மாபியா குழுவில் அண்ணன் உளவாளி, காவல்துறையில் தம்பி ஒற்றன்! - இன்சைடர் - துருக்கி தொடர்
இன்சைடர்
துருக்கி தொடர்
10 +---
மார்டின் ஸ்கார்சி எடுத்த ஆங்கிலப்படத்தை நினைவூட்டுகிற டிவி தொடர். அதாவது, மாபியா தலைவர், தனது வளர்ப்பு மகனை போலீஸ் துறையில் அதிகாரியாக வேலை செய்ய வைத்திருப்பார். அதேசமயம், அவரது குழுவில் போலீஸ் அதிகாரி ஒருவன் உளவாளியாக வேலைக்கு சேர்வான். இந்த இருவருமே உளவாளிகள்தான். யார் வெற்றி பெற்றார்கள் என்பதை ஆங்கிலப்படத்தில் காட்டியிருப்பார்கள். அதுவேறு. அதே லைன்தான். ஆனால் இங்கு வேறுபாடு ஒன்றுதான். இப்படி உளவாளிகளாக இருப்பவர்கள் அண்ணன், தம்பியாக இருந்தால் எப்படியிருக்கும்?
துருக்கிக்காரர்கள் உணர்ச்சி கொந்தளிப்பு கொண்டவர்கள். தொடரும் கூட சாமானியமாக முடியாது. இழுத்துக்கொண்டே போகும். அதற்கு இந்த தொடரும் விதிவிலக்கல்ல.
மெதின் என்பவர், செலால் என்ற கெபாப் கடையை நடத்தி வரும் மாபியா தலைவரிடம் வேலை செய்கிறார். மேற்பார்வைக்கு கெபாப் கடை என்றாலும் உள்ளுக்குள் சட்டவிரோத வேலைகளை செலால் செய்து வருகிறார். இவருக்கான ஆட்களை பிச்சைக்கார குழு மூலம் காஸ்குன் என்பவன் உருவாக்கித் தருகிறான். செலாலிடம் வேலை செய்பவர்கள் அனைவரும் அவரை அப்பா என்றே அழைக்கிறார்கள். அதாவது அவர் தந்தை, வேலை செய்பவர்கள் மகன்கள். அப்பா சொல்வதை மகன்கள் கேட்டே ஆகவேண்டும். தவறினால் தண்டனை கடுமையாக இருக்கும். மெதின் போலீசில் மாட்டிக்கொள்கிறார். ஆயுள் சிறை கிடைக்கிறது. அவர் உண்மையைக் கூறினால் செலால் மாட்டிக்கொள்வார் என்பதால் மெதினின் இரு மகன்களில் ஒருவரை கடத்தி செல்கிறார். மூன்று வயதான சிறுவனை விளையாடும்போது கடத்தி வந்து அடித்து உதைத்து தெருவில் பிச்சை எடுக்க வைக்கிறார்கள். குடும்பத்தை, சகோதரனை, தன்னையே மறக்க வைக்கிறார்கள். உமுத் என்ற அந்த சிறுவன், சார்ப் என்பவனின் தம்பி. மெதினுக்கு சார்ப், உமுத் என இரு மகன்கள். அதில் உமுத்தை செலால் கடத்திச்சென்று தன்னுடைய ஆளான காஸ்குன் மூலம் பயிற்சி கொடுக்கிறார். அந்த உமுத் போலீசில் உளவாளியாக மாறுகிறான். இப்போது அவன் பெயர் மெர்ட்.
சார்ப் போலீஸ் அகாடமியில் படிக்கிறான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸ் தலைவர், அவன் மெதினின் மகன் என்பதை அப்போதுதான் கண்டுபிடித்து உனக்கு போலீஸ் வேலை கிடையாது என வெளியே அனுப்புகிறார். அவன், கோபத்தில் கமிஷனரை சுடுவதற்கு போகிறான். அதனால், அவனை சிறையில் அடைக்கிறார்கள். ஓராண்டு கழிகிறது. பிறகு சார்ப், சிறையில் உள்ள ஆட்கள் வழியாக செலாலை சந்திக்கிறான். அவர்களது குழுவில் சேர்கிறான். அங்கு அவன் உளவறிந்து கமிஷனருக்கு தகவல் சொல்லி செலாலை பிடித்துக்கொடுத்தானா, உமுத் அல்லது மெர்ட்டை தனது தம்பி என அடையாளம் கண்டானா என்பதே மீதிக்கதை.
தொடரின் பிரச்னைகள் ஆரம்பம் முதலே உள்ளன. அதாவது சார்ப், நான்கு ஆண்டுகள் படித்து முடித்தபிறகு அவன் தந்தை குற்றவாளி என்பதால் வேலை கொடுக்க முடியாது என வெளியேற்றப்படுவது.... அதை செலால் கூட நம்பவில்லை. எனவே பார்வையாளர்களாக நாமும் நம்பவேண்டாம். சார்ப் உண்மையில் செலாலிடம் போலீஸ் கமிஷனரை பழிவாங்குவதற்காக சேர்கிறான் என்பதை காட்சி ரீதியாக உணர, நம்பமுடியவில்லை. இல்லை தனது தம்பியைத்தான் தேடுகிறானா என்றால் அதுவும் வெளிப்படையாக தெரிவதில்லை. அவரது பாத்திரம் உணர்ச்சி கொந்தளிப்பு கொண்டதாக, சரியான முடிவெடுப்பவனாக இல்லாமல் தடுமாறிக்கொண்டே இருக்கிறது. ஒருமுறை அல்ல பலமுறை அதேபோல நடக்கிறது.
மெர்ட் பாத்திரத்தைப் பார்ப்போம். மூன்று வயது சிறுவனாக கடத்தப்பட்டு பிறகு பிச்சைக்கார குழுவில் அடி உதை பட்டு அந்த அனுபவங்களால் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி. செலால் தன்னை ஆபத்பாந்தவனாக காட்டிக்கொண்டு மெர்ட்டை படிக்க வைத்து அதிகாரியாக்குகிறார். கூடவே வளர்ப்பு மகளாக மெலாக் என்பவளையும் வக்கீலாக மேலே கொண்டு வருகிறார். அவள்தான், மாபியா குழு ஆட்களை சட்டம் மூலம் காப்பாற்றி வருகிறாள்.
மெர்ட், மெலாக்கை பிச்சைக்கார குழுவில் இருக்கும்போதிலிருந்தே காதலிக்கிறான். ஆனால் மெலாக்கிற்கு அப்படியான காதல், ஈர்ப்பு வருவதில்லை. நட்பாக பழகுகிறாள். காதல் என்பது அவளுக்கு சார்ப் மீது உருவாகிறது. மெர்ட், போலீஸ் அதிகாரியாக இருந்து செலாலுக்கு உதவுகிறான். அதனால் அவர் பல ஆபத்துகளிலிருந்து தப்பிக்கிறார். தொடரில் இருவரும் யார், என்ன நோக்கம் என்பதை இயக்குநர் பார்வையாளர்களுக்கு காட்டிவிடுகிறார். ஆனால், அந்த பாத்திரங்கள் தான் யார், எதிரிலிருக்கும் ஆள் யார் என்பதை உணர்வதில்லை. அதற்குத்தான் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.
துருக்கி தொடரில் வரும் நாயகிகள், வினோதமாக பேஷன் ஷோ ஆடைகளை அணிவார்கள். எதற்கு என்று கேட்காதீர்கள். அது அப்படித்தான். அந்த வகையில், அந்த இடத்தை மெலாக் எடுத்துக்கொள்கிறார். தொப்புள் தெரிய ஆடை உடுத்தி வருகிறார். மகள் மீது பிரியம் வைத்துள்ள அப்பா, ஆண்கள் மட்டுமே உள்ள இடத்தில் இப்படி உடை உடுத்துகிறாயே என்று கூட கவனிப்பதில்லை. மகளை யாராவது காதலித்தால் மட்டுமே அடித்துக்கொல்கிறார். இதென்ன அன்பு என்று கேட்கத்தோன்றுகிறது.
செலால் காரியக்கார மாபியா தலைவர். தன்னிடம் வேலை செய்யும் ஆட்களின் பிள்ளைகளை, பாசம் காட்டி அரவணைத்து தனது கூட்டத்தில் சேர்த்து குற்றவாளியாக்குகிறார். அப்பா என அழைக்கச்சொல்வது இதெல்லாமே உணர்ச்சிரீதியாக ஒருவரை அடிமைப்படுத்தத்தான். மெலாக் சொன்ன காரணத்திற்காக மெர்ட்டையும் அழைத்து வருகிறார். மகள் வக்கீல், மகன் போலீஸ். ஒருகட்டத்தில் மகளுக்கென தனி நிறுவனத்தையே உருவாக்கி கொடுக்கிறார். பாசம் அல்ல. அதை பாசம் என பிறர் பார்க்கும்படி செய்தாலும் அதற்கு பின்னே வேறு காரணங்கள் இருக்கலாம்.
சார்ப், போலீஸ் அகாடமியில் முதல் மாணவர் என்றாலும் செய்யும் வேலையில் அதற்கு எந்த சம்பந்தமும் இல்லாதது போலவே நடந்துகொள்கிறார். ஒருமுறை கூட குற்றவாளிகளை சுடுவதில்லை. இத்தனைக்கும் இரு துப்பாக்கிகள் இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டே இருக்கிறார். நமக்கே தோன்றுகிறது. இப்படி உள்ளவன் எப்படி போலீசாக இருப்பான்? நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு ஒருவன் முன்னேறுவான் என்பதுதான் வாடிக்கை. ஆனால் இந்த கதையில் உடனுக்குடன் தகவல்களை போலீசுக்கு கொடுக்கிறான் சார்ப். மெர்ட் அந்தப்பக்கம் இருப்பதால் அனைத்து திட்டங்களும் தோற்றுப்போகிறது. அத்தனையும் பின்னடைவுதான். ஒருகட்டத்தில் பார்வையாளர்களான நமக்கே சலித்துப்போகிறது.
செலாலை குறிவைத்து துரத்த போலீஸ் கமிஷனருக்கு முன்பகை உள்ளது. அவரது பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலதிகாரிகளால் அவமானப்படுத்தப்படுகிறார். பகை இருபது ஆண்டுகளாக தொடருகிறது. எனவே, சார்ப்பை வைத்து செலாலை அழிக்க முனைகிறார். இந்த தொடரை எடுத்ததற்கு கெபாப்பை எப்படி செய்வது என காட்டியிருந்தாலாவது பிரயோஜனமாக இருந்திருக்கும். அடிப்படையான கதை மட்டுமே நன்றாக இருந்தால் போதும். திரைக்கதையை கண்டமேனிக்கு இழுத்து செல்லலாம் என இயக்குநர் நம்பிவிட்டார்.
இழப்புகளை சந்தித்து அண்ணன் தம்பி ஒன்றாக சேர்வது, குற்றவாளிகளை பழிவாங்குவது என்பதுதான் இறுதியான காட்சியாக இருக்கப்போகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை.
கோமாளிமேடை குழு
2


கருத்துகள்
கருத்துரையிடுக