வறட்சிவாதிகளிளோடான போராட்டம்
வறட்சிவாதிகளிளோடான போராட்டம்
திரைப்படம் இயக்குவது குறித்து பல கனவுகள் வைத்துக்கொண்டு இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக மற்றவர்களை மட்டம் தட்டி கீழே மிதித்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்துவது இருக்கிறதே அதை நான் இவர்களிடம் பெரிதும் கண்டிருக்கிறேன். இது எதுவரை சென்றது அந்த உறவு உடைந்து போகும் அளவு என்று சொல்லலாம்.
கனவுகளை நான் மதிக்கிறேன். அதை நோக்கி பயணம் செய்வது உத்தமமானதுதான். ஆனால் அதை அடையும் வழியாக அவர்கள் தேடி அடைய முயலுவது எப்படியாகிலும் என்பதுதான் சிறிதும் அறமே இல்லாததாக இருக்கிறது. முன்பு நான் பணிபுரிந்த பத்திரிக்கை அலுவலகம் அருகில் ஆவணப்படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றிருந்தது. அதனை நடத்திவந்த பி. எஸ். பெருமாள் நாதன் பேச்சில் மக்கள் நலம், போராட்டம், புரட்சி, மக்களுக்காக கலை என்று தொண்டைத்தண்ணீர் வற்றும் வரை பேசுவார். ஆனால் இறுதியில் சார் சாப்பட்றக்கு ஏதாவது பணம் இருக்குமா வின்சென்ட் என்பார். எனக்கு புரியாதது என்னவென்றால், கனவு பலிக்கும் வரை அதற்கான உழைப்பு எதிலும் ஈடுபடாமல் இவர்கள் எப்படி கனவுகளை உயிரோடு வைத்திருக்க முடியும்? அதிலும் இவர்கள் ஆக்கப்பூர்வமான பகிர்தல், செயல்பாடுகள் என்று எதையும் செய்ததில்லை. மரம் நடுவது என்றால் அதைப் பற்றி பேசுவதில் என்ன நடக்கும் என்று எனக்குப் புரியவில்லை. உண்மையில் செயல்பாடுகளைச் செய்பவர்களை சந்தித்திருக்கிறீர்களா? அவர்கள் அதிகம் எதுவும் பேசுவதில்லை. ஆனால் இந்த காரண அறிவுவாதிகள் பேசுவது தவிர்த்து ஆக்கப்பூர்வமான எதையும் செய்ததில்லை என்று பின்னர்தான் தெரிந்து கொண்டேன். இதே நபருக்காக நான் செய்து கொடுத்த பல புத்தகங்களுக்கான அட்டைப்படத்திற்கான பணத்தையும் மக்களுக்கானது என்று தரவேயில்லை. கனவுகளை நமது கண்ணில் காணுவது முயற்சிப்பது வேறு. ஆனால் அதை மற்றவரின் கண்ணில் காண முயற்சிப்பது எவ்வளவு பெரிய வன்முறை?
எனது சகோதரரின் நண்பர் ஒருவர் இருக்கிறார். பல திரைப்படங்களுக்கு துணை இயக்குநராக பணியாற்றிவிட்டு, இப்போது தன் தம்பி வேலைக்கு செல்ல அவரிடம் பணம் கேட்டு செலவழித்து வாய்ப்பு தேடுகிறார். ஒருவர் வெற்றியடைய பலரின் உதவிகளை கேட்பது தவறில்லை. துணை நிற்பதும் சிக்கல் இல்லை. ஆனால் எவ்வளவு காலம் இன்னொருவரை சார்ந்து நிற்பீர்கள்? தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருப்பது என்று இருப்பது நம்மைச்சார்ந்தவர்களையும் நாம் சோம்பலாகவே இருக்கிறோம் என்று ஒரு முடிவிற்குத்தானே தள்ளும். அதுவும் அவர் குடும்பத்திற்கு மூத்த பிள்ளை வேறு. அவர் குடும்பம் பல கேள்விகளைக் கேட்டு சித்திரவதைப் படுத்துவதாக கூறினார். ஆனால் தாய், தந்தை தன் மகனின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவது எந்த விதத்தில் தவறாகும் என்று எனக்கு புரியவில்லை. ஐரோப்பிய படங்களின் உணர்வுநிலைகள், காட்சியமைப்பு, பார்வையாளர்களை வசீகரித்து ஒன்ற வைக்கும் ஒரு விஷயம் என்ன என்று தேடி ஆராய்ந்து பார்க்கும் அவர் எப்படி தன் தந்தையின் சிந்தனை, கவலை குறித்து ஏன் யோசிக்க மறுக்கிறார். திரைப்படம் பார்ப்பது, அதை விவாதிப்பது என்பது மட்டுமே ஒருவருக்கு என்ன விதத்தில் ஒருவருக்கான பார்வையை கூர்மைபடுத்தி செழுமைப்படுத்தும்? மிக தீவிரத்தன்மை என்று இவர்கள் நினைப்பது எத்தனை மனிதர்களை சித்திரவதைப்படுத்துகிறது என்று இவர்கள் எப்போது உணர்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. சமூகம், குடும்பம் உள்ளிட்டவற்றை நிர்பந்தப்படுத்துகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இப்படி ஒரு இக்கட்டு இல்லையென்றால் நாம் எதையும் கற்றுக்கொள்ளவே முடியாது. இவர்களிடம் உள்ள நேர்மை, அறம் குறித்த செயல்பாடுகள் அது குறித்த ஆழமான வெறுப்பையே நமக்கு விதைக்கிறது. அந்தளவு உள்ளார்ந்த அசிங்கங்கள் மனதில் இருக்க இவர்கள் உலகில் உன்னதங்களை விதைப்பது குறித்து உரையாடுகிறார்கள். கனவினை உயிர்ப்பிக்க எவ்வளவு கடினமான உழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம். மற்றபடி அதை பேசுவதனால் எதுவும் நிகழப்போவதில்லை. இயல்பான சிருஷ்டித்தன்மை கெடுவதுதான் மிஞ்சும். நல்ல படைப்புகளை இவர்களை தருவார்களோ என்னமோ ஆனால் நாம் வாழுகின்ற வாழ்க்கையை சிறப்பாக வாழலாமே!
அவர் திரைப்படம் பார்த்துவிட்டு, காரண அறிவுக் கேள்விகளாய் அடுக்குவார். திரைப்படம் பல பொருள்களாய் மனதில் கருத்தாக புரிந்து கொள்ளப்படுவது எனக் கொள்ளலாம். வாழ்வனுபவமாய் உணர வேண்டியவற்றை எப்படி நீங்கள் வார்த்தையில் கூறுவீர்கள்? மேலும் நான், தான் என்று எண்ணத்தில் சிக்கிக்கொண்டவர்களிடம் உண்மை என்றுமே எடுபடாது என்பதை நான் சில வாரங்களிலேயே புரிந்துகொண்டேன். நான் அவர்களுக்கு கூறுவதெல்லாம் ஏன் உங்களின் இயல்பான நிலை குறித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். திறமை பலரிடமும் இருக்கிறது. ஆனால் ஒழுக்கம் மட்டுமே அதை தீவிரமான நல்ல இடத்தில் அமர்த்தும். விசாலமான அவதூறுகளால் பாதிக்கப்படாத மனத்தைப் பெறுவது வாழ்நாள் முழுக்கவுமான அடையக்கூடிய லட்சியம் என்று கூறலாம்.