தாராவி இன்று! -மாறிவரும் தாராவியின் முகம் பற்றிய பார்வை
தாராவி 2.0 - ச.அன்பரசு
முன்பு மும்பையில் அரசு மற்றும் மக்களால் புறக்கணித்து
ஒதுக்கப்பட்ட பகுதியாக ஏன் கதைகளில் சினிமாக்களில் கூட தீண்டப்படாத சேரியாக நடத்தப்பட்ட
தாராவியில் இன்று நவீனத்திற்கேற்ப எக்கச்சக்க மாற்றங்கள்.
520 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள தாராவியில் கொழிக்கும் தொழில்களின்
மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் 1 பில்லியன் டாலர்கள் என்றால்
உங்களால் நம்ப முடிகிறதா?
தாராவியில் சந்து பொந்தெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பன்மொழி
பேசும் இடம்பெயர்ந்த மக்களின் கடின உழைப்பு தொழிற்பேட்டையான தாராவியை கரன்சி பேட்டையாக
மாற்றியுள்ளது. தொழில்மயமாக்கலின் இருண்ட பகுதியாக ஏழைகளின் வாழிடமாக
அரசுக்கு சங்கடம் கொடுக்கும் தாராவியை அகற்ற பல்வேறு முயற்சிகள் நடைபெறுகின்றன.
ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த அகதிகள், தோல்தொழில்,
டெக்ஸ்டைல்துறை, குழந்தை தொழிலாளர்கள்,
சுற்றுலா கைடுகள், உணவுத்துறை என பல்வேறுவித தொழில்செய்யும்
மக்களின் உழைப்பில் திடமாக உறுதியாக வணிகத்தில் முன்னேறி வருகிறது தாராவி. இங்கு வேலைசெய்து ஃபிளாட்டில் வீடு வாங்கினாலும் கூட தாராவியை விட்டு போகாத
பிஸினஸ் மனிதர்களை உருவாக்கியது இதன் மேஜிக்.
நிறைவேறிய கனவு!
பீகாரில் பிறந்த ஜமீல்ஷா, பதிமூன்று வயதில் சொந்த ஊரை விட்டு டெல்லிக்கு வந்தவர், அங்கு சிறிதுகாலம் வேலை செய்துவிட்டு மும்பை தாராவிக்கு இடம்பெயர்ந்தார்.
"நான் தாராவியின் பாதைகளில் வழிதெரியாமல் குழம்பி நின்றபோது,
சிறிய பாதைகளில் எதில் சென்றாலும் மெயின்ரோட்டை அடையலாம் பலரும் யோசனை
சொன்னார்கள்" என்கிறார் ஜமீல்ஷா. வாட்ச்மேன்,
பேக் விற்பனை என பல்வேறு தொழில்களைச் செய்தவர், இன்று ஆன்லைனில் ஆர்டர் வாங்கி ஷூக்களை தயாரித்து வெற்றிகரமாக விற்றுவருகிறார்.
ஜமீல்ஷா தயாரிப்பவை அனைத்தும் டான்ஸ் ஷூக்கள். இதற்கு காரணம், இவரது ஹாபியான டான்ஸ்தான்.
"எனது ஃபேக்டரியில் நான் டான்ஸ் ஆடுவதை பார்த்து அமுஜ்ரா டான்ஸராக
மாறிவிட்டீர்களா என கிண்டல் செய்வார்கள். ஆனால் என் தொழில் ஐடியாவே
அதுதான்". என்கிற ஜமீல்ஷா, இந்தியர்களுக்கான
6 ஆயிரம் ரூபாய்க்குள் டான்ஸர் ஷூக்களை லைட் வெயிட்டில் உருவாக்கினார்.
"நமது ஷூக்கள் அதிக வெயிட்டில் இருந்தன. அதனை
டான்ஸ் ஆட எளிதாக மாற்றியது எனது பிசினஸ் வெற்றி. இங்கு வந்தபோது
முதலில் என்னிடம் சல்லிப்பைசா பணமில்லை;திறனில்லை; அத்தனையும்
தந்தது தாராவி தாய்தான்" என நெகிழ்கிறார் ஜமீல்ஷா.
தாராவியில் ஃபேக்டரிகளை நடத்திவரும் இவருக்கு பாந்த்ராவிலும் ஷூ கடை
உண்டு.
தாயாய் அரவணைத்த தாராவி!
"தாராவியைப் பொறுத்தளவில் பிழைக்க ஆயிரம்
வழிகளுண்டு. டாஸ்மாக் உள்ள இடத்தில் வெளியே நிலக்கடலை அவித்து
விற்று பிழைக்குமளவு புத்தி இருந்தால் போதும். டெய்லரிங் வேலையோடு
டெலிபோன் பூத், நாளிதழ்கள் நடத்தியது என நான் என்ன வேலை செய்கிறேன்
என்று சில சமயங்களில் எனக்கே புரியாது" என்று பேசும் ராஜூ
கோர்டே தன் 19 வயதில் மும்பைக்கு வந்தவர் இன்று மஹிம் நகரில்
இரண்டு பெட்ரூம் வீட்டுக்கு முதலாளி. தாராவியில் பனிரெண்டு வீடுகளை
வாடகைக்கு விட்டிருக்கும் மினி செல்வந்தன். சின்னச்சின்ன வேலைகளை
செய்து முன்னேறியவருக்கு அனுசரணை தந்தது புறக்கணிக்கப்பட்டர்களின் பிரதேசமான தாராவிதான்.
பிஸினஸ் நகரமாக மும்பை வளர்ந்தால் அதன் ஒரு பகுதியான
சேரிகள் மட்டும் வளராமல் எப்படி இருக்கும்? மும்பை தாராவியை
விட அந்தேரி கிழக்கு பகுதியில் குழுக்களாக வாழும் குடிசைப்பகுதி மக்களின் எண்ணிக்கை
எட்டு லட்சத்திற்கும் அதிகம். தாராவி சிட்டியில் முக்கிய ஸ்பாட்டாக
இருக்க காரணம், இங்கு நடைபெறும் டஜன் கணக்கிலான தொழில்கள்தான்.
டெக்ஸ்டைல் மற்றும் தோல் பொருட்களின் சொர்க்கப்புரியாகவும், தொழிலாளர்களை மலிவாக பெறுவதற்கான போட்டியிலும் தாராவி டாப்பாக இருக்கிறது.
வளர்ச்சி யாருக்கு?
தாராவியில் பனிரெண்டு தொழிற்கூடங்களை 500
தொழிலாளர்களின் மூலம் இயக்கும் முகமது முஸ்டாக்யூமின் ஆண்டு வருமானம்,
பத்து கோடிக்கு அதிகம். "இன்று நான் சாப்பிடும்
சோறு தாராவி மண் தந்ததுதான். நான் இங்கிருந்து வெளியேற விரும்பவில்லை"
எனும் முஸ்டாக்யூம் அங்கேயே சொகுசு அபார்ட்மென்ட் கட்டி வாழ்கிறார்.
பதிமூன்று வயதில் ரேபரேலியில் இருந்து தாராவிக்கு வந்தவர், டெய்லர் கடையில் டீ பையனாக வேலை செய்தார். பின் நான்கே
ஆண்டுகளில் தனியாக டெய்லரை அமர்த்தி வேலை செய்யத்தொடங்கினார். இன்று பெண்கள் குழந்தைகளுக்கான உடைகளை அமெரிக்கா, பிரேசில்,மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமளவு முன்னேறியிருக்கிறார்.
ரியல்
எஸ்டேட் அதிபர்கள் அரசுகள் உட்பட பல்வேறு அமைப்புகள் தாராவியை கையகப்படுத்த முயற்சித்தாலும்
முயற்சி ஜெயமாகவில்லை. நகரின் சென்டரில், இரு ரயில்வே ஸ்டேஷன்களை இணைத்தும் இருப்பதால் இடத்திற்கு செம கிராக்கி.
விரைவில் இங்கு 25 ஆயிரம் கோடி திட்டங்கள் தாராவியில்
தொடங்கவிருக்கின்றன. "மேம்பாடு என்பதற்கு கண்ணாடி கட்டிடங்களும்,
மால்களும், ஆபீஸ்களும் என்று அர்த்தமல்ல;
உயர கட்டிடங்களை கட்டினால் தொழிற்சாலைகளை எங்கே இடமிருக்கும்?
நாடெங்கிலுமிருந்து இங்கு மக்கள் பிழைக்க வருகிறார்கள்."
என தன் பயத்தை வெளிப்படுத்துகிறார்
முஸ்டாக்யூம். தாராவி பச்சோ அந்தோலன் அமைப்பைச் சேர்ந்த கோர்டே,
"நீர் வசதிகளும், கழிவறைகளும் இல்லாத தாராவியை
அறிய இங்கு குறைந்தபட்சம் ஒருநாளேனும் வாழ்ந்தால்தான் உங்களுக்கு உண்மை விளங்கும்"
என்கிறார்.
வளரும் பிஸினஸ் மையங்களுக்கான க்ரைம் குற்றங்களும்
தாராவியில் மெல்ல வளரத்ததொடங்கியுள்ளன. ஒரு நாள் வழக்கம்போல
முஸ்டாக்யூம் அதிகாலையில் தன் தொழிற்சாலைக்கு சென்றபோது திருடர்களால் தாக்கப்பட்டு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது பாதுகாப்பு கருதி
துப்பாக்கி லைசென்ஸிற்கு அப்ளை செய்துள்ளார் முஸ்டாக்யூம்.
செல்லுலாய்ட் கனவுகள்!
தாராவியில் தொழில் மட்டுமல்ல; செல்லுலாய்ட் கனவுகளுக்கும் இங்கு குறைவில்லை. திரைப்படத்திற்கான
பயிற்சி பட்டறைகளும் உண்டு. தாராவியில் நடிப்பு மற்றும் நடன பயிற்சி
அளிக்கும் ஒரே ஒரு இடம் லாட்சாஹேப்பின் பைவ் ஸ்டார் அகாடமிதான். சைன் போர்டு எழுத்தாளராக இருந்து, சினிமா மற்றும் டிவி
நடிகரானவர், லாட்சாகேப். மராத்தி,
போஜ்புரி படங்களுக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை அனுப்பி வைக்கும் ஏஜண்டாக
செயல்படும் லாட்சாகேப், வீக் எண்டில் இலவச நடிப்பு மற்றும் நடன
பயிற்சிகளை நடத்தி வருகிறார். வெளிநாட்டு டூரிஸ்ட்டுகளுக்கு இடங்களை
சுற்றிக்காட்டுவதும், டாகுமெண்டரி படங்கள் எடுக்க உதவுவதிலிருந்து
கமிஷன் காசு போக லம்ப்பான காசு கிடைக்கிறது. சேரிகள் வளரவில்லையென்று
யார் சொன்னது?
டாப் 5 சேரிகள்
Khayelitsha, Cape Town, South Africa
மக்கள்தொகை - 4 லட்சம்(99%
கருப்பர்கள்)
Kibera, Nairobi, Kenya
மக்கள்தொகை - 5 லட்சம்
Dharavi,
Mumbai, India
மக்கள்தொகை - 10 லட்சம்
Ciudad
Neza, Mexico City, Mexico
மக்கள்தொகை - 10 லட்சம்
Orangi
Town, Karachi, Pakistan
மக்கள்தொகை - 24 லட்சம்மும்பை 360 டிகிரி!
மகாராஷ்டிராவின் பிசினஸ் சென்டரான மும்பையில், ஒரு சதுர கி.மீக்கு 20,482 பேர் வசிக்கின்றனர். இந்துக்கள்(65.99%), முஸ்லீம்கள்(20.65%), கிறிஸ்தவர்கள்(3.27%), பௌத்தம்(4.10%), சீக்கியர்கள்(0.58%) மீதியுள்ளவர்கள் பார்சி இனத்தவர். மொத்த மக்கள்தொகை 1,24,79,608. 2017 ஆம் ஆண்டு அதிகரித்துள்ள தோராய மக்கள்தொகை 2,35,00,000.
(indiapopulation2017.in/Census 2011 படி)
தொகுப்பு: விக்டர் காமெஸி, கா.சி.வின்சென்ட்
நன்றி: குங்குமம்