குலாத்தி: தந்தையற்றவன் நூல்வெளி2
குலாத்தி
கிஷோர்
சாந்தாபாய் காலே
ஆங்கிலம் வழி தமிழில் : வெ.
கோவிந்தசாமி
விடியல்
பதிப்பகம்
இந்த நூல் தமாஷா எனும்
நடனம் ஆடும் தாயின் மகனாகப் பிறந்து சமூகத்தின் பல தடைகளைத் தாண்டி, சாதிக்கொடுமைகளை
அனுபவித்து தளராத மனவுறுதியினால் மருத்துவரான ஒருவரின் கதை இது. தன் வரலாற்று
நூலில் இந்த நூல் வேறுபடுவது இதனுடைய இலக்கை குறிவைத்து தளராது முன்னேறினால்
நிச்சயம் நினைத்ததை அடையமுடியும் என்று கூறும் தன்மையினால்தான் என்பதை இங்கு குறிப்பிடலாம். குலாத்தி என்பது தமாஷா எனும் நடனமாடும் ஒரு ஜாதிக்காரர்களைக் குறிப்பிட பயன்படுகிறது. இந்த ஜாதியில் பிறந்த ஆண்கள் யாரும் வேலைக்குச் செல்வதெல்லாம் கிடையவே கிடையாது. அவர்கள் தம்
தங்களை, அல்லது
அக்கா, அல்லது
மகள் என்று யாரையேனும் நடனமாடச் சொல்லி அதன் மூலம் வரும் பணத்தில் வாழ்வதுதான்
அவர்களது வழக்கமாக இருக்கிறது. இந்த நடனம் ஆடுவது என்பது பெயருக்குத்தான். இப்படி நடனமாடும் பெண்களை ஊரின் பெரும் பணக்காரர்கள் ஆசைநாயகியாக வரித்துக்கொள்ளத்தான் அப்பெண்களை பாடல் பாடவும், நடனமாடவும் அக்குடும்ப ஆண்கள் அனுப்பிவைப்பது. அந்தப் பெண்களை அக்குறிப்பிட்ட பெரும் புள்ளிகள் தங்களிடம் எவ்வளவு நாள் வைத்திருக்கின்றனரோ அவ்வளவு நாள் அக்குடும்பத்தின் ஆண்களுக்கு கவலையில்லை. வரும் பணத்தைக்கொண்டு சுகமாக இருக்கலாம். ஏறத்தாழ கிஷோரின் தாய் சாந்தாபாய்க்கும் நிகழ்வது அதுதான். ஆனால் அவளுக்கு நடனமாடுவதை விட பாடுவது நன்றாக வரவே அதில் பயிற்சி எடுத்துக்கொள்கிறாள். கதை தொடங்குவது, கிஷோர் சிறுவனாக இருக்கையில் அவனது தாய் நடனமாடுவதை மற்றவர்கள் போல ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது என்பதில் தொடங்குகிறது. ஆனால் அந்த நடனம் எவ்வளவு கொடுமையானது என்று பின்னாளில் அவர் புரிந்துகொள்கிறார். பெண்களை பணம் கொடுத்து சிறிது காலம் அனுபவித்துக்கொள்ளும் பெரும் பணக்காரர்கள் மூலம் குழந்தை உருவாகியவுடன் அவர்கள் அப்பெண்களை கைவிட்டு விடுவார்கள். பிறகு அவள் ஒன்று தமாஷா குழுவுக்கு திரும்ப வேண்டும். அல்லது வேறு வேலைக்குச் செல்லவேண்டும். வேறு வேலைக்குச் செல்ல கல்வி அவசியம். ஆனால் அவள் காலம் முழுவதும் இதிலேயே உழலும் படி அவளை அவளது சகோதரர்கள் இம்சிப்பார்கள். சாந்தாபாய் தனது மூத்த சகோதரனிடம் தான் படித்து ஆசிரியர் ஆகவேண்டும் என கெஞ்சுகிறாள். ஆனால் எதுவும் நடப்பதில்லை. இறுதியில் அவள் பாடல்களைப் பாட, அவளது தங்கை நடனம் ஆடுவது என்று முடிவாகிறது. ஏறத்தாழ அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் உச்சம் தொடுகிறார்கள். மற்றவர்களை விட இவர்களது நடனக்குழு உச்சம் தொடுகிறது வருமானத்திலும், புகழிலும். ஆனால் இதிலிருந்து சாந்தாபாய்க்கோ அவளது தங்கைக்கோ செலவழிக்க ஒரு ரூபாய் கிடைக்காது. எனவே சாந்தாபாய் அப்போது ஒரு குடும்பமாய் வாழ விரும்பி தன்னை விரும்புவதாய் கூறும் ஒருவருடன் ஓடிப்போகிறாள். இங்கிருந்து கிஷோரின் கதை வலிகளுடன் தொடங்குகிறது. சாந்தாபாய்க்கு முதலில் ஒருவருடன் பிறக்கும் குழந்தைதான் கிஷோர். இதன் பிறகு பிறக்கும் ஒரு பெண் குழந்தை இறந்து போகிறது. அதன் பிறகு பிறப்பவன் தீபக். இவனை அவள் கிஷோரைவிட பாசமாக வளர்க்கிறாள். கிஷோருக்கு வீட்டில் கடுமையான பல வேலைகளைச்செய்ய நேரிடுகிறது. இவனை அவனது தாத்தா எங்கும் அனுப்ப விரும்புவதில்லை. ஏனெனில் அவன் அங்கிருந்தால்தான் அவனது தாய் அவனுக்கு அனுப்பும் பணத்தை தான் செலவழிக்கமுடியும் என்று அவர் பிடிவாதமாக அவனை எங்கேயும் விடாமல் வைத்திருந்து வேலை வாங்குகிறார். அவனுக்கு ஒரே ஆறுதல் லக்ஷ்மி பாய்தான். அவளுக்கு உணவு கொண்டுபோக காட்டுக்குச் செல்வது அவனுக்கு தினசரி வேலை. இத்தனை வேலைகளைச் செய்தாலும், அவன் தினப்படி பள்ளிக்கூட பாடவேலைகளை மறக்காமல் செய்துவருகிறான். அவன் தன் அம்மாவை சென்று பார்த்துவர செல்கிறான். ஆனால் அவள் அவனை தன் கணவனின் கோபத்துக்கு பயந்து அங்குவைத்திருக்க சம்மதிப்பதில்லை. இது கிஷோரை கடுமையான விரக்தியிலும், கோபத்திலும் தள்ளுகிறது. வேறுவழியில்லாமல் தன் தாத்தாவின் வீட்டுக்கு திரும்புகிறான். ஏறத்தாழ அவன் அம்மாவை நினைவில் கொண்டு கடுமையாக அவனை வசைபாடுவதோடு, அடித்து உதைக்கிறார்கள். இதற்கிடையில் அவனது சித்திகளும் குழந்தைகளோடு கைவிடப்பட்டவர்களாக அந்த வீட்டிற்கு வந்து சேர்கிறார்கள். இதோடு அவன் மேல் படிப்பிற்காக தன் அம்மா இருக்கும் இடத்திற்கு போகிறான். அங்கு உள்ள மில் ஒன்றினைக் கவனித்தபடி பள்ளிப்பாடங்களை படிக்கிறான். அம்மாவிடமிருந்தும் அவனுக்கு எந்த பாசமும் கிடைப்பதில்லை. அவள் வாழ்க்கையின் துயர்களை மிகவும் பொறுமையாக கடக்கிறாள் அப்போது அவனுக்கு தெரிகிறது. அவன் எடுத்த மதிப்பெண்களுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கிறது. இதோடு அவன் பெயரின் பின்னாலிருக்கும் சாந்தாபாய் காலே அவன் வாழ்வு முழுமைக்கும் கேலி செய்யப்படும் காரணமாக மாறுகிறது. சாதி கண்டுபிடித்தால் பேச மாட்டார்கள் என்று நண்பர்கள், உறவினர்களைப் பார்க்காமல் அலைந்து திரிகிறான். அவனது உறவுகளை அவன் திரும்ப சந்தித்தானா? அவனது தாய் என்னவானாள்? கிஷோர் அதன்பிறகாவது நிம்மதியாக வாழ முடிந்ததா? என்பதை நீங்கள் இந்த தன்வரலாற்று நூலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பயணமும் சிறிய முதலடியில்தான் தொடங்குகிறது என்று கூறுவார்கள். அதுபோல, கிஷோர் தன் பயணத்தின் கடுமை குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து பயணிக்க காலடி எடுத்து வைக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறான். அதனாலேயே அவனுக்கு அதில் உதவி செய்பவர்கள் கிடைக்கிறார்கள். அதன் வழியே முன்னேறி பயணிக்கிறான். அறியாமையினால் அவனது உறவுகள் அவனை புறக்கணித்து ஊதாசீனப்படுத்திய போதும். அவன் அவர்களை அவ்வாறு எண்ணுவதில்லை. இந்த வாழ்க்கையின் பல விஷயங்களை கிஷோர் எப்படி கடக்கிறான் என்பதே ஆச்சர்யம்தான். அவை நடப்பதற்கு எந்த சாத்தியக்கூறும் இல்லாதபடி சூழல்கள் சுற்றியிருக்க கிஷோர் இன்று மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவையாக மருத்துவம் அளிப்பது நிச்சயம் சாதனையான ஒன்றுதான் அல்லவா?