ஹாஸ்ய பக்கங்கள்!






சகோதரரின் சதி!

பொடுசுகளாக இருக்கும்போது அண்ணன்,தம்பி பாசம் என பொங்கினாலும் வளர்ந்தபின்,அனைத்தும் ஆடிட்டர் கணக்கு விவகாரம் போல இடியாப்ப சிக்கலாகி டென்ஷன்,பழிக்குப்பழி என ரூட் மாறிவிடுவது உலக வழக்கம்.

பெய்ரூட்டில் தந்தையின் சொத்தாக கிடைத்த 120 .மீ. இடத்தில் சகோதரர்களில் ஒருவர் பீச்சை பார்க்குமாறு கிராண்டாக வீடு கட்டினார். இது இன்னொரு பிரதருக்கு எப்படி பிடிக்கும்? உடனே அவர் தன் சகோதரர் பீச்சை பார்க்க முடியாதபடி சிம்பிளாக லைட் திக்னெஸில் சுவரை எழுப்பி கறாராக பழிவாங்கியிருக்கிறார். இந்த பில்டிங்கிற்கு அல்பாஸா என்று பெயர் சூட்டியிருக்கிறார். லெபனானில் நடந்த உள்நாட்டுப்போரில் இதுபோல டிசைனில் அமைந்த குயின்ஷிப் எனும் கட்டிடம் குறித்த விவாதத்தின்போது பெய்ரூட் கட்டிட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து வைரலாகியுள்ளது.  


 கல்விக்காக ரயில் பிச்சை!

குழந்தைகளோடு கையில் ட்யூன் போட்டபடி ரயிலில் பிச்சை எடுப்பவர்களை ட்ரெயினில் சகஜம். நீட்டாக அயர்ன் செய்த பேண்ட் ஷர்ட்டில் எஞ்சினியர் ஒருவர் உங்களிடம் பிச்சை எடுத்தால் என்ன சொல்வீர்கள்?

மும்பையைச் சேர்ந்த சந்தீப் தேசாய், கடந்த ஐந்து ஆண்டுகளாக லோக்கல் ட்ரெயினில் பிச்சை எடுத்துவருகிறார். ஏன்? குலதெய்வ வேண்டுதலா?  700 ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகத்தான் பிச்சையெடுக்கிறார் சந்தீப். ஸ்லோகா மிஷனரி எனும் என்ஜிஓ சார்பில் 1 கோடி ரூபாய் திரட்டத்தான் இந்த பிச்சை அட்டெம்ப்ட்."2010 ஆம் ஆண்டு முதல் ட்ரெயினில் கல்விக்காக பிச்சை எடுத்து வருகிறேன். சில ஆண்டுகளில் ஒரு கோடி லட்சியத்தை அடைந்துவிடுவேன்" என்கிறார் மரைன் எஞ்சினியரான சந்தீப் தேசாய்.

2009 ஆம் ஆண்டில் இந்திய அரசு RTE சட்டப்படி, தனியார் பள்ளிகளிலும் ஏழைக்குழந்தைகளுக்கான 25% இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட்டும் இந்த நிலைமை.

குப்பைக் கிடங்கில் சுற்றுலா!

உலகில் ஒரு இடம் சுற்றுலா ஸ்பாட்டாக மாற என்ன வேண்டும்? புல்வெளி, அருவி, உயரமான மலை, ஆறு என ஏதாவது இருக்கவேண்டும். ஆனால் மக்கள் இடம் மாறி வந்ததாலேயே ஜப்பானில் புது டூரிஸ்ட் ஸ்பாட் கிடைத்திருக்கிறது.

ஜப்பானின் ஒசாகாவில் கழிவுக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. ஆனால் வெளியே அதன் கட்டிட அலங்காரம் காமிக்ஸ் போல கலர்களை வாரியிறைந்ததால் டூரிஸ்டுகள் பலரும், யுனிவர்சல் ஸ்டூடியோவின் தீம் பார்க் என நினைத்து உள்ளே வந்துவிடுகிறார்களாம்.

2001 ஆம் ஆண்டு கழிவுக்கிடங்கின் டிசைனை Friedensreich Hundertwasser என்ற புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர் தொழில்நுட்பம், சூழல் மற்றும் கலை ஆகியவற்றின் மிக்ஸாக உருவாக்கினார். கழிவுக்கிடங்கை ஏதோ மேஜிக் உலகம் என நினைத்து இதுவரை 12 ஆயிரம் பேர் யூடர்ன் போட்டு பார்த்துள்ளனர். இதில் 30% பேர் பாரீனர்கள். இன்னுமா அங்கே உண்டியல் வைக்கல?

ஜீனியஸ் மன்னர்!

எதிரிகளை நொறுக்கி சொந்த தேசத்தை காப்பாற்றி, பிற நாடுகளை கைப்பற்றி வாகைப்பூ சூடுவது இன்றைய நியூக்ளியர் காலத்தில் சாத்தியமா? யெஸ் சொல்லி மன்னராகி காட்டியிருக்கிறார் இந்தியரான சுயாஷ் தீக்சிட்.

எகிப்து மற்றும் சூடானுக்கு இடையிலான பிர் தவில் என்ற பகுதியின் மன்னராக கத்தியின்றி ரத்தமின்றி தன்னை அறிவித்துக்கொண்டிருக்கிறார் சுயாஷ். கிறுக்கத்தனமாக தோன்றினாலும், எகிப்து மிலிட்டரியின் பர்மிஷன் வாங்கி இதனை சாதித்ததுதான் முக்கியமான விஷயம். சாலைகளில்லாத பாலைவனப்பகுதி பிர் தவில். பொருட்கள் எடுத்துவரக்கூடாது,ஒரே நாளில் திரும்பிவிடவேண்டும் என்ற கண்டிஷன்களை அலட்சியம் செய்த சுயாஷ், அங்கு விவசாயம் செய்யப்போவதாகவும், தன் நாட்டுக்கான கொடியை ஊன்றப் போவதாகவும் வெளியிட்ட கோக்குமாக்கு காமெடிதான் சோஷியல் தளங்களில் இன்றைய வைரல் ஹிட். பப்ளிசிட்டி அதானே எல்லாம்!

மலையில் குறும்பு!

உலகத்தை உற்று கவனிக்க வைக்க குட்டிச்சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பது, குழந்தைகளுக்கு பேனா,பென்சில் என சில்லறை அலம்பல்கள் ஓகே. ஆனால் அதற்காக இப்படியா செய்வது?

ஆஸ்திரியாவிலுள்ள ஆல்ப்ஸ் மலையிலுள்ள ஆஸ்ட்சர் பகுதியில் மரத்தினால் உருவான கலைச்சிற்பம் டூரிஸ்டுகளையும் இன்ஸ்டன்ட்டாக  ஷாக் ஆக வைக்கிறது. ஏறத்தாழ 6200 அடி உயரத்தில் மரத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆண்குறி  சிற்பம் என்பதுதான் பரபரப்புக்கு காரணம்.  இதனை அரும்பாடுபட்டு உருவாக்கி மலையில் கருத்தாக ஊன்றி வைத்த சிற்பியைத்தான் உலகமே கண்ணில் கைகுவித்து தேடிவருகிறது. ஆல்ப்ஸ் மலையின் புதிய லோகோவாகவே இந்த மரச்சிற்பம் மாறிவிட்டது. அடுத்த வெகேஷனில் புயல் வந்து சிற்பத்தை சாய்ப்பதற்குள் பார்த்துவிடுங்கள் மக்களே!

எமர்ஜென்சி உதவிக்கு ரூ. 2000 பரிசு!

பரபரப்பான சாலையின் ஒருபுறத்தில் விபத்தாகி, காயங்களோடு போராடுபவர்களை பார்த்து மனம் ஷாக்கானாலும் போலீஸ் பஞ்சாயத்துகளை நினைத்து பலரும் உடனே ஸ்பாட்டை காலி செய்வதே நவீன ட்ரெண்ட்.

இனிமேல் ஆக்சிடண்ட்டில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை ்காப்பாற்றி உதவி செய்பவர்களுக்கு 2 ஆயிரம் பரிசு உண்டு. இங்கல்ல. டெல்லியில். டெல்லி ஆம் ஆத்மி அரசின் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், "இத்திட்டத்தின் மூலம் விபத்துக்குள்ளானவர்கள் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லும் நேரம் குறையும்" என்று கூறியுள்ளார். வரும் ஆண்டின் ஜனவரியிலிருந்து காயமுற்றவர்களுக்கு உதவும் நல்உள்ளங்களுக்கு 'குட் குடிமகன்' என பாரட்டி பணப்பரிசோடு, சர்ட்டிஃபிகேட்டையும் அரசு வழங்கவுள்ளது. கடந்த ஆகஸ்டில் மேற்கு டெல்லியில் நடந்த விபத்தில் படுகாயமுற்றவரை மக்கள் யாரும் காப்பாற்ற முன்வராததால் ஸ்பாட்டிலேயே இறந்த நிகழ்வுதான் அரசின் பிளானுக்கு காரணம்.

பரவசம் டூ பஜனை!

புது வசதிகளுக்காக ஆப்ஸ் என்ற வழக்கத்தை உடைத்தெறிந்து இந்தியர்களை நல்வழிப்படுத்தணுமே என்று மாடாய் உழைக்கும் புனித ஆத்மாக்களுக்கு இந்தியாவில் பஞ்சமா என்ன?

அந்த கேட்டகிரியில் சீட் ரிசர்வ் செய்திருப்பவர்தான் டாக்டர் விஜய்நாத் மிஸ்‌ரா. 'ஹர ஹர மகாதேவ்', என்று பெயரிட்டு ஆப்பை உருவாக்கியிருக்கும் விஜய், பனாரஸ் ஹிந்து பல்கலையின் நரம்பியல்துறை வல்லுநர். எதற்கு இந்த ஆப்? கிளுகிளு வீடியோக்களை எப்போதெல்லாம் நம் விரல்கள் டைப் செய்கிறதோ அப்போதெல்லாம் இந்த ஹரஹர ஆப்பில் பக்தி  பஜனைகள் ஸ்டார்ட் ஆகுமாம். "தினசரி ஆபாசதளங்களை அடையாளம் கண்டு நீக்கி வருகிறோம்.விரைவில் பிற மத பாடல்களும் ஆப்பில் ஒலிக்கும்" என சீரியஸாக பேசுகிறார்  சுவாமிஜி சாரி டாக்டர் விஜய்நாத் மிஸ்‌ரா. இனி காலேஜ் முழுக்க பஜனைதான்!

லவ்லி திருடர்

நம் ரெகுலர் வாழ்க்கையிலேயே குபீர் காமெடிகள் நடக்கும்போது, சின்சியராக வேலை செய்து போலீஸ்காரர்களை ஓவர்டைம் பார்க்க வைக்கும்  திருடர்கள் லைஃப் மட்டும் உப்பில்லாத உப்புமா போலவா இருக்கும்?

அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள டூநட் கடையில் கல்லாப்பெட்டியை அபேஸ் செய்ய மூன்று திருடர்கள் உள்ளே என்ட்ரியானார்கள். உள்ளே இருந்த கத்தை கத்தையான பணம், வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட் போன்களை டெடிகேஷனாக திருடியவர்கள், க்ளைமேக்ஸில் செய்ததுதான் ஆசம். கடையை விட்டு வெளியேறும்போது, கவுண்டரில் நின்ற கஸ்டமருக்கு ஒரே ஒரு டூநட் தந்துவிட்டு சென்றிருக்கிறார் திருடர்களில் லவ்லி திருடர் ஒருவர். செக்யூரிட்டி கேமராவில் பதிவாகியுள்ள காட்சி இணையத்தில் ஆஹா ஹிட் அடித்துள்ளது.

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்  







பிரபலமான இடுகைகள்