இயந்திர இட்லியும், க்ரீஸ் சட்னியும்

                                               இயந்திர இட்லியும், க்ரீஸ் சட்னியும்













       நான் ஐஸ்ஹவுஸில் இரு கடைகளில் முதலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சுவைநயா மெஸ் என்பதில் முதலில் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அங்கும் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நாட்களிலேயே இட்லியை வாங்கிச் சாப்பிட முயன்றால் வாயில் உமிழ்நீர் கூட சுரப்பதில்லை. அதற்கு காரணம் இட்லி, சட்னி இவையெல்லாம் ஒரு வாரத்திற்குள் ஒரு உறைவு நிலை போலாகி தெலுங்கு படங்களின் என்.ஆர். ஐ கதாநாயகன் போல கடுப்படிக்கிறது. அதுவும் சில நாட்களிலேயே எனது மூக்கு இட்லியிலிருந்து வரும் இயந்திர வாசனையை கண்டறிந்தது. உணவுக்கு வாசனை எவ்வளவு முக்கியம். அந்த வாசனைதான் பெரும்பாலும் அந்த உணவை சாப்பிடுவதற்கான நம்பிக்கையையும் ஆர்வத்தையும் தருகிறது. ஆனால் மெஸ், ஹோட்டல்களில் சாப்பிடும் உணவு வகைகள் மிகக்குறுகிய காலத்திலேயே அவற்றில் கலக்கப்படும் ஈஸ்ட், மற்றும் சில சோடா உப்பு போன்றவற்றினால் வயிற்றில் அழற்சியை ஏற்படுத்துகிறதே தவிர பசியைப் போக்குவதில்லை. 

           சுவைநயா மெஸ்ஸில் நின்று கொண்டே கொதிக்க கொதிக்க உணவு சாப்பிடுவது இருக்கிறதே மிகச்சிறு கடை என்றாலும் பூரி,பொங்கல் நன்றாக இருக்கும். ஆனால் அதெல்லாம் ஏதோ ஒரு நாள் அங்கு வந்து சாப்பிடுகிறவர்களுக்கு. தினமும் சாப்பிடுகிறவர்களுக்கு குருமா என்றால் சுவை இப்படி, சாப்பாத்தியில் உப்பு இவ்வளவு இருக்கும் என்று மனதில் படிந்துவிடுகிறது. அப்படி படியாமல் இருக்கும் வரையில் மட்டும்தான் நாம் உணவை விருப்பமுடன் புதிய உணவுவகை போல் சாப்பிடமுடியும். இல்லையென்றால் கடனே என்று வயிற்றில் அடைக்கவேண்டியதுதான். சுவைநயாவிற்கு எதிரே சாலையைக் கடந்தால் வரும் கடையில் உட்கார்ந்து சாப்பிடலாமே என்று சில நாள் இரவு உணவைச் சாப்பிடுவேன். அங்கு கல்லாவில் அமர்ந்திருப்பவர் பிரளயம் வந்தால் கூட எழுந்திருப்பேனா என்பதுபோல் போகிற வருகிறவரையெல்லாம் டீயாங்க,  டீ, டீயாங்க என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தார். மற்றபடி அந்த மெஸ்ஸில் எங்கெங்கு காணினும் வட இந்திய வாலாக்களே. உள்ளூர் சாஸ் வகைகளை பாக்கெட்டுகள் செய்து கொண்டிருந்தார்கள் இரண்டுபேர் குழு. முந்தைய கடையில் சப்பாத்தி செட் ஒன்று 25 ரூபாய். இங்கு செட் ஒன்று 15 ரூபாய் அவ்வளவே. மற்றபடி அவ்வளவு சுத்தம் இல்லாத கடை என்று கூறலாம். அங்கு சாப்பிட்டு வந்ததைக்கேட்ட  கார்த்தி அண்ணன் அங்கயா அங்கயெல்லாமா போய் சாப்பிடாதப்பா வேற கட சொல்லட்டுமா என்று அட்டவணை கொடுத்தார். அவர் கொடுத்ததில் அருகில் இருந்த கடை ஒன்றுக்கு சென்றேன். அங்கு இருந்த ஆத்தா ஒருவர் யாரோ ஒருவரின் வீட்டு பஞ்சாயத்துக்கு தன் வாழ்விலிருந்து அனுபவத்தீர்வு வழங்கிக் கொண்டிருந்தார். அக்கடையில் வேலை செய்பவர்களின் சுறுசுறுப்புதான் கடையின் முதலீடே.  எப்படி புனராவங்கி பணம் போட வந்தால் டபக்கென வாங்கி போடுகிறார்களோ அதுபோல வேகமாக சப்பாத்தியைக் கட்டிக்கொண்டு வந்து கொதிக்க கொதிக்க கையில் கொடுத்து விடுகிறார்கள். அப்புறம்தான் நாம் சோபனாவின் கிருஷ்ணா நாடக நடனம் தாண்டிய ஹடயோகா, அங்க மர்த்தனா வித்தைகளெல்லாம் சூட்டை உணர்ந்து நடத்த வேண்டியிருக்கிறது.  பிறகு ரெவல்யூசன் செல்வி உணவகத்தில் சப்பாத்தி சாப்பிட்ட  கதையை சொல்லாமல் எப்படி? தற்போது வேலையில் இருக்கும் சப்பாத்தி சுடும் அக்கா முதலில் கடற்கரையில் நிலக்கடலை வறுத்தெடுத்த அனுபவம் போல. எட்டு மணிக்கு உணவகம் போகும்போதே பேய் பங்களா போல புகை சூழ்ந்திருக்கும். 'ஏனுங்க, சப்பாத்தி கருகியிருச்சா' என்று கேட்டேன். அதற்கு பெண் ராஜ்கிரண் போல இருக்கும் அக்கா ஒருவர் 'எக்ஸாஸ்ட் பேன் ஓடுலப்பா' என்று சொன்னார். ஆனால் முடிவு நான் நினைத்ததுதான். நன்றாக வறுத்து வறுத்து எடுத்திருந்தார் அந்த வேவேனா என்று அடம்பிடித்த சப்பாத்தியை. இரண்டு பேர்தான் அந்த உணவகத்தை நிர்வாகம் செய்வதால் சிலசமயங்களில் அங்கு கணக்கு பார்க்க வரும் அலுவலரும் எங்களுக்கு பில் கொடுப்பார். சாம்பார் ஊற்றுவார். 'ஏம்மா வேற ஏதாவது வேல இருக்குதா, சொல்லுங்கம்மா அதயும் செஞ்சிட்டுப் போயிற்றேன்' என்பார். சப்பாத்தி வறுக்கும்  நிகழ்வின் போது பார்க்கிறவர்கள் தீ கீது புடிச்சிருச்சாப்பா என்று பயப்படும் அளவு புகை வெளியில் வந்து பெருகி நிறைந்து நிற்கும். இங்கு வருகிற குழந்தைகளெல்லாம் காக்கா முட்டை எக்ஸ்டென்ஷன்கள்தான். அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு போவார்கள். என்ன குவளைகள்தான் இல்லை. அப்படியே அந்த நீர் பிடிக்கும் பாத்திரத்தை வாயில் கவ்வி ஈர்ப்பு விசையை சமனப்படுத்தி நின்று குடிப்பார்கள். அதைத்தவிர வேறெதுமில்லை. அக்கா மிக பாசமானவர். மிச்சமுள்ள ஒரு ரூபாய்க்கு கூட இன்னொரு சப்பாத்தி வச்சுக்கப்பா என்று கூறி தட்டில் வைப்பார். ஆனால் என்ன கருகிய வாடையோடு சப்பாத்தி குழம்பில் கலந்து  ஒரு வித உணவுதான் இது என்று நம்புவது கடினம்தான். நிசப்தம் பிராண சங்கடம்தானே?  இது குறித்து ஆரஞ்ச் வண்ண வங்கித் தமிழன் கூறியதாவது, ' ஒரே கடையிலெல்லாம் சாப்படறது ரொம்ப கஷ்டம் மாறி மாறி சாப்படோனும், இல்லைன்னா வீடு பார்த்து போய் நாமளே சமைச்சு சாப்படோனும் இல்லைன்னா ரொம்ப கஷ்டம்ப்பா' என்று தன் எதிர்கால கனவை நம்மிடம் கூறிவிட்டு பவுடர் போட்டிருக்கும் சாய்த்து குடும்பமலரில் ஆழ்ந்துவிடுவார். மாருதி என்றொரு மெஸ்ஸினை ஆரஞ்ச் வண்ணத்தமிழன் பின்னர் கண்டறிந்து எனக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்தார். நிறைவான சாப்பாடு. 35 ரூபாய்தான். அதை ஞாயிற்றுக்கிழமைக்கு ஒதுக்கிக் கொள்ளலாம் என்று முடிவிற்கு வந்தேன். ரசாயன உப்பு இல்லாத உணவு என்று வாக்குறுதி சுவரில் அறையப்பட்டிருந்தது. அது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. நீர், நிலம் மாசுபட்டிருக்கும் சூழலில் அஜினமோட்டோ உணவில் கைப்பட நீங்கள் போட்டால் என்ன? போடாட்டித்தான் என்ன? பாரதி வந்தாலும் அங்கு உணவு வாங்கிச் சாப்பிட முடியாது விலை அப்படி. ஆனால்  பாரதியார் புத்தகங்கள் அங்கு சேகரிக்கிறார்கள். பாரதியாரின் அபிமானி போல மெஸ் நிறுவனர். தோழர்களே ஒன்றே ஒன்றுதான். தொடர்ந்து விதவிதமான உணவுகள் வெவ்வேறு இடத்தில் சமாளிக்கும் விலையில் என்பதுதான் இயந்திர வாசனை அடிக்காத இட்லியும், கிரீஸ் வாசனை வரும் சட்னியும் உடலுக்குள் செல்லாமல் தடுக்கும் ஒரே  வழி. உண்மையில் நமக்கு ஏற்படுவது பசியா, ஆசையா என்று முதலில் முடிவு செய்துகொண்டு சாப்பிடச் செல்லுங்கள்.