தற்காப்புக்கலை கற்ற விதவையின் புலனாய்வு திறமை!

 



ஹவுஸ்ஒய்ப் டிடெக்டிவ்
சீன தொடர்
20 எபிசோடுகள்
யூட்யூப்

நாயகி கு ஷியாங்கை மனதில் வைத்து எழுதப்பட்ட தொடராக பார்வையாளர்கள் நினைக்கலாம். ஆனால், தொடர் அப்படியாக செல்லவில்லை. பெண் ஆணின் தோளில் சாயவேண்டும், அவனை சார்ந்துதான் வாழவேண்டும் என்ற செய்தியை கொலை, வழக்கு, விசாரணை ரீதியில் கூறியிருக்கிறது.

சீனத்தொடரின் கதை நடக்கிற காலம். சீனாவை பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா கூறுபோட்டு அடிமைப்படுத்தி ஆண்டுகொண்டிருந்த காலம். பிரெஞ்சு ஆட்களின் கீழ் காவல்துறை இயங்குகிறது. அதில் சீன ஆட்கள் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள். மேலதிகாரியாக பிரெஞ்சுக்காரர் இருக்கிறார். இக்குழுவினர் கொலை வழக்குகளை துப்பறிகிறார்கள். அப்படியான வழக்குரைஞரின் கொலைவழக்கில் அவரது மனைவியான நாயகி கு ஷியாங்க் மீது பழி விழுகிறது. அதில்தான் நாயகி கு ஷியாங்க், நாயகன் ருயி ஆகியோர் சந்தித்துக் கொள்கிறார்கள்.

பின்னர், வழக்கில் இருந்து கு ஷியாங்க் போதிய ஆதாரங்கள் இல்லையென்று விடுதலை ஆகிறார். தற்காப்புக்கலை, துப்பு துலக்குதல் என இரண்டிலும் திறமை கொண்டவர் என்பதால் அவருக்கு போராடி பெண் போலீஸ் மரியாதையை, வேலையை வாங்கிக்கொடுக்கிறார்கள். அதற்கு  கூட கு ஷியாங்கின் பள்ளிக்கால தோழன்தான் உயிரைக்கொடுத்து உழைக்கிறான். கு ஷியாங் பெண் போலீசாகி கணவன் வழக்கை விசாரித்து குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறாள். பிறகு உடனே பெண் போலீஸ் வேலையை விட்டு விலகுகிறாள். ஏன் என்றால் நான் இனிமேல் எனது மாமியாருக்கு பணிவிடை செய்யவேண்டுமென பதில் கூறுகிறாள். அவளது பள்ளிக்கால நண்பனுக்கும் நம்மைப் போலத்தான் குழம்பிப்போகிறான். இவளை நம்பி போலீஸ் வேலை வாங்கிக்கொடுத்தால் திடீரென பேக் அடிக்கிறாளே என்று வருந்துகிறார். பிறகு வெளியே வேலை தேடி எதுவும் சரியாக அமையவில்லை. மறுபடியும் போலீஸ் வேலைக்கு முயல்கிறாள் என காட்சி அமைப்பு முன்னுக்கு பின் முரணாக போகிறது.

தொடர் இயக்குநர், பெண்களைப் பற்றி எந்தவித நல்லெண்ணமும் இல்லாதவர் போல. பெண்கள் சிந்திப்பது, செயல்படுவது எல்லாமே முரணாக இருக்கும். நடைமுறைக்கு சாத்தியமே இல்லாதது என நாயகி கு ஷியாங்கை வைத்து நிரூபணம் செய்கிறார். அந்த பெண்ணை தொடர் நெடுக உருவக்கேலி செய்வது, வர்க்க பேதம் காட்டி வசை பாடுவது, இறுதியாக அவரது வருங்கால மாமனார் படித்த வர்க்கத்தினரான மாவோ, தேவடியாள், வேசி என திட்டுகிறார். இதெல்லாம் அவசியமா என்று தெரியவில்லை.

கு ஷியாங், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளது பெற்றோர் இறந்துவிடுகிறார்கள். தற்காப்புக்கலை கற்ற மாஸ்டர்தான் வளர்ப்பு தந்தை போல இருந்து உதவுகிறார். அவரின் பெண் பிள்ளை லா பெய் என்பவள் தங்கை போன்றவள். இருவருடைய பாத்திரங்களும், உறவும் கதையில் சிறப்பாக உள்ளன. ஆனால், எதற்கு நாயகி பாத்திரத்தை நிலையான புத்தி இல்லாதவராக, சிந்திக்க தெரியாதவராக, தன்னம்பிக்கை இல்லாதவராக சித்திரிக்க வேண்டும்?

தற்காப்புக்கலை கற்றவர், ஆனால், வீட்டுவேலை செய்யவே விருப்பம். பாத்திரம் கழுவவே ஆசை. போலீஸ் வேலையை உழைத்து வாங்கினாலும் அதை உடனே வேண்டாம் என சில மாதங்களில் தூக்கி எறிகிறாள். எதற்கு, தன்னை பத்து ஆண்டுகளாக வீட்டுவேலை வாங்கிக்கொண்டு ஏசிய முன்னாள் மாமியாருக்காக.. தியாகம்.... இதேபோல ஷான்ஷான் என்ற பெண் பத்திரிகையாளர் ருயியை நான் காதலிக்கிறேன் நீ ஒதுங்கிக்கொள் என சொல்லும்போதும் கூட உடனே ஒதுங்கிக்கொள்ள தலைப்படுகிறாள். எதற்கு? பார்வையாளர்களான நமக்கு உண்மையிலேயே சந்தேகமாக இருக்கிறது. ஒருகட்டத்தில் நமக்கு கு ஷியாங்கை விட லீபெய் நல்ல பாத்திரம் என்று தோன்றுகிறது. அந்த பாத்திரத்தையும் மலினப்படுத்த பெண்ணாக வேண்டும் சட்டை, பாவாடையில் நடக்கவிடுகிறார்கள். சரி, அந்த உடையை போட்டுக்கொண்டு தற்காப்புக்கலை பழக முடியுமா?

லீபெய், ஜெங் காதல்கதை ஈர்க்கிறது. நல்லவேளை ஜெங் வாழ்க்கை பிழைத்தது. கு ஷியாங்கை பள்ளிக்கால தோழி என திருமணம் செய்திருந்தால் கஷ்டம்தான்.

வழக்குரைஞர் கள்ளக்காதல், மரணம் என வரும் முதல் வழக்கு சுவாரசியமானது. இருப்பதிலேயே பலவீனமான வழக்கு ரோஸ்மேனர் என கூறலாம். ரோஸ்மேனர் வழக்கில் பட்லருக்கும், வாரிசுதாரரான பெண்ணுக்குமான உறவு பார்த்தாலே தெரிவது போல்தான் உள்ளது. அதை முன்னமே கண்டுபிடித்திருந்தால் வழக்கு எளிதாக முடிவுக்கு வந்திருக்கும். நிறைய கொலை முயற்சிகள் நடந்து பிறகு கு ஷியாங் நோக்கத்தை கண்டுபிடிக்கிறார்.

இறுதியாக வரும் வழக்கு போலி மாத்திரை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். சப்பையாக எடுத்து தொடரை சட்டென முடித்துவிட்டார்கள். மாவோ, காரில் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சி. வேசி என திட்டினாலும் கு ஷியாங் மாமனார் என மரியாதை கொடுப்பாள்தான். ஆனால், அந்த காட்சியைப் பார்த்தால் நமக்கு நெஞ்சுவலி வந்துவிடும். அப்புறம் நாம் ஆஸ்பிரினை தேடவேண்டும். நல்லவேளை அவரைக் கொன்று விட்டார்கள்.

ருயி பாத்திரத்தை நகைச்சுவைக்காக உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், காமிக்கலான நடிப்பு நிறைய இடங்களில் மிகையாகிவிட்டது. அனைத்தையும் கோணங்கித்தனமாக செய்வதால், அப்பா இறந்த காட்சியில் கூட எதிர்பார்த்த நடிப்பும், இல்லை உணர்வும் இல்லை. இதற்கு காரணம், அப்பாவுக்கும் மகனுக்குமான நெருக்கம், அன்பை புரிந்துகொள்வது என எங்குமே காட்டவில்லை. அப்புறம் எப்படி அவர் இறந்துபோனால் சோகம் வரும்? மாவோ பாத்திரம் படித்த பண்புள்ளவராக வெளியில் காட்டிக்கொண்டாலும் விதவை பெண்ணை மகன் மணக்கவிருக்கிறான் என தெரிந்ததும் கெட்ட வார்த்தை பேசுகிறார்., சொல்ல முடியாத வார்தைகளை சாப்பிடும் மேசையில் அமர்ந்தபடியே சொல்கிறார். வெடிகுண்டு விபத்தில் இறப்பதற்கு முன்னரே ருயி துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பெண் பாத்திரங்களில் லீபெய் மட்டும்தான் தேறுகிறார். பத்திரிகையாளர் பாத்திரமான ஷான்ஷான், வளர்ந்தாலும் கூட குழந்தை போன்ற மனமுடையவராக காட்டப்படுகிறார். ருயியைக் காதலிப்பது கூட அவரின் அந்தஸ்து, டிடெக்டிவ் என்பதற்காகவே.. மற்றபடி இவருக்கு பிடித்திருக்கிறது. எதிரிலுள்ள ருயின் மனநிலை என்ன, விருப்பம் என்ன என்பதை அவர் கேட்பதில்லை. அறிந்துகொள்ளவும் எண்ணம் இல்லை. அகவயமான இயல்புடைய ஜெங்கை, கு ஷியாங் மரக்கட்டை போன்றவன் என சொல்கிறாள். ருயி கேலி கிண்டல் செய்வதை தடுத்து அவளைக் காத்தது யார், அவள் வேலையை விட்டு நின்றபிறகு அடுத்த வேலைக்கு வேலைவாய்ப்பு தகவல்களை கொண்டு வந்து கொடுத்தது யார்?

ருயி பணக்காரன். அவனால் ஒரு இடத்தை ஒத்திக்கு பார்த்து கொடுத்து டிடெக்டிவ் ஏஜென்சி தொடங்க உதவ முடிகிறது. ஆனால் ஜெங்கிடம் அந்தளவு பணம் கிடையாது. ஆனால், அவன் எந்த இடத்திலும் கு ஷியாங்கை காயப்படுத்தியது கிடையாது. லீபெய் மாதிரியான பெண், ஜெங்கிற்கு தேவை. கு ஷியாங் மாதிரியான மனவலிமை, மன உறுதி இல்லாதவர்கள் எந்த ஆணுக்குமே பிரச்னைதான். அந்த பிரச்னை ருயிக்கு சென்றுவிட்டது.

பெண் பாத்திரங்களை முட்டாள்களாகவே காட்டுவதில் இயக்குநருக்கு அந்தளவு மகிழ்ச்சி. அவர் உருவாக்கிய பெண் பாத்திரங்கள் பலம், பலவீனம் என இரண்டு தரப்பையும் கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், முட்டாளாக முதிர்ச்சியே இல்லாது இருந்தால் எப்படி? சீனா அடிமைப்பட்டு கிடந்த காலகட்டத்தை வசனத்தோடு நிறுத்தாமல் காட்சியாக காட்டியிருக்கலாம். அப்படி எந்த காட்சிகளும் இல்லை. மக்களைக் காக்க சீனப்போலீசார் தேவை என மாவோ சொல்கிறார். அப்படி சீன மக்களுக்கு என்ன உதவி செய்தார் என்பதை இருபது எபிசோடுகளிலும் பார்வையாளர்கள் பார்க்கவே முடியாது. இறுதி காட்சியில் ரைபிள், மெஷின் கன் வைத்து சுடும் வில்லன்களை போலீசார் பிஸ்டல் வைத்து சுட்டு அழிக்கிறார்கள். பரிதாபமாக இருக்கிறது. அதிலும் வில்லன் கு ஷியாங்கை சுடும்போது அவர் மலைமாடு போல அப்படியே நடந்து வருகிறார். ஆறுமுறையேனும் வில்லன் லூ சுட்டிருப்பார். ஒரு குண்டு கூட நாயகி மீது படவில்லை. டிடெக்டிவான ருயிக்கு தற்காப்புக்கலை தெரியாது. ஆனால், துப்பாக்கி சுட தெரியும். எப்படி அவரை வேலையில் வைத்திருப்பார்கள்? தொடர் நெடுக பெண் எந்தளவு படித்தாலும் திறமை இருந்தாலும் மேக்கப் போடவேண்டும். அழகான உடை உடுத்தவேண்டும் என்றே சொல்லி்க்கொண்டிருக்கிறார்கள். பைத்தியமாடா நீங்கள் எல்லாம்?

ஹவுஸ் ஒய்ப் டிடெக்டிவ் வேடிக்கையான காமெடி தொடரா, சீரியசான தொடரா என்றால் இரண்டுமே இல்லை. இயக்குநருக்கே நிறைய குழப்பம் இருந்திருக்கிறது. அத கதையிலும் அப்படியே வெளிப்படுகிறது. ஆண்களின் மேலாதிக்கத்தை சொல்லும் பீரியட் கால தொடர்.

2
































 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!