லவ் கமாண்டோ!


Image result for love commandos



காதலர்களை வாழ வைக்கும் காதல் கமாண்டோ! - .அன்பரசு


ஆண், பெண் பார்வை மோதலில் உடலில் பொழியும் ஹார்மோன் மழை. மழையில் எலக்ட்ரான், புரோட்டான் ஒன்றுசேர நியூட்ரான மனதில் மையம் கொள்ளும் காதலுக்கு லோக்கல் மட்டுமல்ல இன்டர்நேஷனல் லெவலிலும் எதிர்ப்புகள் உண்டு. மாட்டை அடக்கி, இளவட்டக்கல்லை தூக்கி திருமணம் செய்வது இன்றைய ஜென் இசட்டுக்கு எப்படி சாத்தியம்? காதலர்களை ஒன்று சேர்க்க நவீன ஷாஜகானாக உதவுகிறார் முன்னாள் பத்திரிகையாளரும், லவ் கமாண்டோ இயக்கத்தின் தலைவருமான சஞ்சய் சச்தேவ்.
நாடு முழுவதும் கிளைவிரித்துள்ள லவ் கமாண்டோ இயக்கம், ஏறத்தாழ 50 ஆயிரம் பேர்களுக்கு கெட்டிமேளம் கொட்டி திருமணம் செய்து வைத்துள்ளது. இதில் மேரேஜ் கடைசி கட்டம்தான். ஆக்ஷன் பிளான் போட்டு பெற்றோர்களின் கௌரவ கொலை முயற்சியிலிருந்து காதலர்களையும் காப்பாற்றி ஸ்பெஷலாக பாதுகாக்கவும் சஞ்சய் தயங்குவதில்லை. சந்திக்க நேரம் கேட்டாலும், காதலர்களை காக்கும் ஆபரேஷனில் இருக்கிறேன் என்றவர், அடுத்தநாள் சந்திக்க டைம் கொடுத்தார்

Image result for love commandos



"தொடர்ச்சியாக நான்கு அல்லது ஆறு நாட்கள் கூட தூங்கமுடியாமல் இருப்பதுண்டு. உதவி கேட்கும் காதலர்களை வீட்டிலிருந்து கூட்டிவரும் பணியில் இது சகஜம்" என சிவந்த கண்களை துடைத்துக்கொண்டே பேசத்தொடங்கினார் சஞ்சய்.  2010 ஆம் ஆண்டில், காதலர் ஒருவர், தன் காதலியை வல்லுறவு செய்தார் என்ற பொய் வழக்கு டெல்லியில் பதிவானபோது, உதவிகோரிய அவரைக் காப்பாற்ற சஞ்சய் தொடங்கிய இயக்கம்தான் லவ் கமாண்டோ.

டெல்லியில் ஏழு அபார்ட்மென்ட்களை வைத்துள்ள லவ் கமாண்டோ அமைப்பு, வன்முறை,மிரட்டல்களால் ஊரை விட்டு ஓடிவரும் காதலர்களுக்கு தங்க இடமளித்து உதவுகிறது. "தங்குபவர்கள் திருமணம் செய்யும்வரை இங்கு தங்கியிருப்பார்கள். சிலர் ஆண்டுக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் கூட தங்கியிருந்து சென்றிருக்கிறார்கள்" என்கிறார் சஞ்சய். லவ் கமாண்டோ இயக்கத்தின் சமூகப்பணியை பாராட்டி முன்னாள் டென்னிஸ் வீரரான Bjorn Borg, தனது நிறுவனத்தின் மூலம் 3.9 லட்சம் ரூபாய் நிதியளித்துள்ளார். "எங்களது செயல்பாடுகளுக்கு கிடைத்த அதிகபட்ச தனிநபர் நன்கொடை இது. எங்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை ஊடக்கத்தின் மூலம் அறிந்துகொண்ட போர்க் இந்த உதவியை வழங்கினார்" என நெகிழ்ச்சியாகிறார் சஞ்சய்.

இந்தியா முழுவதும் 450 தங்குமிடங்களை அமைத்துள்ள லவ் கமாண்டோ இயக்கத்தினர், சஞ்சயிடம் நாம் பேசிக் கொண்டிருந்தபோதும் ஆன் டூட்டி ஆக்ஷனில் இருந்தனர்சஞ்சயின் போன் ஒரு நொடி கேப் இன்றி சிணுங்கிக்கொண்டே இருந்தது. "எங்களது உதவியை வேண்டி அழைப்பவர்களுக்கு முறையாக சட்டரீதியிலான பாதுகாப்பை பெற்றுத் தந்து நாங்கள் உதவுகிறோம். அதில் நீதிமன்றங்களும் முக்கியப்பங்குண்டு. அவையும் சாதிமறுப்புக்கு ஆதரவான நல்ல தீர்ப்புகளை வழங்கியுள்ளன." என்பவர் இரு வழக்குகளை சுட்டிக்காட்டுகிறார்.
Image result for love commandos

2007 ஆம் ஆண்டு காதலியை கொன்றதாக அவரது காதலர் மீதே வழக்கு பதிவானது. கீழ்கோர்ட்டில் குற்றம் உறுதியானதை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் .கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் உண்மையை அறிந்து மாற்றி எழுதி காதலரை விடுதலை செய்தனர். "பெண்களின் சாதி தாண்டிய காதலை பெற்றோர் பெரும்பாலும் ஏற்க மறுக்கின்றனர். காதலை தியாகம் செய்வதைத் தவிர்த்து பெண்ணுக்கு வேறு ஆப்ஷனே இல்லை" என்கிறார் சஞ்சய் சச்தேவ். அடுத்து 2011 ஆம் ஆண்டு வழக்கில் நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜூ, சுதா மிஸ்ரா ஆகியோர், மேஜர் பெண் தன் துணையை தேடிக்கொள்ள முழுஉரிமை உண்டு. திருமணம் செய்துகொண்ட பெண்ணோடு உறவை தொடர்வதும் முறிப்பதும் பெற்றோரின் விருப்பம். ஆனால் அவர்களை வாழ விடாமல் கொலை மிரட்டல் விடுப்பது ஆகியவை தவறு எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

2014 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த பாவனா யாதவ் என்ற பெண், அபிஷேக் சேத் என்பவரை காதல் திருமணம் செய்ததால், காதலரிடமிருந்து பிரித்து சென்று ராஜஸ்தானில் அடித்துக் கொன்று உடலையும் எரித்துவிட்டனர். ஆனால் அவரது கணவர் அபிஷேக் சேத்திற்கு கூறிய தகவல் பாவனா பாம்பு கடித்து இறந்துவிட்டார் என்பது மட்டுமே. அபிஷேக் தொடுத்த வழக்கினால் அவரது மாமா, பெற்றோருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 "இந்தியாவில் கௌரவ கொலைகளுக்காக பதிவாகும் வழக்குகள் மிக குறைவு. உள்ளூர் போலீசும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக விவகாரத்தை கண்டும்காணாது விட்டுவிடுகின்றனர்" என படபடக்கிறார் சஞ்சய். 2014 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கும் சாதிமறுப்பு திருமணங்கள் பற்றிய ஆதரவைக் கேட்டு கடிதம் எழுதிய துணிச்சல்காரர் சஞ்சய். எதிர்பார்த்தபடியே, அவருக்கு இதுவரையிலும் எந்த பதிலும் வரவில்லை. "அரசியல்தளத்தில் சமூக அவலங்களை தட்டிக்கேட்கும் வாய்ப்புள்ளவர்களே சாதிமறுப்பு திருமணங்களுக்கு ஆதரவு தருவதில்லை. இவர்களின் கள்ள மௌனத்தை லவ் ஜிகாத் போன்ற மூர்க்கர்கள் சாதகமாக பயன்படுத்தி, காதலர்களின் மீது வன்முறையை தொடுத்து அவர்களின் மனதில் பயத்தை விதைக்கின்றனர் " என்கிறார் சஞ்சய். பதிவுத்திருமணங்களின் தாமதத்தை போக்க இன்று சிறப்பு திருமணச்சட்டம் உதவுகிறது. 2014 ஆம் ஆண்டில் இந்திய மனிதவள மேம்பாட்டு வளர்ச்சி அமைப்பும், மேரிலேண்ட் பல்கலையும் இணைந்து செய்த ஆய்வில், 5% சதவிகித திருமணங்கள் சாதிமறுப்பு மணங்களாக நடைபெறுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.

"காதலை எதிர்ப்பதில் வடக்கு,தெற்கு ஏன் இன்று வடகிழக்கு மாநிலங்களிலும் கூட ஒற்றுமை உள்ளது. காற்றில் காதல்வெறுப்பு விஷத்தை யார் பரப்பினார்கள் என்று தெரியவில்லை. இளைஞர்கள் இதனை எதிர்த்து தெருக்களில் களமிறங்கி பிரிவினைவாத கட்சிகளை துடைத்து அழிக்கும் நாள் 


Image result for love commandosவெகுதூரத்தில் இல்லை" என சூளுரைக்கிறார் சஞ்சய் சச்தேவ்.


காதல் ஹெல்ப்லைன்!

லவ் கமாண்டோ நாடு முழுவதும் கொண்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 லட்சம். தன்னார்வலர்களிடமிருந்து ரூ.100 மட்டும்(ஆண்டுக் கட்டணம்) பெறும் இவ்வமைப்பு அரசிடமிருந்து உதவிகளைப் பெறுவதில்லை. ஹெல்ப்லைன் எண்: 931378437



புனித கொலைகள்!
2014-2016 வரையிலான கௌரவக்கொலைகள் -  68 (2016), 192 (2015), 28 (2014)
கொலைகளில் முதன்மை - உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா & ஆந்திரா.
கொலைகளின் வளர்ச்சி - 796% (2016 வரை).
National Crime Records Bureau (NCRB) data 2014-2016

நன்றி: கோகுலன் லக்‌ஷித், பிரியா கோனிடெலா
வெளியீட்டு அனுசரணை: குங்குமம்