எடுப்போம் ஒரு கிலோ பிரியாணி!

                                              எடுப்போம் ஒரு கிலோ பிரியாணி!











                     திருவல்லிக்கேணியைப் பொறுத்தவரையில் 24ஏ அல்லது 24சி என இரண்டு பேருந்துகள்தான் நான் பயணிக்கும் வழித்தடங்களைக் கொண்டுள்ளது. வேறங்கும் இல்லாத போக்குவரத்து நெரிசலை திருவல்லிக்கேணி செல்லும் வழியில் சந்திக்கும் தருணங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்கான தொடக்க அறிகுறிகள் நேபாள் தேசத்தினர் போல இருக்கும் நடத்துநர் கை போடேம்மா, பஸ்சு திரும்ப வேண்டாமா? போடு கையப்போடுங்கப்பா என்பார். பேருந்து திரும்பும் ஆயிரம் விளக்கு மசூதி நிறுத்தம் அருகில் ஆசிப் பிரியாணிக் கடையெல்லாம் தாண்டி. இங்கு போக்குவரத்து மிகுவதற்கான காரணம் நிறைய இருக்கின்றன. முக்கியமான ஒன்று ரிவல்யூசன் செல்வி ஆதிக்கம் செலுத்தும் தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் உள்ளது. அதனால் தீர்ப்பு எழுதப்படுவதும் வாய்தா வாங்கப்படும் போதெல்லாம் போக்குவரத்தினை நிறுத்தி விடுவதுதான் தொண்டர்களின் பெரும் கவனக்குவிப்பு ஆக்ரோஷ ஆர்ப்பரிப்பாக இருக்கும். 

      செல்வி கோவாண்டி நீதிபதியால் விடுதலை செய்யப்பட்ட அன்று போக்குவரத்தில் பேருந்து ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தைத் தொடவே முக்கால் மணிநேரம் ஆகியது. நான் பேருந்தில் ஏறியபோது மணி 7. 8.40 க்கு அறைக்குச் செல்ல முடிந்தது. இன்னொன்று மெரினா கடற்கரை செல்லுவதற்கு இது ஒரு முக்கியமான குறுக்குவழி எனலாம். ஜெமினியிலிருந்து நேராகச் சென்றாலும் சோழா, ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபம், சிட்டி சென்டர் மால், தாண்டி செல்ல வேண்டும். அது சுற்றுவழி. இது மிக எளிதான வழி. போகும்போதே எண்ணற்ற ஏதோ ஒரு பிரியாணிக்கடையில் பொட்டலம் கட்டிக்கொண்டு பரம திருப்தியாய் கடற்கரையில் போய் அமர்ந்துவிடலாம்.  வெள்ளி இரவிலிருந்தே மோட்டார்சைக்கிள்களின் வ்ர்ர்ரூம் ஒலி கேட்கத்தொடங்கிவிடும். வெள்ளி, சனி இரவெல்லாம் ஒலிப்பான்களின் ஒலி கனவிலும் கூட எனக்கு கேட்டது என்றால் பாருங்களேன். பிரியாணியைப் பொறுத்தவரை படம்தான் சரியில்லை. ஆனால் அதிலும் ஐட்டம் சாங் செமயப்பா.. பொட்டாட்ட  சங்கட் கிரபு ஐட்டம் சாங் மட்டுமே எடுக்கலாமே என்று லோகத்தின்ட தோஸ்த் வடிவமைப்பு கொளுத்திப்போட்டார்.  பிரியாணி எப்படியிருக்கிறதோ அங்கு பேருந்தில் போக போகவே வாயில் ஊறலெடுத்து விடுவது உண்மைதான். அப்படி ஒரு மசாலா மணம். தட்டு பெரும் குண்டாவில் மோதி மோதி பிரியாணியை அள்ளி அள்ளி பொட்டலம் கட்டும் லாவகம். ஒரு தாளம் போல மாறாது கேட்டுக்கொண்டிருக்கும். மிக அதிக வாட்ஸ் கொண்ட பல்புகளைப் போட்டு வியாபாரம் செய்யும் கடைகள் இங்கு உண்டு. ஏறத்தாழ நாற்பது கடைகளுக்கு மேல் இங்குண்டு. மிகவும புகழ்பெற்ற கடை என்றால் அல்தாஜ் பிரியாணிக்கடையைக் கூறலாம். பழமையான கடை பல புது வித மெனுவோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தினமும் வருகிற வாடிக்கையாளர்களே 350 பேர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஞாயிறு என்றால் 600 பேர் என்று கூறுகிறார்கள். இப்போது போன ஞாயிறிலிருந்து ஒரு குறிப்பிட்ட கடை தன்னுடைய மூன்று கிளைகளிலும் ஒரு கிலோ பிரியாணி எண்பது ரூபாய் என்று குறைத்துள்ளார்கள். இது நடைமுறை விபரம். 

                தமிழர்களைப் பொறுத்தவரை இறுதி லட்சியம் பிரியாணி தின்றுவிட்டு சாவதுதான் போல. எந்தக் கடை மிக மலிவான ருசியான பிரியாணி தருகிறார்களோ அதைக் கண்டறிந்தவுடன் அது நடுச்சாலையாக இருந்தாலும் சரி, டபக்கென தலைக்கவசத்தை கழற்றி பூட்டிவைத்துவிட்டு வண்டியை அப்படியே சைட் ஸ்டேண்ட் போட்டுவிட்டு ஆத்தா நா வந்திட்டன் என்பது போல கடைக்கு ஓடிவிடுவது ஆண்டின் 365 நாள் வாடிக்கை. பிறகென்ன நாமெல்லாம் பேருந்தில் எப்போது வண்டி எடுத்து அறைக்கு போவது என்று அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். ஆனால் கல்லூரி செல்லும் லேடி மாடஸ்திகள் அப்படியெல்லாம் கிடையாது. உடனே இறங்கி இயர் போனில் பாடல் கேட்டபடியே வேகமாக வெளிக்கிடுவார்கள். அப்புறம் பிரியாணியைத தின்று முடித்துவிட்டு பல் குத்தியபடி வெளியே வந்து அவர்கள் வண்டியை நகர்த்தினால் பேருந்து செல்வதற்கு வழியே கிடைக்கும். இதற்குள்ளேயே ஏகப்பட்ட பொறி பறக்கும் வசனங்கள் நடத்துநர், ஓட்டுநர், பைக் நிறுத்துநர் ஆகியோருக்கும் இடையே நடந்துமுடிந்திருக்கும். இன்று ஒருநாளா என்ன? அடுத்தநாளும் அதுதான்.

              சென்னையைப் பொறுத்தவரையில் அதிலும் தமிழர்களின் வாகன உபயோகத்தைப் பொறுத்தவரையில் எந்த பாகம் விரைவில் மாற்றவேண்டி வரும் என்றால் அது ஹாரன்தான். ஆக்ஸிலேட்டரை முறுக்குவதைவிட ஹாரன்களை அழுத்தி அழுத்தி ரேகை தேய்ந்து ஜோதிடரிடமே இடது கையைத்தான் காட்டுவான் ஹெரிடேஜ் தமிழன். வழி கிடைக்க மாட்டேன்கிறது. என்ன செய்வது? இருசப்பன் தெருவுக்குள் விஷ்ணு கணபதி மாவு விற்கும் கடை இருக்கிறது. அங்கு மாவு வாங்கக் கூடும் ஐந்து பேர் நிறுத்திவிட்டு வரும் வண்டி ஐம்பது பேரை காக்கவைத்து வேதனைப் படுத்தும்.அதற்குள் மீன்பாடி வண்டி ஒன்று சுதந்திரமாக செல்லமுடியும். ஆனால் அங்குதான் டொயோட்டா இன்னோவாவை ஓட்டுவான் இன்கிரடிபிள் தமிழன். அங்கேயும் ஹாரனை அலறவிட்டு மெர்சல் செய்து டிபிக்கல் தமிழனின் பெரும் பொழுதுபோக்கு. அதிலும் யமஹா ஆர்15 போன்ற வண்டிகளை நொங்கு வண்டிகள் மாதிரி நினைத்து குழிகள் குண்டுகள் திருப்பங்களில் எல்லாம் திருப்பி ஓட்டி நடந்து வருகிறவனையெல்லாம் சடன் பிரேக் போட வைத்து அதிரடிப்பது ஹெரிடேஜ் தமிழனின் ஆல்டைம் பொழுது போக்கு. இரண்டு முறை பார்க்கலாம் ரக பெண்கள் எதிரே வந்துவிட்டால் ஆக்ஸிலேட்டர் உறுமலால் தெருவில் நடப்பவர்களின் இதயத்தில் ரத்தமே பம்பிங் செய்வது அதிர்ந்து தொடரும் வண்ணம்  இளைய சம்பூர்னேஷ்கள் ஓட்டுவது இருக்கிறதே... அடடா... அப்பப்பா.. ஓகே.. இந்த வார இறுதியை நாம் எட்டிவிட்டோம். ஹாரன் அடித்தாவது ஒரு கிலோ பிரியாணியை 80ரூபாய்க்கு வாங்குவோம். சாலையை அதிரடித்துக் கொண்டாடுவோம் ஹெரிடேஜ் தமிழர்களே!

பிரபலமான இடுகைகள்