அறிவியல் பிட்ஸ்!





நிறக்குருட்டுக்கு உதவும் சாம்சங்!

உலகில் நிறக்குருடு பிரச்னை ஆண்களுக்கு பனிரெண்டில் ஒருவருக்கும், பெண்களில் இருநூறில் ஒருவருக்கும் ஏற்படுகிறது. இவர்களுக்கு பார்வையின் தெளிவில் எந்த பிரச்னையும் இருக்காது. பார்க்கும் பொருள் சிவப்பா,பச்சையா, நீலமா என்பது தெரியாது. இதில் 60% நிறக்குருடு இருப்பவர்கள் தினசரி வாழ்க்கை சிக்கலாக மாறும். மரபுரீதியான பிரச்னை என்பதால், சிகிச்சை கிடையாது. கலர் ஃபில்டர்கள், கான்டாக்ட் லென்ஸ் ஆகியவற்றின் மூலம் சிரமம் குறைக்கலாம்.  

ட்ராஃபிக் சிக்னல்கள், டிவி என எதையும் தடுமாறுபவர்களுக்கு சாம்சங் உதவ முன்வந்துள்ளது. தற்போது நிறக்குருட்டு நோய்க்கு உதவும்படி SeeColors எனும் ஆப்பை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங்  உருவாக்கியுள்ளது. உலகம் முழுக்க நிறக்குருடால்(CVD) 300 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வில் கண்டறிந்துள்ள சாம்சங், தனது QLED TV,SHUD TV க்களில் பாதிப்பிற்கேற்ப நிறத்தை செட் செய்து டிவி பார்க்கும் வசதிகளை வழங்குகிறது.



 2
அதிரடி காமிக்ஸ் வில்லன்கள்!

Galactus(1966)
ஃபென்டாஸ்டிக் ஃபோர் படத்தின் அசைக்கமுடியாத வில்லன். மார்வெல்லின் ஸ்டான்லி, ஜேக் கிர்பி இருவரும் இணைந்து உருவாக்கிய சூப்பர் வில்லன். காஸ்மிக் கதிர்களால் மனிதர்கள் மற்றும் உலகங்களை அழிப்பது இவரின் ஹாபி.

Lex Luthor(1940)

சூப்பர்மேனை சுறுசுறுப்பாக டூட்டி பார்க்கவைக்கும் மாஸ்டர்மைண்ட் வில்லன் Alexander Joseph "Lex" Luthor. அதிரடி காட்டும் சூப்பர் பவர்கள் இல்லாமல் தன் கிரிமினல் புத்தியால் சூப்பர்மேனுக்கு தண்ணி காட்டுவது இவரின் ஸ்பெஷல் திறன். டிசி காமிக்ஸின் ஜெர்ரி சீகல், ஜோ சஸ்டர் ஆகிய இருவரின் உருவாக்கம் லெக்ஸ் லூத்தர்.

Magneto

சார்லஸ் எக்ஸ்சேவியருடன் சூப்பர் பவர் கொண்ட சிறுவர் பள்ளியைத் தொடங்கியவர். பின்னாளில் மியூடன்களுக்கான தனிநாடு கோரிக்கை எழுப்பி போராடும் காந்த வில்லன். 1963 ஆம் ஆண்டு காமிக்ஸில் வெளியாகி அதிரடித்தவர், இரும்பு பொருட்களை இயக்கி, பறக்கவும், தன் ஸ்பெஷல் ஹெல்மெட்டின் மூலம் டெலிபதி, மைண்ட் கன்ட்ரோல் சில்மிஷங்களை தூளாக்கும் கலக தலைவன்.

Joker
பேட்மேனை கெமிக்கல் ஆயுதங்களால் தெறிக்கவிடும்  வில்லன் ஜோக்கர். 1940 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பரபரப்பு குறையாத மாஸ்டர்மைண்ட் இவரின் பலம்யோசிப்பது,கொல்வது என அனைத்தும் எப்படி இவரின் டீம் மேட்டுகளுக்கே தெரியாதபடி செய்யும் சீக்ரெட் வில்லன் இவர். டிசி காமிக்ஸின் பில் ஃபிங்கர், பாப் கேன், ஜெரி ராபின்சன் ஆகியோரின் உருவாக்கம் இது.

Dr. Doom

ஃபென்டாஸ்டிக் ஃபோர் காமிக்ஸின் அசுர வில்லன் டாக்டர் டூம். 1962 ஆம் ஆண்டு ரிலீசான சூப்பர்மேன் பலம் கொண்ட வில்லன். மூளை, உடல் இரண்டுமே அசகாய வலிமை என்பதால் நான்கு ஹீரோக்களையும் ஓடவிட்டு செம தண்ணி காட்டிய வில்லன். ஸ்டான்லி, ஜேக் கிர்பியின் கிரியேட்டிவ் தயாரிப்பு இவர்.   


 3
கார்பனும் இனி எரிபொருள்!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் விஞ்ஞானிகள் மின்நிலையங்களிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடை எரிபொருளாக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர். கார்,விமானம்,ட்ரக் என பல வாகனங்களுக்கும் இதனை பயன்படுத்த முடியும்.

லாந்தனும்,கால்சியம்,அயர்ன் ஆக்சைடு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ள சவ்வு மூலம் கார்பன் டை ஆக்சைடிலிருந்து ஆக்சிஜனை மட்டும் எடுத்துக்கொண்டு கார்பன் மோனாக்சைடாக மாற்றுகிறது. இந்நிகழ்வை 990 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அவசியத்தேவை. கார்பன் மோனாக்சைடை ஹைட்ரஜன் மற்றும்  நீருடன் சேர்த்து எரிபொருளாகவும், மெத்தனால் போன்ற பொருட்களாக தயாரிக்கும் ஐடியாவும் உள்ளது. இந்த செயல்முறைக்கான எரிபொருள் தேவைக்கு சோலார் சக்தி அல்லது தேவையற்ற பொருட்களை எரித்து பெறும் ஆற்றலைப் பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்

4
கிரையோனிக்ஸ் வாழ்க்கை!

நோய் அல்லது இயற்கை மரணத்தால் இறந்தவர்களின் உடலை வேதிமுறையில் பதப்படுத்தி பாதுகாப்பது கிரையோஜெனிக் எனலாம். இன்றுவரை 350 நபர்களின் உடல் பதப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பேர் முன்பதிவில் இருக்கிறார்கள்.

1964 ஆம் ஆண்டு இயற்பியலாளர் மற்றும் எழுத்தாளரான ராபர்ட் எட்டிங்கர், கிரோயோஜெனிக்ஸ் பற்றிய 62 பக்க அறிக்கையை 'The Prospect of Immortality' என்ற பெயரில் தயாரித்தார்.

இறந்தவரின் உடல் ஐஸ்கட்டிகளால் குளிர்விக்கப்பட்டு கிரையோஜெனிக் கிடங்குக்கு கொண்டுவரப்படுகிறது. மையத்தில் உடலிலுள்ள முழுவதும் வெளியேற்றப்படுகிறது. உடல் மேலும் குளிர்வெப்பநிலையில் வைக்கப்பட்டு மண்டையோட்டில் சிறு துளைகள் இடப்படுகின்றன. பின் நைட்ரஜன் திரவம் உடலில் செலுத்தப்பட்டு உடல் -192 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கப்படுகிறது.

கிரையோஜெனிக்ஸ் முறைக்கான செலவு 2 லட்சம் டாலர்கள்.மீண்டும் உயிர்பெறுவதற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை.


 

 5
ரியலா? ரீலா?

ரீல்: முழுநிலவு மனிதர்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுத்தும்.
ரியல்: சிறந்த கற்பனை.  மனிதர்கள் பௌர்ணமி அன்று ஏற்படும் ஈர்ப்புவிசையால் க்ரைம் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூற அறிவியல் ஆதாரங்கள் கிடையாது. மனிதர்களின் மூளையிலுள்ள திரவங்கள் நிலவின் ஈர்ப்புவிசையால் ஈர்க்கப்படுவதால் ஏற்படும் விளைவு என பலரும் ஏராளமான கற்பனைகளை அடுக்கினாலும் இது கற்பனையே.

ரீல்:சூயிங்கம் செரிக்க 7 ஆண்டுகள் தேவை.
ரியல்: ஆயுளுக்கும் சூயிங்கத்தை நம் உடலால் செரிக்க முடியாது. எலாஸ்டோமர்ஸ் மற்றும் கிளிசரின், வெஜிடபிள் எண்ணெய் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் சூயிங்கம் மெல்ல இதம் பதமாக இருக்கும். சூயிங்கம்மை விழுங்கினால் குடலில் ஓட்டிக்கொண்டு உயிருக்கே உலை வைக்கும். எனவே குழந்தைகளுக்கு சூயிங்கம் வாங்கிக்கொடுக்காமல் இருப்பது உத்தமம்.

ரீல்:ஆன்டிபயாடிக் மருந்துகள், வைரஸ்களை கொல்லும்
ரியல்: ஆன்டிபயாடிக் பாக்டீரியாக்களை கொல்லும். சளி டூ இன்ப்ளூயன்சா வைரஸ்களுக்கு எதிராக பயன்படாது. வைரஸ்களை கட்டுப்படுத்த உதவினாலும், பின்னாளில் பல்வேறு நோய் கட்டுப்படாத தன்மையை ஏற்படுத்தும்.

தொகுப்பு: ஆலன் வான்கா, ரியான் இலியானிச்



  


பிரபலமான இடுகைகள்