ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்:நூல்வெளி2-ப்ராட்லி ஜேம்ஸ்
நூல்வெளி2
ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்
கலைவாணன் இ.எம்.எஸ்
கீற்று வெளியீட்டகம்
இந்த கவிதைத்தொகுப்பின் கவிதைகள் என்பவை அழகு குறித்தவையல்ல. முடிதிருத்தம் செய்யும் ஒருவனது வாழ்வு, சமூகம் சார்ந்து எப்படி பார்க்கப்படுகிறது என்பதையும் அதனால் அவனது மனம் படும் பாட்டையும் வலியையும், வேதனையையும் பொளேரென அறைந்து சொல்கிறது ஒவ்வொரு கவிதைகளும்.
முதலில் இவற்றைப் படிக்கும் யாரும் இதை கவிதை என்றே கூறமுடியாது. ஒவ்வொரு கவிதையும் ஒரு சிறுகதை போல வாழ்வை ஒரு நிகழ்வை நம் முன் வைத்து நம் கவனத்தைக் கோருகிறது. நாம்தான் கையறு நிலையில் அதனை பார்க்காது திரும்பி நிற்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு வலிகள் இக்கவிதைகளில் காணமுடிகிறது. ஒன்பதாம் பக்கத்தில் குறிப்போடு துவங்குகிற இந்த கவிதைப்புத்தகம் முகத்தின் மீசை திருத்தும் கவனத்தோடுதான் படிக்கவேண்டியிருக்கிறது என்பது உண்மைதான்.
அப்பா, அம்மா சடங்கு செய்ய செல்வது அதற்கு கிடைக்கும் கூலிப்பணத்தின் போதாமை, அப்பா வேலை முடிந்து வந்து குழந்தைக்கு முத்தமிடும்போது அவரது மேலை ஒட்டியிருக்கும் முடி எந்த சாதிக்காரனோ என்பது, நகரத்தில் இருக்கும் உறவுகள் தன் சாதி தெரிந்தால் மற்றவர்களால் புறக்கணிக்கப்படுவோம் என அஞ்சுவது, ஊராரின் பிள்ளை தெரண்டதிற்கு சடங்கு செய்யும் அம்மா தன் பிள்ளை வயதுக்கு வந்ததை யாரிடமும் சொல்வதில்லை ஏன்? தன் சாதி, அது தொடர்பான அனைத்தையும் மறுக்கத் தொடங்கும் இன்றைய தலைமுறை குறித்த கவலை, எங்கு வேலைக்குச் சென்றாலும் அழைக்கப்படும் சாதி அவமானம், ஊர் பொது இடமான கோவிலில் சாமி வந்தாலும் பீடத்தினருகில் செல்ல முடியாத தடை, தன் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உழைத்து உழைத்து தன் வாழ்க்கையை ஈரப்பசையின்றி அமைத்துக்கொள்ள நேர்ந்துவிட்ட அவலம் , பல சாதிக்காரர்களை ஒன்றாக இணைத்து நாடகம் நடத்துவர் பார்பர்ஷாப் சங்கரன், சலூன் கடைகளில் மாட்டியிருக்கும் அரசியல் தலைவர்களின் படி அவர்களது வாழ்க்கை விருப்பம் அமைவது, சவரக்கத்திக்கு அம்மா உருவகமாக மாறுவது, வேறொரு சமுதாயத்தினரை திருமணம் செய்து தத்தமது உறவுகளை மெல்ல கழற்றிவிடுவது என தன் வாழ்வு முழுக்கவுமான பல வலிகளை வேதனைகளை வெளிப்படுத்தும் கவிதைகளை இதில் காணமுடியும்.
இத்தொகுப்பை நன்றாயிருக்கிறது என்று என்னால் கூறமுடியவில்லை என்பதற்கும் அதுதான் காரணம். இதைப்படித்த கணம் தோறும் கடும் மன உளைச்சலும் குற்றவுணர்விலும் தவித்தேன் என்பது இக்கவிதைத்தொகுப்பு சரியான இலக்கைத் தொட்டுவிட்டதாக கொள்ளலாம். நேர்மையான நேர்த்தியான முக்கியமான பதிவு இவை என்றும் கூறலாம்.