கன்ட்ரோல் ரூமில் என்ன நடக்கிறது?


Image result for emergency 100 delhi



அவசர போலீஸ் 100!- கன்ட்ரோல் ரூமில் என்ன நடக்கிறது? - .அன்பரசு


Image result for emergency 100 delhi


நாம் பெருமைப்படும் அதிநவீன காஸ்போபாலிடன் நகரங்களில் ஒளிவீசும் இரவுகளில்தான் பல்வேறு க்ரைம்கள் நடக்கின்றன. திருட்டு, கொள்ளை,பாலியல் வல்லுறவு, குடும்ப வன்முறை ஆகியவை இந்தியாவில் பல மாநிலங்களிலும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இதன் சதவிகிதம் மிக அதிகம். குற்றங்களின் அளவைக் கணிசமாக குறைப்பதில் போலீஸ் கன்ட்ரோல் ரூம் செயல்பாடுகள் இன்றியமையாதவை.

விதிவிலக்கான சில சம்பவங்களை தவிர்த்து 100 என்ற எண்ணை அழுத்தினால் ஆம்புலன்ஸ், உள்ளூர் வட்டார போலீஸ், தீயணைப்புத்துறை ஏன் 'பராக்கிரம்' எனும் ஸ்பெஷல் தீவிரவாத எதிர்ப்பு படையைக்கூட உதவிக்கு அழைக்கமுடியும். 2016 ஆம் ஆண்டில் அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சரான சிவசங்கர் பிரசாத், 112 என்ற எமர்ஜென்சி எண்ணை நாடெங்கும் அறிமுகப்படுத்தினார். தற்போது 100 என்பது இந்தியாவில் போலீஸ் உதவிக்கான ஸ்பெஷல் நம்பர். ஆனாலும் 100 என்ற லைனிலேயே அனைத்து வித புகார்களும் க்யூ கட்டுகின்றன.

"ஹலோ, சார் என் அம்மாவை அப்பா கடுமையாக அடிச்சிக்கிட்டிருக்காரு. ரத்தம் நிறைய போயிருச்சு. எப்படியாவது காப்பாத்துங்க ப்ளீஸ்" என பெண்ணின் அழுகுரல் ஹெட்போனையும் தாண்டிக் கேட்க கிடுகிடுவென அட்ரஸை கணிணியில் உள்ள ஃபார்மில் நிரப்பி, உள்ளூர் போலீஸ், ஆம்புலன்ஸ் மற்றும் பெண்களுக்கான உதவிக்குழுவுக்கும் அலர்ட் அனுப்புகிறார் பணியாளரான அனு. டெல்லி கன்ட்ரோல் ரூம், 1250 .கி.மீ தூரத்திற்கு செயல்படும் திறன் கொண்ட 776 பிசிஆர் வேன்களைக் கொண்டுள்ளது. கடந்தாண்டின் செப்டம்பர் மாத அழைப்புகளின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டும். சராசரியாக தினசரி 35 ஆயிரம் அழைப்புகள். ஒரு நிமிடத்திற்கு 24 கால்கள். நினைத்தாலே தலை கிறுகிறுக்கிறதா? மூன்று ஷிப்ட்களாக 24 மணிநேரமும் இயங்கும் கால்சென்டரில் பெண்களுக்கான இணைப்பு(1091), காணாமல் போனவர்களுக்கான இணைப்பு(1094),வடகிழக்கு மாநிலங்களுக்கான எண்(1093) என மொத்தம் 50 ஆபரேட்டர்கள் டெல்லி கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகின்றனர்.

எப்படி செயல்படுகிறார்கள்?

"கால்சென்டரில் தினசரி பேசியதால், செல்போனில் என் வீட்டிலிருந்து கூப்பிட்டால் கூட 'வணக்கம், உங்களுக்கு என்ன உதவி வேண்டும்' என்று பழக்கதோஷத்தில் கேட்டுவிடுகிறேன். சிலசமயங்களில் கனவில் கூட உதவிக்குரல்கள் கேட்கின்றன" என்கிறார் அனு. உத்தரப்பிரதேசத்தின் புலாந்த்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பணிக்கு சேர்ந்தவர். யூனிஃபார்மில் மக்களுக்கு உதவலாம் என்னும் லட்சியமே இப்பணியில் அனுவை இணைய வைத்தது. ஆனால் மக்களின் ஆபத்துக்குரல்களையும் அழுகையும் கேட்க பெண்கள் பலரும் விரும்புவதில்லை என்பதே நிஜம்.
முதலில் வெளியிலிருந்து வரும் புகார்தாரரின் பெயர், முகவரியை கம்ப்யூட்டரில் பதிவு செய்பவர்கள், ஹை,மீடியம்,லோ என புகாரின் தன்மையை ஃபார்மில் டிக் செய்கிறார்கள்

கொலை,கொள்ளை, தாக்குதல், ஆட்கடத்தல்,கலவரம் ஆகிய ஹை பிரிவில் அடங்கும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு, போக்குவரத்து போலீஸ், தேசிய பேரிடர் குழு என ல் இப்பிரிவில் முன்னுரிமை கொடுத்த புகாரின் உதவிக்கு வரச்சொல்லலாம். கால்சென்டரை நிர்வகிக்க RAX எனும் ஆறுபேர் கொண்ட குழு செயல்படுகிறது. அட்ரஸை ரீப்ளே செய்து முகவரிகளை சரிபார்ப்பது, புகார்களை உடனடியாக போலீசாரின் ஹாம் ரேடியோவுக்கு அனுப்புவது இவர்களின் பணி. இதன் மேல்மாடியில் டிஸ்பேட்ச் ரூம் உள்ளது. கால்சென்டரில் பெறப்படும் புகார்கள் வரிசைப்படுத்தப்பட்டு புகார்களின் முன்னுரிமைக்கு பல்வேறு நிறமிடப்பட்டு டிஜிட்டலாகவும், பதிவேடுகளிலும் பதிவு செய்யப்படுகின்றன. அடுத்து, புகார்கள் வந்த ஏரியாவுக்கு பிசிஆர் வேன்களை அனுப்பும் பணி தொடங்குகிறது.

தற்போது புகார் தருபவர்களை ஜிபிஎஸ் வசதி மூலம் கண்டறியும் பணிகள் தொடங்கிவிட்டன. முன்னர் வேன்கள் உள்ள ஏரியாவை தனது அனுபவ ஞானத்தால் கண்டுபிடித்து அவர்களை அழைத்து புகார்களை கூறி அனுப்புவது பெரிய சவால்." மாவட்ட நிர்வாகம், உள்ளூர் போலீஸ்,கட்டுப்பாட்டு அறை என மூன்று இடங்களிலும் புகார்கள் பதிவு செய்யப்படுவதால் அவை கவனிக்கப்படாமல் போக வாய்ப்பே இல்லை" என்கிறார் கட்டுப்பாட்டு அறையின் தொலைத்தொடர்பு அதிகாரியான தேவேந்தர் ஆர்யா.

அன்லிமிடெட் குற்றங்கள்!

முதலில் வந்த போன்காலை அட்ரசுக்கு சென்ற பிசிஆர் வேன், சம்பவ இடத்தில் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டு பெண்ணின் அம்மாவைக் காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து, கொலைமுயற்சி செய்த பெண்ணின் தந்தையை கைது செய்துவிட்டனர். "பொதுவாக எங்களுக்கு வரும் குடும்பவன்முறை புகார்கள் அதிகம் வருகின்றன. மற்றபடி குண்டுவெடிப்பு மிரட்டல்கள், குடிகாரர்களின் சீண்டல் அழைப்புகள் என நேரத்துக்கு நேரம் இவை மாறுபடும்" என்கிறார் அனு. இவருக்கு பணியில் சேர்ந்த நைட்ஷிப்டில் வந்த முதல் அழைப்பை கூறுங்கள் என்றால், படபடப்பாகிறார். அழைப்பில் வந்த பெண், கணவர் தன்னை அடிக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவரின் அலறலின் டெசிபல் உச்சம் செல்ல கால் கட்டாகிறது. பின் தொடர்புகொண்ட அப்பெண்ணின் கணவர், தன் மனைவியை கொன்றுவிட்டேன் போனில் சிம்பிளாக சொன்னால் அதைக் கேட்பவருக்கு எப்படியிருக்கும்? "முதலில் இதுபோன்ற செய்திகளை கேட்கும்போது, பதட்டமாகி வியர்த்து பதில் சொல்லமுடியாமல் தடுமாறியதுண்டு. இப்போது மெல்ல உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு உதவிகளை வழங்க கற்றுக்கொண்டேன்" என தனது அனுபவங்களை மெல்லிய குரலில் பகிர்கிறார் அனு.

 இவருக்கு இப்படியென்றால், ஹரியானாவைச் சேர்ந்த ரேணு, தில்ஷாத் கார்டனின் தீவிபத்தில் பலியானவர்களை பார்த்து மன அழுத்தம் உயர, லீவ் போட்டுவிட்டு வீட்டுக்கே சென்றுவிட்டார். புகார்தாரர் சொல்லும் லேண்ட்மார்க்குகளை வைத்தே ஏரியாவை கண்டுபிடிக்கும் சீனியர் இவர். 24 மணிநேர கால்சென்டர் பணியில் சாலை விபத்துகள், கொள்ளை, சடலம் மீட்பு(அதிகாலை 4-8), சாலை விபத்துகள், போக்குவரத்து நெருக்கடி(காலை 8-மாலை 4 மணி), மீண்டும் சாலை விபத்துகள்(மாலை 6- இரவு 9), இரவு பதினொரு மணிக்கு குடிகாரர்களின் புகார்கள் என தினசரி நகர்கிறது. நூறு அழைப்புகளில் குடும்ப வன்முறை அழைப்புகளின் அளவு 50% சதவிகிதம்
                     
 பிரச்னைகளும் உண்டு!

கால்சென்டரின் வழியே பதிவாகும் புகார்களில் வழக்கு காவலர்கள் பதிவு செய்ய மறுப்பது குறித்தும் தெளிவாக புகார் அளிப்பதால், அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பது எளிதாகிறது. ஆனால் இங்கு சிக்கல்களும் உண்டு. "நாங்கள் எங்களுக்கு வரும் ஒரு அலர்ட்டை சரிசெய்ய முயற்சிப்பதற்குள் ஒரு நிமிடத்திற்குள் ஆறு அலர்ட்டுகள் வந்துவிடுகின்றன. முன்னுரிமை அடிப்படையிலும் எதனை முதலில் தேர்ந்தெடுப்பது?" என எதார்த்தமாக பேசுகிறார் துணை ஆய்வாளரான கன்வார் பால். இதில் மிகச்சிரமமானது, விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சிதான். "நாங்கள் பிசிஆர் வாகனத்தில் ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட ஸ்பாட்டிற்கு வரும்முன்பே அங்கு சென்றுவிடுவோம். எனவே உடனே காத்திருக்காமல் விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம். காயம்பட்டவர்களை கையாள்வது சிரமம்" என்கிறார் தலைமை காவலரான அசோக். உடனடியாக காவலர்களை செயலாற்ற உந்துவதில் கன்ட்ரோல் ரூம்களின் பணி, விரைவில் ஆட்டோமேடிக் அபயம் தரும் இடம் என்பதில் சந்தேகமேயில்லை.   



எமர்ஜென்சி!

1937 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று முதன்முதலில் எமர்ஜென்சி உதவிக்கான எண் 999 இங்கிலாந்தில் அறிமுகமானது. 1935 ஆம் ஆண்டு நிகழ்ந்த தீவிபத்தில் பரிதாபமாக ஐவர் இறக்க அவசர உதவி எண் 19 கி.மீ சுற்றளவில் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்கு பின் இந்த வசதி பல்வேறு நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 999 என்பது பொது தொலைபேசிகளுக்கான(1925) டிசைன்ஐரோப்பிய நாடுகளுக்கு எமர்ஜென்சி எண் 112(1995). சிம் கார்டு இல்லால்கூட 999, 112 எண்கள் மூலம் எமர்ஜென்சி உதவிகளைப் பெறலாம். காது கேட்காதவர்களுக்கு 18000 என்ற எண் உதவுகிறது. 999 என்ற எமர்ஜென்சி எண்ணை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ,சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.


உதவிக்கு வரலாமா?

போலீஸ் -100
தீ-101
ஆம்புலன்ஸ் -102
பேரிடர் மேலாண்மை -108
சேவை மொழிகள் -இந்தி,ஆங்கிலம்,உள்ளூர் மொழி.
(மாநில அளவில் உதவி எண்கள் மாறுபடும்)  

நன்றி: குங்குமம்
தொகுப்பு: நீரஜா லிஜி, டிமிட்ரி ரெமன்