நகரத்தின் மனநிலை மாற்றம்

                                                    நகரத்தின் மனநிலை மாற்றம்












               நேற்று எப்போதும் போல ரெவல்யூசன் செல்வி உணவகத்தில் சப்பாத்தி சாப்பிடலாம் என்று நினைத்தும் வேண்டாம் என்று ஐஸ்ஹவுஸ் கிளம்பினால், முன்னால் ஒரு பெண்கள் குழாம் வழியே விடவில்லை. அதுவும் ஷெனாய் சாலையில் எப்போது பாதளச்சாக்கடைக்கு சிமெண்ட் பூசுகிறார்கள் என்றே தெரியவில்லை. எப்போதும் ஏதாவது ஒன்றை உடைத்துவைத்துக்கொண்டு ஆட்கள் வருவதற்காக ஒருவர் கற்களை பாதுகாப்பாக மூடியைச்சுற்றி வைத்துக்கொண்டு நின்றுகொண்டே இருக்கிறார். மழை வேறு பொதுநலத்திற்காக பெய்கிறது அதை என்ன சொல்லி திட்டுவது? எனது கால்சட்டை முழுவதும் சேற்றுத்தடம். ரப்பர்செருப்புவேறு. ஆனால் சில கனவான்கள் வெகு எளிதில் சூழலைக் கணித்து குடைகொண்டுவந்துவிடுகிறார்கள். உண்மையில் தீர்க்க தரிசனம் என்றால் இதுதான் நண்பர்களே! வானிலை ஆராய்ச்சி மையத்தையும் மீறி நம்மால் சூழலைக் கணிக்க முடிகிறது என்றால் பாருங்கள் யார் உண்மையில் திறமைசாலி என்று.

            ஆனால் நேற்று மனநிலை வேறுபட்டதாகவே இருந்தது. மேகமூட்டத்துடன் இருந்தது என்பதால் பலரும் அதை உணர்ந்திருப்பார்களா என்று தெரியவில்லை. எங்கள் அலுவலகத்திற்கு வரும் முத்துமணி அன்று சற்று கொள்கைகளை வேண்டாம் என்று கூறியும் கடுமையாக விவாதித்து எனக்கு இரண்டு சப்பாத்தி சேர்த்து சாப்பிடும் தேவையை உருவாக்கினார். ஆசிரியர் இதழ் ஒன்றுக்கான கட்டுரையை எனக்கு டிக்டேட் செய்து அவரும் சோர்ந்து போனார். பேருந்து எப்போதும் பூரி தின்றுவிட்டு நான்கு பூரிக்கும் இன்று இரண்டு பூரிக்கான கிழங்குதான் வைத்தான் என்ற ஆதங்கத்தில் அலுவலகம் வரும் ஜேம்ஸ் சார் போல நிதானமாக வரும். ஆனால் அன்று நேரமே வந்து விட்டது. 
                             பேருந்தில் ஏறினால் நல்ல கூர்மையான கண்கள் கொண்டிருந்த ஆனால் சோர்ந்து போயிருந்த நடத்துநர்(கணியம் ஸ்ரீனிவாஸ் போல சாயல்) வேகமாக கையிலிருக்கும் பயணச்சீட்டுத் தொகையை வாங்கி 5 ரூபாயைக் கையில் திணித்துவிட்டு வேகமாக முன்னே போனார். நான் கொடுத்தது. பனிரெண்டு ரூபாய்.  சீட்டிற்கான தொகை 11 ரூபாய். மீதி 1 ரூபாய் அவர் தரவேண்டும். இதைக்கூறிய பின் சரியாப்பா என்று வேகமாக சில்லறையைத் தந்தவரை பார்த்து கையை விரித்து காட்டினேன். நான்கு ரூபாய் சில்லறை தந்திருந்தார். நேர்மையா இருக்கீங்களே!? என்று அந்த சோர்விலும் நையாண்டி செய்தவர் பின் ஒரு ரூபாயைத் தந்தார். என்னோட பணம் எனக்கு கிடைச்சாப்போதும், உங்களோடதுஎனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். அவரின் அருகிலிருந்த இருபெண்கள் நான் இறங்கும் நிறுத்தம் வரை அவ்வப்போது திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தார்கள். அநேகமாக அன்றைய தாட் ஆப் தி டே  நான் கூறியதாகத்தான் இருக்குமோ என்னவோ!