கண்டேன் நினதருள்

                                                         கண்டேன் நினதருள்






    பலரும் இன்று இந்து மதத்திலிருந்து வேறு மதம் மாறுவது குறித்து சட்டச்சிக்கல்கள் உள்ளிட்ட பலவற்றையும் ஆராய்ந்து வருகிறார்கள். ஒரு மதத்திலிருந்து  இன்னொரு மதத்திற்கு மாறுவது என்பது அவரவர் விருப்பம். சுதந்திரம் என்று கூட கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் உங்களது விருப்பம் என்பது என்றுமே நமது விருப்பமாக, தேர்வாக இருந்ததில்லை. வலுக்கட்டாயமாக ஒன்றை நம்மீது திணிப்பார்கள். அதை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவேண்டும். தலித்தாக இருக்கும் ஒருவர் கிறிஸ்தவ, அல்லது இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறும் போது அவரின் மீது இருந்த ஒடுக்குமுறைகள் கைவிடப்படுகின்றன. மரியாதையாக நடத்தப்படுகிறார் எனும்போது அப்படி மதம் மாறுவதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்? திருநெல்வேலி அருகிலுள்ள மீனாட்சிபுரத்தில் அப்படி தலித்துகள் பலரும் ஏறத்தாழ 200 பேர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறினார்கள். அது ஒரு மனிதனை மனிதன் மதிக்கவேண்டும் என்கிற தன்மையில்தான் அணுகவேண்டும். அங்கு மரியாதை மனிதர்களுக்கு குறைவுபட்டது. அதனால் அவர்கள் அதை நோக்கி நகர்ந்தார்கள். அது ஏதோ ஒருவகையில் அவர்களது வாழ்க்கையை அமைதியாக நகர்த்திச் செல்ல உதவுகிறது. 

                 கிறிஸ்தவ மிஷனரிகள் மீது குற்றம் சாட்டப்படுகிறது அவர்கள் மதமாற்றம் செய்தார்கள் என்று. தாழ்த்தப்பட்ட மக்கள் சாப்பிட, உடுத்த, அவர்கள் வாழ்க்கையில் மேம்பட யாரும் உதவாதபோது  மற்றொரு அந்நியன் அவன் உதவியின் பின்னால் உள்நோக்கம் இருக்கிறது என்றாலும் அவன் மற்றவர்கள் தராத மரியாதையை கரிசனத்தை அந்த ஏழை மக்களுக்குத் தருகிறான். கல்வி தருகிறான். மருத்துவ வசதி தருகிறான். இயல்பாகவே தன்னுடைய பிள்ளைகள் நன்கு படிக்கவேண்டும், அவர்களது வாழ்க்கை நிலையில்லாமல் தன்னைப்போல ஆகிவிடக்கூடாது என்று ஒவ்வொரு தகப்பனும் நினைப்பதில் என்ன தவறிருக்கிறது? சரி ஒன்று கூறுங்கள். எந்த உதவியின் பின்னால்தான் எந்த நோக்கமுமில்லை. நீங்கள் உங்கள் நண்பருக்கு உதவி செய்கிறீர்கள் என்றால் பிறகொரு நாள் அவர் உங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கையினால்தான் அல்லவா? அவரது வீட்டு நிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகளுக்கு நீங்கள் சென்றீர்கள் என்றால் அப்போதுதான் அவர் தங்களது வீட்டின் சுக, துக்கங்களில் பங்கு கொள்வார் என்பதுதானே?

                    இன்று சமூகத்திற்கு அவர்கள் வேறொரு நோக்கத்திற்காக வந்து அதன் பிரச்சனைகளைப் பார்த்து  ஏழைமக்கள் படும் பாட்டை கவனித்து தன் வாழ்க்கையை முழுக்க ஏழை மக்களின் நலனுக்காக அர்ப்பணித்த பல அந்நியர்கள் உண்டு. ஏன் அந்த தன்மை உள்நாட்டில் அந்த மக்களை தங்களின் நலனுக்கான கருவியாக சுரண்டி வாழும் வர்க்கத்தினருக்கு மனதில் ஏற்படவில்லை? காரணம் அவர்களின் வர்க்கம் வேறு. உதவக்கூட, சாதி முன்னிற்கிறது எனும்போது  இந்த வக்கிரமான மனிதாபிமானத்தை எப்படி நீங்கள் சமூகத்திற்கான சேவை என்பீர்கள்? உண்மையில் உலகம் நாசமாவது இந்த சேவை எண்ணத்தினால்தான். ஒவ்வொருவரும் தங்களுக்கான தேவைகளை சிறிது தளர்த்திக் கொண்டால், பசியை ஆசையாக பரிமாற்றம் செய்யவில்லையென்றால் இங்கு நகரத்தில் அதனை உருவாக்கிய மக்கள் நகரை விட்டு வெளியே கண்ணகி நகருக்கு செல்லவேண்டியதில்லை.  
                            வறுமையான மலைப்பாங்கான இடங்களுக்கு, பழங்குடி மக்கள் வாழும் இடத்திற்குச் சென்று சிறிதளவாவது கல்வி, மருத்துவ வசதிகள் போன்றவற்றை அளித்தவர்கள் கிறிஸ்தவ மதத்தினர்தான். இன்று அவர்களை குறை கூறும் ஆதிக்க கூட்டங்கள் அன்று அவர்களை மனிதர்களே இல்லை என்று புறக்கணித்தவர்கள்தான். தனக்கு உதவி செய்தவர்களை நினைவு கூர்வது எனும் நன்றியறிதல் மனிதனுக்கு முக்கிய பண்பாக இருப்பதில் என்ன தவறு? 
                                     
                                  பல பகுத்தறிவு பேசுபவர்கள் ஏழைமக்களுக்கான வாழ்விடங்கள் பறிபோவது போன்ற சம்பவங்களின் போது ஏதும் பேசாமல் தனக்கான சொத்துக்களை பாதுகாப்பதில் ஈடுபட்டிருப்பார்கள். இருப்பு குறித்த மயக்கம் எழும்போது ஒரு போராட்டம் என்று நடத்தி தன்னைக் காட்டிக்கொள்வார்கள். ஏழைமக்கள் மூட நம்பிக்கையினால் அழிகிறார்கள் என்கிறார்கள். நகரத்தில் வரும் நாளிதழ்களின் இணைப்புகளில் பார்த்திருப்பீர்கள். வீட்டில் ஏழு நாய்கள், பத்து பூனைகள், என வளர்ப்பு மிருகங்கள், பறவைகள் வளர்ப்பவர்களைப் பற்றி படித்திருப்பீர்கள். மனிதர்கள் மீதான நம்பிக்கை தகர்க்கப்படும்போது இந்த மனிதர்கள் விலங்குகளை நாடுகிறார்கள். மனிதர்கள் போல அவை என்றும் நன்றியறியாது நடந்துகொள்வதில்லை. தங்களை அன்பிற்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கின்றன. எப்போதிலிருந்து நீங்கள் இந்த விலங்குகளை வளர்க்க ஆரம்பித்தீர்கள் என்ற கேள்விக்கு அவர்களின் பதிலை வாசியுங்கள். தனிமையாக நம்பிக்கையின்றி வறட்சியாக வாழ்வது குறித்து அப்போது உணர்வீர்கள். வாழ்வின் மிக மோசமான நெருக்கடியில் அவர்கள் ஏதோவொன்றை பிடித்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அது கடவுளாக இருக்கிறது. அவர்களிடம் பணமில்லை; கல்வி நிறுவனங்கள் இல்லை;  இருந்தால் கடவுளை நம்பமாட்டேன் என்று பகுத்தறிவு பேசியிருக்க கூடும். அவர்களிடம் வேலையினால் ரத்தம் சுண்டிப்போன உடலும், சுருக்கம் விழுந்த கைகளும், குழி விழுந்த கண்களும், மிச்ச நம்பிக்கையுடன் தொழ மனம் மட்டுமே இருக்கிறது. கண்டேன் நினதருள் என்று எளிய நாட்டார் தெய்வங்களிடமும், நாகாத்தம்மனிடமும், முண்டகக்கண்ணி அம்மனிடமும், யேசுவிடமும் சரணடைகிறார்கள். வாழ்வதற்கான நம்பிக்கையை சிறிது நேர பிரார்த்தனையில் மீட்டெடுக்கிறார்கள். எளிய மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால் அதை சுயநலன்களுக்கு பயன்படுத்தி வார்த்தை ஜாலங்களால்  பிழைப்பு நடத்துகிறவர்கள் நிச்சயம் வாழவில்லை. உள்ளுக்குள் ஆழ தாம் பேசுவதற்கு எதிரானதின் மீது ஆழ பற்று கொள்ளும் தன்மை அவர்கள்  அறியாமலே உருவாகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்று. தன்னை கொடூர துன்பத்திற்கு ஆட்படுத்தும் ஒருவனை மெல்ல சகித்துக்கொள்ள பழகும் தன்மை போலவே. எந்த விவாதத்தினையும் ஒரு உண்மை அதனை அப்போதே முடித்துவைத்துவிடும். அதை சுற்றுவழியில் அடைவது, தள்ளிப்போடுவது என்பதில்தான் இந்த நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நீள்கின்றன. நாம் உண்மை பேச எப்போது தயாராவோம் தோழர்களே? 

பிரபலமான இடுகைகள்