செக்ஸ் வில்லன்கள்!

Image result for harvey weinstein sex scandal




செக்ஸ் வில்லன்கள்! -.அன்பரசு

பாலியல் சீண்டல்களுக்கு நடிகை அமலாபால், பார்வதி, பாவனா என வெளிச்சத்தில் தெரிபவர்கள் மட்டுமல்ல, விழுப்புரத்தில் பிறப்புறுப்பில் பனிரெண்டு தையல்கள் போடப்பட்டுள்ள பதினைந்து வயது சிறுமியும் அடக்கம். ஜாதி வெறியாட்டங்கள் இன்று கிராமங்கள் கடந்து நகரங்களையும் வைரஸாக தாக்குகிறதா? இன்று ஹாலிவுட் நடிகைகள் வரிசையாக குறிப்பிட்ட தயாரிப்பாளர் மீது வைக்கும் புகார்கள் சின்ன உதாரணம்தான். உண்மையில் என்ன பிரச்னை? எப்படி எதிர்கொள்வது மீள்வது? வாசித்து அறிந்துகொள்ளுங்களேன்! 


இந்தியாவின் சிறுநகரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணான ரீனா சைனிக்கு, இந்தி சினிமாவின் கனவுக்கன்னி ஆவது ஆயுள் லட்சியம். கத்ரீனா, பிரியங்கா சோப்ராவுக்கு அடுத்து நான்தான் என கொள்ளை ஆசையில் மும்பை சினிமா உலகிற்கு காலடி எடுத்து வைத்தார் ரீனா. ஆனால் காஸ்டிங் இயக்குநரான சோகன் தாக்கூர் மூலமாக கிடைத்ததென்னவோ பாலியல் டார்ச்சர்தான். "என் மீது புகார் கொடுத்தால் உன் சினிமா லைஃப் காலி, உன் கேரக்டரையும் கேவலப்படுத்துவேன்" என தாகூர் மிரட்டியும் துணிச்சலாக கடந்த அக்டோபரில் போலீசில் அவர் மீது பாலியல் தொல்லை வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகை ரீனா. விளம்பரத்திற்காக ரீனா புகார் கொடுத்துள்ளார் என்று ஃபேஸ்புக்கில் தாகூர் புளுகியுள்ளார். பஸ்,ட்ரெயின்,ஆபீஸ் என பல்வேறு இடங்களிலும் பெண்கள் பாலியல் டார்ச்சர்களை அனுபவித்தாலும் வெளியே சொன்னால் அவமானம் என்று தனக்குள் மருகி நொந்த நிலைமையை அரசும், தன்னார்வ அமைப்புகளும் பெருமளவு மாற்றியுள்ளன என்பதே பெரிய ஆசுவாசம்.


பாலியல் புயல்!

இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பெண்களின் மீதான பாலியல் சீண்டல் பிரச்சனை உண்டு என்பதை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை முதன்முதலாக வெளிக்காட்டியது.  கடந்தாண்டு அக்டோபரில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பேட்டியளித்த நடிகை ஆஷ்லி ஜூட், மிராமேக்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் தன்னை செக்ஸ் உறவுகொள்ள வற்புறுத்தினார் என முதல் ஆளாக தைரியமாக முச்சந்தியில் தேங்காயை போட்டுடைத்தார். அதன்பின்னர் க்யூ கட்டி பேட்டி கொடுத்து வெய்ன்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுக்களை  கேட் பெக்கின்சேல், க்வினெத் பால்ட்ரோ, சல்மா ஹெய்க், ஆஞ்சலினா ஜோலி உள்ளிட்ட ஐம்பது பெண்கள் பதிவு செய்தனர். தற்போது வெய்ன்ஸ்டீன் மீது பாலியல் குற்றச்சாட்டிற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


 ஹாலிவுட் செலிபிரிட்டியாக இருந்தாலும் செக்ஸ் சீண்டல்களை பளிச்சென வெகுஜனப்பரப்பில் பேச ஆங்கில நடிகைகளே தயங்கும்போது கலாசாரம், பண்பாடு என்ற பெயரில் ஒடுக்கப்படும் இந்தியப் பெண்கள் தங்கள் மீதான பாலியல் சீண்டல்களை எப்படி பகிரங்கமாக பேசுவார்கள் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.


அநீதிக்கு எதிரான குரல்!

இன்குலேஷன் பவுண்டேஷன் என்ற என்ஜிஓ, 2013 ஆம் ஆண்டு இந்திய அரசு இயற்றிய பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை தொடர்பான சட்டத்தை மேம்படுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது தோள் தட்டி பாராட்டவேண்டிய முயற்சி. ஐடி மற்றும் வங்கி தொடர்பான பணிகளில் பெண்களுக்கு பாலியல் டார்ச்சர்கள் அதிகம் என இந்தியன் நேஷனல் பார் அசோசியேஷன்(INBA 2016) ஆய்வு அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. கல்வியோ, பணமோ பாலியல் சீண்டல்களுக்கு பொருட்டில்லை என்பது முதலீட்டாளரான மகேஷ் மூர்த்தி மீது எழுத்தாளர் ரேஷ்மி பன்சால் கொடுத்த பாலியல் புகார் மூலம் வெட்டவெளிச்சமானது. இதற்கடுத்து தொழிலதிபரான பூஜா சௌகான், வாமிகா ஐயர் ஆகியோரும் மூர்த்தி மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தது தொழில் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 "பெண்ணை கண்காணிப்பது, பின்தொடர்வது, கிண்டல் செய்வது ஆகியவையும் இந்தியச்சட்டம் 354 படி குற்றம்தான்" என்கிறார் மூத்த வழக்குரைஞரான ரேகா அகர்வால். பாதிக்கப்பட்ட பெண்கள் தம் வேலை பறிபோய், தனிமைபடுத்தப்படுவோம் என்று 69 சதவிகித பெண்கள் புகார் கூறுவதில்லை என ஐஎன்பிஏ ஆய்வு சொல்வது நெஞ்சம் சுடும் நிஜம். பணம், கல்வி என உயர்பதவிகளில் இருப்பவர்கள் ஏன் இப்படி தங்கள் பணியாளர்களிடம் நடந்துகொள்கின்றனர்? "தமது அதிகார வெறியை உறுதிப்படுத்திக்கொள்ளத்தான் இப்படி பாலியல் சுரண்டல், தீண்டாமை, தவறான அபிப்பிராயங்களை பிறருக்கு ஏற்படுத்தி, அதன் பாதிப்புகளை பற்றிய அணுவளவு குற்றவுணர்வும் ஏற்படாமல் உள்ளனர்" என்கிறார் உளவியலாளரான டாக்டர் சமீர் பாரிக்.

சட்டங்கள் உதவுகிறதா?

1997 ஆம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் தொல்லைகளை கையாள விசாகா விதிகளை வகுத்தளித்தனர். பணியிட பாலியல் தொல்லைகளை தீர்க்க 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டமாக இது பின்னாளில் மாற்றி அமைக்கப்பட்டது

SARDI,OXFAM,INBA,Sanhita,Sakshi,Yugantar,Lawyer CollectiveILO,Center for Transforming india ஆகிய அமைப்புகள் செய்த ஆய்வில்(1996-2016) பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை நிறுவனத்தின் மீதுள்ள அவநம்பிக்கையால் தெரிவிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. "ஆணாதிக்கத்தின் உரிமையாக பெண்களை ஆண்கள் இவ்வாறு கீழ்த்தரமாக நடத்துகிறார்கள்" என்கிறார் வழக்குரைஞர் ரேகா அகர்வால். பாலியல் சீண்டல்களை சந்திக்கும் தனியார் மற்றும் அரசு நிறுவனத்தைச் சேர்ந்த பெண்கள் அரசின் SHe-box என்ற அரசின் இணையதளத்தில் பாலியல் தொல்லை புகார்களை அளிக்கலாம். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் செயல்பாடு இது. மில்களில் பணியாற்றும் பதினைந்துக்குட்பட்ட பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என புகார்மனு தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் பதிவாக, கடந்தாண்டு நவம்பரில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றிய அறிக்கையை தயாரித்து அனுப்ப ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாலிவுட்டில் பதிவான புகார்களையொட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மேனகா காந்தி, 25 திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு பாலியல் தொல்லை பற்றிய சட்ட அறிவுறுத்தல்கள் கொண்ட கடிதங்களை எழுதினார். "அநீதிக்கு எதிரான மாற்றங்கள் ஓரிரவில் நடைபெறாது. ஆனால் அதற்கான விதைகளை தூவ வேண்டிய நேரமிது. சக பணியாளர்களின் குரல்களை காதுகொடுத்து கேட்டு, அவர்கள் நீதிபெற உறுதுணையாக நிற்பது கடமையும் பெருமையும் கூட " என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் மீரா விஜயன்.

ஒன்றுசேர்க்கும் அறைகூவல்!

இன்றைக்கு பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பெண்களை திரட்ட பயன்படும் #METOO கோஷத்தை சமூக செயல்பாட்டாளரான தாரணா புர்கே 2006 ஆம் ஆண்டு மைஸ்பேஸ் இணையதளத்தில் தொடங்கினார். நடிகை அலிசா மிலானோ பாலியல் பிரச்னைகளுக்கு ஆளான பெண்கள் எல்லோரும் இணைவோம் என ட்வீட் போட, உடனே ஃபேஸ்புக், ட்விட்டர் முழுவதும் மீடூ ஹேஷ்டாக் பதிவுகள் சுனாமியாக பெருகின. இந்தியாவில் டிஜிட்டல் மீடியாவான் TVF நிறுவனர் அர்னாப் குமார் மீது பெயரின்றி பாலியல் புகார் முதலில் வர, பின்னர் வரிசையாக டஜன் கம்ப்ளைன்டுகள் குவிந்தன. தற்போது அர்னாப் குமார் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோல பாலியல் சுரண்டல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு க்ரவுட்ஃபண்டிங் முறையில் எமிலி ஹண்ட், ஜூலியா சாலஸ்கி(Crowd Justice) ஆகியோர் நிதியுதவி பெற்றுத்தருகிறார்கள்

"இளமையான, தனியாக வசிக்கும் புகார் தெரிவிக்க தயங்கும் பெண்களையே தேர்ந்தெடுத்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்குகின்றனர்" என்கிறார் லிவ் லவ் லாஃப் பவுண்டேஷனைச் சேர்ந்தவரான அன்னா சாண்டி. கேரளாவில் பிரபல நடிகரின் பெண்களுக்கு எதிரான வசனங்களை விமர்சித்ததால் பார்வதி, நடிகரின் ரசிகர்களால் கடுமையாக கிண்டல் செய்யப்பட்டார். இது ரீமா கல்லிங்கல், அன்னா ராஜன், சஜிதா மதாதில் ஆகியோரும் பார்வதிக்கு ஆதரவாக பேசியதால் கடுமையாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டவர்கள்தான். வுமன் சினிமா கலெக்டிவ்(WCC) என்ற பெயரில் பெண்களுக்கு சினிமாவில் நேரும் பாலியல் தொல்லைகளை கண்காணிக்கும் அமைப்பை இந்த பெண் கலைஞர்கள் உருவாக்கியுள்ளது எதிர்காலத்திற்கான நம்பிக்கை செயல்பாடு.




பாலியல் பலிகள்!
பாலியல் புகார்களின் அளவு -  714(2015), 469(2014)
பாலியல் தொல்லைகளின் வளர்ச்சி - 51%
புகார் அளிக்காத பெண்களின் சதவிகிதம் - 69%
பாதிக்கப்பட்டவர்களின் அளவு(INBA2017)- 38%(6,047 நபர்களில் செய்த ஆய்வுப்படி)
குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகள் -8,800(2015)
(NCRB 2014-2015 தகவல்படி)



குற்றமும் தண்டனையும்!

2013 ஆம் ஆண்டு உருவான பாலியல் தடுப்பு சட்டம், 90 நாட்களுக்குள் வழக்கு விசாரணை நிறைவுபெறுவதை வலியுறுத்துகிறது. விசாரணை அறிக்கை, நிறுவனத்தலைவருக்கு அனுப்பப்பட்டு 60 நாட்களுக்குள் தொடர்புடையவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதோடு இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோருகிறது. இச்சட்டத்தின் வழியே ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க முடியும். புகார்களை அனுப்ப உதவும் அரசு இணையதளம் shebox.nic.in/

தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: குங்குமம்
  
  




பிரபலமான இடுகைகள்