'ம்' ஷோபா சக்தி: நூல்வெளி2
நூல்வெளி -2
ம்
ஷோபா சக்தி
இந்த நூலின் வேறுபாடு என்னவென்றால் நூல் அட்டையிலேயே அது அச்சான இடம், வடிவமைத்தவர் ஆகிய விவரங்களை அச்சிட்டு களேபர கவனத்தை ஈர்க்க முயற்சித்திருக்கிறார்கள். இந்த நாவல் இலங்கையில் பாதிரியாருக்கு படிக்கும் ஏர்னஸ்ட் நேசகுமாரன் என்பவரின் இயக்கம், அதில் ஈடுபட்டதால் சிதைவடையும் அவரது மொத்த வாழ்வு என உண்மைச்சம்பவங்களோடு இணைந்து பயணப்படுகிறது கதை இது. தொடக்கம் ஒரு அதிர்ச்சியான விஷயத்தோடு தொடங்குகிறது. பிறேமினியின் மகள் நிறமி அரசு மருத்துவமனையில் தன் கர்ப்பத்தை கலைக்க அமர்ந்திருக்கிறாள். அது யாரால் உண்டானது என்பதை அவள் தெரிவிக்க மறுக்கிறாள். அது யாரால் உண்டானது என பலரும் யோசிக்க, அவளது தந்தை ஏர்னஸ்ட் நேசகுமாரனும் யோசிக்கிறார் என்று அதன்வழியே அவரது வாழ்க்கை நம்முன் விரிகிறது. இதில் நிறமி பிறப்பது, பிறேமினியை திருமணம் செய்வது போன்றவை விளக்கப்படவில்லை. அதற்கு முன்னான கதை இது. மேலும் அக்கதை தனிநாவலாக வரக்கூடும். இதில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் எல்லோருமே மனம் ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள். நேசகுமாரனின் நண்பன், அவனது நிலவுடைமை சமூகத்தில் வாழும் முறை கொண்ட அவனது தந்தை, நேசகுமாரனின் காதலியான சிறிகாந்தமலர், இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், நேசகுமாரனின் தந்தை ஏர்னஸ்ட், அவரது வீட்டில் வேலை செய்து இயக்கத்தில் சேரும் ராஜேந்திரன், பக்கிரி பல மனிதர்கள் நூலை வாசித்து முடித்தாலும் வெகு நாட்கள் நம் நினைவிலிருந்து அழிக்க முடியாத மனிதர்கள்தாம். அதுவும் தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்ல சிங்கள கைதிகளை அனுப்பிவைக்கும் அரசின் கொடூரங்கள் வாசிக்கையில் திகைக்க வைக்கின்றன. அதை ஆசிரியர் அதனை விளக்கும் பொருட்டு விளக்கமாகவே பேசுகிறார். அனைத்து அத்தியாயங்களும் ம் என்ற சொல்லில் முடிகின்றன. இது ஒரு சூசகமான சொல் இல்லையா? நடந்த சம்பவங்கள் நிஜமாக இருந்தாலும் கேட்பவனுக்கு அது ஒரு கதை அல்லவா? அவன் நிச்சயம் ம் கொட்டுவான். அப்போதுதானே கதை சொல்ல முடியும்? நிச்சயம் படிக்க படிக்க நீங்களும் ம் கொட்டுவீர்கள். தயக்கத்துடன், வலியுடன், வேதனையுடன், கையாலாகத்தனத்துடனும் கூடத்தான்.