கவர்மென்ட் பிராமணன்- நூல்வெளி2(ப்ராட்லி ஜேம்ஸ்)
கவர்மென்ட் பிராமணன்
அரவிந்த் மாளகத்தி
தமிழில் : பாவண்ணன்
இந்த நூல் கன்னட எழுத்தாளர் அரவிந்த் மாளகத்தியின் சுயசரிதையாகும். கவர்மென்ட் பிராமணன் என்று கூறப்படுவது ஏன் என்றால் அவருக்கு அளிக்கப்படும் அரசு சலுகைகளின் மீதான கேலி எனலாம். முழுக்க அவரின் ஒவ்வொரு வாழ்வின் நிகழ்வுகளும் இதில் கூறப்படுவதில்லை என்றாலும் குறிப்பான பலவையும் அவர் தேர்ந்தெடுத்து இதில் தொகுத்திருக்கிறார். தொடர்ச்சியாக பல நூல்களும் இவர் எழுதி வருகிறார்.
அரவிந்த் மாளகத்தி
தமிழில் : பாவண்ணன்
இந்த நூல் கன்னட எழுத்தாளர் அரவிந்த் மாளகத்தியின் சுயசரிதையாகும். கவர்மென்ட் பிராமணன் என்று கூறப்படுவது ஏன் என்றால் அவருக்கு அளிக்கப்படும் அரசு சலுகைகளின் மீதான கேலி எனலாம். முழுக்க அவரின் ஒவ்வொரு வாழ்வின் நிகழ்வுகளும் இதில் கூறப்படுவதில்லை என்றாலும் குறிப்பான பலவையும் அவர் தேர்ந்தெடுத்து இதில் தொகுத்திருக்கிறார். தொடர்ச்சியாக பல நூல்களும் இவர் எழுதி வருகிறார்.
ஏறத்தாழ தாழ்த்தப்பட்ட பலரும் அனுபவித்த கொடுமைதான் முதல் சில அத்தியாயங்களில் குறிப்பிடப்படுவது. பள்ளி ஆசிரியர் அரவிந்த் மாளகத்தியை கடுமையாக அடித்து நொறுக்குவது. தினசரி வகுப்பறையைக் கூட்டுவது என்று அதனை செய்யவில்லை என்றால் அவர்களை சாதிப்பெயர் கூறி கடுமையாக தண்டிப்பது. ஏறத்தாழ எனக்கும் எனது ஆசிரியர் பாலுச்சாமி நாயக்கர் நினைவுக்கு வருகிறார். அவர் ஒவ்வொருநாளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தினமும் இறைவனிடம் பிரார்த்திப்பது மூன்றாம் வகுப்பில் எனது அந்த ஆண்டிற்கான இலக்கு, திட்டம், லட்சியமாகவே இருந்தது. இதில் அரவிந்த் என்பது இவரது பெயர். மாளகத்தி என்பது இவரது சாதிப்பெயர்.
அரவிந்த் மாளகத்தி ஊரில் கல்யாணம் என பல விழாக்களுக்கு சாப்பிடச்செல்வது, அவரது தந்தையின் ஆசிரியர் பணிக்குச்செல்லும் நாள் குறித்தவை, அரவிந்த் படிக்கும் தெருவிளக்கு திட்டமிட்டு ஊராரின் பொறாமையால் உடைக்கப்படுவது, அவரது குடும்பத்தின் உணவு பழக்கத்தை மாற்ற முயன்ற சிவலிங்க அணிகலன் குறித்த நிகழ்ச்சிகள், அவரது காதல், சாதியினால் உடைபட்டுப் போவது, வாழை இலை குறித்த பதிவுகள், முற்போக்கு போலிகளின் ஆழ்மனது விவரிப்பு என இவற்றை வாசிக்கும் யாரும் குறிப்பாக கிராமச்சூழ்நிலையில் வசிக்கும் அல்லது வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் இதனை எளிதில் தன் கதையாகவே உணர பெரிய தடையேதுமிருக்காது. இதில் எழுதப்பட்டுள்ள பல விஷயங்கள் சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கு செல்லும்போது வருத்தப்படச் செய்யலாம். ஆனால் இவை நிகழ்த்தப்பட்டவருக்கு, இதை திரும்ப எழுதும்போது அவரது மனம் எவ்வளவு வேதனைப்படும் என்பதை அவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். இதை வாசிக்கும்போது நீங்கள் உணரலாம். பலவித அவமானங்களுக்கு உள்ளாகுகின்ற மனம் அந்த நோயினால் பாதிக்கப்படுவதனால் பொருளாதாரம் மற்றும் கல்வி இரண்டையும் பெற்றாலும் கூட பலவித நிகழ்வுகளை எப்படி நுட்பமாக கவனித்து தன்னை காயப்படாமல் இருக்க வேண்டியிருக்கிறது என்று அரவிந்த் மாளகத்தியின் இறுதி அத்தியாயங்கள் வாசகருக்கு உணர்த்துகிறது. அவமானங்கள், புறக்கணிப்புகள் ஆகியவற்றை தாழ்த்தப்பட்டவர்கள் கடந்து செல்லாமல் இருக்கவே முடியாது. அந்த உண்மையை நீங்கள் அனுபவித்திருந்தால் அதை இந்த நூலும் இன்னொரு சான்றாக நிறுவுகிறது. மேலும் இதன் தீவிரத்தை மேலும் உணர வேண்டுமென்றால், ஓம்பிரகாஷ் வால்மீகி எழுதிய ஜூதான் (எச்சில்) எனும் என்சிபிஹெச் வெளியீடாக வந்துள்ளது. காலச்சுவடில் 2014 ல் வெளிவந்த புயல் எனும் ஓம்பிரகாஷ் வால்மீகி எழுதிய சிறுகதை தீண்டத்தகாதவர்களின் வேர்கள் துண்டுபட்டு போவதை தீவிரமாகப் பேசுகிறது. சாகித்திய அகாதெமியில் கன்னட தலித் இலக்கியம் எனும் சித்தலிங்கையா உள்ளிட்ட பல தலித் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதை கட்டுரைகள் அடங்கிய நூலும் முக்கியமானது எனலாம்.