சாவுக்கே சவால்:நூல்வெளி2(ப்ராட்லி ஜேம்ஸ்)

                                                       நூல்வெளி2

                                           சாவுக்கே சவால்                                                                                      விளாதிஸ் லாவ் தித்தோவ்                                                                            தமிழில்: பூ. சோம சுந்தரம்   


           தலைப்பைப் பார்த்ததும் லயன் காமிக்ஸ் கௌபாய்களின் மிரட்டல் கதைகளைப் போல் என்று நினைத்துவிட வேண்டாம். தலைப்புதான் அப்படி வைத்துவிட்டார்கள்.  கதை உயிரோட்டமானதுதான். ரஷ்யாவின் கதைகளைப் பொறுத்தவரை போர் அவர்களது வாழ்க்கையில் முக்கியமான பகுதியாக இருந்திருக்கிறது. பல கோடி மக்களின் வாழ்வைக்கூட மாற்றியிருக்கிறது. அது அவர்களது இலக்கியத்தில் இடம்பெறக் காரணம் அந்தளவு ஆழமான வடுவாகி இருக்கிறது அந்நிகழ்வுகள் என்று கூறலாம்.   இக்கதையில்  ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தான்யா, ஸெர்கேய் பெத்ரோவ் என இருவரும் தங்களின் பெற்றோர் ஒருவரையோருவர் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். விடுமுறை கிடைத்தால் எங்கேனும் சுற்றிப்பார்க்க போகலாம் என்று தான்யா நினைத்துக் கொண்டு இருக்க, ஸெர்கேய்க்கு சுரங்கத்தில் நிகழும் ஒரு விபத்து அவனது கனவுகளை குலைத்துப் போடுகிறது.  அவனது பல நண்பர்களைக் காப்பாற்ற முனையும் அவன் அவ்விபத்தில் தன் இரு கரங்களையும், ஒரு கால் ஒன்றினையும் கடுமையாக சிதைத்துக்கொள்கிறான். அக்கரங்கள் நீக்கப்பட்டு கால் சரியாக நடக்கமுடியாதபடி ஆக, அவனது வாழ்வு என்னவாகிறது? தான்யா அவனை இன்னமும் அதே காதலோடு நேசித்தாளா, வேலை செய்ய வேண்டும் என்று தீவிரம் கொண்ட ஸெர்கேய் அங்கவீனன் ஆன பிறகு எப்படி நம்பிக்கை கொண்டு உலகைப் பார்க்கிறான்? அவனது நண்பர்கள் அவனது தியாகத்தை உணர்ந்தார்களா எனபதற்கு எல்லாம் விடை கூறுவதுதான் சாவுக்கே சவால் எனும் நாவல்.


 ஏறத்தாழ தான்யாவிற்கும், ஸெர்கேய்க்குமான உரையாடல் பகுதிகளே நூலில் மிகக்குறைவு. பெரும்பாலும் அகவுணர்வு சார்ந்தவை இதில் அதிகம். எகோரவிச் எனும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர் வரும் பகுதிகள் வாசிப்போரை நெகிழவைக்கக் கூடியன. அவர் கூறும் வார்த்தைகள்தான் ஸெர்கோயின் பின்னாளைய வாழ்க்கையினை நேர்த்தி செய்கிறது 'அனுபவித்தவை, ஆழ்ந்து உணர்ந்தவை இவற்றை வெளிப்படுத்தாமலிருப்பது மிக கடினம்'  இந்த வார்த்தை நினைவுக்கு வரும்போதுதான் ஸெர்கேய் வாயினால் பென்சிலைப் பிடித்து கையினால் எழுதுவது போன்ற நேர்த்தியை மெல்ல அடையும் முன்னதான பயிற்சி தொடங்கும். மேலும் நாம் நோய்வாய்ப்படும்போது தான் பாசத்தை, பராமரிப்பை மிக அதிகமாக மனம் கோரும். இது இயல்பான சுயநலம் என்று கூட கூறலாம். அந்த நேரத்தில் மனதில் கிடக்கும் ஒவ்வொன்றையும் பலமுறை அசைபோடமுடியும். இதுவரை கவனிக்காத, கவனம் செலுத்தாத அனைத்து விஷயங்களும் நம் மனக்கண்ணில் 24 ப்ரேம் திரைப்படமாக விரியும். அவை அனைத்தையும் இந்நாவல் வாசிப்பவருக்கு நினைவுக்கு கொண்டுவரக்கூடும்.  இது தனிப்பட்ட ஒரு புனைவல்ல. இக்கதையை எழுதியவரின் சுயசரிதை என்று கூட சொல்லலாம். ஆனால் அதனை கதையின் இறுதியில் கூறியிருக்கலாம். பூ. சோம சுந்தரத்தின்  அழகான மொழிபெயர்ப்பு தன்னம்பிக்கை இழந்து பின் பெறும் சந்தர்ப்பங்களை விவரணைகளாக நிறைவாக கூறிச்செல்லும் வடிவத்தைக் கொண்டிருக்கிறது. அது நேர்த்தியான முடிவாக அமைந்திருக்கக்கூடும்.                                            

பிரபலமான இடுகைகள்