறு மிரட்டுகிறான். அப்போது வார்ட் காப்பாற்றுவது போல வந்து வீட்டைக் காப்பாற்றிக் கொடுத்துவிட்டேன். கல்யாண ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்கிறார். அதை ரே ஏற்றுக்கொள்வதில்லை.
வீட்டை காலி செய்ய வந்தவன், நாயகன் மீது பெண்ணை மானபங்கம் செய்வதாக சதி செய்தி அடித்து உதைத்த சம்பவம் முன்னர் நடைபெற்றது. அதோடு, அதில் நாயகனின் அம்மாவையும் அடித்து தள்ளியதில் நெற்றியில் காய வடு உள்ளது. அதை பார்க்கும்போதெல்லாம் நாயகன் ரத்தம் கொதிக்கிறது. பழிவாங்க நினைக்கிறான். நாயகன் ரேவுக்கு தற்காப்புக்கலை தெரியாது. அவன் வாழும் காலத்தில் துப்பாக்கியும் கண்டுபிடித்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசு தேர்வு எழுதி முன்னுக்கு வருவது மட்டுமே ஒரே வழி.
அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், வில்லனோடு மதுபான விடுதிகளில் சுற்றித் திரிகிறாள். அவளது பெயர் டுனா, ரே தானாக முன்வந்து பேசினால் கூட அவள் நாயை விட கேவலமாக அவனை நடத்துகிறாள். எல்லாம் பணம், அந்தஸ்து வெறி. டுனா அந்தஸ்தில் மேலே இருக்கிறாள். டுன் குடு்ம்பம் கீழே வந்துவிட்டது.
நாயகன் தனது அம்மாவோடு சொந்த வீட்டை விட்டு வெளியேறி மருந்துக்கடையில் தங்குகிறான். அங்கும் வாடகை விட்டவன், நாயகன் அம்மாவை தேவடியா என்று திட்டுகிறான். எதற்காக, வாடகை பாக்கிக்காக. அதை முதலில் பொறுத்துக்கொள்ளும் நாயகன், கட்டிட முதலாளியை கொல்லவேண்டும் என உறுதி எடுக்கிறான். எதிர்காலத்தில் இருந்து வந்ததால் அறிவியல் அறிவு உள்ளது. இந்த தொடரில் நாயகனுக்கு அறிவியல் அறிவு மட்டுமே கைகொடுக்கிறது. மற்ற விஷயங்களை அவனே உழைத்து பாடுபட்டு பெறுகிறான். லாஜிக் மீறல்கள் குறைவு. அதுதான் பிற மினி டிராமாக்களிலிருந்து இந்த டிராமாவை வேறுபடுத்திக் காட்டுகிறது.
உப்பை சுத்திகரித்து அரைத்து விற்க நினைக்கிறான். அதற்காக அம்மாவின் மூலிகைகளை கடைத்தெருவுக்கு கொண்டு போகிறான். மருந்து கடைக்காரி 70 டேலுக்கு கேட்கிறாள். திருட்டுப்பொருளா என கிண்டல் செய்கிறாள். அப்போது அங்கே வரும் வார்ட் குடும்பத்திற்கு நெருக்கமான வில்லன், 50 டேல் முழு சாக்கையும் கொடு என்கிறான். நாயகன், காசே இல்லாமல் இருப்பதால் 50 டேலை வாங்கிக்கொள்கிறான். அதை வைத்து சிறிது உப்பு வாங்கி அதை சுத்திகரிக்க முயல்கிறான். கேலி கிண்டல் செய்த வில்லன், அவனை கொல்ல 500 டேல் என ஒப்பந்தம் செய்து கூலி கொலைகாரனை ஏவுகிறான். அவனுடன் நாயகன் ரே ஒப்பந்தம் செய்துகொண்டு, 5000 டேல்களை சம்பாதித்து தருவதாக சொல்கிறான். கூலி்க்கொலைகாரன், நீ காசைக் கொடுக்கவில்லை என்றால் உன் குடும்பத்தை தேடிக் கொல்வேன் என்கிறான்.
நாயகன் ரேவுக்கு தேவை பாதுகாப்பு. அதை கூலிக்கொலைக்காரனிடம் பெற்றுக்கொள்ள நினைக்கிறான். ஒப்பந்தம் ஒகே என்று சொல்லி உப்பை சுத்திகரித்து அவனிடம் கொடுக்க அவன் உப்புக்கடைக்கு சென்று விற்று வருகிறான். அதில் வரும் பணத்தை அம்மாவுக்கு கொடுக்கிறான். மருந்தக வாடகையையும் அடைக்கிறான். அப்போது கூலிக்கொலைகாரனிடம் மருந்து கட்டிட உரிமையாளனை கொல்லவேண்டும் என்கிறான். நான் செய்யமாட்டேன் நீயே செய் என்கிறான். நாயகனே அவனை கழுத்தை வெட்டிக் கொல்கிறான். பிறகு அவன் வேலையைப் பார்க்கிறான். கூலிக் கொலைகாரன் நாயகன் மேல் நம்பிக்கை வந்து உப்பு சுத்திகரிக்க தனி இடம் ஒன்றை உருவாக்குகிறான். அதில் நாயகன் இரவு முழுக்க வேலை செய்து உப்பை சுத்திகரிக்கிறான். கூலிக்கொலைகாரன், அந்த உப்பை கொண்டு சென்று விற்க முயலுகையில் அரசு ஆட்கள் அவனை பிடித்து சிறையில் அடைக்க முயல்கிறார்கள். அதில் கொலைகாரன் துப்பாக்கியால் சுடப்படுகிறான். அவனை நாயகனின் அம்மா கருணையோடு காப்பாற்றுகிறான். நாயகனுக்கு வாய்ப்பு கிடைத்தால் கொலைகாரனை கொல்லவே விருப்பம். அம்மா, ஒருவன் பலவீனமாக இருக்கும்போது அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என தடுத்துவிடுகிறாள்.
ஒருவகையில் அதுவே நாயகனுக்கு சாதகமாகிறது. உயிர்பிழைத்த கூலிக்கொலைகாரன் நாயகனுக்கு நன்றிக்கடன் பட்டவன் ஆகிறான். இருவரும் சேர்ந்து சுத்திகரிப்பு செய்த உப்பை விற்க முயல்கிறார்கள். அதை மிக குறைவான விலைக்கு வியாபாரி வாங்குகிறான். அவன், கூலி்க்கொலைகாரனுக்கு நெருக்கமானவன். நாயகனுக்கு வார்ட் குடும்ப பெண்ணான டுடானாவை மணக்கவேண்டுமென ஆசை. அதனால் அவமானங்களை பொருட்படுத்தாமல் சொன்ன நாளில் வார்ட் குடும்ப உறுப்பினராகவே மாறி அங்கு செல்கிறான்.
அங்கு அவனை மண்டியிடச்சொல்லி நாய் என்று கூறி அவமானப்படுத்துகிறார்கள். இந்த நேரத்தில் டுனாவை மணக்க நினைத்த வில்லன், மருந்துக்கடை கட்டிட உரிமையாளர் கழுத்தறுபட்டு செத்த குற்றத்தை நாயகன் மீது சுமத்துகிறான். நாயகன் அரசு தேர்வை எழுதியுள்ள சமயம். மாமனார் வீட்டில் அவமரியாதை செய்யப்பட, கொலைக்குற்றம் என் மீது இருக்கிறது. நான் ஒரு வார்த்தை நீதிமன்றத்தில் உங்கள் குடும்ப பெயரை சொன்னால் உங்கள் நிம்மதி போய்விடும் என அச்சுறுத்துகிறான். மாமனார், நல்லவர் கிடையாது. தந்திரங்களைக் கொண்டவர். ஆனால் மான அவமானத்திற்கு பயப்படுபவர். நாயகன் ரேவை பிறகு மண்டியிட சொல்வதில்லை. விறகுகளை போட்டு வைக்கும் அறையில் தங்க வைக்கிறார்கள்.
நாயகனுக்கு நேரடியாக அரசியல், பொருளாதார பலம் கிடையாது. கிடைத்த பணமும் கூட சட்டவிரோத உப்பு சுத்திகரிப்பில் கிடைத்ததுதான். வார்ட் குடும்ப பலத்தை வைத்து தன்னை மேலேற்றிக்கொள்ள நினைக்கிறான். வில்லனின் அம்மா, பல சதித்திட்டங்களை தீட்டியும் ரேவை வெற்றிக்கொள்ள முடியவில்லை என்பதால் நேரடியாக பேசலாம் என வருகிறாள். அதற்கு முன்னதாக, நாயகன் மீது சுமத்திய கொலைப்புகார் வில்லனுக்கு எதிராக திரும்பிவிடுகிறது. அவன் டுனாவை மணக்க போலியாகவே சாட்சியங்களை உருவாக்கி வைத்திருக்கிறான். கூலிக்கொலைகாரனை கூட்டி வந்து கொலைகாரன் போல நடிக்க வைத்து தப்புவிக்கிறான். எனவே, கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுபடுகிறான். அதேநேரம், வில்லனையும் மாட்டிவிடுகிறான். அதே அவையில் புயல் வெள்ளம் வருவதற்கான எச்சரிக்கையை மக்களுக்கு சொல்கிறான். அவனை முட்டாள் என திட்டியபடி மக்கள் கலைந்து செல்கிறார்கள்.
பிறகுதான் வில்லனின் அம்மாவுடன் சந்திப்பு. அவருக்கு நாடி பிடித்து பார்த்து உடலிலுள்ள நோயை சொல்கிறான் நாயகன். நோய் ஏதும் கிடையாது. மாதவிடாய் காரணமாக ஏற்படும் சில தொந்தரவுகள் அவருக்கு இருக்கிறது. தனது மகன் மீதான புகார் வாபஸ் வாங்கிக்கொள்ளச்சொல்லி, நாயகனின் பூர்வீக வீட்டு பத்திரத்தை கொடுக்கிறார். நாயகன், தனது அம்மாவை தெருவில் அடித்து துன்புறுத்தியதற்கு வீட்டு பத்திரம் மட்டும் போதாது என்று சொல்லி அவரின் உடலையும் கேட்கிறான். அவரும் வேறுவழியின்றி ஏற்கிறார். ஆனால் நாயகன் பழிவாங்குவதை அவ்வளவு எளிதாக விடுவதில்லை.
வில்லனுடன் நாயகன் பேசும்போது ஐஸ் தயாரிப்பதை லேசுபாசாக சொல்லிவிட்டு சொல்கிறான்.அதை வைத்து வில்லன் ஐஸ் தயாரிக்கிறான். அவனுக்கு நாயகன் புயல் வரும் என்று சொன்னது நினைவில் இல்லை. இந்த நேரத்தில் சுத்திகரித்து உப்பை வாங்கிய வணிகர்களைப் பற்றி அரசுக்கு தகவல் கொடுக்க அவர்கள் வியாபாரியின் சரக்கை பிடித்துவிடுகிறார்கள். கடத்துபவர்களை சுட்டுக்கொல்கிறார்கள். வியாபாரியும், இன்னொரு ஆளும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். இருவரும் சேர்ந்து நாயகனை பழிவாங்க வார்ட் குடும்ப பெண்களை கடத்துகிறார்கள். அதாவது நாயகனுக்கு நிச்சயமான டுனா, குயின் என இரு இளம்பெண்கள். அதைப்பற்றி கடிதம் எழுதி அனுப்பி வைக்கிறார்கள். நாயகன் ரே சொல்வதை அட்மிரல் வார்ட் ஏற்க மறுக்கிறார். எனவே நாயகன் தானாகவே இரு பெண்களை காப்பாற்ற போகிறார். கூடவே கூலிக்கொலைகாரனை கூட்டிச் செல்கிறார். நாயகனுக்கு குயின் என்ற பெண், ஆண் உடையில் தன்னிடம் நிறையமுறை பேசியவள் என தெரியாது. லிப்ஸ்டிக் போட்ட ஆண் எங்கே இருப்பான் என்று கூட தெரியாமலா நாயகன் இருப்பான் என கேட்காதீர்கள். அவளைக் காப்பாற்றி கல்யாணம் செய்துகொள்வதுதான் நாயகனின் திட்டம். வார்ட் குடும்பத்தில் அவனுக்கு ஆதரவாக இருப்பவள் அவள் ஒருத்திதான்.
வெள்ளத்தைப் பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நகரிலுள்ள அட்மிரல் எடுக்கவேண்டும். அவரோ, அதைப்பற்றி ரே சொன்னதை பெரிதாக எடுத்துக்கொ்ளவதில்லை. இறுதியாக வெள்ளம் வந்தவுடன், அவருக்கும் மேலே உள்ள அதிகாரிகள், ஆளுநர் எல்லாம் வீட்டுக்கு வந்து அவரை குற்றத்திற்கு பொறுப்பு என மாட்டிவிடப்பார்க்கிறார்கள். அப்போதும் நாயகன் ரே குண்டுபட்ட காயத்துடன் அங்கு வந்து மாமனாருக்கு உதவி செய்கிறான். அட்மிரல், ஆளுநர், நீதிபதி என பலருடைய பதவியையும் காப்பாற்றுவது நாயகனின் புத்திசாலித்தனம்தான்.
நாடகம் இரண்டரை மணிநேரம்தான். ஆனால், முழுமையாக முடியவில்லை. நாடகம் முழுக்க உள்ள பாத்திரங்கள் நேர்மறை, எதிர்மறை என எப்படியும் கூறிவிடமுடியாது. குறிப்பாக நாயகன் பாத்திரம்.
கற்பனை, புனைவு நாடகம் என்பதாக நாடகம் முழுக்க அமையவில்லை. காலம் கடந்த பயணம், ஆன்மா என்பதோடு புனைவு நிறுத்தப்பட்டுவிடுகிறது. பிறகு நாயகன் முன்னேறுவதெல்லாம் சொந்த புத்தியை வைத்து மட்டும்தான். நாடகம் நெடுக நாயகன் சந்திக்கும் அவமானங்கள் அவனுடைய குடும்ப அந்தஸ்து, பணம் சார்ந்தவைதான். திறமை சார்ந்தது அல்ல. பெண் ஆண்வேடம் தரித்து வருவது சீன நாடகங்களில் இயல்பாகிவிட்டது. அதை கோமாளித்தனமாக காட்டாமல் சற்று இயல்பாக காட்ட முயன்றிருக்கிறார்கள். ஆண் வேடம் போடும் பெண் உதட்டில் லிப்ஸ்டிக் எதற்கு பூசியிருக்கிறார் என இயக்குநருக்கே வெளிச்சம்.
நாயகனுக்கும் கூலிக்கொலைகாரனுக்கும் மோதலாக உறவு தொடங்கினாலும் நெருக்கமான நட்பு பின்னர் உருவாகிறது. கொலைகாரனின் உடலிலுள்ள துப்பாக்கித் தோட்டாவை சிகிச்சை செய்து எடுப்பது நாயகனின் அம்மா. மருந்து கொடுப்பது நாயகனின் தங்கை. நாயகன், இரண்டு இளம்பெண்களை காப்பாற்றும்போது தோட்டாக்களை நாயகன் தன் உடம்பில் வாங்கிக்கொண்டு கொலைகாரனை காப்பாற்றுகிறான். அந்த இடத்தில் அவன் தன்னை மட்டுமே காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். அப்படி நினைப்பதில்லை. நாயகன், கூலிக்கொலைகாரன் என இருவருக்குமான உறவு சிறப்பானது. முதலாளி, வேலைக்காரன் என்பது போன்ற பாகுபாடு இருக்காது. இருவருமே வேறுவேறு வர்க்கங்களை சேர்ந்தவர்கள். நண்பர்கள் போலவே இருப்பார்கள்.
நாயகனுடைய அம்மா மருத்துவர், மருந்தகம் ஒன்றை நடத்தி வருவார். அவருக்கு மகனுக்கு திருமணமாகி நன்றாக இருந்தால் போதும் என நினைப்பாள். மற்றபடி அவளுக்கு அதிகாரம், பணம் என பெரிய ஆசை ஏதும் இருக்காது. வம்பு வழக்கு என போகாமல் பையன் வீட்டில் இருந்தால் கூட நல்லது என நினைப்பாள். வளர்ப்பு பிள்ளையான சூவை, ரேவுக்கு மணம் செய்து வைக்கலாமா என்று கூட யோசனை இருக்கும். அதை அவள் சூவிடம் கேட்கவும் செய்வாள். நேர்மை, அறம் பற்றிய உறுதியான கொள்கை கொண்டவள்.
தொன்மை சீன சமூகம், ஆண்கள் மேலாதிக்கம் கொண்டது. பெண்கள் போகப்பொருட்கள்தான். அவர்கள் அதிகாரிகளாக இருக்க தகுதியற்றவர்கள் என மக்களின் சிந்தனை உள்ள காலம். உப்பு வியாபாரம் என்பதே செல்வம் கொழிப்பதாக உள்ளது. அதை சுத்தகரித்து விற்பது, தங்கத்தை விற்பதை விட லாபகரமான தொழில். சொத்து, அரசு வேலை என்பது சீன சமூகத்தில் பிரிக்க முடியாத அங்கம்.
இதில் நாயகனை குற்றம்சாட்டும் இடத்தில் மண்டியிட சொல்கிறார்கள். நான் கல்வியாளன், அரசு பதவி இருந்தாலும் இல்லையென்றாலும் கல்வியாளன். மண்டியிட வேண்டியதில்லை என்கிறான். மாமனார் குடும்பத்தில் உறுப்பினராக மாற்றும் சடங்கு என்பது ஒருவனின் சுயமரியாதை,தன்மானத்தை இகழ்வதுதான். ஆனால், அதை நாயகன் ஏற்பது எதிரிகளிடமிருந்து தப்பிக்க அதிகாரம் கொண்ட ஒருவரின் நிழல் தேவைப்படுகிறது என்ற ஒரே காரணம்தான். அங்கும் மாமனார் அவனை மண்டியிட சொல்கிறார். நான் உங்கள் குடும்ப மருமகன் எதற்கு மண்டியிட வேண்டும் என்கிறான். அவனை அடித்து உதைத்து முகத்தில் செருப்புக்கால் வைத்து மிதிக்கிறார்கள். அப்போதும் அவன் மண்டியிட மறுக்கிறான். இதேபோல, அதே குடும்பத்தில் வயதான கிழவி சாப்பிட அழைத்து மண்டியிட்டு வணக்கம் சொல் என்கிறாள். நீ நாய் என்று அழைக்கிறாய், உன் பேத்தியும் மதிப்பதில்லை. அதற்கு நன்றி சொல்லி நான் மண்டியிட வேண்டுமா என்ன என துணிச்சலாக கேட்கிறான். அவன் பேச்சு வேகம் அதிலுள்ள உண்மை காரணமாக கிழவிக்கு வாதநோய் வேகம் கொள்கிறது. அவளை காப்பதும் நாயகனின் மருத்துவ அறிவுதான்.
நாயகனும் கூலிக்கொலைகாரனும் ஒன்றாக சேர்ந்தாலே பலமான கூட்டணிதான். நாயகனுக்கு புத்திபலம், கொலைகாரனுக்கு உடல் பலம். அப்புறம் என்ன? சீன சமூகத்தில் தொடர்பு, உறவுகளின் பலம் என இதெல்லாம் கணக்கு போடுகிறார்கள்.
நாயகன் யாரையும் காயப்படுத்த நினைப்பதில்லை. ஆனால், அவனை தேடி குரூரமான மனிதர்கள் வருகிறார்கள். அவர்களை நாயகன் எளிதாக விட்டுவிடுவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் என வகுத்து சிக்க வைக்கிறான். அவனை கொல்ல வரும் கூலிக்கொலைகாரனுக்கும் நாயகனுக்கும் எந்த பிணைப்பும் இல்லை. ஆனால் இருவருமே பணக்கார வர்கத்தால் ஒடுக்கப்படுபவர்கள். இடையறாது அவர்களது வாழ்வு பணம், அதிகாரத்தால் அலைகழிக்கப்படுகிறது.
டிராமா முடியவில்லை. பழிவாங்க நினைத்த மாமனாரை எதற்கு காக்க வேண்டும் என பலரும் நினைக்கலாம். அங்கு காப்பாற்றுவது மாமனாரை அல்ல, அரசு அதிகாரிகளால் உயிரை பறிகொடுக்கும் நிலையிலுள்ள மக்களைத்தான். எனவே, நாயகன் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்துகிறான். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். நாயகன் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான கருத்தை நீதிமன்றத்தில் கூறுகிறான். அவனை யாரும் மதிப்பதில்லை. இழிவுச்சொற்களை பேசிவிட்டு செல்கிறார்கள். சரி. ஆனால், அரசு அதிகாரியான அவனது மாமனார் கூட அதை காதுகொடுத்து கேட்பதில்லை. மக்களை விட அதிகாரிகளை திருப்திபடுத்தினால் போதும் என்ற நிலைதான் உள்ளது.
இத்தொடரிலுள்ள எந்த பாத்திரங்களையும் கருப்பு, வெள்ளை என்று கூறிவிட முடியாது. நல்லவர்களும் இல்லை. கெட்டவர்களும் இல்லை. சூழல்தான். நாயகனுக்கு எதிராக நிற்பவர்கள் பலரும் அறத்தை மதிக்காதவர்கள். பணம், அதிகாரம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம் என நினைப்பவர்கள். தாயை தேவடியாள் என்று சொல்பவனை நாயகன் கொன்றுவிடுகிறான். காசு இல்லையா என்று கேட்டு கிளார்க்கை மணந்துகொள் என்று சொல்லும் கட்டிட உரிமையாளன் மனைவியை ஏதும செய்வதில்லை. அவளுக்கு கையை தூக்க முடியாத நிலையில் அடிபடும்போது அதை நாயகன்தான் தீர்க்கிறான். ஆனால், அவளே நாயகனுக்கு எதிராக அவன்தான் கொலைகாரன் என எந்தவித ஆதாரமே இல்லாமல் குற்றம்சாட்டுகிறாள்.
நிச்சயித்த மனைவியை பெண்டாள நினைக்கும் வில்லன். இவனுக்கு காசு கையில் நிரம்ப இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அசட்டு தைரியம். விலைமாதுவை செட்டப் செய்து நாயகனை அடித்து உதைத்து சித்திரவதை செய்கிறான். தடுக்க வரும் நாயகனின் அம்மாவை அறைந்து தெருவில் தள்ளுகிறான். பதிலுக்கு நாயகன் உருவாக்கும் வலி என்பது உளவியல் சார்ந்தது. அவன் போகும் இடமெல்லாம் சென்று பலரின் முன்பாக வில்லனை தோற்கடிக்கிறான். வில்லனின் அம்மாவையே, மகனுக்காக பாலுறவு கொள்ளும் இக்கட்டுக்கு கொண்டு வருகிறான். அதுவும் அவள் மாதவிடாய் வலியை குணப்படுத்தும்போது பாலுறவின்போது வரும் முனகலை வெளிப்படுத்துகிறாள். அதை நாயகன் கவனித்துவிட்டு பாலுறவை நிபந்தனையாக முன்வைக்கிறான். வில்லனை பொருளாதார ரீதியாக முற்றாக அழிக்கிறான். அதற்காகவே அந்த ஐஸ் ஐடியா.
கோமாளிமேடை குழு


கருத்துகள்
கருத்துரையிடுக