இரானின் கதை:நூல்வெளி-2

                                           நூல்வெளி-2

                                                              ப்ராட்லி ஜேம்ஸ்                                                                            இரானின் கதை

                                                       மர்ஜானே சத்ரபி
                                                   தமிழில்: எஸ். பாலச்சந்திரன்
                                                   விடியல் பதிப்பகம், கோவை

இந்த நூலை நான் இருவரிடம் கொடுத்து வாசிக்க கூறியும் இருவரும் கடுமையாக முதலிலேயே மறுத்துவிட்டார்கள். காரணம் நூல் கிராபிக் படங்களின் வடிவில் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கும் என்று உணர்கிறேன். போராடி கையில் திணித்தும் இறுதியில் ஒருவர் எனக்கு இந்தப் புத்தகம் வேண்டாம் என்று கூறி திருப்பித்தந்துவிட்டார். இன்னொருவர் டைம்பாஸ் இதழ் அளவுக்கு திருப்பிப் பார்த்துவிட்டு, உடனே சூப்பருங்க என்று என் கையில் நூலை ஒப்படைத்துவிட்டார். எனக்கு முதலில் இந்த நூலை புத்தகத்திருவிழாவில் பார்த்தும் எப்படி இருக்குமோ என்று வாங்கவில்லை. தாமதம்தான் என்றாலும் மிகத்தாமதமில்லை என்று என்னையே  தேற்றிக்கொண்டேன்.
                   மர்ஜானே சத்ரபி எழுதிய இந்த நூல் அவரின் சிறுவயது வாழ்க்கையோடு இணைந்து இரானின் வரலாற்றையும் நேர்மையாக பேசிச் செல்கிறது. அதுவும் மிகத்தீவிரமான தட்டையான மொழியிலெல்லாம் இல்லை. எளிய  சத்ரபியின் அந்த இளம் வயது மனதின் பிரம்மைகள், கற்பனைகள், சூப்பர் வுமன் தனங்கள் எல்லாவற்றோடும் வாசிக்க அவ்வளவு ஒரு சுவாரஸ்யத்தைத் தருகிறது என்று வாசிக்கும் போதே என்னால் உணர முடிந்தது. முதல் பக்கத்திலிருந்தே சத்ரபி தன் குறும்புகளைத் தொடங்கி விடுகிறார். தன் தோழிகளை அறிமுகம் செய்வதே தனது புகைப்படம் இல்லாமல்தான். அத்தனை போர்கள், சித்திரவதைகள், அடக்குமுறைகளை மன்னர் ஏற்படுத்தினாலும்  அதை பகடியாக, கேலியான ஒன்றாக மாற்றி நம்மை அந்த பிரச்சனையை எளிதாக புரிந்துகொள்ளும் படி இந்த நூலை உருவாக்கி இருக்கிறார்கள். பாடத்திட்டத்தில் மன்னர் கடவுள் என்று கூறி துதிப்பாடல்களை வைப்பது,  பெண்களை கடுமையாக ஒடுக்குவதற்கென தனி பெண்கள் அணி வைப்பது, அரசிற்கு எதிராக குரல் உயர்த்துபவர்களை வேட்டையாடுவது, வேறு நாட்டிற்கு செல்லவிடாமல் தடுப்பது என இரானின் அரசின் கொடுமைகள், சர்வாதிகார அரசியல் என அனைத்தையும் எளிமையான கறுப்பு வெள்ளை படத்தின் மூலமே விளக்கிவிடுவதுதான் இந்த நூலின் பெரும் பலம் என்று கூறலாம். உயிருக்கு ஆபத்தான தருணங்களிலும் நகைச்சுவை சத்ரபியை கைவிடுவதில்லை. நாட்டிற்காக போராடவேண்டும் என்று டி.வியில் தேசிய கீதம் இசைத்து உசுப்பேற்றப்பட்டபோது நீதி, நேர்மை, அன்பு ஆகியவற்றின் கலவையாய் மூன்று அவதாரமாய் சிலிர்த்தெழுந்து நிற்பது,  தன் அம்மா இருக்கும் கட்டிடம் அருகில் தாக்குதல் நடத்தப்படுகிறது என்று தெரிந்ததும் பதட்டமாகி ஓடும் தந்தை அம்மா குளித்துக்கொண்டிருக்கும் குளியறைக்குள்ளும் ஓடி கட்டித்தழுவுவதை பகடி செய்வது, சிறுவயதில் பெரியவனாக முதிர்ச்சியாக காட்டிக்கொள்ள முயலும் அறிவு பயங்கரவாதம் உள்ளிட்ட பலவற்றையும் முடிந்தவரை பகடி, எள்ளல் என  ஒருவழி செய்திருக்கிறார். 
                 பர்தா அணிவது தன் உயிருக்கும், தாக்கப்பட்டு வல்லுறவுக்கு ஆட்படும் அபாயத்திற்காகத்தான் என்று தைரியமாக கூறும் விதம், நெஞ்சுக்கு நேர்மையாக நின்று ஆசிரியர் கூறும் விதம் ஆகியவையே இந்த நூலினை நாம் வாசிப்பதற்கான தைரியத்தையும், ஆர்வத்தையும் ஊட்டுகிறது என்றே கூறலாம். படங்களின் மூலம் ஒன்றை விளக்குவது என்பது ஆதிகாலத்திலிருந்து இருக்கிறது என்றாலும், அதனுடைய நோக்கம் என்னவென்றால் யாருக்கும் எளிதாக அது புரியும் என்பதுதான். மற்றபடி படத்தின் கீழே எழுதுவது கற்றோருக்குத்தான். இவர்கள் கிராபிக் நாவல் என்று ஒன்றை வாசிக்க கொடுத்தால் அதை ஏதோ சிறுபிள்ளைக்கான நூல் போல கருதுகிறார்கள். என்ன செய்வது? அவர்களுடைய மனநிலை அப்படி! நல்ல வாசிப்பனுவத்தை இழக்க விரும்பாதவர்களுக்கு இந்த நூல் சிறந்தது என்றே கூறலாம்.