நம் புத்தியை என்ன செய்வது?

                                                    நம் புத்தியை என்ன செய்வது?





உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜாகேந்திர சிங். அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா குறித்து அதாவது சட்டவிரோத சுரங்கம்,  நிலம் அபகரிப்பு ஆகியவற்றில் அவருக்கு தொடர்பு இருப்பதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இதன் பின்னர் எப்போதும் போல காவல்துறையை ஏவிவிட்டு அந்த பத்திரிகையாளரின் வீட்டில் சோதனை என்னும் முறையில் பயமுறுத்தல் தொடங்கியிருக்கிறது. அதிலும அவர் மசியாமல் இருக்க, அவரை உயிருடன் கொளுத்தவும் முயன்றிருக்கிறார்கள் அமைச்சரின் ரத்தத்தின் ரத்தங்கள். கடுமையாக தாக்குதலுக்குள்ளான ஜாகேந்திர சிங் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து தொடரப்பட்ட வழக்கையும் அமைச்சரின் ஆட்கள் திரும்பப் பெறுமாறு  பத்திரிகையாளரின் மகனை மிரட்டியிருக்கின்றனர். இது குறித்து தோட்டக்கலை அமைச்சர் பரஸ்நாத் யாதவ் ' விதியை யாரால் தடுக்க முடியும்?'' என்று எப்போதும் போல தன் அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இதுபோல மதச்சார்பற்ற மனிதர்களாக தங்களை வெளிப்படுத்தி சுதந்திரமாக மதத்தை மறுத்து கருத்துகளை பதிவு செய்த வலைப்பதிவர்கள் 4 பேர் பங்களாதேசில்  மதவெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நம் நாட்டைச் சுற்றிலும் மத அடிப்படைவாதம் பெருகி வருகின்ற சூழலில் நமது நாட்டில் சாதாரணமாகவே அரசியல்வாதிகள் - மாஃபியா கும்பல் ஆகியோருக்கான தொடர்பு அனைவரும் அறிந்தது. நமது நாட்டில் நமக்கு நாமே திட்டம்தான் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. நமது நாட்டில் ஐ.எஸ்.ஐ போன்ற உளவு அமைப்புகளெல்லாம் பயங்கரவாதத்தை தூண்டிவிட வேண்டியதில்லை. அதற்குத்தான் ஆர்.எஸ். எஸ். நிறுவனம் இருக்கிறதே!  எனவே இதெல்லாம் இயற்கையானதுதானே நம் கையில் என்ன இருக்கிறது? என்று மனதில் பட்டதை பேசியுள்ளார் உ.பி அமைச்சர். உண்மையில் ஜனநாயகத்தை உதிரத்தில் கொண்டுள்ள நாடு  இந்தியா என்று என்று தம்பட்டம் அடிப்பதில் மக்களுக்கான பங்கு என்று கையில் இருப்பது வாக்களிக்கும் உரிமை மட்டுமே. அதையும் நாம் சாதி வர்க்கம் சார்ந்து அளித்து பழகிவிட்டோம். உணர்ச்சிவசப்பட்டு நாம் அளிக்கும் ஓட்டுக்கள் பல கோமாளிகளையும் ராஜாக்களை ஆக்கிவிடுகிறது. அடிமையாக இருப்பது வேறு. ஆனால் அடிமையின் அடிமையாக இருப்பது கொடுமை அல்லவா? அப்புறமென்ன அவர்களின் கோலுக்கு நாம் ஆட வேண்டியதுதான் பாக்கி. இது இந்தியாவில் பா.ஜ.க. கட்சி ஆட்சிக்கு வந்த உடனே இந்த நேர்மையாக, உண்மையாக இருக்கும் நபர்களை அழிக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. காவல்துறையை பொறுத்தவரையில் எதையும் காலம் தள்ளி வழக்கு பதிவு செய்வதுதான் அவர்களுக்கு அரசு இடும் கட்டளை போல. மேலும் நீதி கிடைப்பதும் ஒன்றும் நிச்சயமல்ல. நீதிபதிகளாக இருப்பவர்கள் பலரும் மேல்தட்டு வர்க்கம் சார்ந்தவர்கள். எத்தனை பேர் இதுபோல மக்களுக்காக பேசுபவர்களின் சார்பாக ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர். அங்கும் தத்து, குமாரசாமி போன்றோர் இல்லாமலா என்ன? தீர்ப்புகளின் சாதகங்களுக்கு ஏற்ப ஆளுநர் பதவி தந்தால் போயிற்று. அதனால்தானே சிறிது கூலி அதிகமாய் கேட்ட தலித் மக்களை உயிரோடு எரித்துக்கொன்ற வெண்மணி படுகொலையில் கூட குற்றவாளிகள் மிக எளிதில் வெளிவர முடிந்தது. தனது நாட்டு மக்களுக்கு எதிராகவே அரசு இருந்தால் எத்தனையுடன் நாம் போராடுவது? வாழவா, வாழ்க்கையை இடையில் பறிகொடுக்காமல் இருக்கவா? முதுமையிலா ? ஏதேனும் ஒரு அமைச்சரின் மகன் வேகத்தடையில் மோதி இறந்தால்தான் அமைச்சர் பெருமான் வேகத்தடையின் மீது வெள்ளை வண்ணம் பூசி மக்களைக் காப்பாற்ற முனைகிறார். அத்தகைய நாட்டில் நமது மதி சிறிது வேலை செய்திருந்தால்  விதியை நாம் தடுத்திருந்திருக்க முடியும்.  கூறுங்கள் நம் புத்தியை நாம் என்னதான் செய்வது?