கூகுள் கோல்மால்!


Related image



கூகுள் கோல்மால் - ஊடகங்களை விழுங்கும் இணைய வில்லன்! - .அன்பரசு


'கமர்ஷியல் சர்ச் எஞ்சினுக்கான முக்கிய வணிகம், விளம்பரம்தான். எதிர்காலத்தில் பயனர்களுக்கு தேடுதல் விளம்பரங்கள் தரும் இடமாக மட்டுமே அவை இருக்கப்போவதில்லை' என்ற கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின், லாரி பேஜ் ஆகிய இருவரின் பிஸினஸ் சொல் இது. ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் செய்த சிம்பிள் சர்ச் எஞ்சின் புராஜெக்ட்டான கூகுள், இன்று உலகின் இரண்டாவது ஊடக பிராண்டாக டாலர்களை குவித்து வருகிறது. இந்த மாஸ் மகாராஜா வெற்றிக்குப் பின்னால் பிஸினஸ் ஏகபோகம், வரிஏய்ப்பு, பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம்,பாலின சமத்துவமின்மை ஆகிய கரும்புள்ளிகளும் இல்லாமலில்லை.

Related image

வென்றது நிஜம்!

மேகி என்றால் நூடுல்ஸ் என்று புரிந்துகொள்வதை விட ஈஸி கூகுளை சர்ச் எஞ்சினாக அறிந்து வைத்திருப்பது. தனது சூப்பர் அல்காரிதத்தின் மூலம் 7 ஆயிரத்து 208 கோடியை இவ்வாண்டு மட்டும் பேங்க் பேலன்சில் கெத்தாக ஏற்றியுள்ளது கூகுள். முதலில் சிம்பிளாக சர்ச் எஞ்சின்,இமெயில் எனத்தொடங்கி யூட்யூப், மேப்ஸ், ஷாப்பிங், ஆண்ட்ராய்ட் ஓஎஸ் என வலுவாக விழுதுகளை ஊன்றி இணைய விளம்பர மார்க்கெட்டை 70% தன் கையில் வைத்துள்ளது கூகுள். 2016 ஆம் ஆண்டுப்படி கூகுள்(79.4 பில்லியன்கள்), ஃபேஸ்புக்(26.9 பில்லியன்கள்) சம்பாதித்து, விரைவில் டைம்ஸ் குழுமத்தை வருமானத்தில் பின்தள்ளவிருக்கிறது. எப்படி? செய்தி நிறுவனங்களின் செய்திகளை தொகுத்து, லிஸ்ட்படி முன்பின்னாக காட்டிய மார்க்கெட்டிங் திறமைதான் என்றால் பலரும் நம்ப மாட்டார்கள். சேவையளிக்கும் போது, தன்னுடைய சுயநிறுவன சேவைகளை பிரிலியன்ட்டாக விளம்பரம் செய்து வாயுவேகத்தில் டாலர்களை வேட்டையாடி வருகிறது கூகுள்.



Image result for google violation cartoon
திறந்திடு சீசேம்!

பார்க்க விரும்பும் சினிமா, வாசிக்கத் தேடும் புத்தகம், அறிவுத்தேடலுக்கான தகவல்கள் என ஒருவர் டைப் செய்யும் தகவல்களிலிருந்தே அவரை அனுமானித்து, இடத்தை ஜிபிஎஸ் மூலம் அறிந்து விளம்பரங்களை வெளியிடுவதே கூகுளின் வெற்றி ரகசியம். கூகுளின் இலவச ஆண்ட்ராய்ட் ஓஎஸ் மூலம் 80% சதவிகித போன்கள் உலகமெங்கும் இயக்கப்படுவது கூகுளின் ஃப்யூச்சர் வெற்றிக்கு அடித்தளம். கூகுள் நியூஸ், உலகிலுள்ள அனைத்து செய்தி நிறுவனங்களிடமிருந்து செய்திகளை பெற்று பயனர்களின் சாய்சிற்கேற்ப லிஸ்ட் போட்டு அடுக்கித் தருகிறது. இதில் வரும் பாப் அப் விளம்பரங்களுக்கான கட்டணத்தை கூகுள் மட்டுமே தன்னிச்சையாக தீர்மானிப்பதால், செய்தியை உருவாக்கும் நிறுவனங்களின் பங்கேற்பு கீழே தள்ளப்படுகிறது என்ற சர்ச்சையும் உள்ளது.

Image result for google violation cartoon


சர்ச்சை சங்கடங்கள்!

"கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை இன்று ஊடக நிறுவனங்களாக பிராண்டிங் செய்யப்பட்டாலும், நம்பிக்கையானவை என பெயர்பெறுவது மிக கடினம். இணையத்தின் மூலம் பலகோடி மக்களை சந்திக்கமுடிவது, இதிலுள்ள மேப், வீடியோ, சமூகவலைதளங்கள் பல லட்ச மக்களை ஈர்க்கின்றன" என்கிறார் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதள இயக்குநர் துர்கா ரகுநாத். "கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விதிகளை மீறி வணிகம் செய்வதை இயல்பானதாக மாற்றிக்கொண்டுவிட்டன" என விவரிக்கிறார் IDIA  நிறுவன இயக்குநரான சாம்நாத் பஷீர்.

2017 ஆம் ஆண்டின் டாப் 30 நிறுவனங்களில் முதலிடம் பெற்ற நிறுவனமான ஆல்பபெட் இன்க், கூகுளின் தாய் நிறுவனம். 2012-16 ஆம் ஆண்டில் கூகுளின் வளர்ச்சி 64%. இதற்கடுத்த இடத்தில் ஃபேஸ்புக் உள்ளது. "கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை மார்க்கெட்டிங் மூலம தனது வருவாயில் பெரும்பகுதியை பெற்றாலும் அதனை உருவாக்கிய கலைஞர்களுக்கு மிக குறைவான தொகையையே அளிக்கிறது" என்கிறார் பஸ்ஃபீட் தளத்தின் இயக்குநரான ஜோனா பரெட்டி.

கூகுள் தந்திரங்கள்!

"கூகுள் புத்திசாலித்தனமான முறையில் தனது வியாபார எல்லைகளை விரிவாக்குவதோடு, தனது போட்டியாளர்களுக்குமான விதிகளையும் தானே உருவாக்கி வருகிறது" என கூகுள் தந்திரங்களை புட்டு வைக்கிறார் டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தைச் சேர்ந்த கௌதம் சின்கா. போட்டிகளை அழித்து தனிப்பெரும் ராஜாவாக கோலோச்ச விரும்பும் கூகுளின் செயல்பாடு பலரையும் ஈர்ப்பதாயில்லை. யூட்யூபில் வீடியோ தொடங்கும் முன் ஒளிப்பரப்பாகும் இன்ஸ்ட்ரீம் முறைக்காக 20 லட்சம், வீடியோ ஒளிபரப்பும்போது கீழே வரும் விளம்பரத்திற்கு 10 லட்சம் என கூகுள் தோராயத் தொகையாக வசூலிக்கிறது. இதில் ஸ்கிப் வசதி உண்டு என்பதுதான் விளம்பர நிறுவனங்களின் கடுகடுப்புக்கு காரணம். "யூட்யூப் என்பது டிஜிட்டல் ரியல்எஸ்டேட் போல. பத்து நாட்கள் விளம்பரம் ஒளிபரப்பினாலும் அது சென்று சேரும் மக்கள் பரப்பு அதிகம்" என்கிறார் விளம்பரத்துறை சார்ந்த அதிகாரி ஒருவர். ஸ்டார், ஜீ ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் சம்பாதிப்பது யூட்யூப்தான். வருமானம் 700-1000 கோடி.


Image result for google violation cartoon


வரியும் தண்டனை நிமித்தங்களும்!

2017 ஆம் ஆண்டு ஆல்பபெட் இன்க், 27.5 பில்லியன் டாலர்களை தனது Adwords மூலம் சம்பாதித்துள்ளது. இதுதவிர உப வருவாயை ப்ளே ஸ்டோர், ஆப்ஸ், கூகுள் ஃபைபர் ஆகிய திட்டங்கள் தருகின்றன. பொருட்களின் விலை பற்றி ஒப்பீடுகளை ஃபவுண்டெம் என்ற தளத்திலிருந்து அனுமதியின்றி எடுத்து பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக ஐரோப்பிய யூனியனில் கடந்தாண்டு ஜூன் மாதம் 2.8 பில்லியன் டாலர்களை அபராதமாக கட்டியது கூகுள் நிறுவனம்.

2015 ஆம் ஆண்டு அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சர் மக்களவையில் போட்டி ஆணையத்திற்கு கூகுள் மீது வந்த புகார்களை விசாரிக்க ஆணையிட்டார். ஆயினும் கூகுள் இதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு அக்.25 அன்று பெங்களூரு ஐடிதுறை(ITAT) தொடர்ந்த வழக்கில் கூகுளின் ஆறு அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் 2007-2013 வரையிலான 1,457 கோடி ரூபாய்க்கான வரித்தொகையை கட்டுமாறு கூகுள் நிறுவனத்துக்கு ஆணையிட்டது.
அமெரிக்காவிலுள்ள கூகுள் இன்டர்நேஷனலின் மானிய உதவி பெறும் துணை நிறுவனமே கூகுள் இந்தியா. இந்நிறுவனம் இந்தியாவில் சம்பாதித்த வருமானத்தை கூகுள் அயர்லாந்துக்கு அனுப்பிய வகையில் அரசுக்கு கட்டவேண்டிய வரியை கூகுள் கட்டாததுதான் பிரச்னைக்கு காரணம்.

கூகுள் இதில் முக்கிய வாதமாக முன்வைத்தது தான் இந்தியாவில் குர்கான், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் செயல்படுத்தும் அலுவலகங்கள் நிரந்தரமானவை அல்ல என்று கூறியது. மேலும் இந்தியா - அயர்லாந்து நாடுகளுக்கிடையேயான இரட்டை வரிவிதிப்பு தடுப்பு ஒப்பந்தத்தையும்(DTAA) வரி கட்டாததற்கு கூகுள் துணைக்கு அழைத்தது. ஆனால் நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை.
Image result for google violation cartoonRelated image
"கூகுள் Adwords என்ற புரோகிராமை பயன்படுத்தி இங்குள்ள பயனர்களின் தகவல்களை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கிறது. கூகுள் என்பதை பிராண்டாக இந்தியாவில் பயன்படுத்தி வரும் லாபத்தை ராயல்ட்டி என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்து அயர்லாந்துக்கு அனுப்பிவிடுகிறது. இதற்கு ஐடி சட்டமான 9(1)(Vi) சட்டத்தையும் சாட்சியாக்குகிறது" என்கிறார் IDIA அமைப்பின் நிறுவனவரான சாம்நாத் பஷீர். நிதி மசோதா 2016 படி டிஜிட்டல் இணைய நிறுவனங்களுக்கு 6% மட்டுமே வரி விதிக்கலாம்


இந்தியாவில் ஆபீஸ் உள்ள கம்பெனிகளை விட அலுவலகமற்ற பாரீன் நிறுவனங்களுக்கே வரிச்சலுகை அதிகம். "இந்தியாவில் கூகுள் விரைவில் டேட்டா பண்ணைகளை அமைக்கவிருக்கிறது. அப்போது டெக் உலகின் ரூல்ஸ் அனைத்தும் மாறும்" என நம்பிக்கையோடு பேசுகிறார் ஹைதரபாத் பேராசிரியர் பிரசாந்த் ரெட்டி.   


கொட்டும் வருமானம்!
ஸ்டார் இந்தியா! - 10,800 கோடி
பென்னெட் கோல்மன்& கோ.லிட்- 9,976 கோடி
ஜீ என்டர்டெயின்ட்மென்ட் - 6,434 கோடி
நெட்வொர்க் 18 -3,471 கோடி
ஹெச்டி மீடியா - 2,681 கோடி
ஏபிபி - 1,326 கோடி.

கோல்மால் கூகுள்!

விளம்பர ரேட்டை தனக்கேற்ப மாற்றிக்கொண்டே இருப்பது.
செய்தியை தயாரித்தவருக்கு உரிய சம்பளத்தை நேரடியாக தர மறுப்பது.

நிரந்தர அலுவலகத்தை அமைக்காமல் வரி ஏய்ப்பு செய்வது.
குரோம் பிரவுசரில் உள்ள Adblocker மூலம் விளம்பரங்களை தடுப்பது(2016 பிப்.முதல்)

தேடுதல் முறையை விதிமுறைகளுக்கு மாறாக மாற்றியமைப்பது

தொகுப்பு: விக்டர் காமெஸி, குருஜி
நன்றி: குங்குமம்