இரவில் நான் உன் குதிரை

                                                  இரவில் நான் உன் குதிரை






                   தினமும் முன்பு நேரமே கிளம்பும்போது சிலமுறை குதிரையை நான் காணத்தவறுவதுண்டு. அது குறித்து அப்போது எந்த கவலையுமில்லை. ஆனால் இப்போது எல்லாம் அது சிறந்த பொழுதுபோக்காக மாறியிருக்கிறது. அந்தக்குதிரை நல்ல வாளிப்பான பளபளக்கும் கொழுப்பு மினுமினுக்கு உடலைப் பெற்றிருந்தது. அதன் முடி பளபளவென இரு பின்களால் முன் தலை வரை இறுக்கமாக கட்டப்பட்டு பின் தலையில் அன்று என்ன உடையோ அதற்கேற்ப நிறம் கொண்ட ரப்பர்பேன்ட் இறுக்கமாக பிசிறின்றி சுற்றப்பட்டிருக்கும்.  உடை நேர்த்தியோ கூறவேவேண்டாம். கால்சட்டை இறுக்கமாக இருக்கும். நல்ல கடும் நிறத்துடன் அணியப்பட்டிருக்கும். குதிரையின் மேலுடல் வாளிப்பிற்கு ஏற்ப எதை அணிந்தாலும் அதன் எலும்புகள், உடல் சுழிவுகள் எதுவும் வெளியே அதிகமும் தெரியாது. கச்சிதமான உடல் அமைந்து உடை அணிந்து வந்தாலும் காலில்தான் சிக்கல். லாடம் அடிக்காது குதிரை சாலையில் நடக்க முடியாது அல்லவா? அதுபோல் இங்கு நான்கு வரி கொண்ட உயரமான குதிகால் குந்து காலணி அடிக்கடி காலை சுளுக்க விட்டு விடுகிறது. நான் பார்க்கும்போதெல்லாம் குதிரை கால் இடறி சமாளித்து அமர்வது பிராண சங்கடமாக போய்விடுகிறது. எனது நெஞ்சு பொறுக்குமா இதையெல்லாம்?  வலது கை ஆட்காட்டி விரலில் தங்க முலாமிட்ட (!) இருக்காது பங்காரத்திற்கு கவரிங்கா? சுவர்ணம்தான் அது. அவ்வளவு அழகு. காதில் அணிந்திருக்கும் அணிகலன் மடல்களினோட தொடங்கி முடிகிறது.

             நல்ல வண்ணம் செறிந்த தன்னம்பிக்கை கொண்ட கண்கள். பார்த்துக்கலாம் வா என்ற பாவனை குதிரையிடம் எப்போதும் யார் வேண்டுமானாலும் கடன் கூட வாங்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சில நிமிட தாமதங்களுக்கு முடி சிலுப்பி எழும் பாருங்கள் குதிரை நிச்சயம் உங்களுக்கு பாலகுமாரன் எழுதிய இரும்புக்குதிரை கவிதைகள் நினைவிற்கு வரும். அவ்வளவு லாவகமான நடை அது. குதிரையின் பாய்ந்து பறக்கும் வேகத்தையும் இறுதி நிறுத்தத்தின் போக்குவரத்து நெரிசலில் கண்டேன். உன் துக்கமெல்லாம் சந்தோஷமாக மாறும் என்னும் இயேசுவின் வார்த்தைகளை நம்பியது அப்போதுதான். குதிரையின் பாதக்குறடுகளை நான் பார்த்தபடியே இருப்பேன் வாயிற்படிகளில். அநேகமான குதிரை அதைப்போலவே உள்ள சக்கரம் மேலுள்ள இருக்கையில்தான் அமரும். சில சமயங்களில் மட்டும் பின்னிருக்கைகளில். காதில் ஒலிக்கும் பாடலோடு தன் பயணத்தை குதித்துத் தொடரும். குதிரையின் சாயல் என்ன? வேண்டாம் சாயலை யாரும் விரும்புவதில்லை. தலைப்பு நிச்சயம் இங்கே இதோ இப்போது இடம்பெற்றுத்தான் ஆக வேண்டும்.

பிரபலமான இடுகைகள்